வரவேற்கத்தக்க வட்டிகுறைப்பு
எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கிக்கு இணை ரிசர்வ் வங்கிதான் என்று சொல்லப்படுவது உண்டு


எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிடுவதில் ரிசர்வ் வங்கிக்கு இணை ரிசர்வ் வங்கிதான் என்று சொல்லப்படுவது உண்டு. அதனை உறுதிபடுத்தியுள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி மற்றும் கடன் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தில் "ரெப்போ ரேட்' அரை சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, 7.25 சதவீதமாக இருந்த "ரெப்போ ரேட்' 6.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வர்த்தக வங்கிகளுக்கு வழங்கும் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் தான் "ரெப்போ ரேட்' எனப்படுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் குறைந்தபட்ச வட்டிவிகிதம் இதுவே என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
சி.ஆர்.ஆர். எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதம் நான்கு சதவீதமாக தொடருகிறது. எஸ்.எல்.ஆர். என்கிற வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருப்பாக வைக்க வேண்டிய வைப்புத் தொகையும் 21.5 சதவீதமாகவே நீடிக்கிறது.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று அரசு, தொழில் சம்மேளனங்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தி வந்தனர். அதேநேரம், இந்த முறை கால் சதவீத அளவுக்கு வட்டி விகிதம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக இருந்தது.
பணவீக்கம் கட்டுக்குள் வந்திருப்பது, நிதி பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட அளவு குறைந்திருப்பது ஆகிய அம்சங்கள் வட்டிக் குறைப்புக்கு சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்பட்டன. ஆனால், வட்டி விகிதம் அரை சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது இனிய அதிர்ச்சிதான்.
பணவீக்கம் கட்டுக்குள் வந்தால், வளர்ச்சிக்கு கை கொடுப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒருபோதும் தயங்காது என்று பல மாதங்களாக ரகுராம் ராஜன் சொல்லி வந்தார். அதை இப்போது செயலில் காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டும் அல்லாமல், இப்போது சீனாவிலும் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. இது நம்மை மறைமுகமாக பாதிக்கவே செய்கிறது.
நமது ஏற்றுமதியில் 17 சதவீதம் ஐரோப்பிய யூனியனுக்கும், 12.5 சதவீதம் அமெரிக்காவுக்கும், 5 சதவீதம் சீனாவுக்கும் செய்யப்படுகிறது. அதாவது, நமது ஒட்டுமொத்த ஏற்றுமதி பொருள்களில், மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக மேற்கூறிய மூன்று சந்தைகளுக்கும் செல்கின்றன.
தற்போதைய மந்த நிலை காரணமாக, அந்த நாடுகளின் தேவை கடுமையாக சரிந்துள்ளது. இதை ஈடு செய்ய வேண்டுமெனில், நாம் இரண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்று, உலக நாடுகளில் பிற புதிய சந்தைகளை நமது ஏற்றுமதி வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும். இரண்டாவது, முக்கியமாக உள்நாட்டு தேவைகளை மேம்படுத்த வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு தேவை அதிகரிப்பும், முதலீடும் தான் வளர்ச்சிக்குத் திறவுகோல் என்று தனது 29.9.2015 உரையில் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார் என்பது தெளிவு.
ஆக, அரை சதவீத வட்டி குறைப்பின் நோக்கம் உள்நாட்டுத் தேவைகளையும், தொழில் துறையில் புதிய முதலீடுகளையும் உயர்த்துவதற்கு உதவ வேண்டும் என்பதுதான்.
சர்வதேச நிலவரத்தை எடுத்துக் கொண்டோமேயானால், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், தனது வட்டி விகிதத்தை உடனடியாக உயர்த்தும் உத்தேசத்தை இப்போதைக்கு கைவிட்டுள்ளது. அந்த நாட்டில் வட்டி விகிதம் இன்னமும் கிட்டத்தட்ட பூஜ்யம் அளவிலேயே தொடருகிறது. இதுவும் இந்தியாவில் வட்டி விகிதத்தை குறைப்பதற்கு சாதகமான சூழலாக உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, வட்டி குறைப்பால் மத்தியதர மக்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன?
வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்கள் தவிர, ஏற்கெனவே "மாறும் தன்மை உடைய வட்டி விகிதத்தில்' (ஃபுலோட்டிங் ரேட்) வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கும், அவர்களுடைய இ.எம்.ஐ. எனப்படும் மாதத் தவணை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், நிலையான (ஃபிக்ஸட் ரேட்) வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு வட்டி குறைய வாய்ப்பில்லை.
