பாராட்டினால் போதுமா?
கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து சரித்திர சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு


கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து சரித்திர சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் பாராட்டு குவிந்து வருகிறது.
அடுத்த தலைமுறைக்கு ஊழல் இல்லாத இந்தியாவை நாம் அளிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது என்று தனது அறிவிப்பில் மோடி குறிப்பிட்டார்.
சில எதிர்க்கட்சியினரைத் தவிர்த்து, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்கின்றனர். கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் மோடியின் இந்த அதிரடி நடவடிகைக்கு சாமானியர் முதல் நடிகர்கள் வரை பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய வரவேற்பு, இதுபோன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஊக்கத்தையும், உந்துசக்தியையும் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தரும் என்பது உறுதி. ஆனால், பிரதமர் மோடியின் அறிவிப்பைப் பாராட்டி கரவொலி எழுப்புவதுடன் நமது பணி முடிந்துவிடலாமா?
மோடிக்குப் பாராட்டுத் தெரிவித்தவர்களில், தொழில் துறையினர், வர்த்தகர்கள் மட்டுமல்லாது, கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், பெரு நிறுவனங்களின் உரிமையாளர்களும் அடங்குவர்.
இவர்களில் பலரும் பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக மோடிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
ஆனால், இவர்களில் பலரும்கூட மோடியின் இலக்குக்கு உள்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வெறும் பாராட்டுடன் இவர்கள் நின்றுவிடப் போகிறார்களா? கருப்புப் பணம் பதுக்கல் மட்டுமா ஊழல்?
தற்போது, எல்.கே.ஜி. முதல் உயர்கல்வி வரை பெரும்பாலான கல்விக்கூடங்களில், மாணவர் சேர்க்கையின்போது லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்படும் பணத்துக்கு கணக்குக் காட்டப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெறப்படுகிறது. இவை முழுமையாகக் கணக்கில் வருவதில்லை.
இன்றைய சூழலில் திரையரங்குக்கு குடும்பத்துடன் சென்றால் செலவழிக்க குறைந்தது ஆயிரம் ரூபாய் தேவை. "மடியைப் பிடித்து மாங்காயைப் போட்டு, எடு காசை என்பதுபோல' என்ற கிராமத்துப் பழமொழி உண்டு.
அதுபோல, பெரு நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், கடைகள், வியாபார நிறுவனங்களிடம் பெருமளவு மக்களின் பணம் புழங்குகிறது.
அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் பொதுமக்களிடம் மிரட்டி வாங்கும் பணத்தை "லஞ்சம்' என்கிறோம். வர்த்தகம், வியாபாரம் என்ற பெயரில் அறத்துக்குப் புறம்பாக பணம் பறிக்கும் செயலை மட்டும் "வியாபார உத்தி' என்கிறோம்.
இவ்வாறு ஈட்டப்படும் பணத்தைப் பதுக்கி இருப்பவர்கள், பிரதமரைப் பாராட்டுவதுடன் நின்றுவிடுவார்களா?
இப்போதோ, மக்களிடம் பணத்தைப் பறிக்கும் வர்த்தகம்தான் நடைபெறுகிறது. இவ்வாறு சம்பாதிப்போர், அரசுக்கு முறையாக வரி செலுத்துவதில்லை.
இந்திய மக்களில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் 2.87 கோடி பேரில் 1.62 லட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர்.
சம்பாதித்தும் வரி செலுத்தாதவர்களுக்கு கடிவாளம்போட்டு வரியை வசூலிக்கவே பிரதமர் மோடி நாட்டுக்காக இதுபோன்ற நற்செயல்களை முன்னெடுத்துச் செல்கிறார்.
ஒட்டுமொத்த நாட்டுக்காக பிரதமர் மோடி பாடுபடும்போது, அவரை வெறும் வார்த்தைகளால் புகழ்ந்து பாராட்டும் நாம், ராமரின் சேது பந்தனத்துக்கு அணில் உதவியது போல, நாட்டுக்காக நம்மால் இயன்றதைச் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
நுகர்வுக் கலாசாரத்தில் நடுத்தரக் குடும்பங்கள் தவிக்கின்றன. ஒவ்வொரு குடும்ப சம்பாத்தியத்தின் முக்கால் பகுதி குழந்தைகள் படிப்புக்கும், மருத்துவச் சிகிச்சைக்குமே செல்கிறது.
தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் கோடிக்கணக்கான பணத்தை முறைகேடாக சம்பாதிக்கின்றன. இதனால் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றன.
வியாபார நிறுவனங்களின் உத்திகளால் குடும்பத்தின் வருமானம் கரைகிறது. இவற்றிலிருந்து மீண்டு, எதிர்காலத்துக்காகச் சேமிப்பதென்பது சாமானிய குடும்பத்துக்கு குதிரைக்கொம்புதான்.
இவ்வாறு மக்களை உறிஞ்சி சம்பாதிக்கும் நிறுவனங்கள், வாழ்க்கையில் எப்படியோ உயர்ந்தவர்கள் எல்லோரும், பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு பொருள்களின் விலையைக் குறைத்து அளிப்பதே, பிரதமர் மோடியின் எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் செயலுக்கு உதவிகரமாக இருக்கும்.
வருமானத்தில் ஒரு ரூபாயோ, 10 ரூபாயோ, 100 ரூபாயோ, 1,000 ரூபாயோ அவரவர் சக்திக்கு ஏற்ப சமுதாய நலனுக்காக லாபத்தில் சிறுதுளியை இழக்கத் தயாராகும் மனப்பக்குவம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர், பொதுமக்களிடம் 10 ரூபாயை அதிகமாக வாங்கி மோசடி செய்தால், அதிகாரபீடத்தில் இருப்பவர் பல ஆயிரம் லஞ்சம் பெற்று மோசடி செய்கிறார்; அரசியல்வாதி பல கோடி பணத்தை சுரண்டுகிறார்.
பல இடங்களிலும் மனிதர்களின் மனம் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இருக்கும் இடத்துக்கு ஏற்ப சுரண்டல் அதிகரிக்கிறது.
எனவே, அதிகாரபீடத்தில் இருப்பவர்களும், உயர்நிலையில் இருப்பவர்களும் மட்டுமே நாட்டை செம்மைப்படுத்த வேண்டும் என நினைத்துக்கொண்டு நாம் வாளாவிருக்கக் கூடாது.
பல தலைமுறைக்குப் பணத்தைப் பதுக்கி வைத்து வாழலாம் என்ற சுயநலத்துடன் பயணித்தால், எதிர்காலத்தில் மேலும் பல நரேந்திர மோடிகள் தோன்றுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...