அன்னையைப் போற்றுவோம்!

இந்த ஆண்டு, உலக அன்னையர் தினக் கொண்டாட்டத்தின் 108-ஆம் ஆண்டாகும். அமெரிக்காவில் மேற்கு
Published on
Updated on
5 min read

இந்தியக் கலாசார மரபின் சிறப்பு என்னவென்றால், ஒரு மனிதன் இந்த உலகின் எல்லா விஷயங்களிலிருந்தும் துறவு மேற்கொண்டாலும்கூட, தாயிடமிருந்து துறவு என்பது இல்லை என்பதே. இதை இந்திய ஆன்மிக வரலாற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இருவர்
நிலைநிறுத்திவிட்டுப் போனார்கள்.
 இந்த ஆண்டு, உலக அன்னையர் தினக் கொண்டாட்டத்தின் 108-ஆம் ஆண்டாகும். அமெரிக்காவில் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் அன்னா ஜார்விஸ் என்னும் பெண்மணி தன்னுடைய அன்புத் தாயாகிய ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் நினைவாக 1908-ஆம் ஆண்டில் அன்னையர் தினத்தைக் கொண்டாடினார்.
 அதற்குக் காரணம், அன்னாவின் தாய் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு உதவி செய்ததுடன், ஓர் அமைதித் தூதுவராகவும் பணியாற்றி அதற்கென்றே சில அன்னையர் குழுக்களை அமைத்தார்.
 அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று 1905-இல் இருந்தே அன்னா ஜார்விஸ் வேண்டுகோள் விடுத்து வந்தார். முதன்முதலில் அன்னையர் தினத்துக்கான அங்கீகாரத்தைப் பற்றிய கோரிக்கைகள் அமெரிக்காவில் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகின. ஆனால், 1914-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அன்னையர்களைக் கெüரவிக்கும் தேசிய நாளாக
 அறிவித்தார்.
 காலப் போக்கில் எல்லா நல்ல விஷயங்களையும் போலவே அன்னையர் தினம் என்பதும் வணிக மயமாக்கப்பட்டபோது அன்னா ஜார்விஸ் பெருத்த ஏமாற்றத்துக்கும், ஆத்திரத்துக்கும் உள்ளானார். ஆனால், உறவுகளே வணிக மயமாகிப் போய்க் கொண்டிருக்கும் காலச் சூழ்நிலையில் அவரது போராட்டம் வெற்றி பெற முடியவில்லை.
 நுகர்வோர் கலாசாரமும், நவ நாகரிகமும் மேலோங்கி நிற்கும் 21-ஆம் நூற்றாண்டிலும், தாய்ப் பாசம் என்பது தவிர்க்க முடியாததாகிறது என்பதற்கு அமெரிக்க நாட்டில் ஜனவரி 2009-இல் வெள்ளை மாளிகையில் கொள்கை மற்றும் திட்டக் குழுவின் இயக்குநராக நியமிக்கப்பட்ட ஆன் மேரி ஸ்லாட்டர் ஓர் உதாரணம்.
 அவர் மிகப் புகழ் பெற்ற வழக்குரைஞர், அரசியல் விமர்சகர், பன்னாட்டுக் கொள்கைகளைப் பற்றிய பல்கலைக்கழக விரிவுரையாளர் என்று பன்முகப் பரிமாணம் கொண்டவர். அமெரிக்க சர்வதேச சட்டக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர்.
 ஒபாமா அமெரிக்க அதிபரானதும், ஆன் மேரி ஸ்லாட்டரை வெள்ளை மாளிகையின் திட்டக் குழு இயக்குநராக ஜனவரி 2009-இல் நியமிக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெண்மணி தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் மிக உயர்ந்த அரசுப் பதவியையும், வீட்டிலிருக்கும் இரண்டு குழந்தைகளின் தேவைகளையும் என்னால் சரியாக ஈடுகட்ட முடியவில்லை என்பதே.
 2012-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அட்லாண்டிக் பத்திரிகை இதழில் ஆன் மேரி ஸ்லாட்டர் ஒரு கட்டுரையை எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டார்:
 அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் சென்ற புதன்கிழமை மாலை அளித்த ஒரு மாபெரும் விருந்தில் சர்வதேசத் தலைவர்களோடு உரையாடிக் கொண்டும், அனைத்துலக அரசியலை விவாதித்துக் கொண்டும் நான் வலம் வந்தேன்.
