வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

அக்னிக் குஞ்சும் அழகிய வனமும்!

நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். "ஒரு நிமிஷம்' என்றவர், செல்லிடப்பேசியில் தனது மைத்துனருக்கு 2-ஆம் ஆண்டு திருமண வாழ்த்துக் கூறிவிட்டு

Updated On :21 ஆகஸ்ட் 2015, 1:53 am IST

நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். "ஒரு நிமிஷம்' என்றவர், செல்லிடப்பேசியில் தனது மைத்துனருக்கு 2-ஆம் ஆண்டு திருமண வாழ்த்துக் கூறிவிட்டு, என்னுடன் பேச்சைத் தொடர்ந்தார்.
 திருமணமான சிறிது நாள்களிலேயே மைத்துனருக்குப் பிரச்னை தொடங்கியதாகவும், முதலாண்டு திருமண நாளைக்கூட அவர்கள் கொண்டாட இயலாமல் போய்விடுமோ என வேதனை கொண்டதாகவும் கூறிய அவர், சில மாதங்களுக்கு முன்புதான் பிரச்னை தீர்ந்தது என நிம்மதிப் பெருமூச்சை வெளிப்படுத்தினார்.
 ஐம்பதாவது திருமண நாள்களைக்கூட அனாயாசமாகக் கொண்டாடியவர்கள் நம் முன்னோர்கள். இப்படியிருந்த நிலைமை முற்றிலும் மாறி, பிரச்னையில்லாமல் முதலாண்டு திருமண நாளைக் கொண்டாடுவதே சாதனை என்ற அளவில் வந்து நிற்பது வேதனை அளிக்கிறது.
 மணமேடை வரை மணமக்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பாராமல் இருந்த காலமில்லை இப்போது. "இன்னார்க்கு இன்னாரென்று' நிச்சயிக்கும் முன்பே செல்லிடப்பேசியில் பேசத் தொடங்கிவிடுகின்றனர். உள்ளத்தில் உள்ளதையெல்லாம் திருமணத்துக்கு முன்பே பேசித் தீர்த்துவிடுவதால், திருமணமாகி சில நாள்களிலேயே என்ன பேச என்றாகிவிடுகிறது.
 இதனால், பிரச்னை அங்கேயே தொடங்கிவிடுகிறது. சில இடங்களில் அதிகம் பேசாதிருப்பது பிரச்னைக்கு வழிவகுக்கிறது என்றால், பல இடங்களில் அதிகமான பேச்சால் நிம்மதியிழப்பு.
 ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால்கூட கட்டாயத்தின் பேரில், சமூகத்துக்குப் பயந்து வாழத் தொடங்கி, வாழ்வில் பிடிப்பு ஏற்பட்டதொரு காலம். சகிப்புத்தன்மை, பொறுமை, பெரியவர்களின் ஆலோசனைகளைக் கடைப்பிடித்ததால் விளைந்த நன்மை.
 ஆனால், இன்றைக்குப் பெரியவர்களுக்கு ஆலோசனை சொல்ல நேரமில்லை. மீறி, சொன்னாலும் இளம் தம்பதிகளுக்கு கேட்கப் பொறுமையில்லை, அதிலுள்ள நியாயமும் பிடிபடுவதில்லை. தான் நினைத்ததே சரி எனப் பிடிவாதம் பிடிப்பதால் உண்டாகும் அவலம்.
 இந்த நிலையில், தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் கற்றுக் கொடுக்கும் நாகரிகமே வேறு. கிளை தாவிச் செல்லும் உயிரினங்கள்போல நிலை மாறிச் செல்ல தூபமிடுகின்றன.
 அதனால், "விட்டுக்கொடுத்து வாழு' என்ற தாரக மந்திரம், 'விட்டுவிட்டு வாழு' என மாற்றி உச்சரிக்கப்படுகிறது. தான் ஒன்றை விட்டுக்கொடுத்தால் தன் துணையும் பதிலுக்கு ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும் என நினைப்பதால் விட்டுக் கொடுத்தல்கூட ஒப்பந்தம் போட்டதுபோல் ஆகிவிடுகிறது.
 விளைவு, சின்னச் சின்ன "விவகாரத்தில்' தொடங்குவது, மணவாழ்வின் விரும்பத்தகாத எல்லையான "விவாகரத்தில்" வந்து முடிந்துவிடுகிறது.
