/

மணக்கொடை என்னும் கொடுமை

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நம் பைந்தமிழ்நாட்டில் வரதட்சிணை என்ற தீய பழக்கம் இருந்ததற்கான சுவடுகள் காணப்படவில்லை.

News image
Updated On :11 மே 2017, 9:51 pm

தி. வே. விஜயலட்சுமி

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நம் பைந்தமிழ்நாட்டில் வரதட்சிணை என்ற தீய பழக்கம் இருந்ததற்கான சுவடுகள் காணப்படவில்லை. சங்க இலக்கியங்களில் சான்றேயில்லை. தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களும் இதுபற்றி மெüனம் சாதிக்கின்றன.
இதிகாச காலத்தில் சென்று பார்த்தால் இராமன் தன் ஆற்றலைக் காட்டி, வில் முறித்து சீதையை மணந்து கொண்டதையறிகிறோம். நப்பின்னையை மணக்க ஏழு காளைகளை - கிருஷ்ணன் அடக்கியதாக பாகவதம் தெரிவிக்கிறது. அதிலும் பணம் பொற்கிழிகள் பெற்றுக் கொண்டதாக வரலாறு இல்லை. இதிகாச காலம் முதல் சங்க காலம் வரையில் ஆண்கள் தங்கள் ஆற்றலைக் காட்டித்தான் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது.
"ஆற்றலைக் காட்டினால்தான் பெண் கிடைக்கும் என்றால் தற்காலத்தில் எத்தனையோ ஆண் பிள்ளைகள் திருமணம் ஆகாமலேயே காலம் கழிக்க வேண்டியிருக்கும். அதனால் தான் வரதட்சிணை கேட்கிறார்கள் போலும்' என்றார் ஒரு தமிழ்ப் பேரறிஞர். இக்கருத்தில் உண்மை அடங்கியுள்ளது.
ஆண்களினும் பெண்களே பல்லாற்றல் பொருந்தியவராய் இல்ல நிர்வாகம், அலுவலக நிர்வாகத்துடன் குழந்தைக்குக் கல்வியில் தனிப் பயிற்சி அளிக்கும் ஆசிரியைகளாக, வீட்டின் முதியோரைப் பேணும் தாதியராக, கணவனுக்கு அறிவுரை கூறி, அன்பு செலுத்தும் மந்திரியாகவும் பல்வேறு பணிகளை ஏற்றுத் தங்கள் ஆற்றலைக் காட்டி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். நாள்தோறும் செய்தித் தாள்களில் வரதட்சிணை என்ற கொடுமை காரணமாகத் துன்புறுத்தப்பட்டுத் தற்கொலை செய்து கொண்ட மகளிரின் சோகக்கதைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சில மறைக்கப்படுகின்றன.
மணமகள் எரிப்பு, அமிலத் தாக்குதல், பெண்களைக் கேலி செய்தல் போன்று வரதட்சிணை மரணமும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இம்மரணங்களில் பெரும்பாலானவை தற்கொலைகள் போன்று சோடித்து இளம் பெண்களின் வாழ்வை முடித்து விடுகின்றன. இதுபோன்ற கொடுமைகள், பல நாடுகளிலும் நடைபெற்றாலும் இக்கொடுமையில் முதலிடம் வகிப்பதோ இந்தியாதான்.
வரதட்சிணை கொடுப்பது குற்றம். வாங்குவது மிகப்பெருங்குற்றம். அவர்கள் சட்டத்திற்குமுன் தண்டிக்கப்படுவர் என்று சட்டம் இருந்தாலும் இந்நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மகளிர் இன்று ஆண்கட்கு இணையான கல்வியறிவு பெற்று, பல பெரிய துறைகளில் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் திருமணம் நடப்பதற்கு முன்பே, பணத்திற்குப்பதிலாக வீடு, நகைகள், மற்றும் ஆடம்பரப் பொருள்கள் அனைத்தையும் ஆண்வீட்டார் வாங்கி விடுகின்றனர்.