 ஆனால், அதே நேரத்தில் எனது மனதின் ஒரு மூலையில் எட்டாம் வகுப்பு பயின்று கொண்டிருந்த எனது 14 வயது மகனைப் பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. எப்போதையும் விட, இப்போது அவனுக்கு நான் தேவையாக இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்தபோது, வேலையைத் துறக்க முடிவு செய்தேன்.
 ஆன் மேரி ஸ்லாட்டரின் கட்டுரை, வேலைக்குப் போகும் பெண்களிடமும், பெண்ணியம் பேசுபவர்களிடமும் மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. திருமதி ஆன் மேரி செய்தது சரியா, தவறா என்னும் விவாதம் இன்னும் தொடர்கிறது. ஆனால், அந்த விவாதத்தின் முடிவு எப்படி இருந்தாலும், அந்தப் பெண்மணியின் முடிவுக்குப் பின்னால் இருந்தது ஒரு தாயுள்ளம் என்பதை நாம் மறுக்க
 முடியாது.
 இந்தியக் கலாசாரத்தில் அன்னைக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் வேறு எந்தக் கலாசாரத்திலும் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. தைத்ரிய உபநிஷதத்தில் சிக்ஷôவல்லி என்று ஒரு பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் குருகுலத்தில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு வெளியேறும் மாணவன், தான் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளைத் தன் ஆசானிடம் கேட்கிறான்.
 இந்த உலகின் முதல் பட்டமளிப்பு விழாப் பேருரையைப் போல் அமைந்த அந்த உரையில் அந்த மாணாக்கர்களை நோக்கி குருகுலத்தின் ஆசான் கூறுகிறார் "சத்யம் வத: தர்மம் சர: மாத்ரு தேவோ பவ: பித்ரு தேவோ பவ: ஆசார்ய தேவோ பவ: அதிதி தேவோ பவ:'
 அதாவது, சத்தியத்தை நிலை நிறுத்தி, அறத்தைப் பேணி, தாய், தந்தை, குரு மற்றும் விருந்தினரைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் என்பதையே ஒருவன் கற்ற கல்வி அவனுக்கு வாழ்க்கைப் பயனாகச் சொல்கிறது என்பதை மேற்காணும் வாசகங்களால் மாணாக்கர்களிடம் ஆசான் கூறுகிறார்.
 அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்பதும், தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதும் முன்னோர் இட்டுச் சென்ற வேத வாக்காகும்.
 இந்தியக் கலாசார மரபின் சிறப்பு என்னவென்றால், ஒரு மனிதன் இந்த உலகின் எல்லா விஷயங்களிலிருந்தும் துறவு மேற்கொண்டாலும்கூட, தாயிடமிருந்து துறவு என்பது இல்லை என்பதே. இதை இந்திய ஆன்மிக வரலாற்றில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இருவர் நிலைநிறுத்திவிட்டுப் போனார்கள்.
 ஒருவர் காலடியில் பிறந்து, தன் காலடியால் இந்த பாரத தேசம் முழுவதையும் மூன்று முறை சுற்றி வந்து, ஹிந்து மதத்தை ஒருங்கிணைத்து, நான்கு மடங்களை நமது நாட்டில் நிறுவி, 32 வயதில் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஆதி சங்கரர் ஆவார்.
 இன்னொருவர் செல்வச் செழிப்பிலே பிறந்து மிகப் பெரிய வணிகராக வளர்ந்து, அதன் பின் ஒரே நாளில் காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று கூறிவிட்டு, சென்னையில் தன்னுடைய பூத உடலை மண்ணிலோ, நீரிலோ, நெருப்பிலோ கலக்காமல் மறைந்து போன பட்டினத்து அடிகள் ஆவார்.
 இந்த இருவரும் எல்லாப் பற்றுகளையும் துறந்தாலும், தமது அன்னையின் மேலுள்ள பற்றைத் தவிர்க்க முடியாமல், அவர்களது அன்னைகளின் ஈமச் சடங்குகளில் கலந்து கொண்டு அன்றைய சமூகத்தின் பழமையை எதிர்த்துப் போரிட்ட
 வர்கள்.
