வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான்

உலகத்தின் தலைநகரம் என லண்டனை அழைப்பார்கள். இந்த உலகத்தின் தலைநகருக்கு மேயராக தேர்வாகியுள்ளார் பிரிக்கப்படாத இந்தியாவைப்

Updated On :11 மே 2016, 7:56 pm

உலகத்தின் தலைநகரம் என லண்டனை அழைப்பார்கள். இந்த உலகத்தின் தலைநகருக்கு மேயராக தேர்வாகியுள்ளார் பிரிக்கப்படாத இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சாதிக் கான். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இவர்தான் இங்கிலாந்தின் முதலாவது முஸ்லிம் மேயர் ஆவார்.
 1947-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்று இவரின் மூதாதையர்கள் குடியேறினார்கள். சாதிக் கான் இங்கிலாந்தில் பிறந்தார். ஆனால், இவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, பாகிஸ்தானில் இருந்து லண்டன் சென்று குடியேறியிருந்தார்கள் இவரின் பெற்றோர்கள்.
 இவரின் அப்பா, அமானுல்லா கான், 25 ஆண்டுகள் லண்டன் தெருக்களில் பேருந்து ஓட்டினார். இவரின் அம்மா தையல் கலைஞராக இருந்தார். மிகக் குறைந்த வருமானத்தில், 8 பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பெரிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. ஆகவே, இரவும் பகலுமாக உழைத்தார்கள்.
 பழமைவாதக் கட்சி இவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தது. இவர் மீது சேறு பூச மட்டுமே பல மில்லியன் பவுண்டுகளை வாரியிறைத்தது அக் கட்சி. மறைமுகமாக சாதிக்கை தீவிரவாதி என்றார் பழமைவாதக் கட்சியின் பிரதமரான டேவிட் கேமரூன்.
 இங்கிலாந்தில் பரவியுள்ள, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பழமைவாதக் கட்சி அறுவடை செய்ய நினைத்தது; முடியவில்லை.
 இஸ்லாமியர்கள் மீது வெளிநாட்டவர்கள் கொண்டுள்ள பயமான Islamophobia-வை தூண்டிப் பார்த்தார்கள்; அதுவும் முடியவில்லை. இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு பிராணவாயு கொடுக்கிறார் சாதிக் என்றார்கள்; எதுவுமே எடுபடவில்லை.
 இவரை எதிர்த்து, பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு பல லட்சக்கணக்காண வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனவர் Zac gold smith. பிரபலமான கோல்ட் ஸ்மித் குடும்பத்தைச் சேர்ந்தவர். சாதிக்கை வீழ்த்த எல்லா வகையான ஆயுதங்களையும் உபயோகித்தார். சாதிக் கான் ஒரு அதிபயங்கரமான தீவிரவாதி என்றார்.
 மே மாதம் முதலாம் தேதி பிரபலமான பிரிட்டன் மெயில் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் Zac gold smith. அதன் தலைப்பு, "தீவிரவாதிகளை நண்பர்களாகக் கருதும் கட்சியிடம் உலகின் மிக முக்கியமான நகரத்தை கையளிக்கப் போகின்றோமா...' அவர் தீவிரவாதிகளின் நண்பர்கள் எனச் சொன்னது சாதிக் அங்கம் வகிக்கும் தொழிலாளர் கட்சியை. தீவிரவாதி எனச் சொன்னது சாதிக்கை.
 லண்டனின் மொத்த ஜனத்தொகையில் 12 சதவீதத்தினர் முஸ்லிம்களாக இருந்தாலும், இவர், தன்னை முஸ்லிம் தலைவராக என்றுமே அடையாளப் படுத்தியதில்லை.
 ஆனால், தீவிர மத நம்பிக்கையுள்ள சாதிக், முஸ்லிமாகவே தன்னை எல்லாத் தருணங்களிலும் வெளிக்காட்டியுள்ளார்.
 "உங்களை எப்படி வரையறுப்பீர்கள்....' என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இவரிடம் கேட்டபோது, "நான் லண்டனைச் சேர்ந்தவன், ஐரோப்பியன், ஆங்கிலேயன், ஆசியாவைச் சேர்ந்தவன், பாகிஸ்தான் வம்சாவளி, தந்தை, கணவன் என எனக்குப் பல முகங்கள் உள்ளன,' என்றார் சாதிக் கான்.
 அதுதான் உண்மை. இவருக்கு எல்லா இனத்தவர்களுமே வாக்களித்தனர். அதற்கு இவரின் பன்முகத்தன்மையே காரணமாகும்.
 ஐரோப்பாவில் அதிகளவான இனத்தவர்கள் வசிக்கும் நகரமாக லண்டன் விளங்குகிறது. சென்னையை விடச் சிறிய நகரமான அங்கே, சுமார் 300 மொழிகள் பேசப்படுகின்றன. 50 இனங்களுக்கும் மேற்ப ட்டவர்கள் வசிக்கிறார்கள்.
 லண்டனின் மொத்த ஜனத்தொகையில் வெறும் 44.9 சதவீதத்தினர்தான் வெள்ளையின பிரிட்டிஷ்காரர்கள். 37 சதவீதத்தினர் லண்டனைச் சேர்ந்தவர்கள் அல்ல.
 அதிலும், 24.5 சதவீதத்தினர் ஐரோப்பாக் கண்டத்தைச் சாராதவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் கணிசமான அளவினர் இந்தியர்களும் ஈழத் தமிழர்களுமாவார்கள்.
 இலங்கையின் பெருநகரங்களில் வசிக்கிற இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையை விட, லண்டனில் வசிக்கிற இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றன ஆய்வுகள்.
 இவர் இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு ஆதரவான கொள்கைகளைக் கொண்டவர். இவரின் பெற்றோர்கள் குடியேற்றவாசி என்பதால் குடியேற்றவாசிகளின் மனநிலைகளை இலகுவாகப் புரிந்து கொள்கிறார்.
 இவரது தேர்வானது, லண்டனில் சென்று குடியேறியுள்ள ஆயிரக்கணக்காண ஆசியர்களுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
 "லண்டனின் ஒபாமா' என இவரை சில ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதுகின்றன. அது மிகச் சரியானதும் கூட. ஒபாமாவிற்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
 ஒபாமாவைப் போல இவரும் சட்டம் படித்தவர். ஒபாமாவின் மனைவி, மிச்செல் ஒபாமாவைப் போல இவரின் மனைவி சாதியா அகமதுவும் சட்டம் படித்தவர். இருவருமே மிக வறிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்.
 இருவருக்குமே இரண்டு பெண் பிள்ளைகள். முக்கியமாக இருவரும் தம் மீது விதைக்கப்பட்ட வெறுப்பிற்கெதிராகப் போராடி வாழ்வின் உயரங்களைத் தொட்டார்கள்.
 கறுப்பர் என்ற வெறுப்பைத் தாண்டி வந்தார் ஒபாமா. முஸ்லிம் என்ற வெறுப்பைத் தாண்டி வந்தார் சாதிக் கான். இருவருமே சாதனையாளர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.