நச்சு மரங்களை அழிப்போம்

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடியே உள்ளது.
Published on
Updated on
2 min read

வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். கடனில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த
படியே உள்ளது. விவசாயிகளின் துயர்துடைக்க என்ன செய்வதென்று தெரியாமல் மத்திய } மாநில அரசுகள் கையைப் பிசைந்தபடி உள்ளன.
விவசாயம் பொய்த்துப்போனதற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது ஒரு காரணம் எனில் வடகிழக்குப் பருவமழை ஏமாற்றியதுதான் மிகப்பெரும் காரணம். நிலத்தடி நீர்மட்டம் தமிழகம் முழுவதும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதற்கு சீமைக்கருவேல மரங்கள்தான் முக்கிய காரணம்.
1950-களில் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டு தமிழகம் முழுவதும் விதைக்கப்பட்ட இந்த மரங்கள் இன்றைய நிலத்தடி நீர்மட்டதிற்கு எமனாக மாறி
யிருக்கிறது.
சீமைக்கருவேல மரங்கள் எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் வளரக்கூடியவை. அம்மரங்களின் உயரத்தைவிட அதனுடைய வேர்கள் அதிக நீளம் பரவக்கூடியவை. நிலத்திற்குள் விரியும் இம்மரத்தின் வேர்கள் பூமிக்குள் இருக்கும் நிலத்தடி நீரை ஒட்டுமொத்தமாய் உறிஞ்சி எடுத்து விடுகிறது.
இதன் தீமைபற்றி பொதுமக்களிடையே இன்னும் பெரிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக கிடக்கும் நிலங்களில்கூட பல விவசாயிகளும் சீமைக்கருவேல மரங்களை விரும்பியே வளர்க்கின்றனர்.
ஓராண்டிற்குள் இதனை வெட்டி விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த நச்சுப் பாம்புக்கு பால் ஊற்றி வளர்க்கின்றனர் என்பதுதான் கொடுமை.
இந்தச் சீமைக்கருவேல மரங்களின் கொடுமையினை உணர்ந்த சில தன்னார்வலர்களும், சில அமைப்புகளும் களத்தில் இறங்கி தம்மால் முடிந்த விழிப்புணர்வு பணிகளையும், அம்மரங்களை அகற்றும் பணியினையும் ஆங்காங்கே செய்து வருகின்றனர். ஆனால், கடல் நீரை கைகளால் அள்ளியா காலி செய்யமுடியும்?
எனவே இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பலர் வழக்குத் தொடுத்திருந்தனர். இம்மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் தன்னுடைய அதிகார வரம்பிற்கு உட்பட்ட 13 மாவட்ட நிர்வாகங்களும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது, செயல்படுத்தாத மாவட்ட நிர்வாகங்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக்கப்படும் எனவும் எச்சரித்தது.
இப்பணியினை மாவட்ட நீதிபதிகள் கள ஆய்வுசெய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் முன் ஜனவரி 31-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்திரவிட்டனர்.
13 மாவட்டங்களிலும் 60 விழுக்காடு சீமைக்கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் மட்டும் சிக்கல் இருப்பதாகவும் இதனால் நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்த இயலவில்லை எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்
பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதிகள் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை தாங்களாகவே அகற்ற வேண்டும் எனவும், தவறினால் மாவட்ட நிர்வாகமே அவற்றை அகற்றிவிட்டு அதற்கான செலவு தொகையினை இருமடங்காக நில உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர்களை ஆணையாளர்களாக நியமித்தும் உத்தரவிட்டனர்.
அரசுத் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் 60 விழுக்காடு சீமைக்கருவேல மரங்கள் அகற்றுப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்
டுள்ளது.
ஆனால் 13 மாவட்டங்களிலும் உள்ள 60 சதவீதம் சீமைக்கருவேல மரங்களை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் அகற்றிவிட்டனர் என்பது முடியாத காரியம்.
ஆய்வுக்குச் செல்லும் மாவட்ட நீதிபதிகள், தங்களின் பணிச்சுமைகளுக்கிடையே அனைத்துப் பகுதிகளுக்கும் நேரில் சென்று உண்மையான கள நிலவரம் அறிவது என்பது கடினமான பணிதான். பார்வைக்கு தென்படும் சாலை ஓரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே தற்போதைக்கு ஆங்காங்கே அகற்றப்பட்டுள்ளன.
பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள், அரசு புறம்போக்கு நிலங்கள் இவற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இனியாவது அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இதில் தம்முடைய கவனத்தை கூர்மைப்படுத்த வேண்டியது அவசியம்.
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் 100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்களை களம் இறக்க உத்தரவிடவேண்டும். காலதாமதம் செய்யாமல் அரசு சார்பில் இம்மரங்களை ஏலத்தில் விற்பனை செய்து தமிழகத்திலிருந்து முற்றாக இம்மரங்களை அகற்ற முன்வரவேண்டும்.
மேலும் சீமைக்கருவேல மரங்களின் அபாயத்தை உணர்த்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
நச்சு மரங்களால் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
மாணவர்களும், இளைய தலைமுறையினரும் சீமைக்கருவேல மரங்களை அழித்தொழிக்கும் பணியிலும், அதன் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் நமக்கு உணவளிக்கும் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com