ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மாற்றம் வேண்டும்

ஒவ்வொரு நாளும் நியாய விலைக் கடைகளின் அறிவிப்பு பலகையில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு

News image
Updated On :2 மார்ச் 2015, 9:34 pm

ஷேக் அப்துல்காதர்

ஒவ்வொரு நாளும் நியாய விலைக் கடைகளின் அறிவிப்பு பலகையில் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு விவரம் எழுதப்பட்டிருக்கிறதோ இல்லையோ, அக்கடையின் பணியாளர் விடுப்பில் சென்றுள்ளார் அல்லது வேறு பணிக்கு சென்றிருக்கிறார் என்ற தகவல் தவறாமல் இடம் பெறுகிறது.

மாதத்தின் முதல் வாரத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நியாய விலைக் கடைக்கு சென்றால், "இன்று அரிசி மட்டுமே வழங்கப்படும்' என பணியாளர் தகவல் தெரிவிக்கிறார்.

அடுத்த இரு தினங்களில் பிற பொருள்களை வாங்கி வரலாம் என சென்றால், "பொருள்கள் இருப்பு இல்லை, ஒரு வாரத்திற்குப் பின்னர்தான் கிடைக்கும்' என்ற பதில் கிடைக்கும்.

சில தினங்களுக்கு பிறகு பொருள்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சென்றால், "பொருள்கள் தீர்ந்துவிட்டது, இருப்பு இல்லை, இனி அடுத்த மாதம்தான் பொருள்கள் வழங்கப்படும்' என்ற அறிவிப்பு வரும்.

நியாய விலைக் கடையில் ஒரு மாதத்திலாவது குடும்ப அட்டைக்குரிய அனைத்துப் பொருள்களையும் வாங்க வேண்டும் என்று நினைத்தால் அது முடிவதில்லை.

தமிழகத்தின் 75% நியாய விலைக் கடைகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு பண்டகசாலை இவற்றின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் பணியாளர் பற்றாக்குறை, பொருள்கள் கொள்முதல் செய்ய நிதி ஆதாரம் இல்லாத சூழல் போன்ற காரணங்களால் கூட்டுறவு அமைப்பு நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் ஆர்வம் காட்டுவதில்லை.

கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகள் பெரும்பாலும் பகுதி நேரக் கடைகளாக உள்ளன. வாரத்தில் மூன்று தினங்கள்தான் செயல்படும். பணியாளர் விடுப்பில் சென்றால் அதுவும் இல்லை.

ரேஷன் கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட பாமாயில், தேயிலை போன்ற ஒரு சில பொருள்களின் அளவுதான் சரியாக இருக்கும். அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற சில  பொருள்களின் எடை அளவு பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை.

மின்னணு தராசு பொருத்தப்பட்டபோதிலும், பல இடங்களில் பொருள்களை சரியான அளவில் பணியாளர் பொதுமக்களுக்கு வழங்க முன்வருவதில்லை.

1,000 கிலோ அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொள்முதல் செய்தால், கடைக்கு வந்து சேரும் போது குறிப்பிட்ட அளவுக்கு அப்பொருளின் எடை குறைந்து விடுகிறது.

இந்த அளவுக் குறைவை சரி செய்யும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கும் அளவில் நியாய விலைக் கடை பணியாளர் குறைத்து வழங்க நேரிடுகிறது.

அண்மைக் காலமாக நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதால் விலையில்லா அரிசி வாங்குவதை பெரும்பாலானவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு நியாயமான விலையில் பொருள்கள் வழங்கும் நோக்கத்தில் பொது விநியோகத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவரும், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, சர்க்கரை போன்ற பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியன ஒரு கிலோ வீதமும், பாமாயில், தேயிலை, உப்பு போன்றவை ஒரு பாக்கெட் என்ற அடிப்படையிலும் விநியோகம் செய்யப்படுகிறது.

துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நியாய விலைக் கடைகளில் இப்பொருள்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், பொது விநியோகத் திட்டத்தில் இப்பொருள்கள் நியாய விலைக் கடைகளுக்கு அதிகபட்சம் 55 சதவீதம்தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

எனவே, இப்பொருள்கள் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்க முடியாத நிலையில் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்து விநியோகம் செய்கின்றனர்.

பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கும் நாள்களில் நியாய விலைக் கடை திறப்பதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், அவ்வாறு காத்திருந்தும் கிடைக்காமல் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.

கூட்டத்தை சமாளிக்க சில சமயங்களில் சில இடங்களில் காவல் துறை உதவியுடன் பொருள்கள் வழங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அரசின் நேரடி நிர்வாகத்தில் இயங்கும் நியாய விலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகளுக்கு குறைவான ஒதுக்கீடு செய்யப்படுவதால் பயனாளிகளுக்கு பாரபட்சமாக பொருள்கள் கிடைக்கும் சூழல் உள்ளது.

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குளறுபடியால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.

அன்றாடம் வேலைக்கு சென்று பிழைக்கும் கூலித் தொழிலாளிக்கு நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொருள்களும் கிடைத்தால், அத்தொழிலாளியின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

பொது விநியோகத் திட்டத்தை அரசு செம்மையாக செயல்படுத்துவதன் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க முடியும். அரசு செய்யுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.