ஏழைகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவே கிராம வங்கிகள் அரசால் உருவாக்கப்பட்டன. ஊரக வங்கிகள் என்றும், சமூக வங்கிகள் என்றும் அழைக்கப்பட்ட இந்த வங்கிகள் ஓர் அவசரச் சட்டம் மூலமாக 1975}இல் உதயமாகின. அதன் பிறகு, இதைப் பாதுகாக்க ஊரக வங்கிகள் சட்டம் 1976-இல் இயற்றப்பட்டது.
கிராம வங்கிகளின் எல்லா சிறப்புகளும் இப்போது நீர்த்துப்போய்விட்டன. அவை "வட்டார' அளவில் மட்டுமே செயல்படுவதாக இல்லை; அதனுடைய சட்ட விதிகளில் உறுதியளிக்கப்பட்டது போல ஏழைகளுக்காக மட்டுமே கவனம் செலுத்துபவையாகவும் இல்லை.
சீர்திருத்தம் என்ற பெயரில் 1993 முதல் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. மக்களவையில் கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டுள்ள "கிராம வங்கிகள் திருத்த மசோதா - 2014' மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டால் அது இந்த வங்கிகளுக்கு மூடுவிழா நடத்துவதாக இருக்கும் என்றே கூறலாம்.
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள்: (1) கிராம வங்கிகளின் பங்கு மூலதனத்தை தற்போதைய ரூ. 5 கோடியில் இருந்து ரூ.2,000 கோடியாக உயர்த்துவது.
(2) மத்திய, மாநில அரசுகள், கிராம வங்கிகள் உருவாக உதவும் வங்கிகள் தவிர மற்ற அமைப்புகளிடம் இருந்து பெறும் மூலதனத்தை 49% வரை உயர்த்துவது.
இப்போது மத்திய அரசு, மாநில அரசுகள், கிராம வங்கிகள் உருவாக உதவும் வங்கிகளின் மூலதன விகிதம் 50:15:35 என்று உள்ளது. சட்டத் திருத்தத்துக்குப் பிறகு, இந்த மூன்றின் ஒட்டுமொத்த மூலதனம் 51 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
(3) அரசுகள், வங்கிகள் தவிர, பங்குதாரர்களில் இருந்தும் இயக்குநர்களைத் தேர்ந்தெடுத்தல்.
(4) ஐந்து ஆண்டுகளுக்கு என்ற நிபந்தனையை நீக்கி, கிராம வங்கிகளுக்கு பிற வங்கிகள் நிர்வாக மற்றும் பொருளாதார உதவியை அளிக்க அனுமதிப்பது.
ரங்கராஜன் கமிட்டி ஆய்வின்படி, முறையான நிதி நிறுவனங்களிடம் இருந்து வெறும் 27 சதவீத விவசாயக் குடும்பங்கள் மட்டுமே கடன் பெறுகின்றன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கினர் தனியாரிடம் இருந்தும் கடன் பெறுகின்றனர்.
அதாவது, தங்களது முழுத் தேவை பூர்த்தியாவதற்கு 18 சதவீத விவசாயக் குடும்பங்களே கடன் பெற முடிகிறது. அதேபோல, 87% குறு விவசாயிகளும், 70% சிறு விவசாயிகளும் முறையான நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுவதில்லை என உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது.
அரசால் நியமிக்கப்பட்ட யு.சி. சாரங்கி கமிட்டியும் உலக வங்கியின் அறிக்கையை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது. 14% குறு விவசாயிகள் மட்டுமே முறையான நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறுகின்றனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பிரிட்டிஷ் அரசால் 1904-இல் கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்பட்டன. மான்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களுக்குப் பிறகு 1919-இல் அவை அரசுடைமையாக்கப்பட்டன.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு ஆதரவு அளித்தபோதும், அவை சிறு, குறு விவசாயிகளுக்கு உதவியாக இருக்கவில்லை. சாதாரண மக்களுக்கு உதவுவதற்காக 1955-இல் தொடங்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி, 1969-இல் 14 வங்கிகள் தேசிய மயமாக்கல் போன்றவையும் ஏழைகளுக்கு உதவியாக அமையவில்லை.
