சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மழை பொழிய வேண்டுவோம்

தமிழகத்தில் நிகழாண்டில் தெற்மேற்குப் பருவழை பொய்த்தபோது, வடகிழக்குப் பருவமழை கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2016, 7:49 pm

கே.கே.மணிகண்டன்

தமிழகத்தில் நிகழாண்டில் தெற்மேற்குப் பருவழை பொய்த்தபோது, வடகிழக்குப் பருவமழை கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதுவும் பொய்த்துவிட்டதால், தமிழகத்தின் பெரும் பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.
இந்தியா 1,850 கன கி.மீ. அளவுக்குத் தண்ணீர்வளம் கொண்ட நாடு. உலக இருப்பில் 4 சதவீதம் நன்னீர் இந்தியாவில் உள்ளது. வட இந்தியாவில் மிகப் பெரிய ஆறுகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் நடுத்தரமான ஆறு காவிரி மட்டுமே. தமிழகத்தில் ஓடும் பிற ஆறுகள் அனைத்தும் சிற்றாறுகளே.
தமிழகத்தில் 34 நதிகள், 17 பெரிய நதிகள், 17 துணை நதிகள் உள்ளன. தமிழகத்தில் ஜீவ நதி ஏதுமில்லை. தமிழகம் மழை மறைவுப் பிரதேசமாக இயற்கையால் ஆக்கப்பட்டுள்ளது.
ஜீவநிதிகள் இல்லாவிட்டாலும் கூட, மாதம் மும்மாரி பெய்த தமிழகத்தில் விளைத்த நெற்பயிர்களை மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்ததாக வரலாறு உண்டு.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கிடைக்கும் தென்மேற்குப் பருவமழை சராசரி அளவு 322 மி.மீ.; வடகிழக்குப் பருவமழை சராசரி அளவு 470 மி.மீ. இரு பருவங்களில் கிடைக்கும் மொத்த மழையளவு என்பது தேசிய சராசரி மழை அளவைக் காட்டிலும் குறைவுதான்.
தமிழகத்தின் மொத்தத் தண்ணீர்த் தேவை 1,921 டி.எம்.சி. கிடைப்பதோ 1,643 டி.எம்.சி. (2001 கணக்கின்படி) இதுவும் ஆண்டுதோறும் ஒரே அளவில் கிடைப்பதில்லை. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் மழை குறைந்துகொண்டே வருகிறது.
ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும்போது, குழந்தைகள் கனமழையில் குடை பிடித்துச் சென்ற நாள்களெல்லாம் மறைந்து போய்விட்டன.
தமிழகத்தில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைகளைத் தவிர, கடந்த 40 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஒரே அணை ஒரத்துப்பாளையம் அணைதான். அதுவும், திருப்பூர் சாயப்பட்டறைகளின் சாயக் கழிவுநீரைத் தேக்கி வைப்பதாக இப்போது மாறிவிட்டது.
காமராஜர் ஆட்சிகாலத்தில் கொங்கு மண்டலம் வளம் பெற பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் (பி.ஏ.பி.) நிறைவேற்றப்பட்டது. மேற்கு நோக்கிப் பாயும் 6 ஆறுகளை கிழக்கே திருப்பி அணை
கள் கட்டப்பட்டு, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டன. அதன்மூலமாக பல்லாயிரம் ஏக்கர் விளைநிலம் பயன்பெற்று வருகிறது.
ஆனால், கொங்கு மண்டலத்தில் வளம் கொழிக்கும் விவசாயிகள், தற்போது மழை இல்லையே என கவலையுறுகின்றனர்.
மக்கள் மன நிலையிலும், செயல்களிலும் மாற்றம் ஏற்படும்போது இயற்கையின் போக்கும் மாறுதலுக்கு உள்ளாகிறது. நிகழாண்டில் பருவமழை பொய்த்து, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள், அரசியல் கட்சிகள் மத்தியில் வலுத்து வருகிறது.
விவசாயிகள் வறட்சி நிவாரணம் கோருவது தவறில்லை. பயிர்கள் பாதிப்புக்கு அரசு நிவாரணம் கொடுத்தால் போதுமா? குடிநீர் கோரும் மக்களுக்கு நிவாரணமாக அரசு பணத்தையா கொடுக்க முடியும்?
நிவாரணங்கள் கோருவது ஒருபுறம் இருந்தாலும், பேரிடர்க் காலங்களிலும், மனித ஆற்றல் பயனற்றுப் போகும் சமயங்களிலும் இயற்கையையும், இறைவனையும் கைகூப்புவது மனிதனுக்கு கட்டாயமாகி விடுறது.
வனப் பகுதிகள்கூட கடும் வறட்சியில் சிக்கி வன விலங்குகள் உணவுக்கும், தண்ணீருக்கும் தற்போது அல்லல்படுகின்றன. தமிழகம், ஆறு, குளம், ஏரி நீரையும், நிலத்தடி நீரையும் மட்டுமே நம்பி உள்ளது. வரும் வாரத்தில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை இல்லாத காலங்களில், கிராமங்களில் மக்கள் கோயில்களை நாடிச் சென்று கூட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். இப்போது மக்கள் அதை மறந்துவிடக் கூடாது.
மழை வேண்டி இறைவனையும், வருண பகவானையும் மக்கள் வழிபடுவது என்பது காலம்தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. திருப்பாவையின் 3-ஆவது பாசுரத்தில் ஆண்டாள், "தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய' எனப் பாடியுள்ளார்.
"ஆழி மழைக்கண்ணா' என்ற அடுத்த பாசுரத்தில், மேகத்துக்கு அதிபதியே! உன்னிடம் ஒரு சொட்டு நீரைக்கூட வைத்துக்கொள்ளாதே.
கடல் நீர் முழுவதையும் முகந்துகொண்டு மேலே சென்று, கண்ணன் மேனியைப் போலக் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல மின்னி, வலிமையான சங்கொலி போல இடியோசை எழுப்பி, சார்ங்கம் எனும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல மழையைப் பொழிவாயாக. அம்மழையில் நாங்கள் இன்புற வாழ்வோம்.
எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்விப்பாயாக' என்று ஆண்டாள் வேண்டுகிறார்.
மழை வேண்டி தற்போது பல்வேறு கோயில்களில் வருண ஜபம், யாகங்கள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஒவ்வொருவரும் மழை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
பள்ளிகளில் தினசரி பிரார்த்தனையின்போது மழை வேண்டி மாணவர்களும், வர்த்தக நிறுவனங்களில் வியாபாரிகளும் மழை பொழிய வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்.
"கூட்டுப் பிரார்த்தனை சக்தி வாய்ந்தது' என்பார் மகாத்மா காந்தி. நம் அனைவரது உள்ளமும் ஒன்றாகி பிரார்த்திக்கும்போது அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.