தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நனவாக வேண்டிய கனவு

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடக்கும் மட்டைப் பந்துப் போட்டிகளை மகாபாரத யுத்தமாகவே பார்த்துப் பழகிப்போன

News image
Updated On :6 ஜூலை 2017, 8:42 pm

சொ. அருணன்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடக்கும் மட்டைப் பந்துப் போட்டிகளை மகாபாரத யுத்தமாகவே பார்த்துப் பழகிப்போன இரசிகர்கள் அண்மையில் நடந்த போட்டியின்போது காட்டப்பட்ட ஒரு புகைப்படத்தைக் கூர்ந்து கவனிக்கத் தவறியிருப்பார்கள்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பாகிஸ்தான் நாட்டு வீரர் ஒருவரின் பிஞ்சுக் குழந்தையைத் அன்பாகத் தழுவிக் கொள்கிற புகைப்படம்தான் அது. நாளைய தலைமுறை தங்களது தளிர்கரங்களைக் கோத்துக் கொண்டு, 'அடித்துக் கொண்ட அண்ணன் - தம்பிகளின் பிள்ளைகள் நாங்கள்.
அவர்களுக்குள்தான் ஆயிரம் பூசல்கள். எங்களுக்குள் அன்பைத் தவிர ஏதுமேயில்லை' என்று புன்னகை பூக்கச் சொல்லும் ஒரு காலம் வரத்தான் போகிறது.
இந்தியாவில் தோன்றுகின்ற அற்புதங்கள் உலகத்துக்கே பெரும் பாடங்களாக அமைந்து விடுகின்றன. உலகம் முழுவதும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த வேளையில், அதை எதிர்த்து முதன்முதலில் போராட்டத்தைத் தொடங்கியது இந்தியாதான்.
இந்தியா காட்டிய அறவழிப் போராட்டம்தான் இன்றும் என்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நிலைத்த பாடமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தியா தனது சுதந்திரத்தைப் பெறுவதற்கு எண்ணற்ற தியாகங்களைச் செய்திருந்தபோதிலும், சொந்தச் சகோதரர்களைப் பிரிந்து நாட்டைக் கூறுபோட்டுக் கொண்டதுதான் மிகப் பெரிய சோகம்.
கிராமப்புற வழக்குகளில் சொல்லப்படுகிற பங்காளிச் சண்டையாக அது முடிவுக்கு வந்தது. பாரதியார் பாடிய 'ஒரு தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ' என்னும் வரிகளை இங்கு நினைத்துப் பார்த்தல் பொருந்தும். சண்டையிட்டும் சகோதரத்துவம் பேணுவது இந்தியாதான்.
அண்ணனும் தம்பியும் சண்டையிடுகிறபோது இருவரையும் தன் வயிற்றில் சுமந்து பெற்ற தாயின் மனநிலை எவ்வாறு இருக்கும் எந்தப் பக்கம் காயம் என்றாலும் சிந்துவது தாயின் இரத்தம் அல்லவா?
சண்டை முற்றிப்போய், ஊரார் சமாதானப்படுத்த முயன்ற வேளையில், பொறுப்பும் பொறுமையும் மூத்தவனுக்கே அதிகம் வேண்டும் என்பது ஊரின் எதிர்பார்ப்பு-இயல்பும் கூட. ஆனால், தம்பியோ அறியாமையால் முரட்டுத்தனம் செய்கிறான்.
முடிவில் சொத்துகளைப் பிரித்துக் கொள்ளச் சம்மதமாயிற்று. எல்லாவற்றையும் பிரித்த பின்னால் தாயை என்ன செய்வது இரண்டு கூறுகளாக வெட்டிப் பங்கிட்டு விட முடியுமா? ஆனால், அந்த வரலாறு அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.