எனவே, ஏழைகளுக்கு உதவுவதற்காகவே, வங்கிகளுக்கான கூடுதல் செயலராக அப்போதிருந்த எம்.நரசிம்மம் தலைமையிலான கமிட்டி பரிந்துரைத்ததன் பேரில் கிராம வங்கிகள் 1975-இல் தொடங்கப்பட்டன.
கிராம வங்கிகள் மிகவும் விரைவாகப் பரவின. வெறும் 15 ஆண்டுகளில், அதாவது 1990 வாக்கில் நாட்டின் பல்வேறு தொலைவிடப் பகுதிகளில் 14,500 கிளைகளுடன் 196 கிராம வங்கிகள் தொடங்கப்பட்டிருந்தன. இந்த வங்கிகள் மூலம் 12.3 கோடிப் பேருக்கு கடன் வழங்கப்பட்டிருந்தது. இதுவே மிகப் பெரிய சாதனையாகும்.
இதையும், வங்கி தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் மறந்துவிட்டு, வர்த்தக ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் கிராம வங்கிகள் மதிப்பிடப்பட்டன. 1991-92இல் கிராம வங்கிகளால் ரூ.621 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
196 கிராம வங்கிகளில் 152 வங்கிகள் நஷ்டத்தைச் சந்தித்தது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த நஷ்டம் மிகைப்படுத்தப்பட்டதாகும். உண்மையில், ஒவ்வொரு வங்கிக்கும் ஓராண்டுக்கு ரூ.18 லட்சம் மட்டுமே நஷ்டமாகும்.
இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு அந்த வங்கிகள் செய்த சேவையைக் கணக்கிடும்போது, இந்த நஷ்டம் என்பது சிறிய அளவுதான்.
கிராம வங்கிகளை வர்த்தக மயமாக்கும் நடவடிக்கைகள் 1992-93இல் தொடங்கியது. ஏழைகளுக்கு மட்டுமே கடன் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது.
ஏழைகளுக்கு அளிக்கப்படும் மொத்த தொகையில் 10 சதவீதம் மற்றவர்களுக்கும் (பணக்காரர்களுக்கும்) அளிக்கப்படலாம் என்றும், அதில் 40 சதவீத தொகை மற்ற வர்த்தக வங்கிகள் எந்தவிதமான விதிமுறைகளை வகுத்துள்ளனவோ அதே விதிமுறைகளின்படி வழங்கப்படலாம் என்றும் வரையறுக்கப்பட்டது.
பின்னர், அனுபவங்களின் அடிப்படையில் இது முறையே 15 சதவீதம், 60 சதவீதம் என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த சீர்திருத்தத்துக்குப் பிறகு, அதுவரை ஏழைகளுக்கு 100 சதவீதம் வழங்கப்பட்ட கடன் 85 சதவீதமாக சுருங்கியது.
கிராம வங்கிகள் தாங்களே வட்டி விகிதத்தை முடிவு செய்து கொள்ளவும், பங்குகள், பத்திரங்களில் தாராளமாக முதலீடு செய்யவும், வங்கிகளை தொடங்குவதற்கும், மூடுவதற்கும், கிராம வங்கிகளை இணைத்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக, நஷ்டத்தில் இயங்கிவந்த கிராம வங்கிகள் லாபம் ஈட்டத் தொடங்கின. சீர்திருத்தங்களுக்குப் பின், 2013-14இல் எல்லா கிராம வங்கிகளும் லாபம் ஈட்டுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2013-14இல் கிராம வங்கிகள் ரூ.2,833 கோடி லாபம் ஈட்டியுள்ளன.
2008-09 முதல் 2012-13 வரையிலான காலகட்டத்தில், அரசுக்கு செலுத்திய வரி நீங்கலாக ரூ.12,589.33 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. சக்கரவர்த்தி கமிட்டி பரிந்துரையின்பேரில் கிராம வங்கிகளுக்கு முதலீடாக ரூ.1003.92 கோடியை அரசு அளித்துள்ளது.
