

கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை அவ்வப்போது சிலர் சட்ட விரோதமாகக் கொட்டிச் செல்கின்றனர். இது பற்றி அந்தப் பகுதி பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 23 அன்று எட்டிமடையில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றி வந்த 23 வாகனங்களை அந்தப் பகுதி மக்கள் சிறை பிடித்தனர்.
இது குறித்து போலீஸôர் வழக்குப் பதிவு செய்து 23 வாகனங்களையும் கழிவுகளுடன் பறிமுதல் செய்தனர். இதுபற்றி நிலத்தின் உரிமையாளர், கழிவுகளைக் கொட்டி தரம் பிரிக்கும் தொழிலில் ஈடுபட்ட நான்கு பேர் மற்றும் 23 ஓட்டுநர்கள் உள்பட 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் 24 பேரைக் கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மூன்று பேரைத் தேடி வருகின்றனர். இந்த வழக்கு கோவை ஜெ.எம்.7 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கழிவுகளுடன் பிடிபட்ட வாகனங்களில் 17 வாகனங்களைத் திருப்பியனுப்ப நீதிமன்றம் டிசம்பர் 8 அன்று உத்தரவிட்டது.
அதன் பேரில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த 17 வாகனங்கள் கேரளத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அவையும் நீதிமன்ற உத்தரவுப்படி கேரளத்துக்குத் திருப்பியனுப்பப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கேரளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 40 லோடு மருத்துவக் கழிவுகள் கோவை எட்டிமடையில் சட்ட விரோதமாகக் குவித்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகச் சோதனைச் சாவடிகளைக் கடந்து கேரளத்திலிருந்து இந்தக் கழிவுகள் எடுத்து வரப்பட்டுள்ளன.
எட்டிமடையைச் சேர்ந்த விவசாயியின் நிலத்தில் பிளாஸ்டிக் தரம்பிரிக்கும் நிறுவனம் அமைக்கப் போவதாகக் கூறி பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவர் வாடகைக்கு இடம் பிடித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் கேரளத்திலிருந்து மூட்டை மூட்டையாக லாரிகளில் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால் அங்குள்ள மக்களுக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 24 அன்று அதிகாலை ஒரே சமயத்தில் 24 லாரிகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு அங்கு வந்துள்ளன. இதையறிந்த மக்கள் லாரிகளில் ஏற்றிவரும் பொருள்களை அறிய திரண்டுள்ளனர்.
விசாரணையில், கேரளத்திலிருந்து டன் கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகளையும், கதிர் வீச்சு அபாயம் மிக்க மருத்துவக் கழிவுகளையும் கொண்டு வந்து குவிக்கும் வேலை நடப்பதும் தெரிய வந்துள்ளது. இது பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கேரளத்திலிருந்து கழிவுகளைக் கொண்டு வந்த லாரிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அங்கு ஏற்கெனவே கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்நிறுவன உரிமையாளரிடம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
எட்டிமடை கிராமவாசிகள் தொடர்ந்து நடந்துவரும் இந்த நாசச் செயலைக் கூறிக் குமுறுகின்றனர். தமிழக - கேரள எல்லையில் இருக்கும் வாளையாறு தமிழகக் காவல்துறை சோதனைச் சாவடி, எட்டிமடையில் இருக்கும் ஆர்டிஓ சோதனைச் சாவடி, வணிக வரித்துறை சோதனைச் சாவடி என மூன்று சோதனைச் சாவடிகளைத் தாண்டி வந்து கழிவுகளைக் கொட்டுகிறார்கள்.
தமிழகச் சோதனைச் சாவடிகளே இந்த நாசகர வேலைக்கு உடந்தையாக இருக்கின்றன. கோவை நகரம் குப்பைக் கிடங்காக மாறுவது பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. இந்த லாரிகளைக் கூட அரசு அதிகாரிகளோ, காவல்துறையோ பிடிக்கவில்லை. பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
பிரச்னை எல்லை மீறிப் போனதினால் வேறு வழியில்லாமல் எட்டிமடைப் பேரூராட்சி செயல் அலுவலர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். விசாரணை நடத்தியதில் அதிக அளவில் மருத்துவக் கழிவுகள் இருப்பதால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் லாரி ஓட்டுநர்களிடம் சோதனைச் சாவடிகளில் நின்று வந்ததற்கான ரசீது ஏதும் இல்லை.
சோதனைச் சாவடிகளின் துணையுடன்தான் இந்த நாசச் செயல் அரங்கேறுகிறது என்பது வேதனையான செய்தியாகும். இந்தக் கழிவுகளால் நீர் ஆதாரங்கள், விவசாயம், மக்கள் வாழ்வாதாரம் அனைத்துமே பாதிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
கோழிக்கோட்டில் இருந்து இக்கழிவுகள் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. கோழிக் கோட்டிலிருந்து எட்டிமடைக்கு லாரி வாடகை ரூ.4 ஆயிரம். ஆனால் இதுபோன்ற சரக்குகள் கொண்டு வர ஒரு லோடுக்கு ரூ.8000 வரை வாடகை தரப்படுகிறது. பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான் போலும்.
இந்த அதிதீவிர ஆபத்துகள் நிறைந்த மருத்துவக் கழிவுகள் கடந்த ஒன்பது மாத காலமாக இங்கு கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் மூன்று சோதனைச் சாவடிகளிலும் எப்படி இது தெரியாமல் போனது என்ற கேள்வியை மக்கள் எழுப்புகின்றனர்.
