விவசாயத்துக்கு மானிய உதவி அளிக்கக் கூடாது என்பது உலக வர்த்தக அமைப்பின் முக்கியமான கட்டுப்பாடு. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது அதீத நிர்பந்தம் செலுத்தப்படுகிறது. ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இந்தப் பிரச்னையை வேறுவிதமாகக் கையாள்கின்றன.
விவசாயிகளுக்கு உதவி செய்யும் பலவித திட்டங்கள் மூலம், உலக வர்த்த அமைப்பின் கண்களுக்குத் தெரியாமல் பல மானியங்கள் அவை அளிக்கின்றன. அதன்மூலமாக தங்கள் நாட்டு விவசாயத்தைக் காத்துக் கொள்கின்றன. அவை எப்படி செயல்படுகின்றன என்று பார்க்கலாம்...
அமெரிக்காவின் 8 திட்டங்கள்: அமெரிக்காவில் எட்டு விதமான விவசாய உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நேரடி பட்டுவாடா, விற்பனைக் கடனுதவி, சுழற்சிமுறை பட்டுவாடா, நிலவளப் பாதுகாப்பு மானியம், பயிர்க்காப்பீடு, பேரழிவு நிவாரணம், ஏற்றுமதி மானியம், விவசாய ஆராய்ச்சி நிதி என்ற பெயர்களில் அமெரிக்க விவசாயிகளுக்கு அந்நாட்டு அரசு பல உதவிகளைச் செய்கிறது.
நேரடி பட்டுவாடா திட்டம்: மானியமுறைக்கு மாறாக கட்டுப்பாடற்ற சந்தை முறைக்கு மாறுவதற்கான இடைக்கால ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டது, 1996-ஆம் வருடத்திய விவசாயிகள் விடுதலைச் சட்டத்தின் அடிப்படையிலான நேரடி பட்டுவாடா திட்டம்.
அதன்படி, கோதுமை, நெல், பருத்தி, ஓட்ஸ், பார்லி, எண்ணெய் வித்துகள், உள்ளிட்ட 10 விளைபொருள்களை உற்பத்தி செய்யும் விவசாய நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஒவ்வோராண்டும் பணம் நேரடியாக வழங்கப்படும்.
விற்பனைக் கடனுதவி: விவசாய விளைபொருள்களின் விலை அதிரடியாகச் சரிவதால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க, விற்பனைக் கடனுதவியும் செய்யப்படுகிறது. இதன்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சந்தையில் அதிக விலை கிடைக்கும்வரை இருப்பில் வைத்துப் பராமரிக்க அரசு கடன் வழங்குகிறது. இதற்கு விவசாயிகள் தங்கள் பயிரை ஈடாகக் காட்டி கடன் பெறலாம்.
இதையும் மீறி சந்தையில் விலை குறைவதால் நஷ்டம் ஏற்பட்டால், விவசாயிகள் பாதிக்காமல் தடுக்க பற்றாக்குறை கடன் செலுத்தும் திட்டம் செயல்படுகிறது.
சுழற்சிமுறை பட்டுவாடா திட்டம்: அரசு நிர்ணய விலையை விட சந்தைவிலை குறையும்போது விவசாயிகள் பாதிக்கப்படாமல் தடுக்க, சுழற்சிமுறை பட்டுவாடா திட்டம் செயல்படுகிறது.
நிலவளப் பாதுகாப்பு மானியம்: நாட்டிலுள்ள தரிசு நிலங்களை புல்வெளிகளை அமைத்து பசுமையாக்கும் விவசாயிகளுக்கு நிலவளப் பாதுகாப்பு மானியம் என்ற பெயரில் 1985-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பயிர்க் காப்பீடு: விவசாயிகள் உற்பத்தி இழப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க, 16 தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் உதவியுடன் விவசாயப் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை அமெரிக்க விவசாய அமைச்சகம் மேற்கொள்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட விளைபொருள்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் விவசாயிகளின் பிரீமியத்தில் 60 சதவீதத்தை அரசு செலுத்துகிறது. இதற்காக 2009-இல் 7.3 பில்லியன் டாலரை அமெரிக்க அரசு செலவு செய்தது.
