உழுவார் உலகத்தார்க்கு ஆணி!

அண்மையில், தமிழ்நாடு அரசு சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிகளின் கடன் ரூ.5,780 கோடியை தள்ளுபடி செய்துள்ளது.
Updated on
3 min read

அண்மையில், தமிழ்நாடு அரசு சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிகளின் கடன் ரூ.5,780 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் நிம்மதியடையவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும், மற்ற நிதி நிறுவனங்களிலும் விவசாயிகள் வாங்கிய கடன்கள்தான் அதிகம். கூட்டுறவு வங்கிக் கடன்கள் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரைதான் இருக்கும்.

தேசிய வங்கியில் வாங்கிய கடன்கள் வட்டிக்கு மேல் வட்டி போட்டு விவசாயிகளை மிரள வைத்து அவர்களை தற்கொலை வரை இழுத்துச் செல்கிறது. கூட்டுறவுக் கடன்களை திரும்பவும் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதுதான் விவசாயிகளுடைய நிலை.

தமிழகம் முழுவதும் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள், 3,000 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இதன் மூலம்தான் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. ஒரு சில காலகட்டங்களில் கடன் நிவாரணங்களால் இந்தக் கூட்டுறவு வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இதையும் மாநில அரசு சரி செய்ய வைத்தியநாதன் குழு பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் கடன் நிவாரணத்தை சமாளிக்க இந்த வங்கிகளுக்கு நபார்டு வங்கி மூலம் ரூ.1,700 கோடி வழங்கியது. இது போக ரூ.400 கோடி தமிழக அரசுக்கு வரவேண்டி உள்ளது. தி.மு.க. ஆட்சி முடிந்தபின் தமிழக அரசு அந்த ரூ.400 கோடியை பெறவில்லை. இந்தத் தொகையோடு இப்போது கடன் நிவாரண அறிவிப்புகளுக்கும் உரிய நிதி ஆதாரங்களை மத்திய அரசிடம் பெறவேண்டும்.

ஏற்கெனவே வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.400 கோடியை தமிழக அரசு பெறத் தவறியதால், நபார்டு வங்கி அதை மத்திய அரசிடமே திருப்பிக்கொடுத்துவிட்டது.

விவசாயிகள் இன்றைக்கு தங்களுடைய உரிமைகளை பாதுகாக்க முடியாமல் இருக்கின்றனர். விவசாயமோ மழை பெய்யாமல் அடிக்கடி பொய்த்துப் போகின்றது. அப்படியே விளைச்சல் நன்றாக இருந்தாலும் அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதில்லை. விவசாய இடுபொருள்களின் விலையோ பன்மடங்கு உயர்ந்துவிட்டது.

இந்த நிலையில் தங்களுடைய நிலத்தையும் விட முடியாமல் வருவாய் உள்ளதோ, இல்லையோ உழுதுகொண்டு இருக்கவேண்டிய கடமை இருக்கின்றது. இன்றைக்கு மானத்திற்காக விவசாயத்தை செய்யவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நிலத்தில் ஏதாவது விதைக்கவேண்டும் என்பது கட்டாயம். வேறு வழியில்லாமல் கடன் வாங்க வேண்டிய நிலை. கடனை திரும்ப செலுத்த முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி ஏறுகிறது.

முன்பு விதர்பா, மகாராஷ்டிரம், ஆந்திரம், ஜார்க்கண்ட் போன்ற பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் கடன் தொல்லை, விவசாயம் பொய்த்துப் போன காரணத்தினால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

தஞ்சை டெல்டா வறண்டதால் விவசாயிகள் உணவுக்கே வழியில்லாமல் கஞ்சி தொட்டி திறந்தனர். 1975-இல் கடுமையான பஞ்சம் வந்தபோது விவசாயிகள் மக்காச்சோள கஞ்சியை குடிக்கவேண்டிய நிலை. தமிழகத்தில் வங்கி அதிகாரிகள் விவசாயிகளை மிரட்டுகின்ற நிலைமை.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி, டிராக்டர் கடனுக்கான தவணையைச் செலுத்தவில்லை என்பதால் தனியார் வங்கியின் அடியாட்களாலும், காவல் துறையினராலும் தாக்கப்பட்டார்.

தனியார் வங்கிகளின் கெடுபிடிகளாலும், அவமானப்படுத்தல்களாலும் அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர், உசிலம்பட்டி பால்ராஜ், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்த தனசேகர், மேட்டுப்பாளையம் அருகே தேவாங்குபுரத்தைச் சேர்ந்த ராமசாமி ஆகிய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள், தனது மனைவி பழனியம்மாளுடன் வயலிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

2011 முதல் 2015 வரை தமிழகத்தில் 2,436 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

விவசாயிகள் மட்டும் சாகவில்லை. இன்றைக்கு கிராமங்களும் சிறுக சிறுக செத்துப்போய்க் கொண்டு இருக்கின்றன. மழை பொய்த்ததால் 12 மாநிலங்களில் வறட்சியான நிலைமை.

