தனது விற்பனையை அதிகரிப்பதற்காக, புத்திசாலியான வர்த்தகர் 100 சதவீதம் அல்லது அதற்கும் மேலும் விலையை ஏற்றிவிட்டு, எளிதில் ஏமாறக்கூடிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை 'அதிரடி' தள்ளுபடி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதே உத்தியைத்தான் பெட்ரோல், டீசல் விஷயத்தில் மத்திய அரசும் அண்மையில் கடைப்பிடித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.2 குறைப்பதாக மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்த வரிக்குறைப்பை மத்திய அரசு அறிவிக்கவில்லை. மாறாக, விலைவாசி உயர்வால் மக்கள் மத்தியில் எழும் கொந்தளிப்பை சமாளிக்கவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
2014 ஏப்ரலில் மத்திய உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்தது. அது 2017 அக்டோபரில் ரூ.21.48 ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் டீசலுக்கான மத்திய உற்பத்தி வரி ரூ.3.56-இல் இருந்து ரூ.17.33 ஆக அதிகரித்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் பெட்ரோலுக்கான வரி ரூ.12-ம், டீசலுக்கான வரி ரூ.13.77 அதிகரித்துள்ளது. ஆனால், ரூ.2 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைந்தபட்ச ரூ.2 குறைப்பு சலுகையும், அடுத்தடுத்த முறை விலை ஏற்றப்பட்டதால் அர்த்தமில்லாததாகிவிட்டது.
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படும்போதெல்லாம், மக்களின் நண்பர்கள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ளும் பிரதான எதிர்க்கட்சிகளும், அரசுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்புகளும் ஆரவாரமாகப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். துரதிருஷ்டவசமாக, இந்த முறை யாருமே கூக்குரல் எழுப்பவில்லை.
ஆனால், எதிர்க்கட்சிகளும், அரசுக்கு எதிரான அமைப்புகளும் இப்போது ஒரு குழப்ப நிலையில் உள்ளன. பெட்ரோலியப் பொருள்களின் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு 2017 ஜூன் 16-இல் அறிமுகப்படுத்தியது.
இந்தக் கொள்கையின் விளைவால்தான் பெட்ரோலியப் பொருள்களின் விலை பலரது கவனத்துக்கும் வராமலேயே உயர்த்தப்படுகிறது. எனவே, பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு எதிராகத்தான் இவர்கள் போராட வேண்டும்.
எண்ணெய் நிறுவனங்களும், அரசும் ஒருநாள் கூட வருவாயில் இழப்பை சந்திக்கக் கூடாது என்பதற்காகவே இந்தப் புதிய விலை நிர்ணய முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய கொள்கைகளின் நீட்சியே ஆகும். அரசே விலை நிர்ணயம் செய்யும் முறைக்கு 2002-லேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால், இது ஒரே நாளில் நிகழவில்லை. இதற்காக சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்டமிடப்பட்டது.
காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சி அரசாக இருந்தாலும் சரி, 1990-களுக்குப் பிறகு, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றன.
'பெட்ரோலியம் என்பது தொழில் துறையின் முதுகெலும்பு போன்றது. அதன் எதிர்கால மேம்பாடு என்பது அரசின் தனிப்பட்ட பொறுப்பு' என்று 1948-இல் வெளியிடப்பட்ட முதல் தொழில் கொள்கை பிரகடனப்படுத்துகிறது. ஆனால், இந்தக் கொள்கையை காங்கிரஸ், பாஜக அரசுகள் காற்றில் பறக்கவிட்டுவிட்டன என்பதுடன் அதற்கு நேர் எதிரான நிலையை மேற்கொண்டுள்ளன.
'சமூக நலம்' என்பதற்குப் பதிலாக 'வர்த்தக லாபம்' என்பதே அடுத்தடுத்த மத்திய அரசுகளின் தாரக மந்திரமாக ஆகிவிட்டது. இந்தத் துறையில் முதலீடுகளுக்கு ஏற்ற லாபம் அடைவதற்காக தனியார் துறையை ஊக்குவிப்பது என்பதே அரசுகளின் இலக்காக ஆகிவிட்டது. ஒவ்வொரு முறை பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்த்தப்படும்போதும் கோபம் கொள்ளும் எதிரணியினரால் இந்தக் கொள்கை முடிவைத் தடுக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை.
பெட்ரோல் விலை நிர்ணயம் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது என்ற முடிவு 2010 ஜூன் 26-இல் எடுக்கப்பட்டது. இந்தக் கொள்கையை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், டீசல் விலை நிர்ணயம் தொடர்பான கட்டுப்பாட்டைத் தளர்த்துவது என்ற முடிவை இப்போதைய பாரதிய ஜனதா அரசு 2014 அக்டோபர் 19-இல் எடுத்தது.
அந்தக் காலகட்டத்தில்தான், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்திருந்தது. ஒரு கொள்கை முடிவு எடுக்கும்போது, அந்த முடிவால் பாதிப்பு ஏற்பட்டால், எதிர்ப்பு அதிகமாக இருக்கும் என்று அரசுக்குத் தெரிந்திருந்ததால் பாதிப்பு குறைவாக இருக்கும் அந்தக் காலகட்டத்தில் இத்தகைய முடிவை அரசு மேற்கொண்டது.