பேரழிவு நிவாரணம்: வறட்சி, புயல், சூறைக்காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் நலிவடையாமல் தவிர்க்க, ஒவ்வோராண்டும் ஒரு பில்லியன் டாலர் வரை நிவாரண உதவியாக அமெரிகாக வழங்குகிறது.
ஏற்றுமதி மானிய உதவி: இவை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதில்லை. மாறாக, விவசாய விளைபொருள்களையும் அவற்றால் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதற்கு உதவும் விளம்பரங்களுக்கு 200 மில்லியன் டாலர் வரை அரசு உதவி அளிக்கிறது.
ஆராய்ச்சி நிதியுதவி: விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிர சேகரிப்புக்காக ஆண்டுதோறும் 3 பில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்க அரசு அளிக்கிறது. இது மறைமுகமாக விவசாயிக்குச் சென்று சேர்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில்...: ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொள்கையை பிரதானமாகக் கொண்டுள்ளன. 1963-இல் உருவாக்கப்பட்ட பொதுவான விவசாயக் கொள்கையின்படி (சிஏபி), விவசாயத் தொழிலாளர்களை அதிகரிப்பது, அதிக விளைச்சலை உருவாக்குவது, விவசாய சமுதாயத்துக்கு அதிகமான வருவாய் அளிப்பது ஆகியவை முக்கிய இலக்குகளாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சமீபத்திய இலக்கு, 500 மில்லியன் ஐரோப்பியர்களுக்கும் உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், உணவை உற்பத்தி செய்வோர் மரியாதையுடன் வாழ்வதற்குண்டான நிலையை உருவாக்குவதாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் தனித்தனியே விவசாயிகளுக்கு உதவும் திட்டங்களைக் கொண்டுள்ளன. இவையல்லாது, பொதுவான விவசாயக் கொள்கையின்படி, வருவாய் உதவித் திட்டம் (ஐஎஸ்எம்), விற்பனை உதவித் திட்டம் (எம்எஸ்எம்), ஊரக அபிவிருத்தித் திட்டம் (ஆர்டிஎம்) ஆகிய மூன்று விதமான உதவித் திட்டங்கள் அளிக்கப்படுகின்றன.
இவற்றில் விவசாயிகளுக்கு நேரடியாக பணப்பட்டுவாடா செய்யும் வருவாய் உதவித் திட்டம், நீண்டகால விவசாய நடைமுறைகளின் அடிப்படையில் கடுமையான நிபந்தனைகளுக்கு உள்பட்டு அளிக்கப்படுகிறது. அதேபோல, பாதகமான வானிலையால் ஏற்படும் சந்தை பாதிப்பிலிருந்து விவசாயிகளை மீட்க விற்பனை உதவித் திட்டம் பயன்
படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான விவசாயக் கொள்கை இரண்டு ஆதாரங்களைச் சார்ந்துள்ளது. முதலாவது, விவசாயிகளுக்கு நேரடியாக அளிக்கப்படும் பணப்பட்டுவாடா. இரண்டாவது ஊரக அபிவிருத்திக்கான திட்டங்களில் அளிக்கப்படும் நிதியுதவி.
2014 முதல் 2020 வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஐரோப்பிய சீர்திருத்தத்தின்படி, 373.2 பில்லியன் ஈரோ (485 பில்லியன் டாலருக்கு சமம்) செலவிடப்படும் என மதிப்பிடப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில்..: விவசாயிகளும் விளைபொருள் உற்பத்தியாளர்களும் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் இழப்பைச் சந்திப்பதிலிருந்து தவிர்க்க, பலவிதமான மானிய உதவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்கி வருகிறது.
வறட்சியால் விளைநிலம் பாதிக்கப்பட்டு சாகுபடி செய்ய இயலாத விவசாயக் குடும்பத்துக்கு மூன்று ஆண்டுகள் வரை வருவாய் இழப்புக்கு இணையான நிதியுதவியோ, வாரத்துக்கு 500 டாலர் கருணைத்தொகையோ வழங்கப்படும் என்ற பண்ணைக் குடும்பப் படி (எஃப்எச்ஏ) இதில் முதலாவதாகும்.
