விதைக்கப்பட்ட புரட்சி மலர்

சமூகச் சீரழிவுக்குக் காரணமான மது என்ற கொடிய அரக்கனை எதிர்த்து காந்தியவாதியான சசிபெருமாள் தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடி அந்தப் போராட்டத்திலேயே
Updated on
3 min read

சமூகச் சீரழிவுக்குக் காரணமான மது என்ற கொடிய அரக்கனை எதிர்த்து காந்தியவாதியான சசிபெருமாள் தனது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து போராடி அந்தப் போராட்டத்திலேயே தன் உயிரையும் தியாகம் செய்து மறைந்தார். இது மக்களை மிகவும் நெகிழ வைத்துள்ளது.
 வெடிமருந்து நிரம்பிய கிடங்கின் மீது தீப்பொறி விழுந்தால் என்னாகுமோ அதைப் போல தமிழகம் எங்கும் சசிபெருமாளின் உன்னத உயிர்த் தியாகத்தின் விளைவாக மக்கள் போராட்டம் வெடித்தது.
 சங்க காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் கள் குடிப்பது இருந்திருக்கிறது. ஆனாலும், திருக்குறள், நமது இலக்கியங்கள் அனைத்தும் கள்ளுண்ணாமையை வலியுறுத்தியே வந்திருக்கின்றன. அதன் விளைவாக மது குடித்தல் என்பது ஒழுக்கக் கேடாக மக்களால் கருதப்பட்டது. குடிப்பவர்கள்கூடப் பிறருக்குத் தெரியாமல் குடித்தார்கள். அவர்களைச் சமூகம் கேவலமாகக் கருதியது.
 ஆனால், அன்னியரான ஆங்கிலேயர் ஆட்சியில் அரசுக்கு வருமானம் ஈட்டும் ஒரு கருவியாகவும், அதேவேளையில் மக்களை மது மயக்கத்தில் ஆழ்த்தித் தங்களுக்கு எதிராகப் போராடாமல் வைக்கும் உத்தியாகவும் மதுவைக் கருதினார்கள்.
 1790-ஆம் ஆண்டில் அப்காரி சட்டத்தை ஆங்கிலேயர் ஆட்சி கொண்டுவந்தது. இச்சட்டத்தின்படி மது வகைகளைத் தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் ஏலம் விடப்பட்டு, அதிகத் தொகை செலுத்துபவருக்கு வழங்கப்பட்டன. மக்கள் தொகை அதிகம் உள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என 1859-ஆம் ஆண்டு வைசிராய் உத்தரவு பிறப்பித்தார்.
 இதன் விளைவாகச் சாராய ஆலை அதிபர்கள் பெருகி மதுவை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடவைத்தனர். அரசின் கருவூலம் மட்டுமல்ல, சாராய அதிபர்களின் கருவூலங்களும் நிரம்பி வழிந்தன. இதன் விளைவாக, ஏழை எளிய மக்கள் மேலும் ஏழைகளானார்கள். அவர்களுடைய குடும்பங்கள் பசியாலும், பட்டினியாலும் வாடித் துடித்தன.
 ஆங்கிலேய ஆட்சியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்ட காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாகக் கள்ளுக்கடை மறியலைக் கொண்டுவந்தார்.
 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் ஈ.வே. இராமசாமியின் ஈரோட்டு மாளிகையில்தான், மது விலக்குத் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைப் பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தை காந்தியடிகள் கூட்டினார். அங்குதான் கள்ளுக்கடை மறியல் செய்வது என காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர்.
 பெரியார் ஈ.வே.ரா., அவரது துணைவியார் நாகம்மை, தங்கை கண்ணம்மாள் ஆகியோரும் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். இச்செய்தி காந்தியடிகளின் உள்ளத்தை நெகிழ்வித்தது.
 ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவது குறித்து மதன்மோகன் மாளவியா, சங்கரன் நாயர் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் 1922 சனவரியில் ஈடுபட்டனர். பம்பாயில் காந்தியடிகளுடன் அவர்கள் பேசியபோது காந்தியடிகள், "கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டில் உள்ள இரு பெண்மணிகளிடம்தான் உள்ளது. அவர்களைக் கேட்டுத்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார். காந்தியடிகள் குறிப்பிட்ட இரண்டு தாய்மார்களும் தங்களின் தியாகத்தினால் தமிழகத்துக்குப் பெருமை தேடித் தந்தனர்.