ஆனால், கிராம வங்கிகளிடம் இருந்து வருமான வரியாக ரூ.9,318.27 கோடியை அரசு பெற்றுள்ளது.
2014 மார்ச் நிலவரப்படி, மொத்த வைப்புத் தொகையான ரூ.2,39,504 கோடியில் ரூ.1,10,514 கோடி அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதலீடு / வைப்புத் தொகை விகிதம் 46.14% ஆகும். இதற்கு முந்தைய ஆண்டு இந்த விகிதம் 52.34% ஆகவும், 2001-இல் இது 72% ஆகவும் இருந்தது.
முன்பு கிராம வங்கிகள் ஒன்றிரண்டு மாவட்டங்களை அடக்கிய பகுதிக்குள் இயங்குபவையாக இருந்தன. இப்போது வியாஸ் கமிட்டியின் பரிந்துரையை அடுத்து, 2014 மார்ச்சில் 196 கிராம வங்கிகள் 57 ஆக சுருக்கப்பட்டன.
ஒரு முழு மாநிலத்துக்கே ஒரே வங்கியாக தெலங்கானா கிராமீண் வங்கி செயல்படுகிறது. லட்சுமி விலாஸ் வங்கி போன்ற தனியார் வர்த்தக வங்கிகளை விடப் பெரிதாக ஆந்திரா பிரகதி கிராம வங்கி உள்ளது. 33 கிராம வங்கிகளில் தலா ரூ.3,000 கோடிக்கும் அதிகமான வைப்புத் தொகை உள்ளது.
கிராம வங்கிகள் இப்போது பெரு நகரங்களில் கூட தொடங்கப்பட்டுள்ளன. 2013 மார்ச் நிலவரப்படி, நகரப் பகுதிகளில் 1080 கிளைகளும், பெரு நகரங்களில் 190 கிளைகளும் செயல்படுகின்றன. மார்ச் 2014 நிலவரப்படி, நகரங்களில் 19,082 கிளைகள் உள்ளன.
சீர்திருத்தங்களுக்கு முன், வைப்புத் தொகை முழுவதும் ஊரகப் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. 2013 மார்ச் நிலவரப்படி, ரூ.1,20,826.9 கோடி வைப்புத் தொகையில் ரூ.88,021.5 கோடி மட்டுமே ஊரகப் பகுதிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 72.84 சதவீதம் ஆகும்.
மொத்த கடன் தொகையில் 64.78 சதவீதமே ஊரகப் பகுதிகளுக்கு என்பது, அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டதுபோக, பெரும் தொகை நகரப் பகுதிகளில் ஏழையாக இல்லாதோருக்கும் வழங்கப்பட்டுள்ளதைத் தெளிவுபடுத்துகிறது.
மேலும், சிறு கடன்கள் என்பவை வேகமாக விடைபெற்றுவருகிறது. 2013இல் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி, ரூ.100 கோடிக்கும் அதிகமாக 20 கடன்களும், ரூ.25 கோடி முதல் ரூ.100 கோடி வரை 539 கடன்களும், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை 30,022 கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.
ரூ.5 லட்சத்துக்கு மேல் கடன் என்பது ஏழைகளுக்கானது அல்ல என்பது தெளிவு. மார்ச் 2013 நிலவரப்படி ரூ.5 லட்சத்துக்கு மேலான கடன் நிலுவைத் தொகை ரூ.15,937.6 கோடியாகும்.
இந்த நிலையில், கிராம வங்கிகள் சீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், அந்த வங்கிகள் தொடங்கப்பட்டதற்கான நோக்கத்தில் இருந்து விலகிச் செல்வதுடன், ஏழைகளுக்கு எதிரானதாகவே அது அமையும்.
எனவே, அரசு மறு சிந்தனை செய்து இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்துவதுடன், எந்த நோக்கத்துக்காக கிராம வங்கிகள் தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் ஈடேறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சான்றோர்...பாலர்

கங்கை நதிப்புறத்து...நவீன இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள்-திருமூலர்

மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பிரதமர் மோடி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

