மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெற்றோர் போற்றுவோம்

எத்தனையோ உறவுகள் இருந்தாலும் அன்னை என்ற உறவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தன் குழந்தையின் ஒவ்வொரு உணர்வுடனும் ஒன்றி விடுபவள் தாய். தான் பசியுடன் பட்டினி கிடந்தாலும் தன் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது உண

Updated On :22 ஆகஸ்ட் 2016, 7:59 pm

எத்தனையோ உறவுகள் இருந்தாலும் அன்னை என்ற உறவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தன் குழந்தையின் ஒவ்வொரு உணர்வுடனும் ஒன்றி விடுபவள் தாய். தான் பசியுடன் பட்டினி கிடந்தாலும் தன் குழந்தைகளுக்கு எப்பாடுபட்டாவது உணவளித்து உவகை கொள்வாள்.
எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அத்தனை குழந்தைகளிடம் அன்பு காட்டி அரவணைத்துக் காக்கும் அன்னைக்கு நிகர் உலகில் யார் உளர்?
மராட்டிய வீரசிவாஜி தன் இளம் வயதில் தன் தாயின் அரவணைப்பில் அவ்வப்போது தன் தாய் சொல்லும் வீரம் செறிந்த பக்திக் கதைகளைக் கேட்டதனால், பின்னாளில் சிறந்த தெய்வபக்தியும், வீரமும் நிறைந்த மாவீரனாகத் திகழ்ந்தார்.
நரேந்திரனின் தாய் புவனேஸ்வரி அம்மையார், சேட்டைகள் புரியும் சிறுவன் நரேந்திரனிடம் அன்பு காட்டி புராண, இதிகாசங்களையும், நீதிக்கதைகளையும் அவ்வப்போது சொன்னதனால், சிறுவர் நரேந்திரன் பின்னாளில் உலகம் போற்றும் உன்னதத் துறவி விவேகானந்தராக ஆனார். மகாத்மா காந்தியை உருவாக்கியதில் அவர் தாயார் புத்திலிபாய்க்கு பெரும் பங்குண்டு.
மக்களிடம் தாயன்பும், கருணையும் காட்டியதாலேயே ராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியாரை அன்னை சாரதா தேவி என்றும், பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து மகான் அரவிந்தருக்குச் சீடராகத் திகழ்ந்த மிர்ரா அம்மையாரை அன்னை என்றும் மக்கள் அன்போடு அழைக்கின்றனர்.
இளம்பெண் துறவியாக அல்பேனியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து கொல்கத்தாவில் ஒரு சேரிப்பகுதியில் தனது சேவையைச் சிறிய அளவில் தொடங்கி அதனை உலகளாவிய சேவை இயக்கமாகப் பரிணமிக்கச் செய்த அன்பும், கருணையும் நிறைந்த தெரசாவை உலகமே "அன்னை தெரசா' என அன்புடன் அழைக்கிறது.
ஓர் ஏழைத்தாயின் தன்னம்பிக்கையாலும், அவர்தம் குழந்தைக்கு ஏற்படுத்திய நம்பிக்கையாலும் உலக ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் அதிசயமே நிகழ்ந்தது, அமெரிக்காவின் கறுப்பின ஏழைப் பெண்மணி ருடால்ஃப் என்பவருக்கு இருபதாவதாகப் பிறந்த குழந்தை "வில்மா' பிறக்கும் போதே போலியோ, நிமோனியா, எனப் பல பிரச்னைகள் டாக்டர்கள் உங்கள் மகள் உயிர்பிழைக்க வாய்ப்புகள் குறைவு, உயிர்பிழைத்தாலும் நிச்சயமாக நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிடுகின்றனர்.
தாய் ருடால்ஃப் மனந்தளராமல் குழந்தைக்கு சிகிச்சைகள் செய்து தினமும் கால்களை மசாஜ் செய்து விட்டு உலோகப்பட்டைகளை கால்களில் பொருத்தி நடக்க வைத்துப் பள்ளியில் சேர்த்து விடுகிறாள். ஆர்வமிக்க அக்குழந்தை உலோகப்பட்டைகளின்றி நடக்கப் பழகி பள்ளியில் நடைபெற்ற ஓட்டப் போட்டிகளிலும் பங்கு கொண்டு தோற்றுப் போனதால் பலரின் ஏளனத்துக்குள்ளாகிறாள்.
