எந்த மனு வேந்தன் வருவான்?
வேலை நிறுத்தம் என்பது, ஆம்புலன்ஸ் வேன் கொடுத்துக்கொண்டே போகும்


வேலை நிறுத்தம் என்பது, ஆம்புலன்ஸ் வேன் கொடுத்துக்கொண்டே போகும் சைரன் ஒலி போன்றதாகும். மற்ற வாகனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், எச்சரிப்பதற்குமே அந்த சைரன். வேலை நிறுத்தங்களும் அப்படித்தான் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும், கோரிக்கைகள் நிறைவேறலுக்குமே ஆகும்.
ஆனால், இன்று, ஆக்கப்பட்ட பொருள்களை அழிப்பதற்கும், உயிரினங்களைக் கொல்வதற்கும் வேலை நிறுத்தங்கள் வழி வகுத்துவிட்டன. ஆறு மாதங்களுக்கு முன்பு தர்மபுரியிலுள்ள தக்காளி சாகுபடிக்காரர்கள், செலவினத்திற்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை என்பதற்காகத் தக்காளிகளைக் கூடை கூடையாகக் கொண்டு வந்து பெருவழிச்சாலையில் கொட்டி அழித்தனர்.
ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அழித்துக் கொட்டிய தக்காளிகளைத் திரும்பக் கொண்டுவர முடியுமா? அந்தத் தக்காளிகள் லாரிகளின் சக்கரங்களிலும், வாகனங்களின் சக்கரங்களிலும் நசுக்கப்பட்டதைக் கண்ட தக்காளிச் செடிகள், கண்ணீர்விட்டு அழுதிருக்காதா?
அண்மையில் நெற்களஞ்சிய பூமியிலே பால் உற்பத்தியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் சரியான விலை தரவில்லை என்பதற்காகத் தாங்கள் கறந்த பாலை எல்லாம், குடம் குடமாகக் கொண்டு வந்து சாலைகளிலும், வயல்களிலும் கொட்டித் தீர்த்தனர்.
மனிதக் குழந்தையைப் பெற்ற தாயைக் காட்டிலும், கன்றுகளைப் பெற்ற தாய்ப்பசு பத்து மடங்கு உயர்ந்தது என்பார் ஆதிசங்கரர். காரணம், மனிதத்தாய், தான் பெற்ற குழந்தைக்கு மட்டுந்தான் பாலூட்டுகிறாள். ஆனால், கன்றின் தாய், தான் பெற்ற கன்றுக்கு ஒரு காம்பால் பாலூட்டிவிட்டு, மற்ற மூன்று காம்புகளால் ஊர்க் குழந்தைகளுக்கு ஊட்டுகின்றதாம்.
ஆதிசங்கரரின் அற்புத வாக்கைப் படித்திராவிட்டாலும், கொட்டப்படுகின்ற பாலைப் பார்த்து கறந்து கொடுத்த பசுக்கள் ஆவென்று கதறியிருக்குமே!
வேலை நிறுத்தங்கள் எந்த நோக்கத்திற்காகத் தோன்றினவோ, அந்த நோக்கத்தை அடியோடு மறந்துவிட்டனர். மனித வளத்தைச் சேதப்படுத்தாமல், காலத்தை வீணடிக்காமல் வேலை நிறுத்தம் செய்கின்ற நாகரிகமான இனங்கள் இருந்திருக்கின்றன, இருந்து வருகின்றன.
மகாத்மா காந்தியடிகள்கூட வேலை நிறுத்தம் எனும் சொல்லையே உச்சரிக்காமல், ஒத்துழையாமை இயக்கம் என்றுதான் பெயரிட்டார்.
கி.மு. 495-இல் ரோம் நாட்டில் நிகழ்ந்த முதல் வேலை நிறுத்தமே, கண்ணியமாகத்தான் நடந்திருக்கிறது. ரோமப் பேரரசில் பெரும்பான்மையானவர்கள் பிலிபியன்ஸ் இனத்தார். அங்கு அதிகாரத்தில் இருந்த பேட்ரீசியன்ஸ் சிறுபான்மையினர். அப்படியிருந்தும், பிலிப்பியன்ஸýக்குச் செனட்டில் எந்த அதிகாரமும், சலுகைகளும் தராமல், பேட்ரீசியன்ஸ் அவமதித்து வந்தனர்.
ஆனால், ரோம் நாட்டில் முழுமையான வர்த்தகமே, பிலிப்பியன்ஸ் கையில்தான் இருந்தது. அதனால், உரியவர்களுக்கு உரிய முறையில் உணர்த்த வேண்டும் என்பதற்காகப் பிலிப்பியன்ஸ் தங்கள் கடைகளை எல்லாம் அடைத்துவிட்டு, ஒட்டுமொத்தமாக ரோம் நகரைவிட்டு, மான்சேன் எனும் புனிதமலைக்கு இடம் பெயர்ந்தனர்.
