விழிக்க வைத்த தாலாட்டு!

அண்மையில் பிறந்த, என் தம்பியின் மகவைத் தொட்டிலில் கிடத்தித் தூங்கப் பண்ணிக் கொண்டிருந்தார்
Updated on
3 min read

அண்மையில் பிறந்த, என் தம்பியின் மகவைத் தொட்டிலில் கிடத்தித் தூங்கப் பண்ணிக் கொண்டிருந்தார் என் அம்மா. பெருங்குரல் எடுத்து அழுதது குழந்தை. தொட்டிலை

நீள ஆட்டி, அதனினும் பெரிதாய்க் குரல் எடுத்து, ஆராரோ ஆரிரரோ என்று பாடத் தொடங்கினார்.

தொட்டில் நீண்டு ஆடும் வரைக்கும் நீண்டு ஒலிக்கும் ஆ.....ரா....ரோ... இராகம்.

ஒலிக்குறிப்பு முடிந்து அந்தச் சந்தத்தில் பாடல் வளர்ந்தது. பிள்ளை அழுத கண்ணீர் பேராறாகப் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது பாடலில்.  வீட்டுக்கும் வெளியே புழக்கடை வழியாகத் தோட்டத்திற் சென்று பாயத் தொடங்கியது.

அழுகை மெல்ல ஓய்ந்துபோனாலும் பாடல் ஓயவில்லை. கற்பனை நீரோ கரைபுரண்டு ஓடுகிறது, மனத்தோட்டமெங்கும்.

வைத்தால் பயிராகும் வாழை வைத்தால் தோப்பாகும்
இஞ்சிக்குப் பாய்ந்து எலுமிச்சைக்கு வேரோடி
மஞ்சளுக்குப் பாய்ந்து மாதுளைக்கு வேரோடி
அவரைக் கொடி படர்ந்து அம்பூன்றிக் காய்காய்த்துக்
கொடி அவரை பிஞ்சுவிடக் குடிதுலங்க வந்தாயோ
அவரைப் பிஞ்சிறங்க முடிசூட்ட வந்தாயோ
பிள்ளை உறங்கியே விட்டான். ஆனால், அம்மா இன்னும் நிறுத்தவில்லை.

இது வெறும் கற்பனைப் பாடலா, இல்லை. காலங்காலமாய் நம் வீட்டில் கற்றுத் தரும் நீர் மேலாண்மைப் பாடம். வழிந்தோடி வரும்முன்பே உலர்ந்துவிடும் தன்மை உடையது கண்ணீர். அதற்குள் அதில் இருந்து நதிநீரையே உற்பத்தி செய்து, நல்லபடியாய்த் தோட்டச்செடிகள் வளர்த்து அறுவடை செய்து பார்த்து விடுகிறது, தாய் மனது.

பிள்ளையும் வளரவேணும் கூடவே, சூழலும் செழிக்கவேணும் என்கிற நல்லெண்ணம் காலங்காலமாய் வேரூன்றி எழுந்த வரலாற்றின் கொடி இந்தப் பாடலில் பின்னிப் பின்னி வளர்ந்து எழுவதைக் காணமுடிகிறது.

இப்பாடலைப் புனைந்து முதலில் பாடிய பெருமாட்டி வீட்டில் இதுவெல்லாம் நித்தமும் நிகழ்ந்திருக்க வேண்டும். வீட்டில் புழங்கிய நீரின் ஓட்டத்தைச் சாக்கடையாக்காமல் புழக்கடை வழியாகத் தோட்டத்திற்குப் பாய்ச்சியிருக்கின்றார் அவர்.

இஞ்சியும், மஞ்சளும், இனிய மாதுளையும் நம் வீட்டுத் தோட்டத்தில் அக்காலத்தில் விளைந்து பயன் தந்திருக்கின்றன. கூடவே, கொடி அவரையும், மொலி அவரையுமாய்க் கறிக்குதவும் காய்களைப் பாத்தி கட்டி வளர்த்துப் பயன்கொண்டிருக்கின்றனர்.

எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. என் பிள்ளைப் பிராயத்தில் என் கிராமத்து வீடுகள் தோறும் இவ்வண்ணம் விளைவித்துவிடுவது வாடிக்கை.

