காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முத்திரை பதித்ததா முத்ரா திட்டம்?

ஜ.க. ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலத்தில், நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு பல செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2017, 8:57 pm

ரமாமணி சுந்தா்

ஜ.க. ஆட்சியின் இந்த மூன்றாண்டு காலத்தில், நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு பல செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரத் துறையைப் பொருத்தவரையில் பல புதிய திட்டங்களையும், ஏற்கெனவே உள்ள திட்டங்களில் பல மாற்றங்களையும் அரசு அறிவித்த வண்ணம் இருக்கிறது.
இந்த வரிசையில் குறு/சிறு தொழில்களின் முன்னேற்றத்திற்காக, 2015}ஆம் ஆண்டு ஏப்ரல் 8}ஆம் தேதியன்று பிரதமர் முத்ரா திட்டம் என்பது தொடங்கப்
பட்டது. MUDRA என்பது, Micro Units Development and Refinance Agency என்பதன் சுருக்கம். தமிழில் இதை "குறுந்தொழில்களின் வளர்ச்சி மற்றும் மறு நிதி வழங்கும் நிறுவனம்' என்று குறிப்பிடலாம்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் 2013}ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 5.77 கோடி, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் வர்த்தகம், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் செயல்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை தனியார் நிறுவனங்கள்.
மேலும் இந்தச் சிறு / குறு தொழில்களின் உரிமையாளர்களில், 62 விழுக்காட்டினர் பட்டியல் வகுப்பு மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். பெருநிறுவனத் துறையைச் (Corporate sector) சாராத இந்த சிறு/குறு நிறுவனங்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை, தொழில் தொடங்குவதற்கும், தொடங்கிய தொழிலை நடத்துவதற்கும் தேவையான நிதியைத் திரட்டுவது.
இந்த சிறு மற்றும் குறுந் தொழில்களில், நான்கு விழுக்காடு தொழில்களுக்கே சாதாரண வங்கிகளிலிருந்து நிதி உதவி கிடைக்கின்றது. அதனால் மற்றவர்கள் வட்டிக் கடைக்கார்களிடமிருந்து மிக அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட தொழில்களுக்கு நிதியுதவி அளித்து, இந்த நிறுவனங்களின் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டின் மொத்த வருமானத்தையும், வேலைவாய்ப்புகளையும் கூட்டுவதற்கு வழி வகுக்கும் நோக்கத்துடன், இந்திய அரசு, பிரதம மந்திரி முத்ரா திட்டத்தை தொடங்கியுள்ளது. அது மட்டுமல்ல, வேலையில்லா இளைஞர்களை சொந்தமாக தொழில் தொடங்க ஊக்குவிப்பதும், இந்தத் திட்டத்தின்
நோக்கம்.
நாட்டின் பொதுத் துறையில் திறக்கப்பட்டுள்ள முத்ரா நிதி நிறுவனத்தின் முக்கியப் பணிகள், நாட்டிலுள்ள சிறு மற்றும் குறு தொழில்களுக்கும், தனி நபர்களுக்கும் கடன் வழங்கும் குறு நிதி நிறுவனங்களுக்கு மறு நிதியளிப்பது (refinance), குறு நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது, கடன் கொடுப்பதற்கான விதி முறைகளை நிர்ணிப்பது மற்றும் குறு நிதி நிறுவனங்களை தரப்படுத்தி சான்றிதழ்கள் வழங்குவது போன்றவை.
27 பொதுத் துறை வங்கிகள், 17 தனியார் வங்கிகள், 31 கிராமப்புற வங்கிகள், நான்கு கூட்டுறவு வங்கிகள், 36 குறு நிதி நிறுவனங்கள், மற்றும் 25 வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவை முத்ரா திட்டத்தில் பங்குபெற்று குறு/சிறு தொழில்களுக்கு கடன் வழங்குகின்றன. இந்த நிதி நிறுவனங்கள், சிறு/குறு தொழில்களுடன் நேரிடையாகத் தொடர்பு கொண்டு கொடுக்கும் நிதியுதவியை, முத்ரா வங்கி ஈடு செய்கிறது.
முத்ரா திட்டத்தின் கீழ் மூன்று படிநிலைகளில் உள்ள தொழிலகங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்குவதற்கு ரூபாய் ஐம்பதாயிரம் வரையில் சிசு எனப்படும் கடனும், தொழிலைத் தொடங்கிய பிறகு அதை நடத்துவதற்கு ரூபாய் ஐம்பதாயிரத்திலிருந்து ஐந்து லட்சம் வரையில் கிஷோர் எனப்படும் நிதியுதவியும் வழங்கப்படுகிறது.
தொழிலை விரிவு படுத்தி அடுத்த வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் செல்ல தருண் எனப்படும் நிதியுதவி ரூபாய் ஐந்து லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை கொடுக்கப்படுகிறது.
முத்ரா திட்டத்தின் கீழ் பல துறைகளைச் சார்ந்த தொழில்களுக்கும், வர்த்தகச் செயல்களுக்கும் கடன் வசதி அளிக்கப்படுகிறது. போக்குவரத்துத் துறையில், ஆட்டோ ரிக்ஷாகள், சரக்குகளை எடுத்துச் செல்லும் மூன்று சக்கர வண்டிகள், ஈ}ரிக்ஷாகள், வாடகைக் கார்கள், லாரிகள் போன்றவை வாங்குவதற்காக கடன் வழங்கப்படுகிறது.
சமூக மற்றும் தனிமனித சேவைகள் துறையில், முடி திருத்தும் சலூன்கள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி மையங்கள், தையல் கடைகள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடைகள், நகல் எடுக்கும் கடைகள், கூரியர் சேவைகள், பழம் மற்றும் காய்கறி வியாபாரம் போன்றவை அடக்கம்.
உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் துறையில், அப்பளம், ஊறுகாய், ஜாம் ஜெல்லி தயாரிப்பது, இனிப்புக் கடைகள், சிறு உணவகங்கள், கேட்டரிங் சேவைகள், ஐஸ் கிரீம், பிஸ்கெட், ரொட்டி, பன் தயாரிப்பு போன்றவை நிதியுதவி பெறலாம். ஜவுளித் துறையில், கைத்தறி, மின்தறி, ஜரிகை வேலைப்பாடு, கை எம்ராய்டரி, பாரம்பரிய சாயம் தயாரிப்பது, பிரிண்ட் செய்வது, ஆடைகள் வடிவமைப்பது, பைகள், தொழில்சாலைகளுக்கான துணிகள் போன்றவற்றைத் தயாரிப்பது போன்றவை கடன் உதவி பெறத் தகுதி பெற்றவை.
முத்ரா திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டாண்டுகளுக்கு மேல் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தத் திட்டம் இதுவரையில் என்ன சாதித்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
முத்ரா வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த இரண்டாண்டுகளில் (2015 மற்றும் 2016) 7.45 கோடி பேர்களுக்கு ரூபாய் 3,00,000 கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. 2015}ஆம் ஆண்டில் ரூபாய் 45,904 கோடியாக இருந்த குறு நிதிநிறுவனங்கள் வழங்கிய நிதியுதவி 2016}இல் ரூபாய் 56,837 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 23.8 விழுக்காடு அதிகரித்துள்ளது.
அதே போன்று வங்கிகள் கொடுத்துள்ள கடன் தொகை ரூபாய் 86 ,000 கோடியிலிருந்து ரூபாய் 1.28 000 கோடியாக அதிகரித்துள்ளதாக, அதாவது 49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் முத்ரா திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முந்தைய ஆண்டே (2013}14), வங்கிகள் குறு, சிறு தொழில்களுக்கு அளித்துள்ள நிதியுதவி 50 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
குறு நிதி நிறுவனங்கள் நிதியுதவி அளிக்கத் தொடங்கிய கடந்த இருபதாண்டு காலத்தில், படிப்படியாக சிறு/குறு தொழில்களுக்கு வழங்கப்படும் நிதி அதிகரித்துக்கொண்டு வருவதாகவும், இதற்கு முத்ரா மட்டுமே காரணமாகாது என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் முத்ரா திட்டத்தின் குறிக்கோள்களில் முக்கியமானவை வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும்,, மக்களை சொந்தமாக தொழில் செய்ய வைப்பதும் ஆகும். ஆனால் இந்தத் திட்டத்தின் காரணமாக எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று அதிகாரபூர்வமான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
முத்ரா என்பது ஒரு மறு நிதி நிறுவனம் மட்டுமே. தொழில் தொடங்க நினைக்கும் எளிய மக்களுக்கு கடன் கொடுப்பது என்னவோ குறு நிதி நிறுவனங்களே. முத்ரா திட்டத்தைப் பற்றியும் அதனால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பற்றியும் பொருளாதார கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை.
நாட்டில் ஏற்கனவே சிட்பி (SIDBI) போன்ற மறு நிதி நிறுவனங்கள் இருக்கும் பொழுது முத்ரா என்று மற்றொரு மறு நிதி நிறுவனத்தைத் தொடங்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ஆனால் இதற்கு முன்பு எந்த ஒரு குறு நிதி நிறுவனமும் 50,000 ரூபாய்க்கு மேல் கடன் வழங்கியதில்லை. வங்கிகளும் சிறு தொழில்களுக்கு கடன் வழங்கத் தயங்கின.
முத்ரா திட்டத்தில் சிறு குறுந் தொழில்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வரையில் கடன் வழங்க வழி செய்யப்பட்டுள்ளதோடல்லாமல், கொடுத்த கடனை திரும்பப் பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது, கடனுக்கு உத்தரவாதம் அளிப்பது போன்ற அம்சங்களும் புகுத்தப்பட்
டுள்ளன.
இதுவரையில் முத்ரா திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றவர்களில் 78 விழுக்காட்டினர் மகளிர் என்பதும், வழங்கப்பட்டுள்ள 3,55,590 கோடி ரூபாய் கடன் தொகையில் 50 விழுக்காடு மகளிரையே சென்றடைந்துள்ளது என்பதும் மிகவும் மிகிழ்ச்சி தரும் செய்தி.
பெரும்பாலான மகளிர், சுய வேலை அல்லது தொழில் தொடங்குவதற்கு இந்த நிதியுதவியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். முத்ரா திட்டத்தினால் பயனடைந்துள்ள 8.19 கோடி மக்களில் 6.2 கோடி மகளிர் என்பது இந்த திட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றி.
அதுமட்டுமல்லாமல், இதுவரை வழங்கப்பட்டுள்ள கடன் தொகையில் 28 விழுக்காடு தொகையை பிற்படுத்தப்பட்டோரும், 10 .5 விழுக்காடு தொகையை பட்டியல் வகுப்பினரும், 3 விழுக்காடு தொகையை பழங்குடியினரும் பெற்றுள்ளனர் என்பதும் இந்த முத்ரா திட்டம் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியங்களாக இருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.