8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தொடங்கியது தேர்தல் திருவிழா !

மக்கள்தொகைதான் இந்தியாவின் பலம்; அதில் இளைஞர் சக்தி கூடுதல் பலம். வாக்கு எண்ணிக்கையான மே 4-ஆம் தேதி இந்த சக்தியின் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

<P>18/03/2026,TN,CHENNAI: Standalone/ Election merchandise floods the market ahead of the upcoming Assembly polls, with a shop at Broadway Market disp
Published On :19 மார்ச் 2026, 6:30 am IST

இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் தேர்தல்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. உலகின் மிக அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, ஒரு ஜனநாயக நாடாக வலிமையுடன் தொடர்வதற்கு சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்கள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படுவதுதான் பிரதான காரணம். உலகையே ஸ்தம்பிக்க வைத்த கரோனா அச்சுறுத்தலின் தாக்கம் முற்றிலும் விலகாத சூழலில்கூட இந்தியாவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் தடையின்றி நடத்தப்பட்டது அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸôம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதன்மூலம் இன்னொரு ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகின்றனர் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்கள்.

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த (எஸ்ஐஆர்) பணிக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு ஒரே காலகட்டத்தில் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

எஸ்ஐஆர் பணிக்கு தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததும் தேர்தல் முக்கியத்துவம் பெறுவதற்கான கூடுதல் காரணம். தமிழகத்தில் 5.67 கோடி பேரும், மேற்கு வங்கத்தில் 6.44 கோடி பேரும், கேரளத்தில் 2.70 கோடி பேரும், அஸ்ஸôமில் 2.25 கோடி பேரும், புதுச்சேரியில் 9.44 லட்சம் பேரும் வாக்காளர் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் என இப்போதைக்கு நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. எஸ்ஐஆர் பணிக்குப் பிறகான வாக்காளர் இறுதிப் பட்டியலின்படி தமிழகத்தில் சுமார் 74 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன.

இதனால், வரும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில் கடந்த தேர்தலைவிட அவை நிச்சயம் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் நான்காவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் களமிறங்குகிறது. அங்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் சவாலை அளிக்கக் காத்திருக்கிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது நடைபெற்ற கலவரங்களைத் தடுப்பதற்குத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மத்திய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

கடந்த முறை எட்டு கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

தேர்தல் வன்முறைக்குப் பெயர் பெற்ற மேற்கு வங்கத்தில் போதிய பாதுகாப்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்த முடியும் என்பதுதான், பல கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதற்குக் காரணம். இந்த முறை ஏற்கெனவே அதிக அளவிலான மத்திய படைகள் வரவழைக்கப்பட்டுவிட்டதால், இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் கோரியதையடுத்து, இரண்டுகட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2001}க்குப் பிறகு மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டத் தேர்தல் இப்போதுதான் நடைபெறுகிறது.

அஸ்ஸாமில் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெறுவதற்கு தனி நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் அந்த மாநில மக்களின் குடியுரிமையை சரிபார்க்கும் நடவடிக்கை நிறைவடையாததால், அந்த மாநிலத்துக்கு மட்டும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பதிலாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பணி மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸýம் நேருக்கு நேர் மோதுகின்றன.

புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் பாஜக, அதிமுக இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகளுடன் எதிரணி களம் காண்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. முதல்வர் ரங்கசாமி தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வாரா, ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்பாரா என்கிற கேள்விகளை எதிர்கொள்கிறது புதுச்சேரி. அதேபோல புதுச்சேரியைக் கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது திமுகவுடன் கூட்டணி அமைத்துக் களம் காண இருக்கும் காங்கிரஸ்.

கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) என மூன்று அணிகள் களம் காண்கின்றன. அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்ற கணிசமான வெற்றியால், சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்தக் கட்சி கவனத்தை ஈர்த்திருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஆளும் எல்டிஎஃப் கூட்டணி தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் 81 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன.

"உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கடமையான வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றப்போகும் தருணத்தில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். இந்த மாபெரும் ஜனநாயகப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று உங்கள் வாக்கை பெருமையுடனும், நம்பிக்கையுடனும், பொறுப்புடனும் செலுத்த வேண்டும். உங்கள் மாநிலத்தின், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உங்கள் வாக்கு முக்கிய இடம்பெறும்' என தேர்தல் தேதியை அறிவிக்கும்போது, முதல் முறை வாக்காளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள்தொகைதான் இந்தியாவின் பலம்; அதில் இளைஞர் சக்தி கூடுதல் பலம். வாக்கு எண்ணிக்கையான மே 4-ஆம் தேதி இந்த சக்தியின் வீரியத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.