பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நீதிக்கான போராட்டம்

சமுதாயத்தில் தவறிழைப்பவர்களைத் திருத்தவும், கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்குத் தண்டனை அளிக்கவும்தான் சிறைகள் உருவாக்கப்பட்டன.

Updated On :25 ஜூலை 2016, 8:24 pm

சமுதாயத்தில் தவறிழைப்பவர்களைத் திருத்தவும், கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்குத் தண்டனை அளிக்கவும்தான் சிறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான இருப்பிடமாகவும், அப்பாவிகளுக்கு சித்திரவதைக் கூடமாகவும் நமது சிறைகள் மாறி வருகின்றன.

அதற்கான நிரூபணம்தான், அண்மையில் சமூக சேவகர் பியூஷ் மானுஷ் (40) சேலம் மத்திய சிறைக்குள் வைத்து கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் நிகழ்வு.

முறையான மாற்றுப்பாதை அமைத்த பிறகே மேம்பாலப் பணியைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலத்தில் முள்ளுவாடி ரயில்வே கேட் மேம்பாலப் பணிகளை எதிர்த்து ஜூலை எட்டாம் தேதி போராட்டம் நடத்தினார் பியூஷ் மானுஷ்.

அப்போது, அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, பியூஷ் மானுஷும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது விசாரணைக் கைதியாக மட்டுமே. அந்த வழக்கு நடந்து முடியும்போதுதான் அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மையா என்பது தெரியவரும். அவர்கள் செய்தது குற்றமானால் தண்டனையும் அளிக்கப்படும். அதுவே நமது நீதி பரிபாலன முறை.

சிறைக்குள் அடைக்கப்படும் விசாரணைக் கைதிகளை பத்திரமாகப் பராமரிக்க வேண்டியது சிறை நிர்வாகத்தின் கடமை.

விசாரணைக் கைதிகளை காவல் துறையின் தாக்குதலிலிருந்து சட்டப்படி காக்கும் கேடயம் என்றும்கூட சிறையைச் சொல்லலாம். ஆனால், சிறைக்குள் சென்ற பியூஷ் மானுஷ் அன்றிரவே 20-க்கும் மேற்பட்ட சிறைக் காவலர்களாலும் சிறைக் கண்காணிப்பாளராலும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.

இந்தத் தாக்குதல் குறித்து சில நாள்கள் கழித்தே அவரைக் காணச் சென்ற அவரது மனைவி மோனிகாவுக்குத் தெரியவந்தது. அதனை அவர் வெளியுலகுக்குத் தெரிவித்த பின், சமூக வலைதளங்களில் பியூஷ் மானுஷுக்கு ஆதரவாக மாபெரும் பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலமாக நமது சிறைச்சாலைகளின் அவலட்சணம் வெளிப்பட்டிருக்கிறது.

சிறைக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட பியூஷ் மானுஷ் சாதாரணமானவரல்ல; தனது சமூகப் பணிகளால் சேலம் பகுதிக்கே கெளரவத்தை ஏற்படுத்தியவர். "சேலம் மக்கள் குழு' என்ற தன்னார்வ அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலமாக சுற்றுச்சூழலைக் காக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருபவர் அவர்.

அவரது குடும்பத்தினர் ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் எனினும், சேலத்திலேயே பிறந்து வளர்ந்தவர். படிக்கும் காலத்திலேயே மாணவராகப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்.

"ஜிண்டால்', "கெம்பிளாஸ்ட்', "மால்கோ' போன்ற பெரு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடி, சூழல் மாசுபாட்டுக்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்டியவர்.

அவரது குறிப்பிட வேண்டிய பணி, பல நீர்நிலைகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி புத்துயிரூட்டியதாகும். சேர்வராயன் மலைப் பகுதியில், கன்னங்குறிச்சி அருகிலுள்ள மூக்கனேரி பறவைகள் சரணாலயம் பாழ்பட்டுக் கிடந்தபோது, மக்களை ஒருங்கிணைத்து அதை 2010-இல் தூர் வாரினார்.

55 ஏக்கர் பரப்பிலான அந்த ஏரியில் 45 மண் திட்டுகளை உருவாக்கி, ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்தார். இன்று 4.5 லட்சம் கன லிட்டர் நீருடன் மூக்கனேரி நிரம்பி, வெளிநாடுகளிலிருந்து வலசை வரும் பல்லாயிரம் பறவைகளின் புகலிடமாக மாறியிருக்கிறது.

குமரகிரி ஏரி, அரிசிபாளையம் குளம், சத்திரம் குளம், பள்ளபட்டி குளம் ஆகியவற்றையும் அவரது தலைமையிலான குழு புனரமைத்தது. தவிர, தருமபுரி பகுதி மலைக் காடுகளைக் காக்கும் வகையில் நண்பர்கள் குழுவுடன் அங்கு அமைத்த கூட்டுறவுப் பண்ணை மூலமாக, ஆயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

சமூகப் பணிக்காக சிறந்த இளைஞர் விருது பெற்றவர். அவரது நீர்நிலைப் பாதுகாப்புப் பணிகள் முன்னுதாரணமானவையாகப் பின்பற்றப்படுகின்றன.

கடந்த டிசம்பரில் சென்னை, கடலூர் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, சேலம் வட்டாரத்திலிருந்து அதிக அளவில் நிவாரணப் பொருள்களை சேகரித்து அனுப்பினார் இவர்.

தன் படம் முகநூலில் ஆபாசமாக சித்திரிக்கப்பட்டதால் சேலத்தில் இளம்பெண் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டபோது, அதற்கு காவல் துறையினரும் ஒரு காரணம் என்று கூறி போராட்டங்களில் அவர் ஈடுபட்டார்.

தனது பொதுநலப் பணிகளுக்காக, பலதரப்பட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் வெறுப்பையும் அவர் சம்பாதித்து இருக்கிறார். தற்போது சிறைக்குள் வைத்து அவர் தாக்கப்பட்டதன் பின்புலம் அதுவே என்று கூறப்படுகிறது.

பியூஸ் மானுஷுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு பிணையில் விடுதலை கிடைத்தபோதும், பியூஸ் மானுஷ் மட்டும் மேலும் சில நாள்கள் சிறைக்குள் இருக்குமாறு செய்யப்பட்டது.

சிறைக் காவலர்கள் மட்டுமல்லாது, சிறைக் கைதிகள்கூட தன்னைத் தாக்கியதாக, சிறையிலிருந்து வெளிவந்த பின் அவர் கூறியிருக்கிறார். அதற்கு, தேசியக் கொடியை அவர் எரித்ததாக வதந்தி பரப்பப்பட்டதே காரணம் என்று தெரிகிறது.

இது மிக மோசமான அவதூறாகும். தங்கள் சுயநலத்துக்காக காவல் துறையினர் நடத்திய அத்துமீறலுக்கு தேசியக் கொடியை காரணமாகக் கற்பிப்பது, அவர்கள் செய்த குற்றத்தை விட ஆபத்தானது.

பியூஷ் மானுஷ் போன்ற பொதுநல சேவகருக்கே சிறையில் இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை?

அவரது நீதிக்கான போராட்டம் வெல்ல வேண்டும். அதிகார வர்க்கத்தின் ஆணவச் செயல்பாடுகளுக்கு அப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.