 ஆதி சங்கரர் சிருங்கேரியில் இருக்கும்போது, தனது அன்னைக்கு காலம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்து உடனடியாகக் காலடி திரும்புகிறார். அங்கிருந்த பழமைவாதிகள் சங்கரருக்கு அவருடைய வீட்டுக்குள்ளே நுழைவதற்கான அனுமதியை மறுக்கிறார்கள்.
 ஆனால், தாயோடு ஓர் உயிருக்கு ஏற்பட்ட உறவு, துறவினால் அழிக்க முடியாதது என்று கூறி ஆதி சங்கரர் தன்னுடைய காவி உடையை நீக்கிவிட்டு, அன்னைக்குப் பணிவிடை செய்கிறார். பிரம்மத்தை உணர்ந்த ஞானி தன்னுடைய மகன் என்பதை உணர்ந்திருந்த அந்த அன்னை ஆர்யாம்பாள், ஆதி சங்கரரிடம் தனக்கு பிரம்ம ஞானத்தைப் போதிக்க வேண்டும் என்று உயிர் பிரியும் தருவாயில் கேட்கிறாள்.
 உடனே சிவ புஜங்கம் மற்றும் விஷ்ணு புஜங்கம் ஆகிய ஸ்லோகங்களை ஆதி சங்கரர் பாடுகிறார். அதைக் கேட்டுக் கொண்டே அந்தத் தாயின் உயிர் பிரி
 கிறது.
 எல்லா உணர்ச்சிகளையும் கடந்திருக்க வேண்டிய ஞானியாகிய ஆதி சங்கரர் அந்த ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி, அன்னையின் சிதைக்குத் தீ மூட்டி 5 ஸ்லோகங்களைப் பாடுகிறார். அவைதான் உலகப் புகழ் பெற்ற மாத்ரு பஞ்சகம் ஆகும். அந்த 5 ஸ்லோகங்களின் பொருள் பின் வருமாறு:
 (1) தடுக்க முடியாத பிரசவ வேதனை ஒருபுறம் இருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருட காலம் மல மூத்திரம் நிறைந்த படுக்கை ஆகியவற்றோடு கூடிய கர்ப்ப காலத்தில் ஓர் அன்னை படும் துயரத்தையும், பாரத்தையும் கொஞ்சமாவது தீர்க்க முடியாதவன் ஆகி விடுகிறானே பிள்ளை என்பவன். தனக்காக அந்தக் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று சொல்ல, அந்தத் தாய்க்கு வணக்கம்.
 (2) தாயே, ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலத்துக்கு வந்து, கனவில் நான் சன்யாசம் பூண்டதாகக் கண்டு உரக்க அழுதாயே, அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே, அப்படிப்பட்ட உன்னை உனது கால்களில் விழுந்து வணங்குகிறேன்.
 (3) தாயே, மரிக்கும் தருணத்தில் தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லை. மரித்த தினத்தில் சிரார்த்தம் கொடுக்க முடியாமல் இருந்தது. உன் மரண வேளையில் தாரக மந்திரம் கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என் மீது இணையற்ற தயை காட்ட வேண்டும், தாயே.
 (4) என் முத்தல்லவா, என் கண்கள் அல்லவா, என் ராஜா, என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே. அத்தகைய வாயில், சாரம் இல்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன்.
 (5) அன்று பிரசவ காலத்தில் அம்மா, அப்பா, சிவா என்று உரக்கக் கத்தினாய் அல்லவா, தாயே, இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.
 மேற்கண்ட பொருள் கொண்ட மாத்ரு பஞ்சகம் ஆதி சங்கரர் போன்ற ஒரு துறவியின் மனதுக்குள் இருந்தும், தாய்ப் பாசத்தை மீட்டெடுக்கச் செய்த பாடல்கள் ஆகும்.
 கேரளத்தில் ஓர் ஆதி சங்கரர் போலவே, தமிழகத்தில் பட்டினத்தாரும் தன்னுடைய துறவுக் கோலத்தைத் துறந்து தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்து விடுகிறார்.