முன்னதாக, இந்த ஆண்டில் ஜனவரி, மார்ச், ஜுன் மாதம் ஆகிய மூன்று நிதி மற்றும் கடன் கொள்கை அறிவிப்பின்போது, தலா கால் சதவீதம் என மொத்தம் முக்கால் சதவீதம் "ரெப்போ' வட்டி குறைக்கப்பட்டது.
செப்டம்பர் 29-ஆம் தேதி அரை சதவீதம் வட்டி குறைப்பையும் சேர்த்து 1.25 சதவீத வட்டி குறைக்கப்பட்டுள்ளது.
இப்போதைய வட்டி குறைப்பு அறிவிப்புக்கு முன்னதாக 0.75 சதவீத அளவு வட்டி குறைக்கப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக 0.30 சதவீதத்தை மட்டுமே வங்கிகள் குறைத்துள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவித்தார்.
எந்த அளவு குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) குறைகிறதோ, அந்த அளவு வங்கிகள் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், தொழில் கடன் ஆகியவற்றுக்கான வட்டியையும் குறைக்க வேண்டும் என்பது சட்ட விதிமுறை இல்லாவிட்டாலும், நீண்டகால மரபாக இருந்து வருகிறது.
ஒருவேளை, ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை செயல்படுத்துவதில் வர்த்தக வங்கிகளுக்கு பிரச்னைகள் இருக்குமானால், அதற்கு உரிய தீர்வுகளை, அரசும் வங்கிகளும் இணைந்து கண்டறிய வேண்டுமே தவிர, ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பின் பலனை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மறுப்பது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.
நல்லவேளையாக, இந்த முறை ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, பாரத ஸ்டேட் வங்கியும், பிற வங்கிகளும் வட்டி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதர வங்கிகளும் அடுத்துவரும் நாள்களில் வட்டியைக் குறைப்பார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
தொழில் - வர்த்தக சம்மேளனங்கள் உள்ளிட்ட பல வர்த்தக அமைப்புகள் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பை வரவேற்றுள்ளன.
பெரும் தொழில் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வங்கிக் கடன் மூலம் தங்களது தொழில்களை விரிவாக்கம் செய்வதற்கும், புதிய தொழில்களில் முதலீடு செய்வதற்கும் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் தொழில் துறைக்கு வழங்கும் கடன் அளவின் வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.
ஒன்று, சர்வதேசப் பொருளாதார நிலவரங்கள். இரண்டாவது, வங்கிக் கடனுக்கான வட்டி குறைக்கப்படாமல் இருந்தது. தற்போது, இரண்டாவது குறைபாட்டுக்கு நிவாரணம் கிடைத்துவிட்டது. இனி தொழில் துறை உத்வேகம் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும், கடன் கொள்கையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இரண்டு விஷயங்கள் கவனத்துக்குரியவை. ஒன்று, சில்லறை விலை அடிப்படையிலான (கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டெக்ஸ்) பணவீக்கம் 2016 ஜனவரியில் 5.8 சதவீதமாக இருக்கும் என்பதாகும்.
இரண்டாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், நடப்பு நிதி ஆண்டில் 7.4 சதவீதமாக இருக்கும் என புதிய நிதி கொள்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக, இது 7.6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது.
வட்டி குறைப்பு எதிர்பார்த்த பலனைத் தரும் என்று எதிர்பார்க்கும் அதேநேரம், வட்டி குறைப்பால் கடுமையாக பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் சோகம்.
எப்போதெல்லாம் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறைகிறது. இதனால், தங்கள் வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கும் சொற்ப வட்டியை நம்பி வாழும் மூத்த குடிமக்களும், ஓய்வூதியம் பெறுபவர்களும் இல்லத்தரசிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
இதை வணிக ரீதியில் நியாயப்படுத்தும் போக்கை கைவிட்டுவிட்டு, மனிதாபிமான ரீதியில் சிந்தித்து நிவாரணம் காண வேண்டியது அவசியம் ஆகும். 2016-17 நிதிநிலை அறிக்கையிலாவது இந்த நீண்டகால பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும்.
அதற்கு இடையில், உடனடியாகச் செய்யக்கூடியது ஒன்று உண்டு. ஓய்வூதியமும் அதற்கான அகவிலைப்படியும் சம்பளமாக கருதப்பட்டு இப்போது வருமான வரி விதிக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படிக்கு வருமான வரியை உடனே தள்ளுபடி செய்யலாம் அல்லவா?
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).
எப்போதெல்லாம் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறைகிறது. இதனால், தங்கள் வாழ்நாள் சேமிப்பிலிருந்து கிடைக்கும் சொற்ப வட்டியை நம்பி வாழும் மூத்த குடிமக்களும்,
ஓய்வூதியம் பெறுபவர்களும் இல்லத்தரசிகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...