ரசிகர்கள் படும் பாடு!
ஈரோட்டில் உள்ள திரையரங்கின் வாசலில் காணப்படும் வாசகம் இது: "இங்கு கரும்புகளுடன் உள்ளே வரக் கூடாது'.


ஈரோட்டில் உள்ள திரையரங்கின் வாசலில் காணப்படும் வாசகம் இது: "இங்கு கரும்புகளுடன் உள்ளே வரக் கூடாது'. அந்த ஊரைச் சுற்றி வசித்து வரும் மக்கள், கரும்புகளைத் தின்று கொண்டே உள்ளே வருவார்கள். திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டே சக்கையைத் துப்புவார்களாம். அதைத் தடுப்பதற்காகத்தான் இந்த வாசகம் என்கிறது நிர்வாகம்.
தற்போதைய சூழலில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் நிலவும் அறிவிக்கப்படாத அறிவிப்பு ஒன்றுதான். "பையில் நிறைய பணம் வைத்து, வெறுங்கையுடன் திரையரங்குகளுக்குள் வா'.
ஆம். தலைக்கு 100 ரூபாய் செலவழித்து திரைப்படங்களின் டிக்கெட்டுகளை வாங்கி, வீட்டில் இருந்து படம் பார்க்க வருவதற்கு பயணச் செலவுகளையும் மேற்கொண்டு, வாகனங்களை நிறுத்த சில பத்துகளை அழுது, திரையரங்குகளில் காலடி வைத்தால், அடுத்த கணம் உங்கள் கைகளில் உள்ள தின்பண்டங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் பிடுங்கி கொள்வார்கள்.
ஒரு திரைப்படம் உருவாகுவதில், தயாரிப்பாளர் பணத்தைக் கோடிக்கணக்கில் செலவிடுவது உண்மைதான். இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று அனைவரும் உழைத்து, நல்லதொரு திரைப்படத்தை மக்களுக்கு அளிப்பது தெரிந்த செய்திதான்.
ஆனால், அந்த படங்களைப் பார்ப்பதற்கு தனியாகவும், குடும்பத்துடனும் வந்து படத்தின் கதையையும், கலைஞர்களின் படைப்பாற்றலையும் சுவைக்க வேண்டிய சாதாரண ரசிகர்கள், இன்றைய திரையரங்குகளின் பகட்டு நிலையைக் கண்டு தயங்க வேண்டியிருக்கிறது.
கிராமப்பகுதிகளில் திரைக் கொட்டாய்களாகவும், நகர்ப்புறங்களில் திரையரங்குகளாகவும் சாமானியர்களால் விரும்பப்பட்ட காலம் மாறி, உலகமயமாக்கல் தாக்கத்தின் காரணமாக பன்னடுக்கு திரையரங்குகள் இன்று பெருகிவிட்டன. சாதாரண திரையரங்குகளில்கூட விலைகள் அதிகரித்துவிட்டன.
ஏதோ சென்னை, கோயமுத்தூர் போன்ற பெரிய நகரங்களில்தான் பன்னடுக்குத் திரையரங்குகள் என்பதில்லை, இதன் வீச்சுகள் தமிழகத்தின் சிறிய ஊர்களிலும் பரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் திரைப்படங்களை ரசிக்க வேண்டுமானால், அந்தப் பன்னடுக்குத் திரையரங்குகளில் நுழைந்துதான் தீர வேண்டும்.
நவீன திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம், சில ஆயிரங்களையாவது செலவிட வேண்டும். அதன் செலவுப் பட்டியல் டிக்கெட்டுகளை வாங்குவதில் இருந்தே தொடங்கி விடுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னால், சுமார் 50 ரூபாய்க்குள் முக்கிய சீட்டுகளில் அமர்ந்து விடலாம். ஆனால், இப்போது குறைந்தபட்சம் 100 ரூபாயாவது வேண்டும். அதுவும், அந்த இடங்களை இணையவழியில்தான் வாங்க வேண்டும். இணையச் சேவையில் தனிக் கட்டணம் உண்டு.