மீண்டும் மீண்டும் போட்டியிட்டு வெற்றிகள் பெறத் தொடங்கி தேசிய சாதனை நிகழ்த்தும் அளவுக்கும், பின்னர் 1960-இல் தனது 20-ஆவது வயதில் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று மூன்று ஓட்டப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வில்மாவை உலகமே வியந்து பாராட்டியது.
பத்திரிகையாளர்களிடம் தன் வெற்றியைப் பற்றி வில்மா இவ்வாறு கூறுகிறார். "இனிமேல் இவனால் நடக்கவே முடியாது' என டாக்டர்கள் என் அன்னையிடம் கூறினர். "உன்னால் நடக்க முடியும்' என என் அன்னை என்னிடம் கூறினார். நான் என் அன்னை கூறியதை நம்பினேன்' என்று உருக்கமாகக் கூறினார்.
இதுபோல மற்றொரு சம்பவம். கற்றல் குறைபாடு உள்ள மாணவன் இவன். இவனால் எதிலுமே கவனத்தைச் செலுத்த முடியாது என்று வகுப்பு ஆசிரியரால் சொல்லப்பட்ட மைக்கேல் ஃபெல்ப்ஸ் என்ற மாணவன் தன் தாய் தெபோராவின் அரவணைப்பில் அதற்கான மருந்துகளை உட்கொண்டு வளர்ந்தான்.
ஓர் இடத்தில் நில்லாமல் துருதுருவென்று இருந்த அவனிடம் உள்ள அதீத ஆற்றலைக் கண்ட தெபோரா அவனுக்கு நீச்சலில் இருந்த ஆர்வத்தைப் பார்த்து அதில் அதிக நேரம் செலவிட வைத்தார்.
நீச்சலில் சாதனைகள் புரியத் தொடங்கிய ஃபெல்ப்ஸ் 2004 முதல் 2016 முடிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றிபெற்று 23 தங்கப் பதக்கங்களை வென்று உலக ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் போட்டியில் அதிகத் தங்கம் வென்றவர் என்ற மகத்தான உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு உந்து சக்தியாக இருந்தவர் அவர் தாயார் தெபோரா.
அன்னை என்பவள் தான் கர்ப்பம் தரித்த நாள் முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்றுப் பாலூட்டி வளர்த்து ஆளாக்கித் தக்க துணையைத் தேடித் திருமணம் செய்வித்து அவர்களுக்குப் பிறக்கும் பேரக்குழந்தைகளையும் கவனித்துப் பராமரித்து வயது முதிர்ந்த நிலையிலும் தன்னால் இயன்ற அளவுக்குப் பிள்ளைகளுக்குப் பணிவிடைகள் பல செய்கின்றார்.
தந்தை என்பவர் உழைத்துச் சம்பாதித்து குழந்தைகளை நெறிப்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்குப் பக்கபலமாக இருப்பவர். இவர்களது முதுமை காலத்தில் இவர்களை கவனித்துக் கொள்ளாத பிள்ளைகள் எவ்வளவு படித்திருந்தாலும், வசதிபடைத்தவர்களாகப் பகட்டு வாழ்க்கை வாழ்ந்தாலும் அதனால் அவர்களுக்குப் பெருமையில்லை, செய்ந்நன்றி மறந்த பிள்ளைகளுக்கு உய்வே இல்லை.
முற்றும் துறந்த ஆதிசங்கரரும், விவேகானந்தரும், ரமணரும் தத்தம் தாயின் மேல் அன்பும், கருணையும் காட்டியவர்கள்தாம்.
பிள்ளைகள் தம்மை உருவாக்கிய தாய், தந்தையரை அவர்களது இறுதிக்காலம் வரை அன்பு காட்டிப் பராமரித்தலே பெரும் புண்ணியமாகும்.
முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோரைச் சேர்த்துவிடுவது, அல்லது அவர்கள் தானாகவே முதியோர் இல்லங்களைத் தேடிச் செல்லும் நிலையை ஏற்படுத்திவிடுவது கொடிதினும் கொடிது. "தந்தை தாய் பேண்' என்ற அவ்வையின் வாக்கு சிந்திப்பதற்கு மட்டுமல்ல, செயல்படுத்துவதற்கும்தான்.

இரா. இராஜாராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.