எங்கும் வன்முறை, எதிலும் வன்முறை. இதுவே சமீபகாலத்திய நிகழ்வாகிவிட்டது. குடும்பப் பிரச்னையில் தொடங்கி, ஜாதிரீதியாக, மதரீதியாக, சமூகரீதியாக, மாநிலங்கிடையில், நாடுகளுக்கிடையில் என வன்முறை தலைவிரித்தாடுகின்ற நிலை. இது மனித சமுதாயத்திற்கே இழுக்கானதும், பகுத்தறிவுக்கு முற்றிலும் முரண்பட்ட ஒரு செயலுமாகும்.
எந்த வகைப் பிரச்னையாக இருந்தாலும் அதற்கு வன்முறையால் தீர்வு கிடைக்குமா? நிச்சயமாக முடியாது. மாறாக பிரச்னைகள் பன்மடங்கு அதிகரிக்கவே செய்யும். இதனால் பாதிக்கப்படுவோர் அனைத்துத் தரப்பினரும்தாம்.
தனிமனித மனதில் தோன்றுகின்ற வன்முறை எண்ணம் தன்னுடன் ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடச் செய்கின்றது. இத்தகையோர் வீட்டில் தொடங்கிப் பொது வாழ்விலும் தங்கள் வன்முறை எண்ணத்தை அரங்கேற்றத்துடிப்பவர்கள்.
ஒரு சிறுதீப்பொறி காட்டையே எரித்து நாசமாக்குவது போல், ஒரு துளி விஷம் ஒரு பெரும் பாத்திரத்தில் உள்ள உணவுப்பொருளையே விஷமாக்கி விடுவதுபோல் சிலரின் வன்முறை எண்ணமானது சமூகத்திற்கே பெருந்தீங்காகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாட்டில் பல மாநிலங்கள், பலமொழி பேசுவோர் இருந்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிற மாநிலத்தவர் பல்வேறு வகையான தொழில்கள் செய்து அமைதியாக கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த உன்னத நிலைக்குக் கேடு ஏற்படும் வகையில் அவ்வப்போது சில சம்பவங்கள் நடந்தேறுவது கவலையளிக்கிறது.
ஒரு தனிமனிதன் சக மனிதனுக்கோ பொது உடமைகளுக்கோ கேடு விளைவிக்கும் எந்தச்செயலிலும் ஈடுபடாது இருப்பதே தனிமனித ஒழுக்கமாகும்.
இதனைச்சற்றும் உணராமல், மனிதத்தன்மையே இன்றி வன்முறையைத்தூண்டி விட்டும், அதில் ஈடுபட்டும் பொதுமக்களுக்கும், பொது உடமைகளுக்கும் சேதம் விளைவிப்போரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டியதும், கடுமையான சட்டங்கள் மூலம் தண்டனை கிடைக்கச்செய்வதும் அரசின் கடமையாகும்.
இதன்மூலம் வன்முறையாளர்களை ஒடுக்கவும் முடியும். மீண்டும் வன்முறையில் ஈடுபட நினைப்போருக்கு விடும் எச்சரிக்கையாகவும் அது அமையும். எந்த நிலையிலும் வன்முறையாளர்களுக்கு பொதுமக்கள் நிச்சயமாக ஆதரவு தர மாட்டார்கள்.
பெற்றோர்களால் நீதி நெறிகளைச் சொல்லி வளர்க்கப்படாத குழந்தைகளே பின்னாளில்வளர்பருவத்தில் ஏற்படும் தீ நட்பின் காரணமாக வன்முறைச்செயல்களில் ஈடுபடுவோராக மாறுகின்றனர்.
குடும்ப ஒற்றுமையும், அமைதியும், அறவழியும் நல்ல நட்புமே பண்புள்ள மனிதர்களை உருவாக்கிடும் களங்களாகும். பள்ளிக்கல்வியில் தனிமனித ஒழுக்கம், பொது உடமைகளைப் பேணுதல் போன்றவை உளவியல் ஆசிரியர்களால் மாணவர்கள் மனத்தில் நன்கு பதிவு செய்யப்படவேண்டும்.
நீதிபோதனை, அறநெறிக்கல்வி என்பது மாணவர் சமுதாயத்திற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்குத் தயாராவதற்கு எத்தனையோ பயிற்சி மையங்கள் இருந்திட, மனிதன் மனிதனாக வாழ, மனிதநேயமிக்கவனாகத் திகழ்ந்திட உள்ளமேம்பாட்டுப் பயிற்சி மையங்களை ஆங்காங்கே நிறுவ வேண்டும்.
தேசப்பிதா மகாத்மாகாந்தி வாழ்ந்த இந்நாட்டில் எண்ணற்ற மனிதர்களின் உயிர்த்தியாகத்தால் பெற்ற சுதந்திரம் சுயநலத்திற்கும், ஊழல் புரிவதற்கும், ஜாதி, மத, சமூக ரீதியாகச்சண்டையிடுவதற்கும், எடுத்ததற்கெல்லாம் வன்முறையைக் கையாண்டு மக்களுக்கும் பொது உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பதற்கும்தானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குச் சிறுகேடு ஏற்படுத்தினாலும் அது அவனது சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகவே ஆகும்.
தேவையற்ற கலாசாரங்கள் பலவற்றை மேலை நாட்டவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் நாம், வேலை நிறுத்தமோ, பொது மக்களுக்கு இடையூரோ, வன்முறையோ இல்லாத அறவழியின் மூலமாகத்தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிச் சிறப்பாகச் செயலாற்றி வரும் ஜப்பான் நாட்டு மக்களைப் பின்பற்ற ஏனோ மறந்து விட்டோம்.
அரசியல் அமைப்புகளோ, ஜாதி, மத, சமூக அமைப்புகளோ, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களோ தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப்போராடும்போது பொதுமக்களுக்கோ, பொது உடமைகளுக்கோ வாகனங்களுக்கோ, நிறுவனங்களுக்கோ எந்தச் சிறு பாதிப்பும் இன்றி அமைதியான அறவழியில் போராட முனைய வேண்டும்.
வன்முறையில் ஈடுபட நினைப்பவர்களை காவல்துறை ஆரம்பத்திலேயே தடுத்துநிறுத்த வேண்டும். மீறினால் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.
கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தும் விதம் வன்முறையல்ல என்பதை வன்முறையாளர்கள் உணர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!

பாஜகவில் இணைந்த 3 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்! ஆம் ஆத்மி வலியுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

