நிதிநிலை அறிக்கையும் சிறு, குறு தொழில்துறையும்

இந்தியப் பொருளாதாரத்தில் புரையோடி, அதன் அடித்தளத்தை அரித்துக்கொண்டிருந்த கருப்புப் பண ஒழிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளில், உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை முக்கியமான ஒன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
Updated on
3 min read

இந்தியப் பொருளாதாரத்தில் புரையோடி, அதன் அடித்தளத்தை அரித்துக்கொண்டிருந்த கருப்புப் பண ஒழிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளில், உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை முக்கியமான ஒன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால்,
நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பாக செயல்படும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் பண நீக்கு நடவடிக்கை, இடியாக இறங்கியது. 30 கோடிக்கு பேருக்கு மேல் ஈடுபட்டிருக்கும் அத்துறை, பெரும்பாலும் ரொக்க பண பரிமாற்றத்தை சார்ந்திருந்தது.
பண சுழற்சி குறைபாட்டினால், இத்துறையில் பல தொழிலகங்கள் பாதிக்கப்பட்டு, அத்துயரத்திலிருந்து மீள முடியாமல் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன. இதனால், அத்துறையை சார்ந்திருக்கும் பல குடும்பங்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இவர்களின் இடர்ப்பாடுகளை குறைக்கும் நடவடிக்கையாக, வங்கி கடன் தவணைகளை திருப்பி செலுத்தும் காலத்தை, 90 நாள்கள் வரை ரிசர்வ் வங்கி நீடித்து உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், வழங்கப்பட்ட சலுகை காலத்துக்குள், கடனாளிகள் கடனை திருப்பி செலுத்த முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான்.
குறுகிய காலத்தில் இழந்த வியாபாரம் மற்றும் பொருள் இழப்பை ஈடு கட்ட, இத்துறையினருக்கு பல மாதங்கள் தேவைப்படும் என்றே தோன்றுகிறது. அதற்கேற்ப, நடைமுறைத் தேவைகளை புரிந்து கொண்டு, மீண்டும் அத்துறையினர், பொருளாதார இடர்ப்பாடுகளிலிருந்து மீண்டு வர, ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் செயல் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.
இல்லையென்றால், இத்துறை சார்ந்த வாராக்கடன் பெருகிவிடும் அபாயம் காத்து நிற்கிறது. இது வங்கிகளின் வியாபாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்
படுத்தும்.
மேலும், சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், 50 கோடி ரூபாய்க்கு கீழ் வர்த்தகம் செய்யும் சிறு, குறுதொழில் நிறுவனங்களுக்கு வருமான வரி 30-லிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்துறையில் நாடு முழுவதும் செயல்படும் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட, சிறு, குறுதொழில் நிறுவனங்களில், சுமார் இரண்டு சதவீதம் வரையிலான நிறுவனங்கள்தான் வருமான வரி செலுத்துகின்றன.
ஆகையால், இத்தகைய வரிச்சலுகைகள், துறை சார்ந்த நிறுவனங்களை, சமீபத்திய பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீட்க உதவ போவதில்லை என்ற பரவலான கருத்து நிலவுகிறது. அதற்கு பதில், மூலப்பொருள்களின் விலையை குறைக்க வழி செய்யும், கலால் மற்றும் சுங்கம் போன்ற மறைமுக வரிகளை குறைத்திருந்தால், பெரும்பாலானவர்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
அரசாங்கத்தின் திடீர் செயல்பாடுகளால், பாதிக்கப்பட்ட துறைக்கு தேவையான நிவாரணத்தை தக்க சமயத்தில், துல்லியமாக கணித்து வழங்கும் வாய்ப்பை அரசாங்கம் தவற விட்டுவிட்டது. சலுகைகளை வழங்காமல் மிச்சப்படுத்தப்பட்ட வரிப்பணத்தில், 4 லட்சம் கோடி ரூபாயை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், 64 ஆயிரம் கோடி ரூபாயை சாலைகள் மேம்பாட்டு திட்டத்திற்கும் பயன்படுத்தப்போவதாக தெரிகிறது.
இந்த செலவுகளின் பலன், சிறு, குறு தொழில் துறையினருக்கு நீண்ட கால அடிப்படையில் பயனுள்ளதாக அமையும் என்பது ஒரு ஆறுதலான விஷய
மாகும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், வங்கிகளுக்கு வந்து சேர்ந்திருக்கும் தொகையின் அளவை, நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இதுவரை வெளியிடவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, செல்லாது என்ற அறிவிப்பு மூலம் முடக்கப்பட்ட தொகையில் 96 சதவீதம் வரை, வங்கி கணக்குகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
கருப்பு பண பதுக்கல்காரர்கள், அரசாங்கத்தை விட வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு, தங்களிடமிருந்த பெரும்பாலான கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிவிட்டனர். நள்ளிரவில் நகை கொள்முதல் செய்தது முதல், ஜன்தன் கணக்காளர்களை பயன்படுத்தியது வரை, அவர்களுடைய புத்திசாலித்தனம் நீண்டிருக்கிறது.
ஆனால், அத்தகையவர்களை இனம் கண்டு, அவர்களை வருமான வரி வலைக்குள் கொண்டு வர இது உதவியாக இருக்கும். எண்ணிக்கையை கணக்கில் கொண்டால், இந்த கிளை நடவடிக்கை ஒரு நீண்ட கால செயல்பாடாகத்தான் தோன்றுகிறது.