இதற்கென்று வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவது எல்லாம் கிடையாது. அடுக்களையில் பயன்கொண்டு இப்போது சாக்கடையாகி வெளியேறுகிறதே அந்தக் கழிவுநீர்தான், இத்தனை விளைச்சல்களுக்கும் வேர் வளர்க்கும் நீர்.

இது பழங்காலந்தொட்டு வளர்ந்து வந்த பழக்கம். தன் காலத்திலும் இப்படியோர் மேலாண்மை தமிழர்களிடம் இருந்ததைக் கம்பனும் பதிவுசெய்து தருகிறான்.

அவன் காலத்து அன்னச் சத்திரம் ஒன்று. அங்கே அரிசி கழுவிய நீர் வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொல்லைப்புறம் வழியே ஓடும் அந்நீரோட்டம், பாக்குமரங்கள்

செழித்து வளர்ந்திருக்கும் தோப்புகளின் வழி ஓடி, செந்நெல் வயல்களின் நாற்றங்கால்களில் பாய்ந்து, நெற்பயிர் வளர்க்கிறதாம்.

முட்டுஇல் அட்டில், முழங்குற வாக்கிய
நெட்டுஉலைக் கழுநீர் நெடுநீத்தம் தான்,
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய்,
நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே.

இதுவும் கற்பனை இல்லை. அக்காலத்து நடைமுறைதான்.

அன்றைக்கு, அடுப்பு மூட்டிப் பாத்திரத்தை ஏற்றி வைத்துவிட்டு, தோட்டத்திற்குள் புகுந்து, வேண்டும் அளவுக்குக் காய்களைப் பக்குவம் பார்த்துப் பறித்தெடுத்து வந்து வேகவைத்ததை என் ஆயா வீட்டில் பார்த்திருக்கிறேன்.

பிஞ்சாக இருந்தால் நாளைக்கு என்று விடுவார்கள். முற்றிப்போய்விட்டது எனில் விதைக்கு என விடுவார்கள். எஞ்சிய கழிவுகளை எடுத்தெறிந்துவிடாமல், அந்தந்தச் செடிகளின் அடியில் உரம் எனப்போடுவார்கள். எதையும் வீணாக்காமல் பேணி வளர்க்கும் இச்செடிகளுக்கு இடையில், தானே முளைத்தெழும் கீரைகள்  அவ்வப்போதைக்குப் பற்றாக்குறையை ஈடுகட்டும் அமுதங்கள்.

சூரிய ஆற்றல் ததும்பி வழியும் அவற்றைச் சமைத்தவுடனே சூடும் சுவையும் மாறாமல் உண்ட சுவை என் நெஞ்சில் இப்போதும் நிற்பதை உணர்கிறேன்.

இப்போதைக்கு எல்லாம் குளிரூட்டப்பட்ட அங்காடிகளில்தான் கிடைக்கிறது. எப்போது பறித்ததோ, எவ்வண்ணம் விளைந்ததோ, வீணாகும் அவற்றால் பெருகும் குப்பைகளை மீளப் பயன் கொள்ளாமல் பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி முடிச்சிட்டுத் தொட்டிகளில் அள்ளி எறியும் சூழல் கொடுமையை யார் தடுத்துநிறுத்துவார்கள்?

உணவகங்களிலும், இல்லங்களிலும் முன்னர் நிகழ்ந்த மரபுகள் பின்பற்றப்படாமையால் நிகழும் சீர்கேடுகளை எங்ஙனம் சரி செய்யப்போகிறோம்?

மலர்ச்சோலையாய் இருந்த நம் முன்றில் சுருங்கி, இப்போது கார் ஷெட் ஆகிவிட்டது. காய்கறித் தோட்டமாகும் புழக்கடை காணாது ஒழிந்தது.

பிளாஸ்டிக் தொட்டிகளில் பூத்ததுபோல் இருக்கும் போலிச் செடிகளின் புன்னகையில் நம் இல்லத்து முற்றங்களை அலங்கரித்துக் கொள்வதால் ஆவதென்ன?

வீட்டு நீர் மட்டுமல்ல, இயற்கை கொடுக்கும் இன்னமுதமாகிய மழை நீரும் பிறப்பிலேயே சாக்கடையாகிவிடுகிற அவலத்தை எண்ணும்போது இன்னொரு தாலாட்டுப் பாடல் என் நினைவுக்குள் வருகிறது.

