பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை

விருதுநகர் மாவட்டம் சிறுதொழிலுக்கும் விவசாயத்திற்கும் கேந்திரமாக விளங்கும் பகுதியாகும். குறிப்பாக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில், வருடம் முழுவதும் பட்டாசு உற்பத்தி தொழில் நடக்கும். புத்தாண்டு என்றால் காலண்டர், டைரிகள் என்ற அச்சுத் தொழில் ஒருபுறம். தீப்பெட்டி உற்பத்தியும் இங்கு அதிகம்.
பட்டாசுத் தொழிலின் பரிதாப நிலை
Updated on
3 min read

விருதுநகர் மாவட்டம் சிறுதொழிலுக்கும் விவசாயத்திற்கும் கேந்திரமாக விளங்கும் பகுதியாகும். குறிப்பாக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில், வருடம் முழுவதும் பட்டாசு உற்பத்தி தொழில் நடக்கும். புத்தாண்டு என்றால் காலண்டர், டைரிகள் என்ற அச்சுத் தொழில் ஒருபுறம். தீப்பெட்டி உற்பத்தியும் இங்கு அதிகம்.

சிவகாசி பட்டாசுகள் அமெரிக்க விடுதலை நாளில் பயன்படுத்தபடுவது உண்டு. ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்த பட்டாசுகள் செல்வது உண்டு. ஆனால், தற்போது பட்டாசு தொழிலில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு இத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மடியவேண்டிய கொடூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மனித உயிர்கள் பட்டாசு உற்பத்தி விபத்தில் மடிவது சாதாரணமாக போய்விட்டது. வறுமையின் பிடியில் மாட்டிக்கொண்டவர்கள் வேறு வழியில்லாமல் பட்டாசுத் தொழிலுக்கு செல்கின்றனர்.

2012-இல் முதலிபட்டி கிராமத்தில் 45 பேரும், அதே கிராமத்தில் 2014-இல் 40 பேரும் பட்டாசு ஆலை விபத்தில் எரிந்து மடிந்தனர். இன்னும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. எத்தனை பேர் விபத்தில் இறந்துள்ளனர் என்ற சரியான புள்ளிவிவரம் இல்லை.

கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக 200-க்கு மேலான விபத்துகள் நடந்துள்ளன. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 400-க்கு மேல். படுகாயமடைந்தவர்கள் 250-க்கு மேல் இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொன்னாலும் இவை யாவும் சரியானவையா என்பது கேள்விக் குறிதான்.

2005-இல் சிவகாசி மீனாம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு சிவகாசி அனுபன்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 22 பேர் காயம் அடைந்தனர். 2006-இல் சிவகாசி பர்மா காலனியில் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் 12 பேரும், 2007-ஆம் ஆண்டு நாராயணபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் நான்கு பேரும் உயிரிழந்தனர்.

2009-இல் சிவகாசி நமஸ்கரித்தான்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் 18 பேரும், மற்றொரு தொழிற்சாலைவிபத்தில் மூன்று பேரும் உயிரிழந்தனர். 2010-இல் சிவகாசியில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் ஏழு பேர் பலியாகினர். அதே ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி சிவகாசி மாரனேரி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் பலியானார்.

2010-இல், சாத்தூர் அருகே மீனாட்சிபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு கருந்திரிகளை அழிக்கச் சென்ற வருவாய் துறையினர் ஆறு பேர், காவல் துறையினர் இருவர் உயிரிழந்தனர். 2011-இல் விருதுநகர், சிவகாசி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்துகளில் 14 பேர் உயிரிழந்தனர்.

