அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பயிர்க் காப்பீடு: தேவை மறுபரிசீலனை

இந்தியா மாபெரும் நாடு. இந்நாட்டு மக்கள் 130 கோடி பேருக்கு உணவளிப்பது விவசாயத் துறை. தவிர, மக்கள்தொகையில் 60 சதவீதமான

Updated On :9 மார்ச் 2016, 8:15 pm

இந்தியா மாபெரும் நாடு. இந்நாட்டு மக்கள் 130 கோடி பேருக்கு உணவளிப்பது விவசாயத் துறை. தவிர, மக்கள்தொகையில் 60 சதவீதமான 78 கோடி பேருக்கு வாழ்வாதாரமாகவும் இருப்பது விவசாயம். வேறெந்த வெளிநாட்டாலும் நம் நாட்டு மக்களுக்கு இந்த அளவு உணவையும், வேலைவாய்ப்பையும் அளிக்க முடியாது.
 ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இது விவசாயத் துறையின் வீழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.
 இதன்மூலம், விவசாயத்தைக் காக்க அரசு மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, இதுவரை பெற்ற தோல்விகளிலிருந்து அரசு எந்தப் பாடமும் கற்கவில்லை என்பதும் உறுதியாகிறது.
 ரிசர்வ் வங்கி அமைத்த தீபக் மொஹந்தி தலைமையிலான குழு, கடந்த 2015 டிசம்பர் 28-இல் அளித்த அறிக்கையில், விவசாயத்துக்கு வழங்கப்படும் வட்டி மானியத்தை ரத்து செய்யுமாறு பரிந்துரைத்தது. அதற்குப் பதிலாக, சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு திட்டத்துக்கு அந்த நிதியை செலவிடலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
 இதுவரை, ரூ. 3 லட்சம் வரையிலான குறுகியகாலப் பயிர்க் கடன்கள் மீதான வட்டியில் 2 சதவீதம் தள்ளுபடி மானியமும், கடனை சரியாக திருப்பிச் செலுத்துவோருக்கு கூடுதலாக 3 சதவீத ஊக்கத்தொகையும் அரசால் வழங்கப்பட்டன.
 இந்த வட்டி மானியம் 2006-இல் ரூ. 1,000 கோடியாக இருந்தது, 2016-இல் ரூ.12,500 கோடியாக அதிகரித்தது. இத்திட்டத்தைத் தொடர ரிசர்வ் வங்கிக் குழு விரும்பவில்லை.
 இதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன. 1. இத்திட்டம் குறுகிய காலப் பயிர்களுக்கு மட்டுமே பலனளிக்கிறது. நீண்டகாலப் பயிரினங்களுக்கு இத்திட்டத்தில் இடமில்லை. 2. இந்த வட்டி மானியம் உண்மையான விவசாயிகளைச் சென்று சேர்வதில்லை. 3. இத்திட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட பெருமளவில் வாய்ப்புகள் உள்ளன.
 மேற்கண்ட காரணங்களைக் கூறிய ரிசர்வ் வங்கிக் குழு, பயனுள்ள பயிர்க்காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்துமாறும், அரசின் நிதி வீணாவதைத் தடுக்குமாறும் பரிந்துரைத்தது. ஆனால், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதற்கு பயிர்க்காப்பீடு ஈடாகாது என்பதை அக்குழு கவனத்தில் கொள்ளவில்லை. இது, ஏற்கெனவே மிகவும் குறைந்த வருவாய் ஈட்டும் விவசாயிகளுக்கு சிரமம் தருவதாக உள்ளது.
 தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSSO) 70-ஆவது சுற்று புள்ளிவிவரங்கள், ஒரு ஹெக்டேர் பரப்புக்கும் குறைவான நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் 70 சதவீத விவசாயிகள் தங்கள் குடும்பத்தின் அடிப்படைச் செலவை விடக் குறைந்த வருவாய் ஈட்டுவதாகக் கூறுகின்றன.
