ஒருபோதும் ஒருபொழுதை வீணாக்காமல்...

பல சமயங்களில் வாசலுக்கே பந்தல் போட முடியாதவர்கள் வானத்துக்குப் பந்தல் போடுவதாக அளப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
ஒருபோதும் ஒருபொழுதை வீணாக்காமல்...
Updated on
3 min read

பல சமயங்களில் வாசலுக்கே பந்தல் போட முடியாதவர்கள் வானத்துக்குப் பந்தல் போடுவதாக அளப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

வழியில் கிடக்கிற கல்லையோ, முள்ளையோ எடுத்துத் தூரப்போட முடியாதவர்கள், வானவில்லையே வளைத்து இழுத்து வந்து முற்றத்தில் ஊன்றி, மண்ணைக் கயிறாகத் திரித்து ஊஞ்சல் கட்டி ஆடப்போவதாக நீளச் சொல்வார்களே கேட்டிருக்கிறீர்களா?

அதெல்லாம் கிடக்கட்டும். அடுத்தகணம் நடக்கப்போவது இன்னதெனக் கூற முடியாதவர்கள் அடுத்த பிறவிக்கும் அடுத்த பிறவியில் தான் பெறப்போகிற அளப்பரிய வெற்றியை, செய்யப்போகிற தானத்தை விஸ்தாரமாக விளக்கிக் காட்டுவார்களே கண்டிருக்கிறீர்களா?

அப்படிப்பட்டவர்களைப் பார்த்துத்தான் நகைப்பை வெளிக்காட்டாமல் நல்லதொரு குறளை வள்ளுவர் எழுதியிருக்கிறார். இவர்களை ஒருபொழுதும் வாழ்வதறியார் என்று அக் குறளில் அடையாளம் காட்டியிருக்கிறார்.

ஒருபொழுதும் வாழ்வது அறியார்

கருதுப

கோடியும் அல்ல பல.

என்று.

இதில் ஒன்றுக்குக் கீழே, கோடியை வைக்கிற வள்ளுவர், அதனிலும் பல என்று அவரவர்தம் மனப்போக்கிற்கு ஏற்ப மடங்காக்கிக் கொள்ள விட்டுவிடுகிறார்.

அது என்ன ஒருபொழுது?

பல பொழுதுகளின் சேர்மானத்தில் அடையாளமாகிறது காலம். இடத்தையும் காலத்தையும் இருகால்களாய்க்கொண்டு உடம்பொடு இணைந்த உயிர் நடக்கிறதே அந்த இயக்கம் வாழ்க்கை.

வாழ்க்கை வாழ்தலுக்கு உரியது. மனிதவாழ்க்கையோ வாழ்வாங்கு வாழ்தலுக்குரியது. வாழ்தலுக்கும், வாழ்வாங்கு வாழ்தலுக்கும் வேறுபாடு இருக்கிறது. தன்போக்கில் நிகழும் காலத்துக்குத் தகுந்தபடி ஒழுகுதல் வாழ்க்கை. இது இயல்பானது; சரியானதும்கூட. இதனினும் மேம்பட்ட சிறப்புக்குரியது வாழ்வாங்கு வாழ்தல்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்

-என்கிறார் வள்ளுவர். தன் பயன் கருதி வாழ்வதைவிடவும் மண் பயனுற வாழ்தல்தான் வாழ்வாங்கு வாழ்தல். வானத்தையும் வையத்தையும் இணைத்துப் பார்க்க எழும் விசுவரூப வாழ்க்கை அது.

பொதுவாக, நாம் நினைப்பதுபோல் வருடங்களைக் கழிப்பதன்று வாழ்க்கை. நகரும் பொழுதின் அணுக்கள்மீது நம் செயல் எழுதிச் சிறப்பது வாழ்க்கை.

பிள்ளைவரம் வேண்டிப் பெருந்தவம் புரிந்த மிருகண்டு மகரிஷியின் முன் சிவபெருமான் தோன்றி, இரு வாய்ப்புகளை எடுத்துரைத்தான்.

ஒன்று, நூறாண்டுகள் ஜடம்போல் வாழ்கிற பிள்ளை. மற்றொன்று, வெறும் பதினாறு ஆண்டுகளே வாழ்கிற ஞானக்குழந்தை. இதில் எது வேண்டும்?

நீண்ட சிந்தனைக்குப்பின் அந்த மகான் தேர்ந்த மகவு எதுவென்று உலகம் அறியும். அன்று பதினாறு ஆண்டுகள் மட்டும் என்று ஆண்டவனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுளைப் பெற்ற ஒருவன் தன் செயலால் என்றும் பதினாறாய் நிலைபெற்றுவிட்டான். அவன்தான் மார்க்கண்டேயன்.

எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல, எவ்வாறு வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம்.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இருப்பின் அடையாளம் எது? மனிதப் பிறப்பே புகழுக்குரியதுதான் என்றாலும், தோன்றிற் புகழொடு தோன்றுக என்கிற வள்ளுவத்துக்குப் பொருள், பிறக்கிறபோதே புகழுடன் பிறப்பது என்பதன்று.

மக்களின் முன்னால், ஊடகங்களின் முன்னால், இப்படி எதன் முன்னால் தோன்றினாலும், அது புகழ் தரும்படியாக இருக்கவேண்டும்; இகழக்கூடியதாகிவிடக் கூடாது எனக் கொள்வது பொருந்தும். அந்தத் தோற்றம் குறைந்த பொழுதில் நிகழ்ந்து முடிந்தாலும், மறைந்த பிறகும் நிலைத்த புகழ் தருவதாய் இருத்தல்

வேண்டும்.

பிறந்து, இருந்து, இறந்து முடியும் வாழ்க்கைச் சுழற்சியில் நிலையாக இருப்பது எவ்வாறு என்று உணர்ந்து, அவ்வாறு வாழ்ந்து உணர்த்தினர் நம்முன்னோர்.

மனிதர்கள் எல்லாருக்கும் தத்தம் புகழை நிறுவுகிற வாய்ப்பு இயல்பாகவே வாய்க்கும் என்று சொல்லிவிட முடியாது. அவ்வாறு கிடைக்காவிடினும் தாமே முயற்சிசெய்து செயற்கரியதும் உரியதுமான சிறந்த செயல்களைச் செய்வதன் வாயிலாக, நிறுவிக் கொள்ள முடியும் என்பதைக் குறிப்பாகச் சொல்லிவிடுகிறார். அவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை, அற்பக் காலமே ஆனாலும், அதற்குள் பல ஆயிரமாண்டுகள் வாழ்விக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கும்.

பதினாறு ஆண்டுகள் மட்டுமே பயனுற மண்மேல் வாழ்ந்த மானுடர், சீர்காழிச் செல்வர் திருஞானசம்பந்தர். அவர் பாடிய அருட்பாடலில் ஒன்று "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்' என்று அமைவது. அந்தத் தொடரோடு அவர் தன் பாடலை முடித்துவிடவில்லை.

வைகலும் என்று அடுத்தொரு சொல்லை வைக்கிறார். நாளும் எனப்பொருள் தரும் அச்சொல்லை, நாள்தோறும் எண்ணிப்பார்க்க வேண்டும். நாள்தோறும் முடிந்துபோன நாள்காட்டித் தாளைக் கிழிக்கிறபோது, அது வெறும் தாள் என்று பார்ப்பது அறியாமை; அது வாள் என உணர்வது நிலையாமை. இந்தத் தாளோடு நாள்தோறும் வெளிவரும் செய்தித்தாளையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். சற்றுமுன் வரை, இந்தவுலகத்தார் செய்ததன் தொகுப்பல்லவா அது?

வேறொரு வகையாகவும் இதை விளங்கிக் கொள்ளலாம்.

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடியதாகப் புறநானூறு பாடுகிறதே, அந்தச் செய்தியும், இந்தச் செய்தியும் ஒரு புள்ளியில் சந்தித்து ஓர் உண்மையை உணர்த்திக் காட்டுகிறது.

புறநானூற்றுச் செய்தி செய்ந்நன்றியைப் புகல்கிறது. இதழியல் செய்தி, நேற்று செய்ததைப் பதிவு செய்கிறது.

நாளும் பொழுதும் அறஞ்செய்யத் தூண்டுகிறது.

நேற்றுச் செய்தது நேற்றோடு போயிற்று; நாளை எப்படியோ என்று போய்விடாமல், இந்தக் கணத்தின் முக்கியத்தை எடுத்துச்சொல்கிறது. நேற்றையும் நாளையையும் இணைக்கிற நடுக்கண்ணிக்குள்தான் இருக்கிறது நம் வாழ்க்கை என்று உணர்த்துகிறது.

இன்று இந்தக் கணம் மட்டுமே உண்மை. அதுதான் நித்தியம் என்பதை நன்கு உணர்த்திவிடுகிறது. நன்று, இந்தக் கணம் புதிதாய்ப் பிறந்துவிட்டேன் என்று கணந்தோறும் நாம் கருத வேண்டித்தான் பாரதி இவ்வாறு பாடிக்கொடுத்திருக்கிறார்.

நிலையிலாவுலகில் நிலைபெற வாழ்வது எவ்வாறு?

நிகழும் பொழுதை வீணாக விடாமல் செயலால் நிறைப்பது. அது நற்செயலாதல் வேண்டும். நன்றே செய், நன்றும் இன்றே செய், இன்றும் இன்னே செய் என்பது முன்னோர் வாக்கு.