முன்பெல்லாம் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 42 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். அது, தற்பொழுது 52-ஆக அதிகரித்துள்ளது. விவசாய பட்ஜெட் மதிப்பீடும் ரூ.15,809 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது. 12-ஆவது திட்டக்காலத்திற்கு வேளாண்மைத் துறைக்கு வெறும் ஒரு லட்சம் கோடிதான் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இது யானைப் பசிக்கு சோளப்பொறிபோல உள்ளது.

விவசாயிகள் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க எத்தனையோ குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகள் அனைத்தும் தில்லி கிரிஷி பவனில் கடந்த 50 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கின்றன.

விவசாயத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் சில அவசிய செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

* விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு என்று கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

* பசுமைப் புரட்சி என்ற கோட்பாட்டால் விவசாய நிலங்கள் களர் நிலங்களாகிவிட்டன. இயற்கை விவசாயத்தை பேணி காக்கின்ற வகையில் சில சட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

* மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உடனே ஒழிக்கவேண்டும்.

* விவசாயிகளுடைய அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய மத்திய மாநில அரசுகள் முடிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

* விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன்கள் வழங்க வேண்டும்.

* ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை ஆழப்படுத்தி அங்குள்ள கருவேல மரங்களை முற்றாக அழிக்க வேண்டும்.

* உலக மயமாக்கல், தாராள மயமாக்கலால் விவசாயம் பாதிப்படைவதைத் தடுக்க வேண்டும்.

* விவசாய விளைபொருட்களுக்கு கட்டுபடியான விலையை நிர்ணயம் செய்ய அரசும், விவசாயிகளும் கொண்ட ஒரு கமிஷன் ஒவ்வொரு மாநிலத்திலும் அமைக்கவேண்டும்.

* விவசாய இடுபொருள்களை மானியத்தில் தட்டுப்பாடில்லாமல் விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.

* தொழிற்சங்கங்களைப் போல விவசாய சங்கங்களும் உரிய உரிமைகளோடு அரசோடு பேச்சுவார்த்தை நடத்த உரிய சட்டபாதுகாப்பு வழங்க வேண்டும்.

* விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களைப் போன்ற மரவகைகளை அனுமதிக்கக் கூடாது. அதை அரசே முன்னின்று அந்த அழிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

* தமிகத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு, ஆழியாறு-பரம்பிக்குளம், பாண்டியாறு - புன்னம்புழா, குமரி மாவட்டம் நெய்யாறு, அச்சன்கோவில் - பம்பை - வைப்பாறு இணைப்பு, செண்பகவல்லி, உள்ளாறு, அழகர் அணை, கோதையாறு - கீரியாறு, பாலாறு, பொன்னியாறு போன்ற நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* தொழிற்சாலைகளுக்கு வழங்குவதைப்போல, விவசாய பம்பு செட்டுகளுக்கும் தடையில்லாத மின்சாரத்தை வழங்க வேண்டும்.

* பயிர் காப்பீடு ஒப்புக்கு இல்லாமல் உண்மையான காப்பீடாக செயல்படுத்தப்பட வேண்டும்.

* ஒவ்வொரு வட்டத் தலைநகரிலும் மரபு சார்ந்த விதை பண்ணைகளும், கிட்டங்கிகளும் அமைக்க வேண்டும்.

* ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலையை கூடுதலாக்கி, விவசாயத் தொழிலுக்கு இந்த திட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

* ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும்.

* வனவிலங்குகளால் விவசாயப் பொருள்கள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன. அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சொட்டுநீர் பாசன முறையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

* விவசாய நிலங்களில் செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைக்கக் கூடாது.

=தரிசு நிலங்களை விளைச்சல் நிலங்களாக்க முறைப்படுத்த வேண்டும்.

* மீத்தேன் வாயு, எரிவாயு குழாய் பதிப்புகள் போன்ற ரசாயன சம்பந்தமான திட்டங்களுக்கு விளைநிலங்களைப் பயன்படுத்தக் கூடாது.

* நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை விவசாயத்திற்காக மாட்டு வண்டிகளில் எடுத்துச் செல்ல எந்தவிதத் தடையும் இருக்கக் கூடாது.

* கல்லூரிகளில் படிக்கும் விவசாயிகளுடைய குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.

* திரைத் துறைகளில், இலக்கியத்தில் விருதுகள் வழங்குவதைப்போல சிறந்த விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் இவற்றைப் பரிசீலித்து நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழிலை பாதுகாக்கவேண்டியது அவசரமும், அவசியமும் ஆகும்.

கட்டுரையாளர்: வழக்குரைஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com