கடன் கொள்கையும் பணப் புழக்கமும்
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் "ரெப்போ ரேட்' (ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம்) கால் சதவீத அளவு குறைக்கப்பட்டது. அதாவது, 8 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாகக் குறைந்தது.


இரண்டு வாரங்களுக்கு முன்புதான் "ரெப்போ ரேட்' (ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதம்) கால் சதவீத அளவு குறைக்கப்பட்டது. அதாவது, 8 சதவீதத்திலிருந்து 7.75 சதவீதமாகக் குறைந்தது.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பிப்ரவரி 3-ஆம் தேதி அறிவித்த நிதி மற்றும் கடன் கொள்கையில் எதிர்பார்த்தபடியே வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.
ரொக்கக் கையிருப்பு விகிதமும் (சி.ஆர்.ஆர்.) மாற்றமின்றி நான்கு சதவீதமாகவே தொடருகிறது.
இன்னும் சொல்லப் போனால், ஜனவரி மாதம் வட்டியைக் குறைத்தபோது ரிசர்வ் வங்கி ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியிருந்தது. அடுத்த வட்டிக் குறைப்பு, நாட்டின் பொருளாதாரம் பற்றி கூடுதல் தகவல்கள் (ஈஹற்ஹ) வெளிவந்த பிறகுதான் சாத்தியம் ஆகும் என்பதுதான் அது.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் பொருளாதார ரீதியில் எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. அதனால், பிப்ரவரி 9-ஆம் தேதிதான் ஜி.டி.பி. (நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு) வளர்ச்சி விகிதம் தெரிய வரும்.
அதன்பிறகு, பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், நிதி நிலைமை மற்றும் அரசு மேற்கொள்ள இருக்கும் புதிய திட்டங்கள் பற்றி அறிய முடியும். இந்தச் சூழலில் வட்டி விகிதத்தை குறைக்காமல் இருந்ததில் வியப்பில்லை.
அதேநேரம், ரிசர்வ் வங்கி ஒரு விஷயத்தில் எல்லோரையும் வியப்படையச் செய்துள்ளது. எஸ்.எல்.ஆர். (வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைக்க வேண்டிய அரசுப் பத்திரங்கள் உள்ளிட்ட வைப்புத் தொகை) 22 சதவீதத்திலிருந்து 21.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை!
இந்த நடவடிக்கையின் மூலம் வங்கிகளில் ரூ.42,000 கோடி முதல் ரூ.45,000 கோடி வரை நிதி ஆதாரம் அதிகரிக்கும். இதனால், பணப் புழக்கம் பெருகும்.
உதாரணமாக, ஒரு வங்கி ரூ.100 டெபாசிட் திரட்டினால், அதில் எஸ்.எல்.ஆர். 22 சதவீதம் சி.ஆர்.ஆர். 4 சதவீதம் ஆக மொத்தம் 26 ரூபாய் போக மீதமுள்ள 74 ரூபாய்தான் கடனாக வழங்க முடியும். இந்த நியதி பொதுமக்களின் வைப்புத்தொகையைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டது.
உண்மை நிலை என்னவென்றால், இதற்கும் அதிகமாக பல வங்கிகள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டே ரூ.100 டெபாசிட்டில் சராசரியாக ரூ.66.57 தான் கடனாக வழங்கப்படுகிறது.
இருப்பினும், இதனால் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நன்மைதான். வங்கிகளிடம் கூடுதல் நிதி இருக்கும் என்பதால் அவர்கள் ரிசர்வ் வங்கியிடமிருந்தும், பணச் சந்தையிலும் குறுகியக் கால கடனை வாங்குவது குறையும். இதனால், வங்கிகளுக்கு வட்டிச் செலவு குறையும்.
வங்கிகளிடம் உபரியாக பணம் இருப்பதால் பொதுமக்களுக்கு தொழில், சிறு தொழில், வீடு, வாகனக் கடன் ஆகியவை தங்கு தடையில்லாமல் கிடைக்கும்.
இரண்டாவதாக, வங்கிகளிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும்போது, பணச் சந்தையில் வட்டி விகிதம் குறையும். சந்தை வட்டி விகிதம் குறையும்போது, வங்கிக் கடன் வட்டி விகிதமும் கால் சதவீதமாவது குறையும்.
ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ஜனவரி மாதம் ரெப்போ ரேட் குறைந்தபோது, ஓரிரு வங்கிகளைத் தவிர, மற்ற வங்கிகள் வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டியைக் குறைக்கவில்லை.
இப்போது எஸ்.எல்.ஆர். குறைந்திருப்பதால், விரைவில் அனைத்து வங்கிகளும் தங்கள் Base Rate (அடிப்படை வட்டி விகிதம்) மற்றும் வீட்டுக் கடன் உள்ளிட்ட எல்லா வகைக் கடன்களுக்குமான வட்டி விகிதத்தை நிச்சயமாகக் குறைக்கும்.
இந்தக் கருத்தை "பேங்க் ஆப் இந்தியா' தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் விஜயலக்ஷ்மி ஐயர் உள்ளிட்ட பல வங்கித் தலைவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள்.