 2004-இல் சுமார் 3 ஆயிரமாக இருந்த விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை, 2014-இல் ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆக, பத்து ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு என்பது ஆபத்தின் அறிகுறி. இதுவும், நீதிமன்றத்துக்கு வந்த வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமே. வெளிச்சத்துக்கு வராதவை எத்தனையோ?
 முந்தைய தலைமுறையில் காணப்படாத அல்லது வெளியே தெரியாத இந்த அலங்கோலம், இன்றைய இளம் தம்பதியிடையே அதிகம் காணப்படுகிறது.
 இத்தனைக்கும் இந்தத் தலைமுறையினர் அதிகம் படித்து, உயர் பதவிகளில், கைநிறைய ஊதியத்துடன் வாழ்கின்றனர். தம்பதி இருவருமே பணிக்குச் செல்லும் குடும்பங்களில் இத்தகைய மண முறிவுப் போக்கு கூடுதலாகக் காணப்படுகிறது.
 நேரத்தை விற்கத் தொடங்கிவிடுவதால் நேசத்தையும் விற்கத் தொடங்கிவிட்டதாக நினைப்பார்களோ என்னவோ, தம்பதியிடையே நெருக்கம் குறைந்துவிடுகிறது. இதனால், அனைத்து வசதிகள் இருந்தும் அமைதியும், நிம்மதியும் இல்லாமல் போய்விடுகிறது.
 பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களிலாவது பிரச்னைகளைத் தள்ளிப் போடுவதற்கோ, பேசித் தீர்ப்பதற்கோ இடமிருக்கிறது. ஆனால், இரு வீட்டினரின் சம்மதமின்றியோ, இரு வீட்டையும் பகைத்துக் கொண்டோ நடக்கும் காதல் திருமணங்களில் இது போன்றவற்றுக்கெல்லாம் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
 மண வாழ்க்கைக் கசப்புக்கு தனிக் குடித்தன ஆசை, மது, வரதட்சிணை, தேவையற்ற பிடிவாதம், சந்தேகம், தான்மை அல்லது தன்முனைப்பு, துணையை அடிமைபோல நினைத்தல், அதிக எதிர்பார்ப்பு, அதனால் ஏற்படும் ஏமாற்றம், ஆத்ம பரிசோதனை செய்து கொள்ளாதது என காரணங்கள் பற்பல.
 குழந்தைகள் பிறந்த பின்னர் தம்பதிகள் பிரிய நேர்ந்தால் ஏதுமறியாத குழந்தைகளின் ஒட்டுமொத்த எதிர்காலமுமல்லவா பாதிப்புக்குள்ளாகும்.
 ஒட்டாத உள்ளங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்தப்பட்ட விவாகரத்து, இப்போதெல்லாம் எடுத்த எடுப்பிலேயே முதல் ஏவுகணையாய் ஏவிவிடப்பட்டு விடுகிறது.
 அக்னிக் குஞ்சு சிறியதுதான். ஆனால், கவனிக்காமல் விட்டுவிட்டால் அடர்ந்த அழகான வனத்தையே அது அழித்து, சுவடில்லாமல் ஆக்கிவிடும். அந்த அக்னிக் குஞ்சைப் போலத்தான் இல்லறத்தில் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்னைகளும். அவற்றை உடனடியாய் அணைத்து விடாதிருந்தாலோ, ஊதிஊதிப் பெரிதாக்கினாலோ அவை இல்லறம் என்னும் அழகிய வனத்தையே இல்லாமல் செய்து விடும்.
 வாழ்வில் நிம்மதி ஏற்பட நிரந்தரப் பிரிவு மட்டுமே தீர்வல்ல. மனம் விட்டுப் பேசினாலே தீர்வுகள் கிடைக்கும். பரஸ்பர புரிதல், உண்மையாகவும் பிரதிபலன் பாராமலும் விட்டுக் கொடுத்தல், தன்னைப்போல துணையை எண்ணுதல், குறைகளைப் பெரிதுபடுத்தாதது அல்லது நயமாகச் சுட்டிக்காட்டுதல், இரு தரப்பு உறவுகளையும் சமமாய் பாவித்தல் போன்ற ஆக்கப்பூர்வ குணங்கள் மட்டுமே உதவும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.