 மேலும் பல மாதிரி கணக்கெடுப்புகளும் விவசாயிகளின் பரிதாபகரமான நிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அர்ஜுன் சென்குப்தா குழு, ஒரு விவசாயக் குடும்பத்தின் சராசரி மாத வருவாய் ரூ.2,115 மட்டுமே என்று கூறுகிறது. இதில் விவசாயமல்லாத வருவாயான ரூ.900-ம் அடக்கம்.
 விவசாய செலவினம் மற்றும் விலைகளுக்கான ஆணையத்தின் (CACP) ஆய்வு முடிவுகள், சாகுபடிப் பயிர்களால் கிடைக்கும் வருவாய், விவசாயிகளுக்கு நஷ்டம் அளிப்பதாகவே இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.
 2011-இல் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு, ஊரகப் பகுதிகளிலுள்ள 75 சதவீத குடும்பத்தினரின் மொத்த மாத வருவாய் ரூ.5,000-க்கு குறைவாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே, பயிர்க் காப்பீட்டுக்கு குறைந்தபட்ச பிரீமியம் செலுத்துவதானாலும், இத்திட்டம் விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்காது.
 ரிசர்வ் வங்கிக் குழுவின் அறிக்கை வெளியான இரு வாரங்களில், மத்திய அரசு "பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்' (PMFBY) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் வரும் காரிஃப் பருவ பயிர் சாகுபடியிலிருந்து துவங்க உள்ளது.
 இத்திட்டத்தால் விவசாயிகளுக்குப் பெரும் நன்மைகள் கிடைக்காவிட்டாலும், காப்பீட்டு நிறுவனங்களின் வர்த்தகத்துக்கு அரசின் நிதி உதவிகரமாக இருக்கும். இந்திய விவசாயக் காப்பீட்டு நிறுவனம் மட்டுமல்லாது, 10 தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இத்திட்டத்தில் பங்கேற்கின்றன.
 இதுவரை நடைமுறையிலிருந்த தேசிய விவசாயக் காப்பீட்டுத் திட்டம் (NAIS), மாற்றியமைக்கப்பட்ட தேசிய விவசாயக் காப்பீட்டுத் திட்டம் (MNAIS) ஆகியவற்றுக்கு மாற்றாக, "பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்' கொண்டுவரப்பட்டுள்ளது. கொள்கையளவில் இத்திட்டம் கவர்ச்சிகரமாகவே உள்ளது.
 நாட்டிலுள்ள விவசாயிகள் அனைவரும் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு முழுமையான காப்பீட்டுப் பலனைப் பெற முடிவது இத்திட்டத்தின் சாதகமான அம்சம். அதிலும் காரிஃப் பருவப் பயிர்களுக்கு 2 சதவீத பிரீமியம், ராபி பருவப் பயிர்களுக்கு 1.5 சதவீத பிரீமியம், தோட்டப் பயிர்களுக்கு 5 சதவீத பிரீமியம் என மிகக் குறைந்த பிரீமியமே விவசாயிகளிடம் வசூலிக்கப்பட உள்ளது.
 விவசாயிகளிடம் பெறப்படும் பிரீமியத்துக்கும், காப்பீட்டு நிறுவனத்தின் அடிப்படை பிரீமியத்துக்கும் இடைப்பட்ட வித்தியாசத் தொகை 90 சதவீதத்துக்கு மேல் இருக்கும். அதனை அரசே செலுத்துகிறது. அதன் அடிப்படையில் பயனாளிக்குக் கிடைக்கும் காப்பீட்டுத் தொகைக்கு உச்ச வரம்பு கிடையாது. இதற்கு முன் பிரீமியத்துக்கும் காப்பீட்டுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தன. ஸ்மார்ட் போன்களின் தொழில்நுட்பத்தை காப்பீட்டுத் திட்டத்துக்கு துணையாகப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதும் புதுமையாகும்.