ஒரு பாடலில் பிள்ளை அழுகப் பெருகி வரும் கண்ணீர் தண்ணீராக மாறிக் குளங்களை நிரப்புவதாகப்  பண்ணை வயல்களில் பணி செய்யும் அன்னையர் நாற்றுநட்டுக்கொண்டே பாடுவதையும் கேட்டிருக்கிறேன்.

அழுத கண்ணீரு

ஆறாய்ப் பெருகி வந்து

ஆனை குளிப்பாட்ட

ஏரி பெருகி வந்து

எருமை குளிப்பாட்ட

என்று நீண்டுபோகும்.

மானுட வர்க்கத்திற்குப் பிள்ளைகள் போல, தாவர வர்க்கத்திற்குப் பூவும் பிஞ்சும் காயும் என்று கருதியவள் தமிழ்த்தாய்.

இல்லையென்றால், விளையாடும் இடத்தில் மணலில் புதைத்த புன்னை விதை முளைத்துச் செடியானவுடன், அதைத் தங்கை என்று சொல்லிப் பேணச் சொல்லியிருப்பாளா சங்ககாலத் தாய்?

தான் உண்ண, தாய் தந்த நெய்யையும் பாலையும் தன் தங்கையாகிய புன்னைக்கு ஊற்றி ஊற்றி அன்பொடு வளர்க்கும் சிறுபெண்ணை, நற்றிணைப் பாடல் நன்கு சித்திரிக்கிறது.

பெரிதாய் வளர்ந்த மரத்தின் நிழலில், தம் காதலனோடு இருந்து பேசிட நாணிய அவள், தங்கை பார்க்கிறாள் என்று தடைவிதிக்கிறாள்.

இந்த நனிநாகரிகத்தின் பின்னணியில், தாவர வர்க்கம், மானுட வர்க்கத்தின் தாயாதி உறவாகும் தகுதியை என்னென்று சொல்வது?

விளையாடு ஆயமொடு வெண்மணல்

அழுத்தி  

மறந்தனம் துறந்த காழ்முளை அகைய   

நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப   

நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகுமென்று

அன்னை கூறினள் புன்னையது சிறப்பே   

அம்ம நாணுதும் நும்மொடு நகையே   

விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப   

வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்   

துறைகெழு கொண்கநீ நல்கின்

நிறைபடு நீழல் பிறவுமா ருளவே. 

(நற்றிணை- 172)

என்று பேசுகிறாளே நெய்தல் நிலத்துப் பெண்மகள் ஒருத்தி.

காலங்காலமாய்த் தன்னையும் சூழலையும் கண்ணின் மணியெனக் கருதிக் காக்கும் பெண்மையின் உண்மை வடிவம் தாய்மை என்னும் தூய்மை என்பதை மீளவும் சொல்லும் அன்னையின் தாலாட்டுப் பாடல் பிள்ளையைத்தான் உறங்கச் செய்தது. என்னை எழுப்பிவிட்டது.

கண்ணீரையும் நன்னீராக்கிப் பேணுவதோடு தன் தேவைக்கான உணவைத் தானே உற்பத்தி செய்து கொள்ளும் வழிவகையைக் காலங்காலமாகத் தமிழ் கொண்டிருக்கிறது.

தலைமுறைதோறும் இவ்வாறு தமிழகத்தின் நீர் மேலாண்மையும் இல்ல மேலாண்மையும் பள்ளிக்குச் செல்லாத பாட்டிகளது பாடல்கள் வழியே சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இன்றைக்குத் தமிழும் இல்லை; தாலாட்டும் இல்லை.

அன்பொழுகப் பாடும் நம் பாட்டிமார்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டுப் பிள்ளை வளர்க்கும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லவழியின்றித் தமிழன்னை வடிக்கும் கண்ணீர் ஆறாய்ப் பெருகிவந்து ஆங்கிலம் வளர்க்கிறது.

பார்த்தினீயப் பயிர் போலப் பள்ளி பல முளைக்கிறது. நின்று யோசிக்க ஏது நேரம்?

கட்டுரையாளர்: துணைப் பேராசிரியர், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுச்சேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com