விவசாயம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அரசால் அறிவிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கான இசிஆர்பி திட்டத்தில், வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் படிகள் அனைத்தும் விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
சீனாவில்..: உள்நாட்டு உணவுப் பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய் உயர்வு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, விவசாய ஆதரவுத் திட்டங்களை சீன அரசு செயல்படுத்தி வருகிறது.
1993-2003இல் தானிய விளைச்சலில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து, விவசாயிகளுக்கு நேரடி பட்டுவாடா செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இதன்படி, தானிய உற்பத்தியை நிலைப்படுத்தவும், இடுபொருள் விலை உயர்வு உள்ளிட்ட சூழல்களில் ஈட்டுத்தொகை அளிக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான லாபம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், அரசு உதவி செய்கிறது.
உரம், டீசல் விலை உயர்வால் விவசாயச் செலவினம் உயர்ந்ததைக் கருத்தில் கொண்டு, விவசாய இடுபொருளுக்கான விலையில் ஒருங்கிணைந்த மானியத்தை சீன அரசு நடைமுறைப்படுத்துகிறது.
அதேபோல, சாகுபடியை நவீன மயமாக்கும் விவசாயக் கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கும் மானிய உதவி அளிக்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட பயிரினங்களை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும் சீன அரசு மானிய உதவி அளிக்கிறது.
தவிர, நெல், கோதுமை ஆகிய தானியங்களின் சந்தைவிலை குறையும்போது அரசே நிர்ணயிக்கப்பட்ட விலையில் அவற்றை கொள்முதல் செய்கிறது.
மலேசியா, ஜப்பானில்..: மலேசியாவில் உத்தரவாத விலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகளுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. நெல் சாகுபடியாளர்கள் நலனுக்காக உத்தரவாதமான குறைந்தபட்ச விலை, நெல் மானியம், அரிசி விலைக் கட்டுப்பாட்டு நிதி, அரிசி இறக்குமதி கட்டுப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல, புகையிலை சாகுபடி விவசாயிகளைக் காக்க, புகையிலை இறக்குமதி மீது அதிகபட்ச சுங்கவரி விதிக்கப்படுகிறது.
விவசாயத்தில் பெறும் வருவாய் போதுமானதாக இல்லாவிட்டால், விவசாயத் துறையில் யாரும் ஈடுபட மாட்டார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, ஜப்பானில் பல விவசாய உதவித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தவிர உணவுப் பாதுகாப்பு, மண்வளப் பாதுகாப்புக்காகவும் அரசு விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவுகிறது.
அரிசி உற்பத்திக்காக சந்தை ஆதரவு விலையை ஜப்பான் அரசு அளிக்கிறது. அதேபோல, செயற்கை உரம், பூச்சி மருந்துகள் இல்லாமல் சூழலுக்கு உகந்த சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும் அந்நாட்டு அரசு நேரடி பணப் பட்டுவாடாக்களை அளிக்கிறது.
இவ்வாறாக பல நாடுகளிலும் விவசாயத்தைப் பாதுகாக்க அரசாங்கங்கள் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏனெனில், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் விவசாயமே என்பதை உலக நாடுகள் உணர்ந்துள்ளன.
எனவே, நமது நாட்டில் விவசாயத்தை மரியாதைக்குரிய தொழிலாக மாற்ற வேண்டுமானால், விவசாயிகள் நியாயமான வருவாய் பெறுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இல்லாவிடில், நாட்டில் உணவுப் பற்றாக்குறையும் வேலையில்லாத் திண்டாட்டமும் நேரிட்டுவிடும்.
விவசாயிகளுக்கு அதிகபட்ச உதவி அளிக்க நிதிப் பற்றாக்குறை தடையாக இருக்கலாம். ஆனால், கைவசம் இருக்கும் நிதியையே முறையான வழிகளில், சரியான திசைகளில் செலவிட்டால், அது கண்டிப்பாக விவசாயத்துக்கு ஊட்டச்சத்தாக அமையும் என்பது திண்ணம். பணம் தேவை என்பதைவிட, விவசாயிகளுக்கு உதவுவதற்கான மனம் தான் இப்போது உடனடித் தேவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