நகைக் கடை வியாபாரிகளின் விற்பனை பெரும்பாலும் ரொக்க முறையில்தான் நடைபெறுகிறது. ஆகவே, அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் தொகை, பெரும்பாலும், உச்சவரம்பு எதுவுமின்றி ரொக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த டெபாசிட்டுகளில், விற்பனை சாராத தொகைகளையும் உள் அடக்கி, கருப்பை வெள்ளை ஆக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நகை கடைகளை தவிர, பெட்ரோல் பங்குகள், சினிமா தியேட்டர்கள் ஆகிய தொழில்களுக்கும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இம்மாதிரி நடைமுறைகளில் உள்ள ஓட்டைகள் வழியாக, கருப்புப் பணம் மீண்டும், பொருளாதாரத்தில் புக வழி வகுத்திடாமல் பாதுகாப்பு அரண் அமைப்பது, அரசாங்கத்தின் கடமையாகும்.
கடந்த காலாண்டு மற்றும் நடப்பு காலாண்டில், நாட்டின் மொத்த தொழில் உற்பத்தி, 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் முக்கிய பக்க விளைவுகளில் ஒன்றாக இதை கருதலாம்.
மேல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வலுவான பொருளாதார முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய பலம் வாய்ந்ததாக பண மதிப்பு நீக்க நடவடிக்கை அமைந்துவிட்டது எனலாம்.
இதே அடிப்படையில், சர்வதேச நிதியகம் (ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் ஙர்ய்ங்ற்ஹழ்ஹ் ஊன்ய்க்) தன் பொருளாதார அறிக்கையில், இந்தியாவின் மொத்த தொழில் உற்பத்தியை 7.6 சதவீதத்திலிருந்து 6.6 சதவீதமாக குறைத்து மதிப்பிட்டிருக்கிறது. 1 சதவீத மொத்த தொழில் உற்பத்தி குறைவு என்பது, சுமார் 1.50 லட்சம் கோடிகளை விழுங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதனுடைய பக்க விளைவுகளான, வங்கி கடன் வளர்ச்சியில் தேக்கம், வேலைவாய்ப்பின்மை, தனி மனித வருமான இழப்பு, உற்பத்தி பொருள்களை வாங்கும் திறன் குறைவு ஆகிய சங்கிலித் தொடர் நிகழ்ச்சிகளை நாடு சந்திக்க நேரிடும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம், இதுவரை வரி வலைக்குள் சிக்காதவர்களை இழுத்து, அந்த வரி வசூல் மூலம் அரசாங்கத்தின் வருவாய் உயர்ந்து, வரவு - செலவு கணக்கின் இடைவெளி குறைந்தால், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர அது வழிவகுக்கும்.
அதனால், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களின் விலை குறைவு, உற்பத்தியை ஊக்குவிக்கும். இம்மாதிரி பொருளாதார நிகழ்வுகள் மூலம், இழந்த தொழில் உற்பத்தி மதிப்பீட்டிற்கு மேலாக அதை உயர்த்தி விடலாம் என்பது நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இதற்கு ஊழல் காற்று புகாத நேர்மையான அரசு நிர்வாகம் முக்கிய தேவையாகும்.
ரொக்கம் தவிர்த்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை (ஈண்ஞ்ண்ற்ஹப் ல்ஹஹ்ம்ங்ய்ற்ள்) என்ற சித்தாந்தம், பண நீக்க நடவடிக்கைகளின் பக்க விளைவுகளுக்கு பிறந்த ஒரு குழந்தை என சொல்லலாம். இது கருப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்றாலும், அம்மாதிரி நடைமுறைகளுக்கு உடனடியாக மாறுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும்.
உதாரணமாக, இந்த நடைமுறைக்கு உடனடியாக தேவைப்படும் சுமார் 2 கோடி தேய்ப்பு இயந்திரங்களில் (ள்ஜ்ண்ல்ண்ய்ஞ் ம்ஹஸ்ரீட்ண்ய்ங்ள்), 15 லட்சம் இயந்திரங்கள்தான் தற்போது புழக்கத்தில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தும் முறை மற்றும் அதற்கான செலவுகள் பற்றி, வியாபார துறையினர் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
இந்த நடைமுறையில், பொருள்கள் வாங்குவோரின் கட்டண சுமை அதிகரிக்கக் கூடாது. ஆனால், கடந்த ஜனவரி முதல் வாரம் வரை, இந்த நடைமுறையில் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த மின் வாரியம் உள்பட, அனைத்து துறையினரும், தற்போது 1 முதல் 2 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஆகவே, இந்த நடைமுறைக்கு மாறுவதற்கான, இணைய வசதி உள்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அமைக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பயணாளிகளுக்கு வழங்கப்படும் வெறும் பரிசுகளால் மட்டும் இதை சாதித்து விடமுடியாது.
நாட்டின் 80 சதவீத செல்வத்தை, 20 சதவீதத்தினர் மட்டும்தான் ஆளுமை செய்கின்றனர். ஆகவே, நாட்டு மக்களுக்கு சொல்லப்படும் பொருளாதார புத்திமதிகள் பல நிலைகளில் நாட்டை நிர்வகிப்போரால் பின்பற்றப்படுகின்றன என்ற உறுதி மொழியை, சாதாரண குடிமகன் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.
அதற்கான களையெடுப்பு முயற்சிகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், அரசு நடவடிக்கைகளில் சாதாரண குடிமகனுக்கு நம்பிக்கை பிறக்கும்.
கருப்புப் பணமற்ற பொருளாதாரம் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு கனவுதான். அந்த கனவை நனவாக்கும் முதல் கட்ட நடவடிக்கைதான் உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கை.
ஆனால், அந்த ஒரு நடவடிக்கையால் மட்டும் கருப்புப் பண புழக்கத்தை ஒழித்து விடமுடியாது. இதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கையிலும், சாதாரண குடிமகன் பாதிக்கப்பட்டுவிடாமல் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com