பொதுவாக, ரெப்போ ரேட் குறைக்கப்படும்போது, அதன் பலனை வங்கிகள், உடனே வாடிக்கையாளர்களுக்கு மடை திருப்பிவிடத் தயங்குகின்றன அல்லது தாமதிக்கின்றன. இது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்தப் போக்கு காணப்படுகிறது.
இதற்கு முக்கியக் காரணம், அதிகரித்து வரும் வாராக் கடன் சுமையும், அதனால் குறைந்து வரும் லாபமும்தான். அதைச் சரிக் கட்டுவதற்காக, ரெப்போ ரேட் குறைப்பால் கிடைக்கும் லாபத்தை வங்கிகளே வைத்துக் கொள்கின்றன. இதை அறிந்துள்ள ரிசர்வ் வங்கி தனது அதிருப்தியை வங்கிகளுக்கு உணர்த்த வேண்டும்.
வங்கிகளின் பணப் புழக்கத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், ரிசர்வ் வங்கி ஒரு புதிய திட்டத்தை கடன் கொள்கையில் அறிவித்துள்ளது. இதன்படி, முதிர்வடைவதற்கு முன் பணத்தை எடுக்க முடியாத ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக, இந்தப் புதிய வகை டெபாசிட்டுக்கு வழக்கத்தைவிடக் கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும்.
இதனால், வங்கிகளுக்கு நீண்டகால அடிப்படையில் ஃபிக்ஸட் டெபாசிட் கிடைக்கும். அது நிலையான வட்டி விகிதத்திலும் கிடைக்கும். நீண்டகாலக் கடன் கொடுப்பதற்கு ஏதுவாக அது அமையும்.
தேவைக்கும் அளிப்புக்கும் (Demand and Supply)) இடையேயான முரண்பாடு (Mismatch) குறையும். வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். வட்டிவிகிதம் குறையும்போதும், அவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட கூடுதல் வட்டியே தொடர்ந்து கிடைக்கும்.
அன்னியச் செலாவணி விஷயத்தில், புதிய நிதிக் கொள்கை, தாராளப் போக்கைக் கடைப்பிடித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு தனி நபர், ஓர் ஆண்டில், வெளிநாடுகளுக்கு 2,50,000 (இரண்டரை லட்சம்) டாலர் வரை அனுப்பலாம். இதுவரை அனுமதிக்கப்பட்ட அளவான 1,25,000 டாலரைப் போல் இரண்டு மடங்கு இனி அனுப்பலாம்.
வெளிநாடுகளில் வர்த்தகம் செய்பவர்களுக்கும் சாதகமான அம்சம் இது. முக்கியமாக, அன்னியச் செலவாணி கையிருப்பு திருப்திகரமாக இருக்கிறது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை 2014-15-ஆம் நிதி ஆண்டில், ஜி.டி.பி.யில் 1.3 சதவீதமாகக் குறைத்திட வேண்டும் என்கிற இலக்கை எளிதாக எட்டிவிட முடியும் என்பதையும் இது உணர்த்துகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பிப்ரவரி 4-ஆம் தேதி நிலவரப்படி 61.75 ஆக இருந்தது. இது 62 ரூபாய்க்கு கீழேயே நிலை பெற்றுள்ளது எனலாம்.
நிதிப் பற்றாக்குறையைப் பொருத்தவரை, ஜி.டி.பி.யில் 4.1 சதவீத இலக்கை 2014-15-இல் எட்ட வேண்டும். ஆனால், நடப்பாண்டில் எதிர்பார்த்த அளவு வருவாய் அமையவில்லை.
எனினும் அண்மையில் சில பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து கிட்டத்தட்ட ரூ.22,000 கோடி திரட்டப்பட்டுள்ளது.
இதேபோல, மேலும் சில பொதுத் துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் ரூ.20,000 கோடி திரட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட அளவில் மார்ச் இறுதிக்குள் குறைந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.
பணவீக்க விகிதம் கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூன் மாத விலையோடு ஒப்பிடுகையில் 50 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த சில நாள்களாக இந்த வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் 2016 ஜனவரியில் 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், ஏற்றுமதிக் கடன் வழங்கும் விதிமுறைகள் புதிய கடன் கொள்கையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ஏற்றுமதி மறு நிதித் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, Refinery பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு பொருள்களின் உற்பத்தி டிசம்பரில் சரிந்துள்ளது. ஒட்டுமொத்த உற்பத்தியில் இவை 38 சதவீதம் ஆகும்.
நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் கருதுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
பணவீக்க விகிதம், உற்பத்தி விகிதம் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் முதலாவது முழு ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள பொருளாதாரத் திட்டங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்ட பிறகே, ரிசர்வ் வங்கியின் அடுத்தக் கட்ட வட்டிக் குறைப்பு அமையும் என்று ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
அடுத்த கடன் கொள்கைக்கான நாள், ஏப்ரல் 7 என்றாலும், மார்ச் மாதமேகூட ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்து, வளர்ச்சியை முடுக்கிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
2015-16 நிதி ஆண்டில் ரெப்போ வட்டி 1.75 சதவீதம் குறைந்து, 6 சதவீதமாக நிலைபெறும் என்பது பல பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...