 இவ்வுலக வாழ்க்கையில் எதிலும் சாரம் இல்லை என்றும், அணிந்திருந்த அரை வேட்டி உள்பட எல்லாப் பந்தங்களும் சுமையாகப் போய்விட்டன என்றும் பற்றற்ற நிலையில் பாடிய பட்டினத்தாருக்கும் தனது தாயின் மரணம் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்துகிறது.
 அப்போது அவர் பாடிய 10 பாடல்கள் கேட்பவர் நெஞ்சை உருக்கும் தன்மை கொண்டவை. அதில் முதல் பாடல்
 ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
 பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யவிரு
 கைப்புறத்தி லேந்திக் கனகமுலை
 தந்தாளை
 எப்பிறப்பிற் காண்பேன் இனி
 என்று பட்டினத்தார் பாடுகிறார். அடுத்த
 3 பாடல்களில் எப்படிப்பட்ட அன்னைக்கு தான் தீ மூட்ட நேரிட்டது என்பதை உள்ளம் உருகப் பாடுகிறார்.
 வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
 கட்டிலிலும் வைத்தென்னை காதலித்து முட்டச்
 சிறகிலிட்டு காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
 விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்
 என்றெல்லாம் பாடி விட்டு, அடுத்த இரு பாடல்களில் தாயின் உடலில் தான் வாய்க்கரிசி போட நேர்ந்ததை எண்ணிக் கதறி அழுகிறார் பட்டினத்தார்.
 அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
 வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் -
 உருசியுள்ள
 தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
 மானே என அழைத்த வாய்க்கு
 அள்ளி இடுவது அரிசியோ தாய்தலை மேல்
 கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
 முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
 மகனே எனஅழைத்த வாய்க்கு
 மேற்கண்ட இரு பாடல்களும் ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகத்தில் வரும் நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களை அப்படியே ஒத்திருப்பதைக் காணும்போது நாம் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
 தாயினுடைய உடல் தீப்பற்றி எரிவதைப் பார்த்து நெஞ்சு வெடித்துக் கதறுகிறார் பட்டினத்தார்.
 வேகுதே தீயதனில் வெந்து பொடி
 சாம்பல்
 ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
 குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
 கருதி வளர்த்தெடுத்த கை
 ஆனால், ஒன்பதாவது பாடலில் நெஞ்சைப் பிளக்கும் சோகத்தைப் பிழிந்து கொடுத்த பட்டினத்து அடிகள், கடைசிப் பாடலில் சுய உணர்வு பெற்று எழுகிறார்.
 வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில்
 இருந்தாள்
 நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால்தெளிக்க
 எல்லோரும் வாருங்கள் ஏதென்று
 இரங்காமல்
 எல்லாம் சிவமயமே யாம்.
 ஆதி சங்கரருக்கு ஆறாம் நூற்றாண்டிலும், பட்டினத்து அடிகளுக்கு பத்தாம் நூற்றாண்டிலும் ஏற்பட்ட அதே துயரம், இன்னொரு துறவிக்கும் ஏற்படுகிறது.
 1900-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சுவாமி விவேகானந்தர் தனது தாயிடம் சிறிது காலம் போய் இருக்க விழைகிறார். அப்போது ஆதி சங்கரரை நினைவில் கொண்டு சுவாமி விவேகானந்தர் கூறினார்:
 1884-இல் என் தாயாரை நான் விட்டு வந்தது பெரும் துறவு. இப்போது திரும்பவும் என் தாயாரிடம் போவது அதை விடப் பெரிய துறவு என்று எனக்கு இப்போது காட்டப்படுகிறது. ஒரு வேளை அன்று ஆதி சங்கரருக்கு எந்த அனுபவத்தைக் கொடுத்தாளோ அதே அனுபவத்தை நானும் பெற வேண்டும் என்று தேவி விரும்புகிறாள் போலும்.
 எனவே, நமது நாட்டைப் பொருத்த அளவில் ஆதி சங்கரர், பட்டினத்து அடிகள், சுவாமி விவேகானந்தர் போன்ற பிள்ளைகள் பிறக்கும் நாள் எல்லாம் அன்னையரை போற்றும் நாளாக அமையும்.
 
 கட்டுரையாளர்:
 நீதியரசர், சென்னை உயர்நீதிமன்றம்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com