 இருப்பினும், இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் பலன்கள் எதுவும், அரசு வழங்கும் தொகைக்கு ஈடாகாது என்பதே உண்மை. மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்துக்காக ரூ.17,500 கோடி நிதியைச் செலவிடுகின்றன. ஆனால், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீடு தொடர்பான அம்சங்களில் காப்பீட்டு நிறுவனங்களே முடிவெடுக்க அனுமதிக்கப்படுகின்றன.
 அதாவது, அரசு இத்திட்டத்துக்காக பெரும் தொகையை செலவு செய்தாலும், விவசாயிகள் காப்பீடு கோருவது குறை வாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
 இத்திட்டத்தின் மற்றொரு குறைபாடு, பகுதிவாரியாக காப்பீட்டுத் தொகையை மதிப்பிடுவதாகும். அதாவது, முக்கியப் பயிரினங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு தனிநபராக விவசாயி காப்பீடு பெற முடியாது.
 கிராமம் அல்லது ஊராட்சி வாரியாக அந்த இழப்பு மதிப்பீடு செய்யப்பட்டு காப்பீடு வழங்கப்படும். இதன்படி, தனிப்பட்ட விவசாயி பாதிக்கப்பட்டாலும், ஊராட்சியிலுள்ள மொத்த விளைநிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே காப்பீடு கிடைக்கும்.
 1947-48இல் அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு, இருவிதமான காப்பீட்டு மாதிரிகளை பரிந்துரைத்தது. அதில் முதலாவது, தனிப்பட்ட விவசாயியின் இழப்பைக் கருத்தில் கொள்வதாகும். அடுத்தது, ஒட்டுமொத்த கிராமம், ஊராட்சி, ஒன்றியம், வட்ட அளவில் சாகுபடி நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள பகுதிவாரியான சேதத்தை மதிப்பிட்டு காப்பீடு வழங்குவதாகும்.
 இரண்டாவதாகக் கூறப்பட்ட திட்ட மாதிரி, விவசாயிகள் பொய்யான காப்பீட்டு விண்ணப்பங்களை அளிப்பதைத் தவிர்க்கப் பயன்படுத்தப்பட்டது. விவசாயிகளை நம்பாத அந்த மனப்பான்மை சுமார் 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தொடர்வது வேதனை அளிக்கிறது.
 எனவே, முழுமையற்ற இந்தப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால் அனைத்து விவசாயிகளும் பலனடைய வாய்ப்பில்லை. அரசு அளித்துள்ள புள்ளிவிவரத்திலேயே, நாட்டிலுள்ள 1,944 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பில் 25 சதவீதம் மட்டுமே காப்பீட்டு வசதியைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதை மூன்று ஆண்டுகளுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், இந்த புள்ளிவிவரம் மேலும் மோசமாக உள்ளது. நாட்டிலுள்ள நெல் விவசாயிகளில் 95.2 சதவீதத்தினர் 2012-இல் பயிர்க் காப்பீடு செய்யவில்லை. 2013-இல் இது 96.1 சதவீதமாக அதிகரித்தது. இதேபோல, கோதுமை சாகுபடி விவசாயிகளில் 2012-இல் 95.3 சதவீதத்தினரும் 2013-இல் 95.9 சதவீதத்தினரும் பயிர்க் காப்பீடு செய்யவில்லை. இது தேசிய மாதிரிக் கணக்கெடுப்புத் தகவலாகும்.
 எனவே, மத்திய அரசு தனது விவசாயக் கொள்கையில் மாற்றம் செய்வது அவசியம். விவசாயிகளின் இடுபொருள் செலவைக் குறைத்தல், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலமாக அவர்களின் வருவாயை உயர்த்தினால் மட்டுமே விவசாயம் நாட்டில் நீடிக்கும். அதற்கு மாறாக பயிர்க் காப்பீடு திட்டங்களில் அரசு கவனம் செலுத்துவது பலனளிக்காது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.