அற்பப் பொழுதே வாழ்ந்தாலும் அந்தப் பொழுதுக்குரிய பயனை அனுபவித்துச் சிறந்துவிடுகிறது ஈசல். காலம் முழுவதும் கறையானாய் ஊர்ந்து கழித்த வாழ்வின் நிறைவில் கணப்பொழுதேனும் கொஞ்சம் வானத்தை வசப்படுத்தி பறவையாய் வாழ்ந்துவிடுகிறதே! இதில் கற்றுக்கொள்ள நமக்கொரு நம்பிக்கைப் பாடம் இருக்கிறது இல்லையா?

நாம் மனிதப் பிறவியல்லவா?

மரணத்திற்குப் பின்னும் வாழமுடியும் என்பதை மனிதம் உறுதிப்படுத்தி வெகுகாலமாயிற்று. அதிலும் தான் வாழ்தல் என்பது கடந்து, தன்னுடன் வாழ்ந்த எவ்வுயிரையும் வாழ்வித்து வாழ்ந்தவர்களே, வரலாற்றில் வாழ்கிறார்கள்; வரலாறாய் வாழ்கிறார்கள்; வரலாற்றை வாழ்விக்கவும் செய்கிறார்கள்.

தருமனோடு சொர்க்கம் புகுந்த நாயின் வாழ்வு, சராசரி ஆயுளா? பாரியின் தேரில் படரவிடப்பெற்ற முல்லைக்கொடி இன்னும் மூப்புறா இளமையோடு வாழ்ந்துகொண்டிருக்கவில்லையா? அதுவே, வள்ளலாய்ப் பாரியையும் வாழ்வித்துக் கொண்டிருக்கிறதல்லவா? பேகன் வாழ்வோடு இணைத்துப் பேசப்பெறும் மயிலுக்கு இன்னும் ஆயுள் வளர்கிறதே..!

பெரும்பொழுது, சிறுபொழுது என்று காலத்தைப் பகுத்துக் கணக்கிட்டு வாழ்ந்த தமிழர்களின் அகமரபு ஒருபுறம் இருக்கட்டும். அன்றாட வாழ்வில் நம்மைவிட்டு அகலும் ஒரு பொழுதும் வீணாகாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே!

மனக்கோட்டை பல கட்டி, மணியான பொழுதுகளை வறிதே இழந்து, மண்ணாகிப் போவது மடமையல்லவா?

கற்பகோடிக் காலம் இங்கேயே இருந்துவிடப் போவதாய் நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கும், அற்ப காலத்துக்குள்ளேயே ஆயுள் முடிந்துவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையில், நுட்பமாய் நகைத்து, ஒரு உம் போடுகிறாரே வள்ளுவர், ஒருபொழுதும் என்று.

இந்த ஒருபொழுதும் கூட ஒழுங்காக வாழாதவராலா, பெருவாழ்வு வாழ முடியும் என்ற கேள்விக்குள், பதிலாக ஒரு பாதை திறக்கிறது.

இந்த ஒருபொழுது, வெறும்பொழுது அன்று. பெரும்பொழுது உயிர் காக்கும் மருந்தெடுத்துக்கொண்டு நோயாளியைக் காக்க ஓடும் ஒருபொழுது, வாழ்வின் இணையைத் தீர்மானிக்க முயலும் ஒருபொழுது, பல்வேறு திசைகளாய்ப் பிரியும் எதிர்காலப் பாதைகளில் எந்த ஒன்றைத் தெரிவு செய்வது என முடிவெடுக்கும் ஒருபொழுது, நெடுநாள் புகழை, மதிப்பை, பெருமையைச் சலனத்தினாலோ, சபலத்தினாலோ தடுமாறவிடப் போகுமுன் அறந்துணையாகத் தடுத்து நிறுத்தப்படும் ஒருபொழுது, காலம் கருதி இந்த வரிசையில் இதையும் சேர்க்கலாம் - வாக்களிக்கும் எந்திரத்தின் முன் நிற்கும் ஒருபொழுது - இப்படி ஒவ்வொரு பொழுதிலும் பயனுற வாழவேண்டிய பக்குவத்தை உணர்த்திக் காட்டுகிற, இந்தத் திருக்குறளையும் எதுவோ, ஒருபொழுதில்தான் வள்ளுவர் எழுதவும் செய்திருப்பார். அது எந்தப் பொழுதென்ற ஐயம் வருகிறதா?

மீளவும் ஒருமுறை தொடக்கத்தில் இருந்து படிக்கலாம் இந்தக் கட்டுரையை. "வேண்டியதில்லை.. விளங்குகிறது' என்றால், ஒருபோதும் ஒருபொழுதை வீணாக்காமல் வாழ்கிறவர் நீங்கள் என்று உறுதி கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com