 சென்னை மாகாண முதலமைச்சராக இராஜாஜி 1937-இல் பொறுப்பேற்றப்போது மது விலக்கை அமல்படுத்துவதில் தீவிரமாக முனைந்து முதலில் அக்டோபர் 2-ஆம் தேதி சேலம் மாவட்டம் முழுவதிலும், பிறகு மற்ற மூன்று மாவட்டங்களிலும் மது விலக்கைக் கொண்டுவந்தார்.
 சுதந்திர இந்தியா மதுவற்ற நாடாக இருக்க வேண்டும் என காந்தியடிகள் விரும்பினார். அவரின் விருப்பத்தை மதிக்கும் வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் அரசுக்கான வழிகாட்டும் நெறிகளின் 47-ஆவது பிரிவில் உடலைக் கெடுக்கும் மதுவையும், போதை மருந்துகளையும், மருத்துவம் நீங்கலாக ஏனைய நோக்கங்களுக்குப் பயன்படுத்தாமல் இருக்க மது விலக்குக் கொள்கையை நம்முடைய அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்பட்டது.
 1948-இல் தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முழு மது விலக்கைக் கொண்டுவந்தார். அது காமராசர், பக்தவச்சலம் ஆட்சிக் காலம் வரையிலும் தொடர்ந்தது.
 அண்ணா முதல்வரான பிறகு 1968-இல் தமிழகச் சட்டப்பேரவையில் பின்வருமாறு அறிவித்தார்: "பொருளாதாரக் காரணங்களுக்காக மது விலக்கை இரத்து செய்யலாம் என்ற கருத்து சொல்லப்பட்டபோது, அப்படிச் செய்வதால் கொட்டக்கூடிய பணத்தில் பிணைந்து கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் ஏழை, எளிய பெண்களின் முகங்களே என் கண்களுக்குத் தெரிகின்றன. எனவே, ஒருபோதும் அந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்' என உறுதிபடத் தெரிவித்ததோடு நிற்கவில்லை. அவர் முதல்வர் பதவியிலிருந்த காலம் வரை மது விலக்கை இரத்து செய்யவில்லை.
 பெரியார், அண்ணா ஆகியோரைப் பின்பற்றுவதாகக் கூறும் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் 1971-ஆம் ஆண்டு மது விலக்கு இரத்துச் செய்யப்பட்டது. 23 ஆண்டுக் காலமாக தமிழகத்தில் மது என்றால் என்னவென்பதை அறியாத தலைமுறையினருக்கு மதுவை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.
 இதன் விளைவாகத் தமிழக இளைய தலைமுறையினர் குடித்துச் சீரழிவதைக் காணச் சகியாத காமராசர் 1973 அக்டோபர் 8 முதல் 12 வரை மதுவுக்கு எதிரான மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார். இப்போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரசுத் தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். திருச்சி மத்திய சிறையில் காங்கிரசு தொண்டரான இராசாங்கம் உயிரிழந்தார். இதன் விளைவாக நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
 இப்போராட்டத்தின் விளைவாக 1974-இல் மது விலக்கைக் கொண்டு வரவேண்டிய நிர்பந்தம் முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டது. 1981-இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் மது விலக்கு இரத்துச் செய்யப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் மதுபானக் கடைகள், பார்களை திறக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன.
 மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் முடிவு 2003-இல் அறிவிக்கப்பட்டது. தமிழக நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை 7,323 (டாஸ்மாக்) மதுக் கடைகளும், 4,229 பார்களும் திறக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாகத் தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை பெருகியது. அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
 ஆனால், மக்களைக் குடிகாரர்களாக்கி அவர்களின் மடியிலிருந்து பிடுங்கியெடுக்கும் பணத்தின் மூலம்தான் அரசு நடத்த முடியும் என்பதைவிட, அந்த அரசே இல்லாமல் போவதுதான் நல்லது.