சில நாட்கள் உள் நாட்டிற்குள் எல்லாக் கடைகளும் அடைத்துக் கிடக்கவே, உணவுப்பொருட்கள் இல்லாமல் பசியால் தவித்த பேட்ரீயன்ஸ், பிலிப்பியன்ஸ்களுக்கு உரிய சலுகைகளை வழங்கி, வருந்தி, மீண்டும் உள்நாட்டிற்கு அழைத்து வந்தனர் (ஆதாரம்: எச்.ஜி.வெல்ஸ் - அவுட் லைன் ஆப் வேல்ட் ஹிஸ்டரி).
இத்தகைய உத்தியால், காலத்திற்கும் கச்சாப் பொருட்களுக்கும் எந்தவிதக் குந்தகமும் ஏற்படவில்லை. இந்த நாகரிகம் பாலைக் கொட்டுபவர்களுக்கும், தக்காளியைச் சேதப்படுத்துபவர்களுக்கும் இல்லாமல் போனதேன்.
நாம் வாழும் காலத்தில் ஜப்பானில் ஓர் உன்னதமான வேலை நிறுத்தம் நிகழ்ந்தது. உலகமே கேட்டு வியந்த ஒரு நிகழ்ச்சி அது. காலணிகள் (நட்ர்ங்ள்) தயாரிக்கும் தொழிற்சாலையில், நிர்வாகத்திடம் சில கோரிக்கைகளை வைத்து, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது கொஞ்சம் வித்தியாசமான வேலை நிறுத்தம். வழக்கம்போல் காலணிகள் (புதைச் செருப்பு) தயாரிக்கும் தொழிலாளர்கள், இரண்டு கால்களுக்குமுரிய காலணிகளைத் தயாரிக்காமல், வலதுகாலுக்குரிய ஷூக்களாகவே பத்து நாட்கள் தைத்துப் போட்டனர்.
பத்து நாட்கள் வர்த்தகம் நடக்காததால், நிர்வாகம் உரியவற்றை வழங்கிய பின், தொழிலாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கி, இடதுகாலுக்குரிய ஷூக்களாகவே தைத்துப் போட்டனர்.
ஜப்பானியத் தொழிலாளர்கள் தொழிற்சாலைக் கட்டடத்தை உடைக்கவில்லை. பிழைப்பைத் தந்த இயந்திரங்களை உடைத்துப் போடவில்லை; தைத்துப் போட்ட ஷூக்களைத் தெருவிலே கொண்டுவந்து போட்டு எரிக்கவில்லை.
இப்போராட்டத்தால், கச்சாப் பொருட்களுக்கு சேதமில்லை. தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ததால், மனித வளம் பாதிக்கப்படவில்லை. காலமும் சேமிக்கப்பட்டது. குறித்த காலத்திற்குள் நிர்வாகத்திற்கு வருமானம் வராமல் செய்து, பின் தங்கள் கோரிக்கைகளில் வெற்றி பெற்றனர். இந்தக் கண்ணியமான வேலை நிறுத்தத்தை உலகமே பார்த்து வியந்தது.
கனடாவில் குளோப் பத்திரிகை, மெயில் பத்திரிகை ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் வேலை நிறுத்தங்கள் நடந்தன. அப்பொழுது பத்தி எழுத்தாளர்கள் தங்கள் கருத்துருவங்களை மேற்சொன்ன பத்திரிகைகளில் வெளியிட்டுவிட்டு, தங்கள் பெயர்களை மட்டும் அச்சிடக்கூடாது என்று கூறிவிட்டனர்.
இதன் மூலம் வேலை நிறுத்தத்திலும் அவர்கள் பங்கு பெற்றதாயிற்று பத்திரிகை வெளியீடுகளும் தங்குதடையில்லாமல் நடந்தது போலாயிற்று. இந்த நாகரிகப் போக்கு பாலைக் கொட்டுபவர்களுக்கும், பசுவைக் கொல்லுபவர்களுக்கும் என்றைக்கு வரப்போகிறதோ.
இருபதாண்டுகளுக்கு முன்னர் நாகை மாவட்டம், மஞ்சக்கொல்லை சம்பந்தமூர்த்தி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் மு. கணபதி எனும் தமிழாசிரியர் ஒருவர் வேலை பார்த்தார். அப்பழுக்கற்ற காந்தியவாதி. கதராடைகளைத் தவிர வேறு ஆடைகளை அணியமாட்டார்.