2013-இல் சிவகாசி நாரணாபுரம் கிராமத்தில் ஒரு ஆலையில், தடை செய்யப்பட்ட செந்தூரம் வேதிப் பொருட்களைக் கொண்டு மரத்தடியில் பட்டாசு தயார் செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு சாத்தூர் அருகே உள்ள ஆலையிலும் மற்றும் கோணம்பட்டியில் உள்ள ஆலையிலும் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

2014-இல் ஒண்டிப்புலி நாயக்கனூரில் அனுமதியின்றி இயங்கி வந்த பட்டாசு கருந்திரி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு சிறுவர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள ஆலையில் பட்டாசு திரிகளை வெட்டும்போது ஏற்பட்ட வெடி விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

இப்படி இன்று வரை இந்த துயரங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இந்த விபத்துகளுக்கு சிவகாசியில் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை கட்டடங்கள்தான் கட்டப்பட்டதே ஒழிய உரிய மருந்துகளும் கருவிகளும் பற்றாக்குறை. விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் வாழை இலையை உடலில் போர்த்தி முதலுதவி செய்வதுதான் நடைமுறையாகிவிட்டது.

இன்றைக்குக்கு சிறு அளவிலான பட்டாசு ஆலைகளுக்கு அனுமதியை மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் தந்தாலே போதும். அதற்கு அடுத்து பெசோ என்று சொல்லக்கூடிய மத்திய பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் அமைச்சகமும் உரிமை வழங்க வேண்டும். இந்த பெசோ நிறுவனத்தின் அலுவலகம் சிவகாசியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகமும் விபத்து குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.

சற்று பெரிய ஆலைகளுக்கு சென்னையிலும், பெரிய நிறுவனங்களுக்கு புணேவில் உள்ள மத்திய அரசின் அலுவலகத்தில் இருந்து உரிமைகள் வழங்கப்படுகின்றன. இதில் அடிக்கடி மாநில அரசு அதிகாரிகளுக்கும், மத்திய அரசு அதிகாரிகளுக்கும் கண்காணிப்பில் போட்டா போட்டியும் நடப்பது உண்டு.

மாநில அரசு அதிகாரிகள் சல்ஃபர் வேதிப்பொருளை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கின்றோம். மற்றவற்றை கண்காணிக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கை விரிப்பார்கள்.

பட்டாசு வெடிபொருளில், சல்பர் மட்டுமே படைக்கலச் சட்டத்தின் கீழ் வருகிறது. ஆனால், பட்டாசு உற்பத்திக்கு தேவையான அலுமினியம் பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், பேரியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட் போன்ற மூலப்பொருட்களை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வழியில்லை.

அதை வைத்திருப்போர், விற்பனை வரியை ஒழுங்காக செலுத்தி வருவதால், அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. எனவே அனைத்து வெடிபொருள்ளுக்கான மூலப்பொருட்களை வைத்திருப்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் விதிமுறைகளை உருவாக்கினால்தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். இதுதான் விபத்துக்களுக்கு அடிப்படை.

இந்த மூலப்பொருள் கட்டுப்பாடு இல்லாமல் புழக்கத்தில் இருப்பதால் விபரீதங்கள் நடக்கின்றன.

அண்மையில் (ஜூலை 2, 2016) சிவகாசி நகரின் மையப்பகுதியில் நடந்த விபத்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. கடையை ஒட்டிய இடத்திலேயே பட்டாசு செய்ய தேவையான வேதிப்பொருள்கள் பதுக்கப்பட்டிருந்தது. அதனால் வெடி விபத்து நிகழ்ந்து, அந்த கட்டிடமே தரைமட்டமாகி நான்கு பேர் பலியானார்கள்.

சிவகாசி நகரின் பேருந்து நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் வெடி மருந்து பொருட்கள் சேமிப்புக் கூடங்கள் இருக்கக் கூடாது என்று இருந்தததை 13 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு என்று கூடுதலாக்கப்பட்டது. அதன் பின்பும் ஒரு சிலர் சிவகாசி நகரத்திலும், அதன் எல்லையிலும் சட்டத்துக்குப் புறம்பாக வேதிப் பொருள்களை சேமித்தது தவறு.

