இன்றைய சூழலில் நன்றாக சம்பாதிப்பது என முடிவெடுத்தால் நமக்கு முதலாவது நினைவிற்கு வருவது அரசியல்வாதி ஆவது. அடுத்தது பள்ளிக்கூடம், கல்லூரிகள் திறப்பது. மூன்றாவது மருத்துவமனைகள்.
பொதுவாக இப்போதெல்லாம் சொல்கிறார்கள் படித்தவன் பள்ளி, கல்லூரிக்கு வேலைக்குப் போகிறான். படிக்காதவன் பள்ளி, கல்லூரிகளை நடத்துகிறான் என்று. அந்த அளவிற்கு எவ்விதத் தகுதியும் இல்லாமல் சில லட்சங்களை அல்லது ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்தால் போதும் வருடா வருடம் அது பல மடங்காக லாபம் தரும் துறையாக கல்வித் துறை மாறியுள்ளது.
முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகள் நடத்துவது என்பது புனிதமாகவும், மாணவ, மாணவிகளுக்கு நல்ல அறிவை வழங்கவும், நல்லொழுக்கங்களை சொல்லித் தரவும், அவர்களின் திறமைகளை வெளிக்கொணரவும் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.
வாழ்வதற்கு அடிப்படைக் கல்வி அவசியம்தான். ஆனால், அதைவைத்து பணம் சம்பாதிக்கும் வியாபாரக் கூடமாக அந்தப் பள்ளி, கல்லூரிகள் ஆனதுதான் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.
படித்தவர்கள்தான் இந்த உலகில் வாழ முடியும் என்றில்லை. படிப்பு என்பது கூடுதல் தகுதிதான். ஆனால், படிப்பு இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை இல்லை.
ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழத் தேவையான பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பலரும் படிப்பறிவு இல்லாதவர்கள்தான். அவர்களிடம் இருக்கும் அனுபவ அறிவு எந்த புத்தக அறிவிற்கும் ஈடாகாது.
முன்பு ஐந்து வயதானவுடன் தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவார்கள். ஆனால், இப்போதெல்லாம் இரண்டு வயது பச்சிளங் குழந்தைகளைக் கூட பள்ளிக்கு அனுப்பும் கொடுமை நடைபெறுகிறது. அத்தகைய குழந்தைகளுக்கு எப்படி தாயன்பு கிடைக்கும்? தாயின் மூலம் கிடைக்கும் சில அனுபவ அறிவும் அந்த ஐந்து வயதிற்குள்தான்.
ஆனால், பெற்றோர் தங்களின் இயலாமை அல்லது குழந்தைகளை வளர்ப்பதில் கவனித்துக் கொள்வதில் ஏற்பட்டுள்ள அக்கறையின்மை காரணமாக ஏதாவது ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வதும் அல்லது பாலகர் பள்ளிகளில் சேர்த்துவிடுவதும் நடைபெற்று வருகிறது.
பெரிய நகரங்களை ஆட்டுவித்த இந்தக் கொடுமை இப்போது பல சிற்றூர்களுக்கும் பரவிவிட்டது. காரணம்? பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதும், குடும்பச் சூழல் காரணமாக தனிக் குடித்தனம் வந்துவிட்டதால் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள பெரியவர்கள் யாரும் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம்.
தனியார் கல்வி நிலையங்களை வெளிப்படையாகக் குறை சொல்வது எளிது. ஆனால், அதற்கு யார் காரணம் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். நாம் தான் அந்த பள்ளிகளில் நமது குழந்தைகளை சேர்த்து அங்கீகரித்தும் அவர்கள் கேட்கும் கட்டணத்தை செலுத்தியும் வளர்த்து விடுகிறோம். பிறகு அவர்களை குறை சொல்லிப் பயனில்லை.
நமக்குத் தேவை விழிப்புணர்வு. நமது தாய் மொழியில் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து, தாய்த் தமிழ்ப் பள்ளிகளில் நமது குழந்தைகளைச் சேர்ப்பதில்லை. ஆங்கிலத்தை நுனிநாக்கில் பேசி நமது குழந்தை பிறர் முன்பு அசத்த வேண்டும் என்கிற ஆர்வத்தில் பெற்றோர் செய்யும் செயல்கள் தான் ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் அதிகரிக்கக் காரணம். ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே தவிர அறிவில்லை.
எத்தனையோ அறிஞர் பெருமக்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி பயின்று சாதனை செய்துள்ளனர். குறிப்பாக, அரசு பள்ளிகளில் படித்தவர்கள்தான் அவர்கள். எனவே, பொதுமக்களிடம் தான் விழிப்புணர்வு தேவையே தவிர, பிறரைக் குறை சொல்லிப் பயனில்லை.
இது ஒருபுறம் இருக்க, சில தனியார் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களின் நிலை மிகவும் கவலைக்குரியது. காரணம், அவர்களின் பணி நிரந்தரமானதல்ல. பள்ளி நிர்வாகத்தின் மீதும், மற்றபிற ஆளுமைகள் மீதும் முரண்பாடு ஏற்பட்டால் எவ்விதக் காரணம் இல்லாமல் நிறுத்திவிடுவார்கள்.
வரவேண்டிய சம்பளமும் கிடைக்காது. பணியில் சேரும்போது அடிமை சாசனம் போல ஒப்பந்தம் போட்டு கையெழுத்து வாங்குவதோடு கல்விச் சான்றிதழ் அனைத்தையும் (ஒரிஜினல்களை) வாங்கிவைத்துக் கொள்வர்.
ஏதாவது பிரச்னை என்றால் அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக பணி இடமாறுதல் செய்யும் நிலை ஏற்பட்டால், உடனடியாக சான்றிதழ்கள் தரமாட்டார்கள். சில பள்ளி, கல்லூரிகளில் பணம் கட்டித்தான் சான்றிதழ்கள் பெறும் சூழல் இன்றளவும் உள்ளது.
சமுதாயத்தில் நன்மைகளும் தீமைகளும் கலந்துதான் இருக்கும். நாம்தான் நமக்குத் தேவையானதை தேர்வு செய்ய வேண்டும். மது விற்கிறார்களே என்பதற்காக நாம் குடித்தால் பாதிப்பு யாருக்கு? இதைப்போலத்தான் மற்ற விஷயங்களையும் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