அவரும் அடிக்கடி உண்ணாவிரதம் இருப்பார். மாணவர்களுக்கு முதல்நாள் கற்பித்த தேவார - திருவாசகத்தை, மறுநாள் எல்லா மாணாக்கர்களும் அவரிடம் ஒப்பித்தாக வேண்டும். எந்த மாணவராவது மனப்பாடம் செய்துகொண்டு வராவிட்டால், தான் கொண்டுவந்த மதிய உணவை உண்ணாமல், அந்த நேரத்திலும் நாற்காலியிலேயே உட்கார்ந்து மெüனவிரதம் இருப்பார்.
மணியடித்துப் பிற்பகல் வகுப்புத் தொடங்கும்போது, அடுத்த வகுப்பிற்குச் சென்றுவிடுவார். அப்படிப்பட்ட ஆசிரியரைப் பட்டினிப் போடக்கூடாது என்று, எந்த மாணவரும் மனப்பாடம் செய்யாமல், வகுப்புக்கு வரமாட்டார்கள்.
மற்றவர்களை வருத்தாமல், தம்மை மட்டும் வருத்திக்கொண்டு, மாணாக்கர்களையும் சரியாக வழிநடத்திய அந்த மாமனிதரின் உண்ணாவிரதம் கெüரவத்திற்குரியதல்லவா?
வேலை நிறுத்தம் எனும் பெயரில் ஜெய்ப்பூர் கோசாலையில் நிகழ்ந்த 500 பசுக்களின் சாவு, ஈரமுள்ள இதயங்களை எல்லாம் இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருக்கிறது. ஜெய்ப்பூர் மாநகராட்சிக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை ஒரு மாத காலத்திற்கு ஒரு வேலை நிறுத்தம் ஏற்பட்டுப், பட்டினியால் இரண்டு வாரக் காலத்திற்குள் 500 பசுக்கள் செத்திருக்கின்றன.
ஹிங்கோனியா எனும் இடத்தில் மாநகராட்சி நடத்திவரும் பசுக்கள் காப்பகத்தில் 8,000 பசுக்கள் இருக்கின்றன. இக்காப்பகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு மாநகராட்சி கடந்த மூன்று மாதங்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை.
அதனால், பசுக்களுக்குப் பணியாளர்கள் புல், வைக்கோல், தீவனம் வைப்பது போன்ற பணிகளில் ஈடபடவில்லை. சாணங்கள் அள்ளுவது போன்ற பராமரிப்புப் பணிகளிலும் ஈடுபடவில்லை. அதனால், நோயினாலும் பசுக்கள் செத்திருக்கின்றன் பசியாலும் செத்திருக்கின்றன.
ஆனால், அரசு கால்நடை மருத்துவர் பசுக்கள் யாவும் நோய் வாய்ப்பட்டுச் சாகவில்லை பட்டினியால் மட்டுமே செத்திருப்பதாகச் சான்றிதழ் அளித்திருக்கிறார்.
பணியாளர்களை அரசும் மாநகராட்சியும் பட்டினிப் போட்டதால், பணியாளர்கள் பசுக்களைப் பட்டினிப் போட்டிருக்கிறார்கள். ஆக இருதரப்பினரும் சேர்ந்தே ஐந்நூறு பசுக்களை வதைத்திருக்கின்றனர். பணியாளர்கள் தங்கள் போராட்டத்திற்கு வேறு வகையான உத்திகளைக் கையாண்டிருந்தால், நம் உயிரைக் காக்கும் 500 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
சாதுவான பசுக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுவிட்டனவே! ஆங்கிலேயர்கள் ஒரு நாயைக் கொல்வது என்றால் கூடச் சட்டப்படிதான் கொல்வோம் எனச் சொல்லுவார்களே. இங்கு சட்டமே இல்லாமல் 500 கோமாதாக்கள் கொல்லப்பட்டுவிட்டனவே.
புண்ணியம் செய்ய விரும்புபவர்கள் கோயில் கட்ட வேண்டாம். குளம் வெட்ட வேண்டாம். ஒரு பசுமாட்டிற்கு வாய் நிறைய புல்லைக் கொடுத்தால் போதும் எனத் திருமூலர் பாடினாரே, அந்தப் பசுக்களுக்கு நேர்ந்த கதி இதுதானா?
பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா எனப்
பாரதி, பாப்பாக்களுக்குக்கூடப் பாடி வைத்தாரே, அந்தப் பசுக்களை இன்று ஜே.சி.பி.க்கள் அல்லவா அள்ளிக் கொண்டு போகின்றன.
அன்றைக்கு ஆரூரிலே ஒரு பசுங்கன்று தேர்க்காலில் பட்டு இறந்தமைக்காகத் தம் மைந்தனையே தேர்க்காலில் வைத்து அறைந்து நீதியை நிலைநாட்டினானே மனுவேந்தன், இன்று 500 பசுக்களுக்கு எந்த மனுவேந்தன் வரப்போகிறார்?
கட்டுரையாளர்: பேராசிரியர் (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...