இப்போதா, அப்போதா என்று கடந்த இரண்டு வாரங்களாகவே காத்திருந்த மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதியும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசம், கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதியும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டு தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மே மாதம் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் 234, கேரளத்தில் 140, புதுச்சேரியில் 30, அஸ்ஸாமில் 126, மேற்கு வங்கத்தில் 294 என மொத்தம் 824 சட்டப்பேரவைத் தொகுதிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் ஐந்து மாநிலங்களிலும் உள்ள 824 பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக சுமார் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். இதற்காக 2.19 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 25 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.
தேர்தல் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, கனடா ஆகிய ஐந்து நாடுகளின் மக்கள்தொகையைக் கூட்டினால் கிடைக்கும் எண்ணிக்கையைவிட அதிகம் எனும்போது, இந்தியத் தேர்தலின் பிரம்மாண்டத்தை நாம் உணர முடியும். அதனால்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்கிற தனிச்சிறப்பை இந்தியா பெறுகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலின்போதும், அதன் வெளிப்படைத்தன்மையைப் பார்வையிட வளர்ந்த பல வெளிநாட்டுத் தேர்தல் ஆணையப் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக அழைக்கப்படுவது வழக்கம். இந்தச் சுற்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் 20 நாடுகளின் தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வெளிப்படைத்தன்மையுடன் தேர்தல் நடத்தப்படுகிறதா, தேர்தல் ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன உள்ளிட்டவற்றை அவர்கள் நேரடியாக ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த (எஸ்.ஐ.ஆர்) பணிக்குப் பின்னர் முதல்முறையாகக் கடந்த ஆண்டு பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதும், ஐந்து மாநிலங்கள் இந்தச் சுற்றில் இடம்பெறுகின்றன என்பதும் முக்கியத்துவத்தை அதிகரிக்கின்றன.
நடைபெற இருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியைவிட, எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸின் எதிர்காலத்துக்கு மிக மிக முக்கியமானதாக இருக்கும். காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணியின் வலிமைக்கும், தலைமைக்கும்கூட சவாலாக இருக்கக்கூடும்.
தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்களில் மூன்று மாநில வாக்காளர்கள் தொடர்ந்து பாஜகவின் வளர்ச்சிக்குத் தடையாகத் தொடர்கின்றனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த தேர்தலில் கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் மூன்றிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் வெற்றிபெற முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணி தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் நிலையில், இந்தச் சுற்றுத் தேர்தல் முக்கியத்துவம் பெறுவதில் வியப்பில்லை.
தேசியக் கட்சியான காங்கிரஸைவிட, 'இண்டி' கூட்டணியில் இணைந்துள்ள எதிர்க்கட்சிகளான தமிழகத்தின் திமுக, மேற்கு வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ், கேரளத்தின் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆகியவற்றுக்கு தங்களது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. தனிப்பட்ட செல்வாக்காலும், மாநில அரசியல் சூழலாலும் மக்கள் நலத் திட்டத்தாலும் மாநிலக் கட்சிகள் இந்த முறையும் பாஜகவையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் தடுத்து நிறுத்த முடியுமா என்பதை முடிவுகள்தான் தெரியப்படுத்தும்.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை மேற்கு வங்கம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி தோல்விகள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், அஸ்ஸாம், கேரளம் மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றாமல் மூன்றாவது முறையாகவும் நழுவ விட்டால், தேசிய அளவில் அதன் தலைமை கேள்விக்குறியாகிவிடும். ஹரியாணா, மகாராஷ்டிரம், தில்லி, பிகார் என்று தொடர்ச்சியாகத் தோல்வியை மட்டுமே தழுவி வரும் காங்கிரஸ் குறைந்தபட்சம் அஸ்ஸாம் அல்லது கேரளத்திலாவது ஆட்சியைக் கைப்பற்றாமல் போனால், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் தலைமைப் பண்பு குறித்த சந்தேகம் மேலும் வலுப்பெறும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி புதுச்சேரியையும், அஸ்ஸாமையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும். தமிழகம், கேரளத்தில் இரட்டை இலக்க வெற்றியுடன் தடம் பதிக்க வேண்டும்.
காங்கிரஸுக்கு சவால்; பாஜகவுக்கு வாய்ப்பு: மாநிலக் கட்சிகளுக்கு எதிர்காலம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 , 29-ல் வாக்குப்பதிவு!

ஏப். 23-ல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! மே 4 - வாக்கு எண்ணிக்கை!
மார்ச் 1-ல் தவெக செயல் வீரர்கள் கூட்டம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

