ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேலையில்லா திண்டாட்டத்துக்குக் காரணம்...

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துவிட்டு கிட்டத்தட்ட 92 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது

News image
Updated On :19 மே 2016, 9:17 pm

இ. முருகராஜ்

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துவிட்டு கிட்டத்தட்ட 92 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையை ஆராய்ந்து பார்த்தால், இவ்வளவு பேர் வேலையில்லாமல் இருப்பதற்கான காரணங்கள் புரிய வரும்.
 சிலர் படித்த துறையை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு முயற்சிப்பது; தான் படிக்கும் துறைக்கான வேலைவாய்ப்புகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதாவது ஒரு துறையை தேர்வு செய்து, அதில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் படிப்பது; படித்து முடித்த பின்னர் எதிர்பார்த்ததுபோல் வேலை கிடைக்காமல், என்ன வேலைக்குச் செல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பார்கள்.
 அதேபோல், படித்து முடித்ததும் குடும்பச் சூழல் காரணமாக கிடைக்கின்ற ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்துவிட்டு, பின்னர் அந்த வேலை பிடிக்கவில்லை என திரும்பி வந்துவிடுவது போன்ற காரணங்களால் வாழ்க்கையை பாழாக்கிக் கொண்டிருக்கும் ஏராளமான இளைஞர்களை இன்று நாம் காண முடிகிறது.
 தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பொறியியல், தொழில்நுட்பம், கலை அறிவியல் உள்பட பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் படித்து முடித்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் வெளியில் வந்துகொண்டிருக்கின்றனர்.
 இதில் பெரும்பாலான தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், எங்கள் கல்லூரியில் கடந்த ஆண்டுகளில் படித்த இவ்வளவு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்று விளம்பரங்களை செய்து மாணவர்கள் சேர்க்கையை நடத்துகின்றன.
 உண்மையில் அந்தக் கல்லூரிகள் இதுபோன்று வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனவா என்று ஆராய்ந்து பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
 சில தனியார் கல்லூரிகளில் பிரபலமான மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் வளாகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற்றுவிட்டால், அவர்களது வாழ்க்கை பிரகாசமானதாகி விடும்.
 அப்படியில்லாமல் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அதேபோன்ற முன்னணி நிறுவனங்களில் வேலையில் சேர்வதென்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.
 ஏனென்றால், கல்லூரியில் நடத்தப்படும் வளாகத் தேர்வின்போது, அந்த முன்னணி நிறுவங்கள் முதல்நிலை, பிரதான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற அளவில் 2 அல்லது 3 சுற்றுகளை எளிமையான முறையில் வைத்து மாணவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன.
 ஆனால், கல்லூரிப் படிப்பை முடித்து, முன்னணி நிறுவனங்களுக்கு வேலை தேடிச் செல்லும் மாணவர்களுக்கு 4,5,6 சுற்றுகள் என்று தேர்வு நடத்தி, அவர்களை பெரும்பாலும் வேலைக்கு எடுக்காமல் அலைக்கழிக்கவே செய்கின்றன.
 தற்போது சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடிக்கும் மாணவர்களுக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள், நாளிதழ்களின் சார்பில் கல்வி விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
 ஆனால், இது பெரும்பாலும் பெரு நகரங்களில் நடத்தப்படுவதால், அந்த நகரைச் சுற்றியுள்ள மாணவர்களும், இந்த கண்காட்சி குறித்து தகவல் கிடைக்கும் மாணவர்களும் மட்டுமே பயனடைகின்றனர். பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை.
 மேலும், இந்தக் கண்காட்சியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த பின்னர் என்ன துறையைத் தேர்வு செய்யலாம், எந்தத் துறையில் தற்போது வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கலாம்.
 ஆனால், ஒரு மாணவர் 10-ஆம் வகுப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த துறைகளைத்தான் தேர்வு செய்ய முடியும் என அப்போதே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. பெரும்பாலும், 10-ஆம் வகுப்பில் 500-க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் மாணவர்கள் கணிதப் பாடத்துடன் கூடிய முதல் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.
 இவர்கள் 12-ஆம் வகுப்புக்குப் பின்னர் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் தேர்வு செய்து படிக்க முடியும்.
 ஆனால், 450-க்கு குறைவாக மதிப்பெண்கள் எடுத்து 11-ஆம் வகுப்பில் 3-ஆவது, 4-ஆவது பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் மேற்கூறிய துறைகளை தேர்ந்தெடுக்க முடிவதில்லை. ஒரு மாணவர் 10-ஆம் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம், பிற்காலத்தில் அவர் நன்றாகப் படித்து ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ வரமுடியாத சூழலை அவர் 10-ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் நிர்ணயித்துவிடுகிறது.
 தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்படும் தேர்வுகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. எனினும், அனைத்து மாவட்டங்களிலும் அரசுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை வசூலிக்கப்படுகிறது.
 எனவே, ஒரு மாணவர் தனக்கான துறையைத் தீர்மானிக்கும் வகையிலும், வேலைவாய்ப்புகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் அந்த மாணவருக்கு 10-ஆம் வகுப்பு முன்னதாகவே அரசு சார்பில் கல்விக் கண்காட்சிகள் நடத்தப்பட வேண்டும்.
 மாணவர்கள் பள்ளிப் படிப்பையோ அல்லது கல்லூரிப் படிப்பையோ முடித்தவுடன் அவர்கள் அரசு அல்லது தனியார் வேலைகளில் சேருவதற்கு வழிகாட்டும் விதமாகவும், அவர்கள் தனக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும், சுயதொழில் தொடங்கும் வகையிலும் பயிற்சி அளிப்பதை அரசு உறுதி செய்வதுடன், வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
 மேலும், அரசு, தனியார் வேலைவாய்ப்புகளுக்குத் தயாராகும் வகையில் 9-ஆம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரையிலான காலங்களில் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.