"ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைக் கட்டுப்பாடற்ற முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ஆன்டிபயாட்டிக் மருந்துகளுக்கெதிரான எதிர்ப்பு சக்தியை பாக்டீரியாக்கள் இன்னும் சில வருடங்களில் முழுமையாக உருவாக்கிவிடும். இதனால் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் செயல்படாத நிலையை அடைந்து விடும். இதன் விளைவுகளால் 2050-ஆம் ஆண்டில் சுமார் ஒரு கோடிப் பேர் இறந்துபோகலாம்' என்கிற அபாயகரமான எச்சரிக்கையை அண்மையில் உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ளது.
÷பாக்டீரியா நுண் உயிரிகளுக்கும், மனித குலத்துக்குமான போரானது ஆதி மனிதன் பூமியில் தோன்றிய காலத்திலிருந்தே நடைபெற்று வருகின்றது. பல ஆயிரக்கணக்காண ஆண்டுகளாக நடைபெற்ற இந்தப் போரில் தோற்றுக் கொண்டிருந்த மனித குலம் தனது முதல் வெற்றியை 1929ஆம் ஆண்டில்தான் பதிவு செய்தது. ஆம், அந்த ஆண்டில்தான் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ற விஞ்ஞானி "பென்சிலின்' என்ற முதலாவது ஆன்டிபயாட்டிக் மருந்தைக் கண்டுபிடித்தார். அன்றில் இருந்து மனித குலத்துக்கும், பாக்டீரியாவுக்கும் இடையேயான போரில் மனித குலத்தின் கையே ஓங்க ஆரம்பித்தது.
÷நம் உடல் பாக்டீரியா தொற்றுக்குள்ளாகும்போது அதன் பெருக்கத்தைக் குறைத்தோ, அதை முற்றிலுமாக அழித்தோ நம்மை நோயிலிருந்து காக்கும் மருந்துகளே, ஆன்டிபயாடிக் மருந்துகள் எனப்படும். பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், நம் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்த்துப் போராடும். அதன் திறன் குறையும்போதோ அல்லது பாக்டீரியா தொற்றின் வீரியம் அதிகமாக இருக்கும்போதோ, இந்த ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தேவையாகின்றன.
÷ஆன்டிபயாட்டிக் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாக சிறிய வெட்டுக்காயம், சாதாரண காய்ச்சல் கூடப் பல்லாயிரக்கணக்கானவர்களின் மரணத்துக்குக் காரணமாக அமைந்தன. "பிளாக் டெத்' என வரலாற்றில் அறியப்படுகின்ற, 14ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொடிய பிளேக் தொற்று நோயால் சுமார் 20 கோடி மக்கள் உலகம் முழுவதிலும் கொல்லப்பட்டனர். ஆன்டிபயாடிக்கின் கண்டுபிடிப்பானது மனித குலத்தை மிகப் பெரிய அழிவிலிருந்து காப்பாற்றியது.
÷ஆன்டிபயாட்டிக் இன்று தனது வீரியத்தை இழந்து வருகிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை (Antibiotic Resistance) பாக்டீரியாக்கள் திறம்பட உருவாக்கி வருகின்றன. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக, பாக்டீரியாக்கள் உருவாக்கிவரும் இந்த எதிர்ப்பு சக்தியானது, நவீன மருத்துவத் துறை எதிர்க்கொள்ளும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது.
÷தேவையில்லாமல் ஒருவரின் உடலுக்குள் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செல்லும்போது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிராக மனித உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தம்மை தகவமைத்துக் கொள்கின்றன. இதையே ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி Antibiotic Resistance என்பார்கள்.
÷ஆன்டிபயாட்டிக் மாத்திரைகள் பாக்டீரியாக்களை எதிர்த்தே போராடும். ஆனால், வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடிய சளி, தடுமன் போன்றவற்றுக்குக் கூட சிலர் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை உள்ளெடுக்கின்றனர். இந்தியாவில் 53 சதவீதம் பேர் தேவையே இல்லாமல், மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்துகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். சிறிய தலைவலிக்குக் கூட ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள்.
÷வளர்ந்த நாடுகளில் ஆன்டிபயாட்டிக்குகளின் பயன்பாடுகளை மிகுந்த கண்காணிப்பின் கீழேயே வைத்துள்ளனர்.
÷பிராய்லர் கோழிக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாட்டிக் கொடுக்கிறார்கள். இதை மனிதன் சாப்பிடும்போது சிக்கனுடன் சேர்த்து தனக்குத் தேவையில்லாத ஆன்டிபயாட்டிக்கையும் உள்ளெடுக்கிறான். இப்படியாகத் தேவை இல்லாமல் ஆன்டிபயாட்டிக்கை உள்ளெடுப்பதால் ஆன்ட்டிபயாட்டிக்குக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பாக்டீரியாக்கள் இலகுவாக உருவாக்கிக் கொள்கின்றன.
÷பல்லாயிரம் கோடிகளை வருமானமாகத் தரும் கற்பக விருட்சமாக ஆன்டிபயாட்டிக்குகள் உள்ளன. அந்த அளவுக்கு அவை தாராளமாக பொதுச் சந்தையில் கிடைப்பதற்கு மருந்து நிறுவனங்களின் கூட்டுதான் காரணம் என்கிறார்கள்.
÷எல்லாவிதமான ஆன்டிபயோட்டிக்கிற்கும் எதிர்ப்பு சக்தி உருவானால், சிறிய காய்ச்சலே உயிர்க் கொல்லியாக மாறக் கூடிய அபாயங்கள் உள்ளன. "ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பாக உயிர்க் கொல்லியாக இருந்த சில பாக்டீரியாக்கள் இப்போது சாதாரணமானவையாக மாறி வருகின்றன. ஆனால், அப்போது சாதாரணமாக இருந்த சில பாக்டீரியாக்கள் இன்று மிகவும் அபாயகரமானவையாக மாறி வருகின்றன' என்கிறார் டாக்டர் சிவராமன்.
÷"தேவையில்லாமல் ஆன்டிபயாட்டிக்கை பயன்படுத்துவதை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். அரசு சட்டங்கள் இயற்றுவதன் வாயிலாகத்தான் இதைச் செயல்படுத்தலாம். நமது உடலில் இயல்பாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே பல நோய்களைக் குணப்படுத்தப் போதுமானது என்பதைப் புரிந்து கொண்டு, மிக அத்தியாவசியமான வேளைகளில் மட்டுமே ஆன்டிபயாட்டிக்கை உள்கொள்ள வேண்டும்' என்கிறார் டாக்டர் புகழேந்தி.
÷"ஆன்டிபயாட்டிக் என்ற வார்த்தையே கடந்த ஐம்பது வருடங்களுக்குள் வந்ததுதான். அதற்கு முன்பாக நமக்கு வருகின்ற நோய்களை நம்முள் இயல்பாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டே தீர்த்து வந்தோம். மஞ்சள், மிளகு போன்ற நாம் பாரம்பரியமாக உள்கொள்ளும் உணவுகள் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக் கூடியவையாக உள்ளன. நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தை தொலைத்ததுதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
÷"10 மாத்திரை கொடுங்க' என இனி ஒருமுறை டாக்டரின் ஆலோசனை இல்லாமல் கடைக்குச் சென்று கேட்கும் வேளைகளில் எல்லாம், மனித குலத்துக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையேயான போரில் மனித குலம் தோற்றுப் போக நீங்களும் காரணமாக இருக்கப் போகிறீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்

பழனியில் அதிமுக வேட்பாளா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

உங்களை நாடி வந்து பணியாற்றுவேன்: காரைக்குடி தவெக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