திருமணச் செலவை பெண் வீட்டார் சுமக்கின்ற நிலைமைதான் இருந்து வருகின்றது. அதுவும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மணமகன் வீட்டார்க்கு அஞ்சி, தம் கைப்பொருள் அனைத்தையும் இழந்து, இறுதிக் காலத்தில் பெற்ற மகனாலும் கைவிடப்பட்டு, காப்பகங்களில் இருந்து மன அமைதி, இழந்து தவிக்கும் கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண்களும் பெற்றோர் படும் துன்பத்தை நினைத்து அமைதியற்ற வாழ்வு வாழ்கின்றனர்.
நகரங்களில் வேறுவிதமாக உள்ளது. கேட்பதைக் கொண்டு வரமறுக்கும் மனைவியைத் தனியே விட்டு மறுமணம் செய்து கொள்ளும், நிலை உள்ளது. மணமகன் வீட்டார் கொடுமைக்கு உட்பட்டு, தன் இன்னல்களைத் தாங்கிக் கொள்ளும் மெல்லியலார்கள் மிகப்பலர்.
தமிழ்த் தாத்தா உ.வே.சா தம் திருமணத்துக்கும் பெண் வீட்டுக்கு அளிக்க வேண்டி பணமின்றி, தன் தந்தை பாடுபட்டதை தம் சுய சரிதையில் குறிப்பிடுகிறார்.
மகாகவி பாரதியும், செல்லம்மாவை மணக்க பணம் அளிக்க இயலாத தம் போராட்டத்தை விவரிக்கிறார்.
மணமகனுக்கு ரொக்கம், நகைகள், வண்டி - என்றெல்லாம் கேட்கின்ற எண்ணமும் அதைத்தர முடியாத பெண்ணை வீட்டில் சித்திரவதை செய்வதும், பெற்றோர் வீட்டுக்குத் திருப்பி அனுப்புவதும், என மனித நேயமின்றிச் செய்து விடுகின்றனர் பலர்.
கவிஞர் கண்ணதாசன் ஒரு சமயம் கட்டுரை ஒன்று எழுதினார். அதில் வரதட்சிணை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் எழுதும் போது ஒரு கேள்வி எழுப்புவார் "பொருளா தாரம்?' என்று. இஃது எண்ணிப்பார்க்கத்தக்கது.
காஞ்சி மகாப்பெரியவர் உட்பட பலரும் வரதட்சிணையைக் கண்டித்தனர். திருமண அழைப்பிதழில் தன் அனுக்கிரஹத்துடன் என்று எழுதுவதைச் சுட்டிக் காட்டித் திருத்தினார்.
இதன் விளைவாக, இக்கொடுமை குறைந்திருக்கிறது என்பது உண்மை. சிலர் பொய்ப் புகார்கள் அளிப்பது குறைந்துள்ளது என்பதும் ஓரளவு உண்மைதான். இருப்பினும் முற்றிலும் எல்லாச் சமூகத்தினரிடமும் வரதட்சிணை பெறுவது அழிந்த பாடில்லை. வெளியே புகார் அளித்தால், தன் பெண் எதிர்காலம் அழிந்துவிடும் என்று அச்சமுறுகின்றனர் பல பெற்றோர்.
இக்கொடிய நோய் எல்லாரையும் தொற்று நோய்போல் தொற்றிக் கொண்டுவிட்டது. இத்தீய பழக்கம் நீங்கி மகளிர் நலம் பெற்றோங்கிட, பெண்ணைப் பெற்றோர்கள் நிம்மதியுடன் வாழ்ந்திட, இளைஞர் சமுதாயம் வீறு கொண்டு எழுந்திடல் வேண்டும்.
இதில் ஒரு வியப்பு என்னவெனில், தம் பெண்ணிற்கு வரதட்சிணை கொடுத்துத் திருமணம் செய்து இடர்ப்படும் பெற்றோர் தம் பிள்ளைகளின் திருமணக் காலத்தில் வரதட்சிணையை வாய்கூசாது கேட்கும் இரட்டை வேடம்தான்.
பெருமை தரும் செல்வம் பெறுவதாக இருந்தாலும் பிறர்க்குத்துன்பம் ஏற்படாமல் பெறுவதே குற்றமற்றவர் நெறியென்கிறது வள்ளுவம்.
சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசுஅற்றார் கோள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.