என்ன செய்யப் போகிறோம்?
தலைநகர் தில்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அண்மையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. கடுமையான பணிப்புகை மூட்டம் நீடித்ததால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல்,


தலைநகர் தில்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அண்மையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. கடுமையான பணிப்புகை மூட்டம் நீடித்ததால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. தில்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏறத்தாழ 17,000 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
காற்று மாசு இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்த முக்கிய காரணம் வாகனங்களால் ஏற்படும் நச்சுப் புகையே. அதிலும் குறிப்பாக மகிழ்வுந்துகளால் (கார்) ஏற்படும் மாசு மிகவும் அதிகம்.
இன்றைய நிலையில் சர்வதேச அளவில் கார்களின் எண்ணிக்கை பெருக்கம் சாலைகளில் செல்வோரை திக்குமுக்காட வைப்பதால், ஏன் கார் வாங்கினோம் என்ற சிந்தனை உருவாகிறது. அப்புறம் அது புலிவாலை பிடித்த கதையாகவும் மாறுகிறது.
இந்த நிலை இன்று திடீரென்று தோன்றிவிட்ட ஒன்று அல்ல. 1956-ஆம் ஆண்டிலேயே இதற்கான பிள்ளையார்சுழி போடப்பட்டுவிட்டது. சூயிஸ் கால்வாயை உரிமை கொண்டாடும் பிரச்னையில் எகிப்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே 1956-இல் கோல்டு வார் ஏற்பட்டது.
அதன் தாக்கமாக நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் 1957, நவம்பர் 25 முதல் 1958, ஜனவரி 20 வரை ஒவ்வோர் ஞாயிற்றுக்கிழமையும் கார் தவிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 1958-இல் அமெரிக்காவில் நியூயார்க் நகரின் வாஷிங்டன் பூங்கா பகுதி கார் தவிர்ப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டது.
1973-இல் பிரான்ஸிலும், 1974-இல் சுவிட்ஸர்லாந்திலும், 1981-இல் கிழக்கு ஜெர்மனி, 88-இல் அமெரிக்காவின் பாரிஸ் நகரில் என தொடர்ந்து பல நாடுகள் கார் தவிர்ப்பு தினத்தை கடைப்பிடிக்கத் தொடங்கின.
1886-இல் மோட்டார் வாகனம் முதன்முதலாக சாலையில் உருளத் தொடங்கியது முதலே உலகில் அதன்மீதான் விருப்பு-வெறுப்பு விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றன. தற்போதைய நிலையில் உலகில் 115 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றால் ஏற்படும் காற்று மாசு, ஒலி மாசு, புவிவெப்பநிலை மாற்றம், விபத்துகள் போன்றவற்றிலிருந்து நாம் தப்பிக்க இயலாது என்ற நிலையில்தான் கார் தவிர்ப்பு மனநிலை நம்மில் ஒருசிலருக்கு ஏற்பட்டுள்ளது.
1990 முதலே உலகின் பல நாடுகளும் கார் தவிர்ப்பு தினத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலும், 2000-மாவது ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல்தான் முறைப்படி அறிவிக்கப்பட்ட சர்வதேச கார் தவிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளையொட்டி, அமெரிக்காவின் வாஷிங்டன் பெருநகரில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் கார் தவிர்ப்பு தின உறுதிமொழி படிவத்தை நிரப்பி பதிவுசெய்தால், வெற்றிபெறுவோருக்கு பல வகையான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தற்போது, சர்வதேச அளவில் 239.8 மில்லியன் கார்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. வாகன எண்ணிக்கை பெருக்கத்தில் முதலிடத்திலும், 78 மில்லியன் கார்களுடன் சீனா 2-ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 2 பேருக்கு ஒரு காரும், சீனாவில் 7 பேருக்கு ஒரு காரும் உள்ளன.
சர்வதேச போக்குவரத்துக்கான ஆய்வு அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை, 2050-ஆம் ஆண்டில் உலகில் வாகனப் பெருக்கம் 250 கோடியாக உயர்ந்துவிடும் என எச்சரித்துள்ளது.
உலகில் வாகன எண்ணிக்கை 200 கோடியாக பெருகும் நிலையில், நாளொன்றுக்கு 120 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டியதிருக்கும். தற்போதைய உற்பத்தி 87 மில்லியனாக இருக்கும் நிலையில், மீதத்தேவைக்கு என்ன செய்வது எனத் தெரியாமல் உலகம் தடுமாறி வருகிறது.
இந்த நிலையில், பெய்ஜிங் மட்டும் ஒரு நாளைக்கு 1,500 கார்களை சாலைகளுக்கு அனுப்பி வருகிறது. சர்வதேச அளவில் 1960-இல் பதிவுசெய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 9.83 கோடி. இது 2012-இல் 77 கோடியாக அதிகரித்தது.
1960-இல் லாரி, பேருந்துகளின் எண்ணிக்கை 2.8 கோடி. இது 2012-இல் 34 கோடியாக அதிகரித்தது. 1960-இல் 12.6 கோடியாக இருந்த வாகனங்கள் 2012-இல் 111.45 கோடியாக பல்கிப் பெருகிவிட்டன.
இந்த நிலையில், 2014-இல் மட்டும் சீனா 2.37 கோடி வாகனங்களை உற்பத்தி செய்து சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 1.70 கோடி வாகனங்களை உற்பத்தி செய்து ஐரோப்பிய நாடுகள் 2-ஆவது இடத்திலும், 1.16 கோடி வாகனங்களுடன் அமெரிக்கா 3-ஆவது இடத்திலும் உள்ளன.
38.4 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளது. வாகன உற்பத்தியில் முதல் 15 இடங்களில் உள்ள நாடுகளில் இருந்து மட்டும் 2014-ஆம் ஆண்டில் 9 கோடி வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவைப் பொருத்தவரை 21.72 லட்சம் கார்களுடன் தில்லி முதலிடத்திலும், 8 லட்சம் கார்களுடன் பெங்களூரு 2-வது இடத்திலும் 6.53 லட்சம் கார்களுடன் சென்னை 3-ஆவது இடத்திலும் உள்ளன.
பெரு நகரங்களில் குறைந்த அளவாக கொல்கத்தாவில் 2.2 லட்சம் கார்கள் உள்ளன. நம் நாட்டில் முதல் 10 இடங்களில் உள்ள பெரு நகரங்களில் மட்டும் 61.17 லட்சம் கார்கள் உள்ளன.
அனைத்து நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு தினமும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. நாமும் வாகனம் வாங்குவதற்கு வங்கிகள் எளிமையாகக் கடன் கொடுப்பதால், பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் கார்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இனிவரும் காலங்களிலாவது கார் வாங்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. அப்படியே கார் வாங்கிவிட்டாலும், வீட்டிலிருந்து அதை சாலைக்கு நகர்த்தும் முன், இந்த பயணத்துக்கு கார் தேவையா, பொது போக்குவரத்து போதுமானதா என்ற ஒரு கேள்வியை நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.இன்று உலகின் 40 நாடுகளில் உள்ள 1,500 நகரங்களில் கார் தவிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. நாம் என்ன செய்யப் போகிறோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...