வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தேவை விவசாயி சுய உதவிக் குழு

விவசாயத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், 62 சதவீத விவசாயிகளைக் கொண்ட ஆந்திர மாநிலத்தின் முதல் அரசு (ஆந்திரம் - தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்) ஒருங்கிணைந்த,

News image
Updated On :25 நவம்பர் 2016, 7:45 pm

விவசாயத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், 62 சதவீத விவசாயிகளைக் கொண்ட ஆந்திர மாநிலத்தின் முதல் அரசு (ஆந்திரம் - தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்) ஒருங்கிணைந்த, நீடித்த விவசாய மேம்பாட்டுக்கு என பிரபல பொருளாதார நிபுணர் ஆர். ராதாகிருஷ்ணா தலைமையில் ஒரு குழுவை 2014 செப்டம்பரில் அமைத்தது.
அந்தக் குழுவானது, மிகவும் பயனுள்ள பல ஆலோசனைகளுடன் தனது அறிக்கையை அரசிடம் அண்மையில் சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள சில பரிந்துரைகள் புதுமையானவை. சில பரிந்துரைகள் வேளாண் புரட்சியை நிகழ்த்தக் கூடியவை. அந்தப் பரிந்துரைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டால் அதனால் விவசாயிகளுக்குப் பெரும் நன்மை விளையும்.
வேளாண் தொழில் சந்தித்துவரும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் ஆய்வு செய்ய அந்தக் குழு பணிக்கப்பட்டது. விவசாய மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் தற்போதைய கொள்கை, திட்டங்களை முழுமையாக ஆய்வு செய்வதுடன் விவசாயத்தை லாபகரமானதாக்குவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அமைப்புரீதியான, தொழில்நுட்பரீதியான ஆலோசனைகளையும் வழங்க அறிவுறுத்தப்பட்டது.
வரையறுக்கப்பட்ட இலக்குகள் தொடர்பாக அந்தக் குழு முழு கவனம் செலுத்தியுள்ளது என்றே கூற வேண்டும். தங்களுக்கு கிடைத்த ஏராளமான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததுடன், ஆந்திரத்தின் 13 மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள், வங்கிப் பிரதிநிதிகள், மார்க்கெட் கமிட்டி நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் என விவசாயம் தொடர்பான அனைத்து தரப்பினரையும் இந்தக் குழுவினர் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்துள்ளனர்.
அத்துடன், பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அந்தந்த மாநிலங்களில் வெற்றிகரமான முயற்சிகளையும் ஆவணப்படுத்தி உள்ளனர்.
அந்தக் குழு பின்வரும் 10 விஷயங்கள் குறித்து பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. 1. வேளாண் அமைப்புகள். 2. சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தம். 3. வேளாண் கடன். 4. குத்தகை, கடன் புழக்கம். 5. மழையை நம்பிய வேளாண்மை. 6. மலைப் பகுதி வேளாண்மை. 7. கால்நடைத் தீவனம். 8. மீன் வளம் 9. நீர் ஆதாரம். 10. பருவநிலை மாற்றம்.
இவற்றில், வேளாண்மை தொடர்பான அமைப்புகளை அமைப்பது தொடர்பான பரிந்துரைகள்தான் மிகவும் குறிப்பிடத்தக்கவை. நான்கு அமைப்புகளை அரசு நிறுவ வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
1. பஞ்சாப் விவசாயிகள் கமிஷன் போல ஆந்திரப் பிரதேச விவசாயிகள் கமிஷன். 2. ஆந்திரப் பிரதேச விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், நீடித்த வேளாண்மைக்கான சங்கம். 3. விவசாயிகள் நிறுவனம் 4. தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம்.
ஆந்திரப் பிரதேச விவசாய கமிஷனுக்கு பிரபல பொருளாதார நிபுணர் தலைமை வகிப்பார். அந்தக் குழுவில் விவசாயப் பொருளாதார நிபுணர்கள், விவசாய விஞ்ஞானிகள், வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், வேளாண் துறை முதன்மைச் செயலர், வேளாண் தொடர்பான பல்வேறு செயல்களுக்கு ஆலோசனை அளிப்பவர்கள் இடம்பெறுவர்.
அவர்கள் மாநில அரசுக்கும், வேளாண் அமைப்புகளுக்கும் தகுந்த ஆலோசனைகளை அவ்வப்போது வழங்குவர். குத்தகைதாரர்கள், சிறு விவசாயிகள், மலைவாழ் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வுகளை விவசாய கமிஷன் வழங்கும். விவசாய மேம்பாட்டுக்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து கொள்கை முடிவுகளை வகுப்பதிலும் விவசாய கமிஷன் முக்கிய பங்காற்றும்.
விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், நீடித்த வேளாண்மைக்கான சங்கம் அமைப்பது இரண்டாவது முக்கிய பரிந்துரையாகும். இது பதிவு செய்யப்பட்ட சங்கமாக இருக்கும். இதன் நிர்வாக அமைப்பு முறை, ஊரக வறுமை ஒழிப்பு சங்கத்தைப் போன்றே அமையும். இந்த சங்கம் முழு தன்னாட்சி பெற்றதாகவும், அதிகாரம்மிக்கதாகவும் அமையும். விவசாயிகள் சுய உதவிக் குழு அமைக்க இந்த சங்கம் வழிவகை செய்து கொடுக்கும். இந்த சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும்.