 மதுக் குடிப்பதும், அதனால் ஏற்படும் விளைவும் தனி நபரைப் பொருத்தது என சிலர் வாதமிடுகிறார்கள்.
 ஆனால், குடிப்பவர்களின் குடும்பங்களில் நிம்மதி கெடுவதையும், குடிப்பவர்களின் குடல்கள் வெந்து நோயாளி ஆவதையும், இவற்றின் விளைவாக வீட்டில் வறுமை சூழ்ந்து மனைவியும், மக்களும் பசியாலும் பட்டினியாலும் துடிப்பதையும் எண்ணிப் பார்க்காமல் குடிப்பது, தனி நபரின் உரிமையாகும் என்று கூறுபவர்கள் மனசாட்சியைத் தொலைத்தவர்கள்.
 தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கிறார்கள். குடியினால் இந்தத் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் குடி போதையின் விளைவாக நினைவிழந்து கிடப்பவர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் சமுதாயத்துக்கும் துரோகம் செய்கிறார்கள். இவர்களால் உருவாக்கப்படும் மனித வளம் மாபெரும் சமுதாயக் கேடாக மாறுகிறது.
 இந்தத் தீமைக்கு எதிராகத்தான் மக்களும், மாணவர்களும், மாற்றுத் திறனாளிகளும் குறிப்பாகப் பெண்களும் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். எதற்காக இவர்கள் போராடுகிறார்கள் என்பதையோ தியாகி சசிபெருமாள் எதற்காக உயிர் நீத்தார் என்பதையோ கொஞ்சமும் புரிந்து கொள்ளாத தமிழக அரசு, மதுக் கடைகளைப் பாதுகாப்பதற்காக சுமார் 70 ஆயிரம் போலீஸ்காரர்களையும் அதிகாரிகளையும் ஒதுக்கியுள்ளது. இதற்காகக் குறைந்தபட்சம் நாள்தோறும் ரூ.5 கோடிக்கு மேல் அரசு செலவிடுகிறது.
 சட்டம் - ஒழுங்கு, கொலை, கொள்ளை ஆகியவற்றைத் தடுக்க வேண்டிய காவல் துறை டாஸ்மாக் கடைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. சமூக விரோதிகள் தாராளமாகத் தங்கள் தீய நடவடிக்ககைளைத் தொடர வழி கிடைத்துவிட்டது.
 மதுவை நியாயப்படுத்த அரசு தரப்பில் சொல்லப்படும் ஒரே காரணம், நிதிக்கு எங்கே போவது என்பதுதான். இந்தியாவில் உள்ள தாது மணலில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகத் தமிழக கடற்கரையோரங்களில் குவிந்து கிடக்கிறது.
 தாது மணலில் கார்னெட், இலிமனைட், ரூடைல், மோனசைட் போன்றவையும் கிடைக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கிரானைட் ஏராளமாகக் கிடைக்கிறது. தமிழக ஆறுகளில் மணல் குவிந்து கிடந்தது. ஆனால், இவற்றைக் கொள்ளையடிக்கத் தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
 தாது மணல், ஆற்று மணல், கிரானைட் ஆகியவற்றின் விற்பனையையும், ஏற்றுமதியையும் அரசே ஏற்று நடத்தினால், ஆண்டுக்கு பல இலட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மதுவினால் கிடைப்பது வெறும் ரூ,30 ஆயிரம் கோடிதான்.
 ஆனால், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் தனியாரின் பைகள் மட்டும் நிரம்பவில்லை. அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் பைகளும் நிரம்புகின்றன. மது விற்பனையிலும் இதே நிலைதான்.
 இந்தக் கொள்ளையைப் பகிர்ந்து கொள்ளும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மது விலக்குக்கு எதிராக இருக்கிறார்கள். எதிர்த்துப் போராடும் மக்களை ஈவிரக்கமில்லாமல் ஒடுக்குகிறார்கள்.
 தியாகி சசிபெருமாள் இன்று புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகிறார். அதன் விளைவுகள் ஆட்சியை அசைக்கும் என்பதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் மக்கள் போராட்டங்கள் வெற்றி பெறாமல் போனதாக வரலாறு இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com