சட்டத்திற்கு புறம்பாக இந்த பட்டாசுத் தொழில் இயங்குவதை முறைப்படுத்த வேண்டும். முன்பெல்லாம் ஆலையில் விபத்து என்றால் ஆலையின் உரிமையாளர் முதலில் வந்து நின்று முதலுதவிப் பணிகளை ஆற்றுவார்.

ஆனால் இன்றைக்கோ ஒரு சில ஆலை அதிபர்களைத் தவிர மற்ற உரிமையாளர்கள் ஆலையில் விபத்து என்று சொன்னவுடன் பயந்து ஒளிந்து, நீதிமன்றத்தில் பிணைகள் வாங்குவதில்தான் ஆர்வம் செலுத்துகின்றனர். இம்மாதிரி விபத்துக்களுக்கு சரியாக காப்பீட்டுத் தொகைகளும் எளிதாகவும், விரைவாகவும் கிடைப்பதும் கிடையாது. சில சமயங்களில் காப்பீட்டுத் தொகைகள் கிடைப்பதே இல்லை.

சிவகாசி பகுதியில் மட்டும் 250 சிறு ஆலைகள் உள்பட 850 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவை தவிர, முறைப்படுத்தாத ஆலைகள் 100 வரை இயங்குகின்றன. அவர்களிடம் உரிமங்கள் இருக்கும். விதிமுறைகளையும், நடைமுறைகளையும் அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்.

ஒரு பட்டாசு ஆலைக்கு உற்பத்திக்கு தகுந்தவாறு தனி செட் அமைக்க வேண்டும். அந்த செட்டில் இத்தனை பேர்தான் பணியில் அமர்த்தவேண்டும் என்ற முறை உள்ளது. ஒரே அதிபரிடம் பட்டாசு உற்பத்தி செட்டுகள் 20 இருந்தால், அதை 20 பேருக்கு குத்தகைக்கு விட்டுவிடுகிறார். அப்படி குத்தகைக்கு விடும்பொழுது விபத்துகள் நடந்தால் அந்த குத்தகைதாரர் இழப்பீடு தொகையை தருவதும் இல்லை.

இந்த குத்தகைதாரர்கள் வெடிபொருட்களை நேரடியாக வாங்காமல் தங்களுக்குத் தேவையான அளவை சில கடைக்காரர்களிடம் சில்லறையாகவும், சட்டவிரோதமாகவும் வாங்குகின்றனர். இதை கண்காணிக்கவும் முடியாது. இந்த விபத்துகளுக்கு இப்படி பல காரணங்கள்.

1995-ஆம் ஆண்டு வரை விபத்துக்கள் நடப்பது அரிதாக இருந்தது. 80 ஆண்டுகளாக நடந்து வரும் சிவகாசி பட்டாசுத் தொழிலை நசுக்கும் வகையில் சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சிவகாசி பட்டாசுகள் அலுமினியம் நைட்ரேட்டைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சீனப் பட்டாசுகள் பொட்டாசியம் குளோரேட்டை வைத்து தயாரிப்பதால் எளிதில் தீப்பற்றி விபத்துக்கள் ஏற்படும். உள்நாட்டு உற்பத்தியால் மத்திய அரசுக்கு 12.5 சதவீதம் கலால் வரியும், மாநில அரசுக்கு 14.5 சதவீதம் வணிக வரியும் கிடைக்கும். ஆனால், சீனப் பட்டாசால் இந்த வருவாய்கள் கிடைக்காது.

பட்டாசுத் தொழில் விபத்துகளை படிக்கும்பொழுது ஒரு செய்திதானே என்று நினைக்காமல் நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசை உருவாக்கிய கைகளின் பின்னணியில் ஒளிந்திருக்கும் துயரக்கதையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பட்டாசுத் தொழிலில் பாடுபடும் பாட்டாளிகளின் பாதிப்புகளை களைந்து அத்தொழில் பதட்டமற்ற தொழிலாக மாற மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கட்டுரையாளர்:

வழக்குரைஞர்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com