ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மோடி vs மமதா! மேற்கு வங்கத்தில் 4-வது முறையாக ஆட்சியமைப்பாரா மமதா?

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம் மற்றும் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பற்றி...

News image

பிரதமர் மோடி, முதல்வர் மமதா பானர்ஜி

Updated On :21 மார்ச் 2026, 10:49 am

எம். முத்துமாரி

மேற்கு வங்கத்தில் ஆளும் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள பாஜகவுக்கும், இம்முறை தனித்தனியே போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய இடதுசாரி முன்னணி என நான்கு முனைப் போட்டி நிலவினாலும் முதல்வர் மமதாவுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையேயான நேரடித் தேர்தலாகவே இது பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் சேர்த்து மேற்கு வங்கத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

மமதா பானர்ஜி

மமதா பானர்ஜி

திரிணமூல் காங்கிரஸ்

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிரடியாக ஒரேகட்டமாக 291 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார். மற்ற 3 தொகுதிகள் கூட்டணியில் உள்ள அனித் தாபாவின் பாரதிய கூர்கா பிரஜாதந்திர மோர்ச்சாவுக்கு (BGPM) ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சி 2011, 2016, 2021 தேர்தல்களில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியில் உள்ளது. தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைத்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் மமதா செயல்பட்டு வருகிறார். 2016ல் 211 இடங்களிலும் 2021ல் 215 இடங்களிலும் வெற்றி பெற்ற திரிணமூல் கட்சி வரும் தேர்தலில் 226 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெறும் என்று கூறி வருகிறார்.

இதற்காக போட்டியில் உள்ள பாஜகவுக்கு எதிராக அவர் கையில் எடுத்துள்ள முதல் அஸ்திரம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்). மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அலுவலர்கள் இறப்பு, வாக்காளர் பட்டியலில் இருந்து 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கம், மேலும் 60 லட்சம் வாக்காளர்கள் நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, உயிரோடுள்ளவர்கள் இறந்தவர்களாக, அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது என பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

அதிலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மேற்கு வங்கத்தில் 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதைக் கடுமையாக விமர்சிக்கிறார். மேற்கு வங்கத்தில் 'அறிவிக்கப்படாத அவசர நிலை' என்றும் 'குடியரசுத் தலைவர் ஆட்சித் திணிப்பு' என்றும் தேர்தல் ஆணையத்தையும் மத்திய பாஜக அரசையும் சாடியுள்ளார் (பாஜக அல்லாத ஆளும் மாநிலங்கள், முதலில் எஸ்ஐஆரை எதிர்த்ததோடு நின்றுவிட்ட நிலையில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனம் செய்து வருகிறார் மமதா).

மமதா பானர்ஜி

மமதா பானர்ஜி

ஒரு வலிமை மிகுந்த பெண் தலைவராகவும் குறிப்பாக மத்திய பாஜக அரசை எதிர்க்கும் நாட்டின் முக்கிய தலைவராக மேற்கு வங்க மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ளார் இவர். மேற்கு வங்கத்துக்கும் தில்லியில் மத்திய பாஜக அரசுக்குமான தேர்தல் என்பதை மக்களிடம் முன்னெடுக்கிறார். மாதம் ரூ. 1,000 உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்களினால் பெண்களின் வாக்குகள் கணிசமாக அவருக்கு கிடைக்கும், தலித் மற்றும் பழங்குடியினருக்கான திட்டங்கள், சிறுபான்மையினர் ஆதரவு உள்ளிட்டவையும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது. 'மேற்கு வங்கத்தின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான போர்' என்று மக்களிடையே பிரசாரத்தை முன்வைக்கிறார் மமதா.

அதேநேரத்தில் மேற்குவங்கத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை - கொலை செய்யப்பட்டது, ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் உள்ளிட்டவை மமதாவுக்கு எதிராக இருக்கிறது. இந்த 15 ஆண்டு கால ஆட்சியில் மேற்கு வங்கத்தில் வேலைவாய்ப்பு, தொழில் துறை உள்ளிட்டவற்றுக்கு மமதா முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அதேபோல, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 74 எம்எல்ஏக்களுக்கு (சில முன்னாள் அமைச்சர்கள் உள்பட) வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காதது கட்சியினரிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. ராஜ்கஞ்ச் தொகுதி எம்எல்ஏ ககேஸ்வர் ராய் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பதிலாக அனைத்து சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, 52 பெண்களுக்கு, 95 எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த 47 பேருக்கு இம்முறை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக

பாஜக கடந்த 2016 தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில் தனது தீவிரப் பிரசாரத்தால் கடந்த 2021 தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி எதிர்க்கட்சி அந்தஸதைப் பெற்றது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மமதாவுக்கு எதிரான பிரச்னைகளைக் கையில் எடுத்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பொதுக்கூட்ட மேடைகளிலும், பாஜகவின் சுவேந்து அதிகாரி வீடு, வீடாகச் சென்றும் பிரசாரம் செய்வதன் பலன், வரும் தேர்தல் முடிவுகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் குறிப்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இன்று மேற்கு வங்கத்தில் பாஜகவின் முகமாக இருக்கும், மமதாவை எதிர்க்கும் துணிச்சல் கொண்ட சுவேந்து அதிகாரி, திரிணமூலுக்கு முக்கிய சவாலாக இருக்கிறார். கடந்த 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மமதாவை சுவேந்து அதிகாரி தோற்கடித்தது வரலாற்றில் முக்கியமானது (பவானிபூர் தொகுதியில் மமதா வெற்றி பெற்றதால் அவர் தன் செல்வாக்கைத் தக்கவைத்தார்). இப்போது மமதா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவில் சுவேந்து அதிகாரி அல்லாமல் வேறு பிரபல முகம் இல்லாதது பாஜகவுக்கு பின்னடைவே.

சுவேந்து அதிகாரி

சுவேந்து அதிகாரி

ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் பாஜக சார்பில் 'பனிஹதி' தொகுதியில் போட்டியிட முயற்சிகள் நடக்கிறது என்பது கூடுதல் தகவல்.

அதேபோல மதுவா, ராஜபன்சி, குர்மி போன்ற இந்து சமூகங்களை குறிவைத்து பாஜக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

(மேற்காசியப் போரால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, ப்ரீமியம் பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள், பாஜகவுக்கு எதிரான மனநிலையை மக்களிடம் உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது மேற்குவங்கத்தில் மட்டுமின்றி 5 மாநிலத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே கூறப்படுகிறது)

காங்கிரஸ்

2016 தேர்தலில் காங்கிரஸ் 44 இடங்களில் வென்ற நிலையில் 2021 தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. உள்ளூர் அளவில் போதிய பிரசாரம் இல்லாதது, வலுவான தலைமை இல்லாதது உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியின் பலவீனமாக உள்ளது. இந்த முறை இடதுசாரி கூட்டணியின்றி காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் பலம் இந்த தேர்தலில் முழுமையாகத் தெரிய வரும்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இடதுசாரி முன்னணி

அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2016 தேர்தலில் 27 இடங்களில் வென்ற நிலையில் கடந்த தேர்தலில் ஒரு இடத்தைக்கூட கைப்பற்றவில்லை. பழமையான கட்சி என்ற முறையில் தீவிர பிரசாரம், தலைமையை வலுப்படுத்துவது, இளைஞர்களைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது என செய்தால் கம்யூனிஸ்ட் கட்சி வரும் தேர்தலில் குறிப்பிட்ட இடங்களைப் பெற வாய்ப்புள்ளது.

சிறுபான்மையினர் தொகுதிகள்

மேற்குவங்கத்தில் 50%-க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் சுமார் 80 ஆகும். முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட தொகுதிகள் திரிணமூலுக்கு சாதகமாக உள்ளதால் பாஜகவுக்கு இந்த தொகுதிகள் சவாலானதாக இருக்கும். சிறுபான்மையினர் தொகுதிகளில் காங்கிரஸ், இடதுசாரி முன்னணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

யாருக்கு வாய்ப்பு?

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டாலும் இந்த தேர்தல் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையேயான தேர்தலாகவே கருதப்படுகிறது.

மமதா பானர்ஜி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துவிட்டார். பெண்களுக்கு, பட்டியலினத்தோருக்கு, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனி வீடு, குடிநீர் இணைப்பு, கல்வி மற்றும் மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பாஜகவும் விரைவில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட உள்ளது. பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மமதா பானர்ஜி

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மமதா பானர்ஜி

3 முறை மம்தாவுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டதால் மக்கள் இந்த முறை பாஜகவை தேர்வு செய்ய வாய்ப்பிருந்தாலும் அது அவ்வளவு சாதாரணமானது அல்ல. 77 தொகுதிகளில் இருந்து நேரடியாக 200க்கும் அதிகமாக தொகுதிகள் பெறுவது என்பது பாஜகவுக்கு சவால்தான். இம்முறை 100லிருந்து 120 தொகுதிகள் வரை பாஜக பெறும் என்கின்றன கருத்துக்கணிப்புகள்.

முன்பு சொன்னதுபோல வலுவான தலைமை, 3 முறை ஆட்சி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்கு ஆகியவற்றால் திரிணமூல் காங்கிரஸின் மமதா, 4 ஆவது முறையாக ஆட்சியமைக்கவே வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அப்படி மமதா 4 ஆவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்தால் அது வரலாற்று வெற்றியாக இருக்கும்.

மமதா மீண்டும் அரியணை ஏறுவாரா? அல்லது பல மாநிலங்களைக் கைப்பற்றி வரும் பாஜக முதல்முறையாக மேற்கு வங்கத்தையும் கைப்பற்றி அதிர்ச்சி கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.