மாற்றம் தேவை...
மாற்றுத்திறனாளிகள் சாதாரண மனிதர்களுக்கு நிகராக கல்வியறிவு பெறுவது என்பதே அரிதாக உள்ளது. அதிலும் பார்வையற்றோரின் பாடு சொல்லி மாளாது.


மாற்றுத்திறனாளிகள் சாதாரண மனிதர்களுக்கு நிகராக கல்வியறிவு பெறுவது என்பதே அரிதாக உள்ளது. அதிலும் பார்வையற்றோரின் பாடு சொல்லி மாளாது. அவர்கள் தன்னிச்சையாக ஒரு பணியை செய்வதே கஷ்டமான நிலையில், படிப்பது என்பது அவர்களது வாழ்க்கையில் குதிரை கொம்பான விஷயமாகவே உள்ளது.
பெரும்பாலான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், பள்ளிக்கல்வியை சாதாரண மாணவர்கள் போலவே கற்று தேர்கின்றனர். தொடர்ந்து உயர்கல்வியை அதே பொதுக்கல்வி நிறுவனங்களில் அவர்களால் படிக்க முடிவதில்லை. கல்வி நிறுவனங்களும் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், மாணவ, மாணவிகளை பாதுகாப்பதில் சிரமம் உள்ளிட்ட காரணங்களால் பார்வையற்றோருக்கு கல்வி கற்பிக்க தயக்கம் காட்டுகின்றன.
எனவே, இவர்கள் உயர்கல்விக்கு அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகளையே நாட வேண்டியுள்ளது. தமிழகத்தில் சென்னை பூந்தமல்லி, தஞ்சாவூர், திருச்சி புத்தூர் ஆகிய இடங்களிலேயே பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள் இயங்கி
வருகின்றன. இப்பள்ளிகளில் பிரெய்லி முறையிலேயே பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
இதனால் ஆரம்ப கல்வியை சாதாரண முறையில் படித்தவர்கள், உயர்கல்வியில் பிரெய்லி முறை தெரியாமல் சிரமப்படுகின்றனர். இதனால், அவர்கள் பிரெய்லி எழுத்துக்களை அடிப்படை முதல் கற்றுக் கொண்டுதான் படிக்க முடியும்.
÷இத்தனை போராட்டங்களையும் மீறி கல்வி கற்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தேர்வெழுதிவிட்டு மதிப்பெண்களை பார்க்கும்போது பெரும்பாலும் சோர்ந்து விடுகின்றனர்.
2016-17-ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வில் தமிழகம் முழுவதும் 399 பார்வையற்றோரும், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதோர் 588 பேரும், உடல் ஊனமுற்றோர் 1112 பேரும், இதர ஊனமுற்றோர் 337 பேரும் தேர்வெழுதினர். தேர்வு முடிவில் பார்வையற்றோர் 368 பேரும், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதோர் 463 பேரும், உடல் ஊனமுற்றோர் 983 பேரும், இதர ஊனமுற்றோர் 238 பேரும் தேர்ச்சியடைந்தனர். இதில் பார்வையற்ற மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 92.23 ஆகும்.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் பலர் தங்களது மதிப்பெண்கள் குறைவாகவும், சிலர் கூடுதலாகவும் இருப்பதை உணர்கின்றனர். தங்களின் கூடுதல்-குறைவு மதிப்பெண்களுக்கு தேர்வெழுத உதவிய உதவியாளர்கள்தான் காரணம் என அவர்கள் எண்ணுகின்றனர்.
சென்னை வளரசவாக்கத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் கூறுகையில், "பிறவியிலேயே பார்வையற்ற நான் ஒன்றாம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரை சாதாரண முறையிலும், 8 முதல் 10-ஆம் வகுப்பு வரை பிரெய்லி முறையிலும் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் 454 மதிப்பெண்கள் பெற்றேன். தொடர்ந்து திருச்சியில் உள்ள அரசு பார்வையற்றோருக்கான பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தேன்.
தற்போது வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவில் 1200-க்கு 951 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் நான் எதிர்பார்த்தது 1,050 மதிப்பெண்களுக்கு மேல்.
÷என்னுடைய மதிப்பெண் குறைவுக்கு, எனக்கு தேர்வெழுத உதவியவர்களே காரணம். நிறையத் தவறுகள் எனது விடைத்தாளில் இருந்தன. இதை அங்கிருந்த தேர்வு அதிகாரிதான் சுட்டிக் காட்டினார்.
÷நான் எனக்கு தேர்வெழுதிய உதவியாளரைக் குறைகூறவில்லை. இதற்கு பார்வையற்ற மாணவ, மாணவிகள் தேர்வெழுதும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தாததே காரணம் எனக் கருதுகிறேன்' என்றார் அவர்.
÷இதுபோல, நிறைய பார்வையற்ற மாணவ, மாணவிகள் தேர்வெழுதும்போது, தேர்வக உதவியாளரை குறைசொல்ல முடியாமலும், தங்களது இயலாமையை நினைத்தும் மனம் புழுங்கி வருகின்றனர்.
÷பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு தேர்வெழுதும் தேர்வக உதவியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வெழுதும் உதவியாளர்களை நியமிப்பதை விடுத்து, மாணவர்களையே தேர்வெழுத வைக்க வேண்டும்.
÷பார்வையற்ற மாணவ, மாணவிகள் வினாக்களுக்கான விடைகளைக் கூற அதனை கருவி கொண்டு பதிவு செய்து, அதை திருத்துபவர்கள் கேட்டு மதிப்பெண்கள் அளிக்கலாம்.
பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு கணினி கற்றுக் கொடுத்து, அதன் மூலம் அவர்களையே தேர்வெழுத வைக்கலாம். அல்லது மாணவ, மாணவிகள் சொல்வதை ஆசிரியர்கள் நேரடியாகக் கேட்டு மதிப்பெண்கள் வழங்கலாம்.
÷இதற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை கணினி பயிற்சியுடன் கூடுதலாக டைப்பிங் உள்ளிட்ட பயிற்சியை பள்ளிக்கல்வி முதல் வழங்க வேண்டும்.
மாணவிகளுக்கு தமிழக அரசு மடிக்கணினி கொடுத்துள்ளது போல, பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத மடிக்கணினி கொடுத்து, அதில் பேசினால் தானாக எழுதும் அளவுக்கு மென்பொருளைப் பொருத்திக் கொடுக்க வேண்டும்.
÷இதன் வழியே பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் தாழ்வு மனப்பான்மை குறைந்து, தான் எழுதிய விடைகளுக்கு கிடைத்த மதிப்பெண்கள் இவை என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
÷இது பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி வாழ்வில் ஒளியேற்றுவதாக அமையும். அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்த முடியாவிட்டாலும், கல்வியில் அவர்களை உயர்த்த திறவுகோலாக தேர்வெழுதும் முறையில் ஏற்படுத்தும் மாற்றம் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...