ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆகம சாஸ்திரப்படி திட்டமிட்டுக் கட்டப்பட்ட மிகப்பெரிய கோயில்கள் பல நம் நாட்டில் அமைந்துள்ளன. உயிரோட்டமான சிற்பங்களும், உயர்ந்த ராஜகோபுரங்களும் அமைந்த எண்ணற்ற கோயில்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
கோயில்களில் தல விருட்சமும், நந்தவனமும், படித்துறையுடன் கூடிய பெரிய தெப்பக்குளங்களும் கோயில் வளாகத்திற்கு அணிசெய்வதோடு மழைநீரைச் சேமிப்பதற்கும், அதனைப் பயன்படுத்துவதற்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய நிலையில் நந்தவனம் இருந்த பகுதிகள் கட்டடங்களாகவும், தெப்பக்குளத்திற்கு மழைநீர் வரும் வழிகள் அடைபட்டு ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு மழைநீர் வருவது முற்றிலுமாக நின்றுவிட்ட நிலையில் தெப்பங்கள் வறண்டுபோன நிலையில் காட்சியளிக்கின்றன.
பல தெப்பக்குளங்கள் குப்பைகள் போட்டு நிரப்பப்படுகின்றன. இந்த அவல நிலை நீக்கப்பட வேண்டும். பெரிய தெப்பக்குளங்களில் மழைநீர் வந்து நிறைந்திட்டால் அந்தப் பகுதி முழுவதுமே நிலத்தடிநீர் வளம் பெருகும்.
நாட்டின் பல பகுதிகளிலும் புதிது புதிதாகப் பல கோயில்கள் கட்டப்படுவதைவிட இருக்கும் எண்ணற்ற கோயில்களையும், நந்தவனங்களையும், தெப்பக்குளங்களையும் பராமரித்தலே மிகச்சிறந்த புனிதமான பணியாகும்.
ஆடம்பர வாழ்க்கையிலும், பலவிதமான கேளிக்கைகளிலும் கிடைக்காத ஓர் அமைதி கோயில்களுக்குச் சென்றால் கிடைக்கும் என எதிர்பார்த்தே மக்களில் பலர் அங்குச் செல்கின்றனர். எங்கும் நிறைந்த இறை சக்தியை கோயில்களில் உணர்வது எளிது என நினைத்தே பாமரர் முதல் பணக்காரர் வரை பலரும் அவ்வப்போது கோயிலுக்குச்சென்று வழிபாடு செய்துவிட்டு வருகின்றனர்.
அமைதியை விரும்பிக் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு மனநிறைவைத் தரும் வகையில் கோயில்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
கோயிலும், அதனைச் சுற்றியுள்ள வளாகமும் மிகத்தூய்மையாகப் பராமரிக்கப்பட வேண்டியது கோயில் நிர்வாகத்தின் முதற்கடமையும், கட்டாயமும் ஆகும். கோயிலுக்குச் செல்வோரும் கோயில் வளாகத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதே தாங்கள் செய்யும் முதல் இறைப்பணியாகக் கருத வேண்டும்.
கோயிலில் வழிபாடு செய்ய வரிசையில் நிற்கும்போது முறையாக யாருக்கும் எந்தச் சிறு இடையூறுமின்றி அமைதியாகச் சென்று தரிசனம் செய்து விட்டு வருவதே சிறந்த நெறிமுறை என்பதை பக்தர்கள் உணரவேண்டும். கோயில்களில் ஏழை - பணக்காரன், படித்தவன் - படிக்காதவன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற எந்தப்பாகுபாடுமின்றி அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டிய இடமாகும்.
இதில் கட்டண தரிசனம், உயர்கட்டண தரிசனம் என்பதெல்லாம் முற்றிலும் நீக்கப்பட்டு அனைவருக்கும் பொதுவான தர்ம தரிசனம் என்பது மட்டுமே இருக்க வேண்டும். மேலும் முக்கியஸ்தர்களுக்குப் பூரண கும்பமரியாதை என்பதும், அவர்களுக்காகச் சிறப்பு வழிபாடு என்பதும் தவிர்க்கப்பட்டு இறைவழிபாட்டில் அனைவரும் சமம் என்ற முறையே இறையுணர்வை மேலோங்கச் செய்திடும்.
பெரிய கோயில்களில் பல மணிநேரம் நீண்டவரிசையில் காத்திருந்து களைப்புற்றுச் சிறு குழந்தைகளை வைத்திருப்போர், முதியவர், உடல் நலக்குறைவுள்ளோர் எனப்பலரும் சிரமங்களுக்கு உட்படுவதைக் காண முடிகிறது.
இதனைத் தவிர்க்க வரிசை எண்கள் குறிப்பிட்ட அடையாள வில்லையை (டோக்கன்) வழங்கி இந்த எண்ணிலிருந்து இந்த எண்வரை இந்த நேரத்துக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்று அறிவித்து விட்டால் அதற்கேற்றவாறு குறிப்பிட்ட நேரத்தில் சென்று நில நிமிடங்களில் சிரமமின்றி வழிபாடு செய்து மனநிறைவுடன் திரும்ப முடியும்.
கோயில் வளாகங்களில் மிக அவசியமான தேவைகள் எனக் கருதப்படும் நல்ல குடிதண்ணீர் இலவசமாகவும், தரமான தூய்மையான உணவுப் பொருட்கள் உரியவிலையிலும் மக்களுக்குத் தாராளமாகக் கிடைத்திட கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் இலவசமாயினும், கட்டணமாயினும் மிகுந்த தரமுடையதாகக் கிடைக்கச்செய்தல் வேண்டும். கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களை அடையாளம் தெரிந்து கொள்ள பக்தர்களுக்கு ஏதுவாக இருக்கும்.
எக்காரணம் கொண்டும் அங்குப் பணிபுரிவோர் தங்களுக்கு வேண்டியவர்களை அல்லது பணம் பெற்றுக்கொண்டு தனித்து அழைத்துக்கொண்டு வழிபாட்டுக்கு முன்னதாகச் செல்வது என்பது தவிர்க்கப்பட வேண்டும்.
கோயில் வளாகங்கள் மிகப் புனிதமானவை என்பதை அங்கு வரும் பக்தர்கள் நன்குணர்ந்து புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும், அரட்டை அடிப்பதையும், செல்லிடப்பேசியில் எந்த நேரமும் பேசிக்கொண்டிருப்பதைத் தவிர்த்து இறையுணர்வு பெறவே அங்கு வந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.
எந்த நிலையிலும் மனத்தாலும், செயலாலும் பிறருக்குச் சிறு தீங்கும் நேராவண்ணம் கோயில்களில் நடந்து கொள்வதே சீரிய பக்தி நெறியாகும்.
கோயிலுக்கு வரும் காணிக்கைகள், மற்றைய வருமானங்கள் கோயில் பராமரிப்புக்கும், பக்தர்களின் வசதிக்கும் முறையாகச் செலவிடப்படுவதற்கும், அதனைக் கண்காணிப்பதற்குமே அறநிலையத்துறை செயல்படுகிறது.
கோயில் நிலம், இடம், கடை போன்றவற்றை அனுபவிப்போர் அதற்குரிய குத்தகை மற்றும் வாடகையைத் தவறாமல் வழங்குவதாலும், கோயில் நிர்வாகம் சீரியமுறையில் நடைபெறுவதாலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொறுப்புடனும், சுயகட்டப்பாடுடனும் நடந்து கொள்வதாலுமே வழிபாட்டுத்தலங்கள் மேம்பாடு அடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