தாயை இரண்டாக வெட்டியதைப் போலத்தான், வெட்டுப்பட்ட இடங்களிலெல்லாம் குருதி கொப்பளித்தது. உயிர்கள் பறிக்கப்பட்டன. அண்ணனும், தம்பியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கத் தாய் துடிப்பதைப் போல, தேசம் பதறிற்று. ஊரார் திகைப்பதைப் போல உலகமே அதிர்ந்தது.
தாய்க்கு இந்நிலை என்றால் தந்தைக்கு எவ்வாறு இருந்திருக்கும் தேசப்பிதா என்று இந்திய தேச மக்களால் போற்றப்பட்ட மகாத்மாவின் மனநிலையும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவினைவாதத்தின் வலியை முற்றிலுமாக - முதலாவதாக உணர்ந்தவர் அவர். தந்தையல்லவா? வன்முறை தலைவிரித்தாடிய கொல்கத்தாவில் நவகாளியை நோக்கி வெற்றுப் பாதங்களால் பல காத தூரம் அமைதிப் பயணம் மேற்கொண்டிருந்தார் தேசத்தின் தந்தை!
ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் வாசிப்புடன் தொடங்கும் அவருடைய பயணத்தில் அன்றைய பொழுதில் மகாபாரத யுத்தக் காட்சி படித்துக் காட்டப்படுகிறது. கண்பார்வை இல்லாத திருதராட்டிரனிடம் சஞ்சயன் போர் நிலவரங்களை வருணித்துக் கொண்டிருக்கிறான்.
ஒவ்வொரு முறையும் தன் பிள்ளைகளின் மரணக் கணக்கு கூடிக் கொண்டே போவதைக் கவனித்துக் கேட்ட திருதராட்டிரன் 'இந்தக் கண்பார்வை இல்லாத குருட்டுத் தகப்பன்மீது கருணை கொண்டாவது எனது பிள்ளைகள் சகோதர யுத்தத்தை நிறுத்தி விட மாட்டார்களா' என்று கேட்கும் வாசகம் வருகிறது.
இந்தப் பரந்துபட்ட தேசத்தை ஆள்வதற்காக அடித்துக் கொள்ளும் இவர்கள், கூடி வாழ்வதற்காக ஒரு சிறு முயற்சி செய்யக் கூடாதா என்பதன் உட்தொனி அந்தப் புலம்பல் ஏக்கம். மெளனத்தில் இருக்கிறார் காந்தி.
மனத்துக்குள் ஒப்பீடு நடக்கிறது. குருúக்ஷத்திரக் களமும் தான் நிற்கிற களமும் வேறுவேறு இல்லை என்பது அவருக்குப் புரிகிறது. இரண்டு களங்களிலும் தன்னுடைய பாத்திரம் எது என்பதை உணர்கிறார் தேசப்பிதா.
அந்தக் களம் இன்றும் மாறவில்லைதான். ஆனால், தேசப்பிதா இன்று இல்லை. அவர் கண்ட கனவு மட்டும் இன்று நம்மிடையே இருக்கிறது. சாதரணக் கனவா அது பொற்கனவு அல்லவா?
அது மட்டும் நனவாகி விட்டால், உலகத்திற்கு இந்தியாவிலிருந்து இன்னொரு அற்புத வரலாறு அளிக்கப்படும். நாளைய தலைமுறைக்கு அதுவே நற்பாடமாகும். அப்படி என்னதான் கனவு அது?
இத்தனை நாட்கள் அறியாமையாலும் ஆணவத்தாலும் மன விகாரங்களாலும் பிளவுபட்டிருந்த அண்ணனும் தம்பியும் ஆரத் தழுவிக் கொள்ள மாட்டார்களா? வலியோடும் வருத்தத்தோடும் முனகிக் கொண்டிருக்கிற அந்தத் தாய்க்குத் தன் பிள்ளைகளின் மனமாற்றமும் பாசப்பிணைப்பும் காயங்களை ஆற்றும் அருமருந்தாகாதா?
தன்னோடு கொண்ட மாறுபாட்டால் முறுக்கிக் கொண்டிருந்த தம்பி இன்று ஊராரின் கண்டிப்புக்கும் தண்டிப்புக்கும் ஆளாகியிருக்கிற வேளையில் அண்ணன் தன் தம்பியை அன்பால் அரவணைக்கக் கூடாதா? தம்பியும் தன் அண்ணனிடம் வாஞ்சை கொள்ளக் கூடாதா? இதெல்லாம் கனவுதானே... நடக்குமா? நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றியிருக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.