மணிப்பூர் தலைநகர் இம்பாலின் புறநகர்ப் பகுதியான மாலோம் பஜாரில், 28 வயது இளம்பெண் இரோம் ஷர்மிளா 2000-ஆவது ஆண்டு நவம்பர் மாதம் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது, யாரும் அறிந்திருக்க முடியாது, அதுதான் உலகின் நீண்டகால உண்ணாவிரதப் போராட்டமாக இருக்கப்போகிறது என்று.
ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபிள் படைப் பிரிவினரால், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து தனது போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.
காலையில் தொடங்கி மாலையில் நிறைவடையும் வழக்கமான உண்ணாவிரதம் அன்று அது. "எனது கோரிக்கை நிறைவேறும்வரை உணவருந்த மாட்டேன்; தண்ணீர் பருக மாட்டேன்; தலைவார மாட்டேன்; கண்ணாடியைக்கூடப் பார்க்க மாட்டேன்' என்கிற லட்சிய உறுதியுடன் தொடங்கிய உண்ணாவிரதம்.
அந்தப் போராட்டத்தை வெறுமனே தற்கொலை முயற்சி எனக் குற்றஞ்சாட்டி, அவரை மணிப்பூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிறப்பு வார்டில் காவலில் வைத்து மூக்கு வழியாக வலுக்கட்டாயமாக திரவ உணவை வழங்கி வருகிறது அரசு. இடையிடையே விடுவிக்கப்படுவதும், பின்னர் கைது செய்யப்படுவதும் தொடர்ந்தபோதும், தனது போராட்டத்தை ஷர்மிளா தொடர்ந்தார்.
மூக்கில் டியூப்புடன் காணப்படும் அவரது புகைப்படம், போராட்ட வடிவத்துக்கான ஓர் அடையாளமாகவே மாறியது.
16 ஆண்டுகள் கடந்த நிலையில், வருகிற ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதாகவும், அரசியலில் ஈடுபட்டுத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருப்பது மணிப்பூர் மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியிலும், வியப்பிலும் ஆழ்த்தியிருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தும் தனது கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காததால், தேர்தல் அரசியலில் இணைந்து அதன்மூலம் போராட்டத்தைத் தொடரப்போவதாக ஷர்மிளா கூறியிருக்கிறார்.
ஷர்மிளா இந்த முடிவை எடுத்தது ஏன்?ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மத்திய அரசு ஏன் திரும்பப் பெற மறுக்கிறது என்பதெல்லாம் நீண்ட விவாதத்துக்குரியவை.
வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவர் ஊடுருவலைத் தடுப்பதற்காக 1958-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் மணிப்பூர், அஸ்ஸாமில் முதல்முறையாக அமல்படுத்தப்பட்டது. கலவரப் பகுதி என ஒரு பகுதியை மாநில ஆளுநர் அறிவிக்க அதிகாரம் அளிக்கிறது இந்தச் சட்டம்.
ஆளுநரின் அறிவிக்கையை தொடர்ந்து, மக்களைக் காக்கும்பொருட்டு ராணுவத்தை அந்தப் பகுதிக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். மாநில அரசுக்கு இதில் பெரிய அதிகாரம் இல்லை.
சட்டத்தை அமல்படுத்த வேண்டுமா, வேண்டாமா எனப் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.
வடகிழக்கு மாநிலங்கள் தவிர, ஜம்மு - காஷ்மீரில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. பஞ்சாபில், சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிய காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்குவதற்காக 1983, அக்டோபரில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. 14 ஆண்டுகள் கழித்து 1997-இல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, கலவரத்தை அடக்குவதற்காக ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும் அல்லது மரணத்தை விளைவிக்கக்கூடும் எனத் தெரிந்தும் துப்பாக்கிச் சூட்டுக்கு இணையான பலப் பிரயோகத்தை பயன்படுத்த முடியும்.
ஒருவர் நாட்டுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் எனத் தெரிந்தால் அல்லது அவ்வாறு சந்தேகப்பட்டால் அவரை வாரண்ட் இன்றி கைது செய்யலாம். அவ்வாறு கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்காக எந்த ஓர் இடத்திலும் அனுமதியின்றி சோதனை செய்யலாம்.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின்படி, சட்டப் பாதுகாப்பு உள்ளது.
குறிப்பிட்ட நடவடிக்கையை மேற்கொண்ட ராணுவ அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய முடியாது, அவர் மீது விசாரணையே கிடையாது. ஒரு பகுதியை கலவரப் பகுதி என அறிவித்தது ஏன் என்பது நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் வராது.
இந்தச் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு அப்பாவிகளை துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்குவதை எதிர்த்துதான் ஷர்மிளா போராட்டக் களத்தில் இறங்கினார்.
அவர் இப்போது உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்தாலும், போராட்டத்தைக் கைவிடுவதாகக் கூறவில்லை. அரசியல் எனும் மாற்றுப் பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
மணிப்பூரில் ராணுவமும் காவல் துறையும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் நடத்திய 1,528 போலி என்கவுன்டர்கள் தொடர்பாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சில கருத்துகளைத் தெரிவித்தது.
"காவல் துறை அல்லது ராணுவ நடவடிக்கையின்போது, பாதிக்கப்படுபவர் பொதுமக்களில் ஒருவரோ, பயங்கரவாதியோ, அத்துமீறலில் ஈடுபடுபவர் பொதுமக்களில் ஒருவரோ, அரசோ யாராக இருந்தாலும் சட்டத்தை ஒரே மாதிரியாகத்தான் கருத வேண்டும்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் என்கவுன்டரில் நமது நாட்டு குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டால் அதுகுறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அந்த குறிப்பிட்ட என்கவுன்டர் நியாயமான காரணத்துக்காகத்தான் என நிரூபிக்கப்பட்டாலும், அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம் ஏன் என ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஷர்மிளாவின் போராட்டத்தால் இத்தனை ஆண்டுகளாக என்ன பலன் கிடைத்தது என்று கேட்பவர்கள், உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்துகளை ஷர்மிளாவின் வெற்றியாகவும் அவரின் அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும் கருத வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.