தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஜனநாயகம் தடுமாறும்போது...

ஜனநாயகம் தடுமாறும் போதெல்லாம் அதற்கு துணைநின்று, ஊடகம் உள்ளிட்ட அமைப்புகள், தங்களின் ஜனநாயகக் கடமையை உரிய நேரத்தில் செய்வார்கள் என்ற நம்பிக்கை வீண் போகாது.

News image
Updated On :19 மார்ச் 2026, 1:05 am

பெ. கண்ணப்பன் ஐபிஎஸ்

உலக நாடுகளிலே மிகப் பெரிய ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இந்திய நாட்டின் அரசமைப்பின் முன்னுரையில் சமூக நீதியைக் கடைப்பிடிக்கும், மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுவது நேர்மையான தேர்தல் நடைமுறைகள், ஊழலற்ற சட்டத்தின் ஆட்சி, அரசியல் சார்பற்ற நீதித்துறை, ஊடகச் சுதந்திரம், அரசியலில் அதிகமான மக்கள் பங்கேற்பு ஆகியவையாகும்.

அறிவியல், உற்பத்தி மற்றும் பொருளாதாரத் துறைகளில் பல உலக நாடுகள் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ள இன்றைய காலகட்டத்தில், ஜனநாயக மாண்புகள் உலக நாடுகளில் போற்றப்படுகின்றனவா? என்பது குறித்துப் பார்ப்போம்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு உலக அரசியல், பொருளாதாரம், வணிகம், அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து துல்லியமான மற்றும் சுயாதீனமாக ஆய்வுகளை "தி எகனாமிஸ்ட் குரூப்' என்ற சர்வதேச ஊடக மற்றும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சர்வதேச நிறுவனத்தின் ஓர் அங்கமான "எகனாமிஸ்ட் நுண்ணறிவுப் பிரிவு' 1946-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது உலக நாடுகளில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள், ஊடகச் சுதந்திரம், அரசியலில் குடிமக்களின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு ஜனநாயகப் பண்புகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொள்கிறது. அதன் அடிப்படையில், ஒவ்வோர் நாட்டிலும் நிலவிவரும் ஜனநாயகத் தன்மையை மதிப்பீடு செய்ய "ஜனநாயகக் குறியீடு' என்ற எண்ணை 2006-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

இந்த ஜனநாயகக் குறியீடானது 0 முதல் 10 வரை உள்ள அளவுகோலைக் கொண்டதாகும். ஜனநாயகக் குறியீடு 8 முதல் 10 வரை உள்ள நாடுகள் "முழுமையான ஜனநாயக நாடுகள்' என்றும், 6 முதல் 7.9 வரையிலான ஜனநாயகக் குறியீட்டைக் கொண்ட நாடுகள் "குறைபாடுகளுடன் கூடிய ஜனநாயக நாடுகள்' என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. அவற்றில் 167 நாடுகளில் 2024-ஆம் ஆண்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த நாடுகளுக்கான ஜனநாயகக் குறியீடு தொடர்பான அறிக்கை 2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின்படி,

25 நாடுகளில் முழுமையான ஜனநாயகமும், 46 நாடுகளில் குறைபாடுகள் உள்ள ஜனநாயகமும் நிலவுகிறது என ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. ஏனைய நாடுகளில் ஜனநாயகமில்லாத அல்லது பலவீனமான ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. உலக நாடுகளில் 36% நாடுகளில்தான் ஜனநாயகத்தன்மை கொண்ட ஆட்சி நடைபெறுகிறது என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஜனநாயகக் குறியீடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பார்ப்போம். 2010-ஆம் ஆண்டில் 8.15-ஆக இருந்த இந்தியாவின் ஜனநாயகக் குறியீடு, 2024-ஆம் ஆண்டில்

7.81-ஆகக் குறைந்துள்ளது. அதாவது "ஜனநாயக நாடு' என்ற தரத்திலிருந்து, "குறைபாடுகளுடைய ஜனநாயக நாடு' என்ற நிலையை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கியுள்ளது என்பதை இந்த ஆய்வுகள் உணர்த்துகின்றன.

ஜனநாயக மாண்புகள் இந்தியாவில் குறைந்து வருகிறது என்ற இந்த ஆய்வின் முடிவு, இந்திய குடிமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். அது மட்டுமின்றி, உலக நாடுகளிடையே "நடுநிலையான நாடு' என இந்தியா பெற்றிருந்த நன்மதிப்பு குறைந்துவிடுமோ என்ற அச்சமும் இந்திய குடிமக்களுக்கு ஏற்படுகிறது.

இந்தியாவின் ஜனநாயகக் குறியீடு குறைந்து வருவதற்கான காரணங்கள் என இந்த ஆய்வு கண்டறிந்த காரணங்களில் முக்கியமானவை} குடிமக்களின் கருத்துரிமை, போராட்ட உரிமை உள்ளிட்ட சிவில் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகளும், அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருவது; மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பைச் சேதப்படுத்தி, சிறுபான்மையினரின் உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்பாடுகள்; ஊடகங்கள் மீதான அழுத்தம்; புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம் போன்ற அரசு நிறுவனங்களின் பலவீனமான செயல்பாடுகள்; அரசு நிர்வாகத்தில் அதிகரித்துவரும் ஊழல்.

இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு அம்சங்களாகக் கருதப்படும் தேசிய ஒருமைப்பாடும், மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கூட்டாட்சி முறையும் அண்மைக்காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்தியாவின் ஜனநாயகக் குறியீடுகள் குறைந்து வருவதற்கான காரணங்களில் இவையும் முக்கியமானவை ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் எகனாமிஸ்ட் நுண்ணறிவுப் பிரிவு உலக நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்டுள்ள ஜனநாயகக் குறியீடுகள், ஜனநாயகத்தை நேசிக்கும் மனித சமூகத்துக்கு அதிர்ச்சி அளிக்கின்றன. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, ஸ்பெயின், சிலி போன்ற நாடுகளும் "முழுமையான ஜனநாயக நாடுகள்' என்ற நிலையிலிருந்து "குறைபாடுகளுடைய ஜனநாயக நாடுகள்' என்ற நிலைக்குத் தாழ்ந்துள்ளன என்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

உலக அளவில் ஜனநாயகச் சரிவு மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை இழத்தல், நிலையற்ற அரசியல் சூழல், அரசு நிர்வாகத்தில் ஊழல் அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி பின்னடைவு போன்ற அபாய சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மக்கள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் "தேர்தல் ஜனநாயகம்' வழங்குகிறது. தேர்தல்மூலம் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, அரசு அமைப்பதால் மட்டும், அந்த நாட்டில் முழுமையான ஜனநாயகம் நிலவுகிறது என்று கருத முடியாது.

நேர்மையுடன் கூடிய சுதந்திரமான தேர்தல் நடைமுறைகள், தேர்தல் களத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊதுகுழலாக இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும் ஊடகங்கள், விலை போகாத வாக்குகள் உள்ளிட்ட ஜனநாயக அம்சங்கள் சீர்குலையாதபடி நடத்தப்படும் தேர்தல்கள் ஒரு நாட்டில் "முழுமையான ஜனநாயகம்' நிலைபெற வழிவகுக்கும்.

ஆங்கிலேய காலனி ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை அடைந்தபோது, முழுமையான ஜனநாயக நாடாக இந்தியா திகழ வேண்டும் என்பதை அடித்தளமாகக் கொண்டு, இந்தியாவுக்கான அரசமைப்பு வடிவமைக்கப்பட்டது. காலப்போக்கில், முழுமையான ஜனநாயகத்தில் இருந்து இந்தியா சரிந்து வருகிற நிலையை அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும், தேர்தல் நடைமுறைகளும் ஏற்படுத்தி வருவதைக் காணமுடிகிறது.

வாக்காளர்களை அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ளும் விதம் குறித்த ஆய்வுகள் ஆர்வமூட்டும் பல தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களுக்கு உணவு அளிப்பதில் தொடங்கி, ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், பெண்கள் அணியும் சிறு சிறு தங்க, வெள்ளி நகைகள்,

கிராமக் கோயில்களுக்கு நன்கொடை, வாக்காளர்களுக்கு பணம் என ஒவ்வொரு தேர்தலுக்கும் புதுப்புது வியூகத்தை அரசியல் கட்சிகள் வகுத்தன. இத்தகைய தேர்தல் வியூகங்கள் ஜனநாயகத்தைப் பின்னுக்குத் தள்ளினாலும், பணம் செலவழித்த வேட்பாளர்களுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கச் செய்தது.

தேர்தல் ஜனநாயகத்தின் புதிய பரிணாமம் தற்போது நம் நாட்டில் வெளிப்படுகிறது. வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தங்களது சொந்த பணக் குவியலில் இருந்து வேட்பாளர்களுக்கு தேர்தல் வெகுமதிகள் வழங்குவதற்குப் பதிலாக, பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் ஆளும் கட்சி, தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பாக, மாநிலத்திலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்குகளில் ஆயிரக்கணக்கான பணத்தை அரசு நிதியிலிருந்து பணமாற்ற பரிவர்த்தனைகளைச் செய்து, தேர்தல்களை எதிர்கொள்ளும் புதுவகையான ஜனநாயகத்தை நோக்கி நம் நாடு நகரத் தொடங்கியுள்ளது.

வளர்ந்து வரும் நம் நாட்டில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு இலவமாகக் கொடுப்பதற்கு எவரும் உள்நோக்கம் கற்பிக்க மாட்டார்கள். ஆனால், தேர்தலை எதிர்கொள்ளும் தருணத்தில், அரசு நிதியிலிருந்து பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை அனைத்து வாக்காளர்களுக்கும் அவரவர் வங்கிக் கணக்குகளில் பதிவேற்றம் செய்திருப்பது குறைபாடுகளுடைய ஜனநாயகத்தை நோக்கி நம் நாடு வேகமாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளதை உணர்த்துகிறது.

ஜனநாயகம் தடுமாறும் போதெல்லாம் அதற்கு துணைநின்று, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் பெரும் பொறுப்புடைய தேர்தல் ஆணையம், நீதித் துறை, ஊடகம் உள்ளிட்ட அமைப்புகள், தங்களின் ஜனநாயகக் கடமையை உரிய நேரத்தில் செய்வார்கள் என்ற ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண் போகாது.

கட்டுரையாளர்:

முன்னாள் காவல் துறை உயரதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.