விவசாயிகளை சிறு குழுக்களாக ஒருங்கிணைப்பது அவர்களுக்கு நன்மை பயப்பதாக அமையும். அவர்கள் தங்களது பொதுவான பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியும். நிலம், நீர் தொடர்பான பிரச்னைகள், பருவநிலை மாற்றம், சுரண்டும் சந்தை, பணப் புழக்கம் இன்மை, சர்வதேச, தேசிய சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவாதித்து அந்த சவால்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட இந்த விவசாயி சுய உதவிக் குழுக்கள் உதவிகரமாக அமையும்.
விவசாயிகள் நிறுவனம் தொடங்க ஆலோசனை வழங்குதல், விவசாயிகள் கூட்டமைப்பை உருவாக்குதல், அரசுத் துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், அரசின் திட்டங்களை நிறைவேற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை "விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், நீடித்த வேளாண்மைக்கான சங்கம்' மேற்கொள்ளும்.
உரம், கால்நடைத் தீவனம், பால், காபி, பாமாயில், தேங்காய், முந்திரி, மிளகு, ரப்பர், கோழி வளர்ப்பு, அலங்கார மீன் வளர்த்தல் போன்ற வர்த்தக நடவடிக்கைகளை விவசாயிகள் நிறுவனம் என்ற பெயரில் ஒருங்கிணையும் விவசாயிகளால் மேற்கொள்ள முடியும்.
விவசாயம் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுவதற்கு அரசு பெரிய அளவில் ஆதரவு அளிக்காததால், அதற்கு வர்த்தகர்களையும், கடன் அளிப்பவர்களையும் விவசாயிகள் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பொருத்தமான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கு ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பது ராதாகிருஷ்ணா குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும்.
இந்த விஷயத்தில் கேரளத்தின் அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதையும், அதன் பலன்களைத் தொடர்புடைய அமைப்புகளிடம் இருந்து கேட்டுப் பெறுவதையும் "விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், நீடித்த வேளாண்மைக்கான சங்கம்' ஒருங்கிணைக்க வேண்டும்.
விவசாய மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் பெரும் தொகையை ஒதுக்குகின்றன. அதைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதை அரசின் வேளாண் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு பலன்கள் கிடைக்காதபட்சத்தில், அதற்கு அந்த நிறுவனங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிறுவனங்களின் பல்வேறு நிலைகளில், சிறு விவசாயிகள், மகளிர், குத்தகைதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. விவசாயிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நிறுவனங்களில், தொடர்புடையவர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இத்தகைய நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியும்வண்ணம் பணி அறிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆக்கப்பூர்வமான போட்டி நிலவ, செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.
வர்த்தகர்களிடம் இருந்து வேளாண் சந்தை கமிட்டி வசூலிக்கும் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். இறுதியாக, இந்தத் தொகை விவசாயிகளுக்குதான் சுமையாக ஆகிறது. வேளாண் சந்தை கமிட்டியின் அமைப்பு, செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களையும் ராதாகிருஷ்ணா குழு பரிந்துரைத்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் கர்நாடக கிராமீன் விகாஸ் வங்கியின் "விகாஸ் ஜனசக்தி' திட்டம் போன்ற திட்டங்களை மண்டல ஊரக வங்கிகள் பின்பற்ற வேண்டும்.
சிறு விவசாயிகள் கிடங்குகள் கட்ட வர்த்தக வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும். அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில், விவசாயிகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும்வகையில், கிடங்கு ரசீதைக் காண்பித்தால் குறுகிய காலக் கடன்கள் வழங்கப்பட வேண்டும்.
இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப குத்தகைதாரர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கால்நடைத் தீவனம் பெருக்கும் பணிகளை விவசாயி சுய உதவிக் குழுக்கள் மேற்கொள்ள வேண்டும். இடைத்தரகர்கள், கடன் கொடுப்பவர்கள் முறைகேடுகளைத் தடுக்க மீனவப் பெண்களின் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
சுருங்கக் கூறுவதென்றால், விவசாயிகளின் திறனை மேம்படுத்துவது, விவசாயிகளுக்கான அமைப்புகளை நிறுவுவது ஆகியவற்றுக்கு ராதாகிருஷ்ணா குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு அதிக நிதி ஆதாரம் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக, குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் எதிர்காலத்தில் விவசாயத்துக்கான அரசின் வருவாய் அதிகரிக்கும். எனவே, எப்படி மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அதேபோல விவசாயி சுய உதவிக் குழுக்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தக் குழு பரிந்துரைத்துள்ள அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். இந்தப் பரிந்துரைகள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பயன் அளிப்பதாகும். எனவே, மற்ற மாநிலங்களும் இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.