லாரி ஓட்டுநர் ஒருவர் கூறுவதைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழக வணிகவரித்துறை சோதனைச் சாவடியில் ஒரு லாரிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு கழிவு லாரிகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்களாம். ஆனால் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கிச் செல்லும்போது அங்குள்ள சோதனைச் சாவடியில் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டிற்கு அழிவு என்பது தெரிந்தும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழகச் சோதனைச் சாவடியில் உள்ளவர்கள் பணத்துக்காக விலை போகும் சோகம் நடந்து வருகிறது. இது மன்னிக்க முடியாத குற்றம் இல்லையா? இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
முல்லைப் பெரியாறு அணைக்காக இடைவிடாமல் தமிழ்நாட்டுடன் பகைமை பாராட்டும் கேரளம், இவ்வாறு மருத்துவக் கழிவுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் அனுப்பி வைப்பது இரு மாநில உறவுக்கு எதிரானது இல்லையா? இது பற்றித் தமிழ்நாடு அரசு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல தமிழ்நாட்டு அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் கையூட்டுக்காக எதையும் செய்யும் இழிநிலையை எண்ணி வருந்துவதைத் தவிர வேறு வழி என்ன? ஊழல் எல்லா மட்டங்களிலும் ஊடுருவி நிற்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இவ்வாறு கழிவுகளை இறக்குமதி செய்வது இங்கு மட்டும் நடப்பதல்ல. உலகம் முழுவதும் இது நடந்து கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளின் நிறுவனங்கள் இந்த நச்சுக் கழிவுகளை செயலிழக்கச் செய்வதற்கு ஏராளமாகச் செலவாகும் என்பதால் மலிவான முறையில் ஏழை நாடுகளில் கொட்டுவதற்கு ஏற்றுமதி செய்கின்றன.
ஆயுத வணிகம், போதைப்பொருள் வணிகம், போல இந்த நச்சுக் கழிவு வணிகமும் கொள்ளை இலாபம் தரும்தொழிலாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏழை, எளிய, வளர்முக நாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. ஐ.நா.வும் இதனைக் கண்டு கொள்வதில்லை.
1992 பேசல் ஒப்பந்தப்படி நச்சுக் கழிவுகளை வணிகம் செய்வதோ, மறுசுழற்சிக்காக ஏற்றுமதி செய்வதோ கூடாது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி நச்சுக் கழிவுகளை சோமாலியா கடற்பகுதியில் திருட்டுத் தனமாகக் கொட்டுகின்றனர். இந்தக் கப்பல்களைப் பிடித்து வைத்துக் கொண்டு சோமாலியா கடற்கொள்ளையர்கள் பண பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போது இந்தியக் கடற்பகுதியிலும் நச்சுக் கழிவுக் கப்பல்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்தக் கப்பல்களில் வரும் கண்டெய்னர்களை ஆராயாமல் அதிக பணம் பெற்றுக் கொண்டு அனுமதிக்கும் போக்கு நமது துறைமுகங்களில் பல காலமாக நடைபெற்று வருகிறது.
எஸ்.எஸ். நார்வே என்ற கப்பல் இனிமேல் கடல் பயணத்திற்கே தகுதியில்லை என்பதால் அதை உடைப்பதற்கு வங்க தேசம் கொண்டுவரப்பட்டது. அதில் இருக்கும் நச்சுக் குப்பைகள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால் அந்நாடு அதனை ஏற்க மறுத்துவிட்டது.
அங்கிருந்து அந்தக் கப்பல் மலேசியா சென்றது. அந்நாடும் அக்கப்பல் துறைமுகத்திற்குள் நுழையவே அனுமதி மறுத்துவிட்டது. சுமார் 1240 டன்கள் நச்சுக் குப்பைகளைக் கொண்ட அந்த கப்பலை இந்தியா ஏற்றுக் கொண்டது.
நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுக் கொண்டு குஜராத் மாநிலம் வந்து அங்குள்ள பவநகரில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் இக்கழிவுகள் கொட்டப்பட்டு கப்பல் உடைக்கும் பணியும் நிறைவேறியது. இவ்வாறு இந்தியா குப்பைக் கிடங்காக மாறுவதற்கு எல்லா மட்டத்திலும் நடக்கும் ஊழலே காரணமாகிறது.
பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறுவதற்கு கருப்புப் பணமும், ஊழலும் பெரும் தடையாக இருக்கின்றன. நாட்டின் பொருளாதாரத்துக்குச் சமமான வளர்ச்சியைக் கருப்புப்பண பொருளாதாரமும் அடைந்திருக்கிறது.
நாடுஎன்ப நாடா வளத்தன; நாடுஅல்ல நாட வளம்தரு நாடு
என்று நாட்டுக்கு இலக்கணம் வகுத்தார் திருவள்ளுவர். நாட்டின் மீது பற்றுடையவர்கள் அந்நாட்டுக்குத் தீங்கு செய்யும் செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். தாய்நாட்டுப் பற்றும், மக்கள் மேல் அன்பும் கொண்ட சமுதாயம் மலர்வது எப்படி? தேசம் குப்பை மேடாக மாற வேண்டுமா? கோபுரமாக உயர வேண்டுமா? முடிவு மக்கள் கையில்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.