
நம் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிக்கும் பிறப்பு என்பது ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று உண்டு. முக்கியமாக ஒரு மனிதன் இறப்புக்குப் பிறகு உள்ள பல்வேறு ரகசியங்கள் கருட புராணத்தில் சொல்லப்படுகிறது. இவற்றில் இறந்தவரின் ஆன்மாவிற்கு ஒரு சில நாள்களுக்கு அடைப்பு என்ற நிகழ்வு உள்ளது. அவற்றை தனிஷ்டா பஞ்சமி என்பார்கள். அவற்றின் விளக்கத்தைப் பார்ப்போம்.
ஒருவர் இறந்த மறுகணமே அவரின் உடலை விட்டு அந்த ஆன்மா, அவரவர் கர்மா மற்றும் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மேலுலகம் சென்று, அதற்கேற்ப ஒரு குறிப்பிட்ட காலத்தில் மறுபிறவி என்ற நிலையை அடைவர். ஒருவர் இறந்த பின் அந்த ஆன்மா மும்மூன்று நாள்கள் நீரிலும், நெருப்பிலும், ஆகாயத்திலும் வசிப்பார்கள் என்று கருட புராணத்தில் கூறப்படுகிறது.
இந்த பூமியில் ஒருவர் பிறந்தபோது அன்றைய நட்சத்திரமும், அதுவே ஒருவர் இறந்தபிறகு அவரின் ஆன்மா விடைபெறும்பொழுது திதியையும் பார்ப்பார்கள். ஆனால் இறப்பவர்களுக்கும் அந்நாளின் நட்சத்திரங்களையும் பார்க்கவேண்டும். அவர் இறந்த அன்றைய நட்சத்திரம் அடைப்பா என்று பார்க்க வேண்டும். முக்கியமாக அடைப்பு நட்சத்திரத்தில் இறந்தால் அவர்களுக்கு சரியான நேரத்தில் மேலுலகம் செல்ல விசா கிடைக்காது. இந்த அடைப்பு பற்றி கிராமப்புறங்களில் மற்றும் நம் மூதாதையர்களுக்கு நன்கு தெரியும். அதற்கு ஏற்ப பல்வேறு பரிகாரங்களையும் சொல்லுவார்கள்.
ஒருவர் சிறுவயதில் அகால மரணம், துர் மரணம் நிகழ்வு மற்றும் ஒருவித நிறைவேறாத ஏக்கம் கொண்டவர்கள் இந்த அடைப்பு நட்சத்திரத்தில் இறப்பார்கள் என்பது முன்னோர்கள் கருத்து. இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இறந்தால் அவர்கள் மேலுலகம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அடைப்பு நட்சத்திரங்கள் தனுஷ்டா பஞ்சமி என்று அழைப்பார். ஒரு உடலற்ற ஆன்மா தன்னுடைய கடைசி கர்ம காரியம் முடிந்த பின்பு அந்த வீட்டிலிருந்து மேலுலகம் செல்ல தயாராகும்.
அடைப்பு நட்சத்திரத்தில் இறந்த நபர் மேலுலகம் செல்லமுடியாமல் கதவு பூட்டப்படும். ஒருசில குறிப்பிட்ட காலத்தில் இறந்த ஆன்மாவானது தங்களுக்கு தேவையான ஒளி, நீர் மற்றும் உணவு இல்லாமல் வக்ர நிலையில் அலைந்து கஷ்டப்படும். அந்த ஆன்மாவின் குடும்பத்தார், அவர்களுக்கு தேவையானவற்றை ஒருசில பரிகாரங்கள் மூலம் உதவ வேண்டும். மொத்தம் 27 நட்சத்திரங்களில் இந்த 13 நட்சத்திரங்கள் அடைப்பு நட்சத்திரங்களாகவும், மற்ற 14 நட்சத்திரங்கள் அடைப்பு இல்லாத நட்சத்திரங்களாகவும் கூறப்படுகிறது. அடைப்பு இல்லா 14 நட்சத்திரங்களில் இறந்தவர்கள் சரியான காலகட்டத்தில் மேலுலகம் செல்ல முடியும்.
அடைப்பு நட்சத்திரங்களில் இறந்த ஆன்மாவானது, ஒருசில குறிப்பிட்ட காலம் மேலுலகம் செல்லாமல் இந்த பூமியில் இருப்பதாக ஐதீகம். அடைப்பு நட்சத்திரங்கள் என்னென்ன மற்றும் குறிப்பிட்ட அடைப்பு மாதங்களைப் பார்ப்போம்.
ஆறு மாத அடைப்பு
மகர ராசியில் உள்ள அவிட்டம் முதல் மீனம் ராசியில் உள்ள ரேவதி வரை உள்ள நட்சத்திரங்கள் அதாவது அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் 6 மாதங்கள் அடைப்பு. ரோகிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமான மேலே சொன்ன 13 அடைப்பு நட்சத்திரங்களில் இறந்த ஆன்மாக்கள் ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவர்கள் வாழ்ந்து அனுபவித்த இடங்களுக்குச் சென்று வருவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கு, அந்த ஆன்மாவிற்குத் தேவையானதை அவரின் குடும்பத்தார் அவர்களின் குலவழக்கப்படி அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் வழிபாடு செய்து வர வேண்டும். இறந்தவர்கள் சொர்க லோகம் போவாரா அல்லது நாகலோகம் போவாரா என்பது தனிப்பட்ட ஒரு தலைப்பு.
பரிகாரம்
இறந்தவர்கள் தங்கள் பூத உடலை விட்டு மேலுலகம் செல்வதற்குத் தடை இருப்பதால், அவர் வாழ்ந்த வசித்த வீட்டைப் பூட்டக்கூடாது. அந்த தனுஷ்டா பஞ்சமி காலகட்டத்தில் விளக்கேற்றி அவர்களுக்காக வழிப்பட வேண்டும். அந்த வீட்டின் ஒரு சிறு மூலையில் நான்கு செங்கற்கள் கொண்ட ஒரு குடில் அமைத்து, அங்கு ஒரு அகன்ற வெண்கல விளக்கு அல்லது அகல் விளக்கு ஏற்றி, ஒரு சொம்பு நிரம்ப நீர் வைத்து, அவருக்குப் பிடித்த உணவைப் படைக்க வேண்டும். அடைப்பு காலம் முடிந்ததும் ஓடும் நீர் அல்லது கடலில் அவர்கள் பயன்படுத்திய பொருள்கள், உடை மற்றும் ஏற்றிய வெண்கல விளக்கு நீரில் விட்டுவிடுவார்கள். இது அடைப்புக்கான பொதுவான பரிகாரம்.
ஒரு சிலர் பரிகாரமாக “ஒரு குறிப்பிட்ட காலம் வரை விளக்கேற்றி நீர் வைத்து வழிபாடு செய்வர் அதனுடன் கூட கர்மா செய்யும் நாள்கள் முடியும் தருணம் வெண்கலக் கிண்ணம் நிறைக்க நல்லெண்ணெய் ஊற்றி தானம் செய்வார்கள்”.அடைப்பு முடிவு பெரும் காலம், அவரவர் குலத்திற்கு ஏற்ப, அந்தணர்களைக் கொண்டு பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது. முறைப்படி பரிகாரங்கள் செய்வதால் நம்முடைய தலைமுறைகள் சுபிக்க்ஷம் பெரும்.
Whatsapp: 8939115647
vaideeshwra2013@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.