நேற்றுவரை உயிர் காக்கும் மருந்தாக மதிக்கப்பட்ட ஒரு பொருள், இன்று பக்கவிளைவைக் கொடுக்கும் என்பது மறு ஆய்வின் மூலம் கண்டறியப்படும்போது அதனைக் கைவிடுகிறோம். இல்லையேல் பக்கவிளைவைக் கட்டுப்படுத்தும் வகையில் அதன் தன்மையை மாற்ற முனைகிறோம். இது மருத்துவம் சார்ந்த அறிவியல் யதார்த்தம்.
இத்தனை ஆண்டுகளாக அந்த மருந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றியதன் காரணமாக, அதனை மறு ஆய்வே செய்யாமல் காலாகாலத்துக்கும் தொடர வேண்டும் என்று யாரும் வாதிடுவதில்லை. அப்படி வாதிடுவது அறிவுடையோர் செயலும் ஆகாது என்பதை அனைவரும் ஏற்பர்.
ஆனால், நம் நாட்டின் சமூகக் கொடுமைக்கு மருந்தாய் அமைந்த இடஒதுக்கீடு மட்டும் மறு ஆய்வே செய்யாமல் தொடர வேண்டும் என்பது எவ்வகையில் நியாயம்? இடஒதுக்கீட்டின் பலன் யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்குச் சரிவரக் கிடைத்திருக்கிறதா என்பதைக் கூர்ந்து கவனிக்காமல், யார் யாரோ அதற்கு அடாவடியாகப் பங்கு கேட்கும் அசாதாரண சூழ்நிலை தோன்றியதன் காரணமாக, இடஒதுக்கீடு முறையை அது எவ்வாறு செயலாக்கப்படுகிறது என்பது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார்.
இது ஏதோ "தெய்வக் குத்தம்' என்பதைப்போல் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஏன் சாமியாடத் தொடங்கிவிட்டன?
இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டம், தென் மாநிலங்களைத் தாண்டி, வட மாநிலங்களிலும் தற்போது பரவத் தொடங்கிவிட்டது. முதலில் ராஜஸ்தான் மாநிலத்தின் நிலச்சுவான்தார்களாகவும் ஆதிக்க சாதியாகவும் இருக்கும் ஜாட் சமூகத்தினர் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரி மறியல்களையும் மகா பஞ்சாயத்துகளையும் நடத்தினர்.
அதைவிட ஒருபடி மேலே போய், குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் ஹார்திக் படேல் என்ற 22 வயது இளைஞரின் தலைமையில் திரண்டெழுந்து இடஒதுக்கீடு போராட்டத்துக்காக லட்சக்கணக்கில் வீதிகளில் திரண்டனர்.
இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்து, காவல் துறையின் துப்பாக்கியும் வெடித்ததில் ஒன்பது மனித உயிர்கள் பலி வாங்கப்பட்டன.
இத்தகைய சூழ்நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், இடஒதுக்கீடு முறை குறித்து சமூக நோக்கில் மறு ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்திருப்பதாகக் கருத்துத் தெரிவித்தார்.
உடனே, சமூகநீதிக் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஜாதிக் கட்சியினர் கொதித்து எழுந்துவிட்டனர். இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றா மோகன் பாகவத் கூறினார்? மறு ஆய்வுக்கு உள்படுத்தலாம் என்றுதானே கூறினார்.
சரி, மோகன் பாகவத்தான் இந்தக் கருத்தை முதல்முறையாகக் கூறியிருக்கிறாரா? இடஒதுக்கீட்டுக்குக் குரல் கொடுத்ததுடன், அதனை அரசியல் சாசனத்திலும் இடம்பெறச் செய்த சட்ட மேதையும், அரசியல் சாசன சிற்பியுமான டாக்டர் அம்பேத்கரும் அல்லவா இதனைக் கூறியிருக்கிறார்.
குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் (40 ஆண்டுகள் கழித்து) இடஒதுக்கீட்டின் பலன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு முறையாகப் போய் சேர்ந்திருக்கிறதா, இதனால் அவர்கள் பலன் அடைந்திருக்கிறார்களா என்பதை மறு ஆய்வு செய்து, அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதானே பாபா சாகேப் பகர்ந்தார்.
ஆனால், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை நேரடியாக அழுத்தும் ஆதிக்க சாதியினரே பிற்காலத்தில் தங்களுக்கும் இடஒதுக்கீட்டுச் சலுகை வேண்டும் என்று கேட்டு அதனைப் பெறுவார்கள் என்றோ, மேலும் மேலும் பெறுவதற்காகப் போராட்டம் நடத்துவார்கள் என்றோ அவர் அப்போது அறிந்திருப்பாரா?
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலும் பெரும்பாலானோர் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இடஒதுக்கீட்டுச் சலுகை வேண்டும் என்பது நியாயம்தான். அதே நியாயம், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும், முதல் தலைமுறை பட்டப் படிப்பில் நுழையும் உயர் ஜாதியினருக்கும் பொருந்தாதா?
மேலும், தாழ்த்தப்பட்ட (தலித்), பழங்குடியின வகுப்பினரிலேகூட இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற்று முன்னுக்கு வந்தவர்களின் வாரிசுகள்தான், பெரும்பாலும் வாழையடி வாழையாக அதனை அனுபவிக்கின்றனர்.
இடஒதுக்கீட்டின் பலன், அதற்கு உரிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஜாதியினரில் அனைத்துப் பேருக்கும் சென்றடைய வேண்டும் என்ற தனது லட்சியம், அலட்சியம் செய்யப்படுவதை நினைத்து அண்ணல் அம்பேத்கரே வருத்தப்பட்டிருக்கிறார்.
"ஜாதிகளின் ஒழிப்பு' (அன்னிஹிலேஷன் ஆஃப் கேஸ்ட்ஸ்) என்ற நூலில் தனது வேதனையைப் பதிவு செய்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர்.
ஆக, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களில் கடைக்கோடிப் பேருக்கு இடஒதுக்கீட்டின் பலன்கள் சென்று சேரவில்லை என்பதே இன்றளவிலும் யதார்த்த உண்மை. நிலைமை இப்படியிருக்க, ஜாட், படேல் போன்ற ஆதிக்க ஜாதியினரும் இடஒதுக்கீடு கேட்டுப் பெற்றால், அது சமூக அநீதி அல்லவா?
அதிலும் படேல் ஜாதி போராட்டக்காரர்கள் என்ன கூறுகிறார்கள்? தங்களுக்கு இடஒதுக்கீடு தரவில்லையென்றால் வங்கிக் கணக்குகளில் உள்ள முதலீடுகள் திருப்பி எடுக்கப்படும் என்கிறார்கள். எடுக்கவும் தொடங்கிவிட்டனர். மாநிலத்தின் பொருளாதார நிலையையே தங்களால் அசைத்துவிட முடியும் என்று கூறும் ஜாதியினருக்கு எதற்கு இடஒதுக்கீடு?
இத்தகு சூழ்நிலையில் இடஒதுக்கீட்டின் பலன்கள் உண்மையிலேயே அது சென்று சேர வேண்டியவர்களுக்குச் சென்றிருக்கிறதா, இன்னும் எத்தனைக் காலத்துக்கு இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும், வேறு எந்தப் பிரிவினராவது இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்கத் தக்கவர்களா என்பதையெல்லாம் மறு ஆய்வு செய்து பார்ப்பதே சிறந்தது.
ஆனால், மத்திய அரசு இதுகுறித்து தைரியமான முடிவை எடுக்காமல் சமூக நீதிக் காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சில கட்சியினரைப் போல, வாக்கு வங்கியைக் கருதி விலகி ஓடுவது ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.