சென்னை உயர்நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவை அடுத்து, திரையரங்குகளில் ரூ.10-க்கு டிக்கெட்கள் கிடைக்கின்றன. சாமானிய மக்கள் பயனடைவதற்காகவே, இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. ஆனால், அந்த இடங்களும் இணைய வழியில் விற்பனை செய்யப்படுகின்றன.
சென்னையில் இருக்கும் சில பன்னடுக்குத் திரையரங்குகளில் திரைப்படக் கட்டணத்தை விடவும், வாகன நிறுத்தக் கட்டணம் அதிகமாக உள்ளன. வாகன ஓட்டிகளின் கதிதான் பாவம். ஏற்கெனவே முன்பதிவு செய்த திரைப்படத்தைப் பார்ப்பதா? இல்லை, வாகனத்துக்கு தண்டம் அழுவதா என்று குழம்பிதான் போகிறார்கள்.
அடுத்த சோதனை, திரையரங்குகளின் நுழைவுவாயில்களில். உள்ளே நுழைந்தவுடனே ரசிகர்கள் சோதனையிடப்படுவார்கள். அதற்குக் காரணம் பாதுகாப்பு குறைபாடு அல்ல. ரசிகர்கள் யாராவது உணவுப் பண்டங்களை வைத்திருந்தால், அங்குள்ள காவலர்கள் பிடுங்கி கொள்வதற்காகவே சோதனை.
திரையரங்குகளில் குவித்து வைத்திருக்கும் பொருள்களைதான் வாங்க வேண்டும். குடும்பத்துடன் திரைப்படத்தை ரசிக்க வருபவர்களுக்கு இதுதான் பெரிய தண்டனை.
குடிப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டாலோ அல்லது இடைவேளைகளில் ஏதாவது தின்பதற்கு ஆசைப்பட்டாலோ, அவர்களை விட அப்பாவிகள் யாரும் இல்லை.
பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் பொருள்களை விலை அதிகமாக விற்றால் நுகர்வோர் நலத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால், திரையரங்கு வளாகங்களில் நுகர்வோர் நலத் துறை செயல்படாது போலும். அதிகபட்ச விலையைவிட அதிகமாகவே பொருள்கள் கிடைக்கும்.
10 ரூபாய் தண்ணீர் பாட்டில் 20 ரூபாய்க்கு விற்கப்படும். தின்பண்டங்களை வாங்க வேண்டுமானால் சில நூறு ரூபாய்கள் காணாமல் போகும். தின்பண்டங்கள் வாங்குவதற்கு, குறைந்தபட்சம் ரூ.120-க்கு மேல் செலவிடப்படுகிறது என்பதே யதார்த்த நிலை.
திரையரங்குகளில் இலவச குடிநீர் வழங்க வேண்டும் என்றும், தண்ணீருக்கு அதிக விலை நிர்ணயிப்பது குற்றம் என்றும் தேசிய நுகர்வோர் நல ஆணையம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
இதை சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இலவசம்தானே என்று திரையரங்குகள் சுத்தமில்லாத நீரை வழங்காமல் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதையும் அடிக்கடி சோதனையிட வேண்டும்.
பன்னடுக்குத் திரையரங்குகள் தேவையில்லை என்பது வாதமல்ல. வளரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாறுவது இயற்கைதான். ஆனால், அதன் பெயரால் நடைபெறும் அநியாய விலைகள் தடுக்கப்பட வேண்டும்.
பீட்ஸô என்ற உணவு வகையை சாப்பிட முடியாமல் தவிக்கும் சிறுவர்களை திரைப்படமாக்கிய திரையுலகம், பன்னடுக்குத் திரையரங்குகளில் படம் பார்க்க முடியாத ஏழை மக்களை வைத்து படம் எடுக்க முன்வருமா என்பதே ரசிகர்களின் கேள்வி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...