எண்ணெய் நிறுவனங்கள் கடும் இழப்பைச் சந்தித்து வருகின்றன என்றும், மத்திய அரசுக்குக் கடும் மானியச் சுமை ஏற்படுகிறது என்றும் தவறான காரணங்களைக் கூறி, இத்தகைய கொள்கை முடிவுகளை காங்கிரஸ், பாரதிய ஜனதா அரசுகள் எடுத்தன.
ஆனால், அரசின் புள்ளிவிவரங்களே இந்தக் காரணங்கள் தவறு என்பதை நிரூபிக்கின்றன. பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை மூலம் ஈட்டியதைவிட அதிக மானியத்தை அரசு தரவுமில்லை; எண்ணெய் நிறுவனங்கள் கடும் நஷ்டத்தைச் சந்திக்கவும் இல்லை.
இந்த மாற்றத்துக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், அதாவது 2005-06 முதல் 2009-10 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை மூலம் வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருவாய் இனங்களின் வழியாக மத்திய அரசு ரூ.3,91,486 கோடி ஈட்டியுள்ளது. இதில் ரூ.26,008 கோடியை மட்டுமே மானியமாக அளித்துள்ளது. வருவாய் ஈட்டியதில் இது வெறும் 6.64 சதவீதம் மட்டுமே.
அதே காலகட்டத்தில், பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,26,294 கோடி வருவாய் ஈட்டியுள்ளன. மூன்று பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.36,653 கோடியை வருவாயாகப் பெற்றுள்ளன.
பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் 2015-16இல் தொகுத்துள்ள புள்ளிவிவரமும், எண்ணெய்த் துறையில் லாபம் அதிகரித்திருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. 2010-11 முதல் 2015-16 வரையிலான ஆறு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் மூலம் ரூ.95,030 கோடியும், எரிவாயு மூலம் ரூ.19,744 கோடியும் உரிமைப் பங்கீட்டுத் தொகையாகக் கிடைத்துள்ளது.
அதே காலகட்டத்தில், எண்ணெய் மேம்பாட்டு உபரி வரியாக மத்திய அரசுக்கு ரூ.62,689 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், உற்பத்தி மற்றும் சுங்க வரியாக ரூ.7,37,774 கோடி கிடைத்துள்ளது. அத்துடன் ஈவுத்தொகையாக ரூ.86,589 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, எண்ணெய்த் துறை மூலம் மாநில அரசுகள் ரூ.6,99,544 கோடி ஈட்டியுள்ளன.
இந்தியாவில் 2016 நிலவரப்படி, 56,190 சில்லறை பெட்ரோலிய விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் 93.6 சதவீதம் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இந்த எண்ணெய் நிறுவனங்களும் லாபம் ஈட்டியே வருகின்றன. 2015-16இல் இந்தியன் ஆயில் நிறுவனம் வரிக்குப் பிறகு ரூ.10,399.03 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபம் அடுத்த ஆண்டு 14,974.77 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 2015-16இல் ரூ.7,432 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபம் அடுத்த ஆண்டு ரூ.6,123 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 2015-16இல் ரூ.3,862 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த லாபம் அடுத்த ஆண்டு ரூ.4,500 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய்த் துறை வளமாக இருக்கிறது என்பது இந்தப் புள்ளிவிவரங்களில் இருந்து தெரியவருகிறது. அத்துடன், வர்த்தக ரீதியாக ஒவ்வொரு நாளும் வலுவடைந்து வருகிறது.
மொத்த மானியத்தில் பெட்ரோலியப் பொருள்களின் பங்கு 23.34 சதவீதத்தில் இருந்து (2014-15இல் ரூ.60,269 கோடி) 2015-16இல் 11.64 சதவீதமாக (ரூ.30 ஆயிரம் கோடி) குறைந்திருக்கிறது. 2016-17ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இதுமேலும் குறைந்து 10.76 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்த் துறைக்கு அரசு மானியம் அதிகமாக அளிக்கப்படுகிறது என்பதும் உண்மையல்ல. மாறாக, அரசின் எல்லா மானியங்களும் எண்ணெய்த் துறையின் வருவாய், லாபத்தின் மூலமாக அளிக்கப்படுகின்றன என்பதே உண்மை.
2015-16-இல் அரசு வழங்கிய மொத்த மானியத் தொகை ரூ.2,57,731.95 கோடி. அதேசமயம், எண்ணெய்த் துறை மூலம் மட்டும் மத்திய அரசுக்கு ரூ.2,63,130 கோடி வருவாய் கிடைத்துள்ளது. உரிமைப் பங்கீட்டுத் தொகை ரூ.16,774 கோடி, எண்ணெய் மேம்பாட்டு உபரி வரி ரூ. 15,854 கோடி, உற்பத்தி மற்றும் சுங்க வரி ரூ.2,13,995 கோடி, ஈவுத்தொகை ரூ.16,507 கோடி ஆகியவை இந்த வருவாயில் அடங்கும். இவைதவிர, மாநில அரசுகளுக்கு ரூ.1,42,938 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
வரிச்சுமை, மானியச்சுமை என்று பேசிக்கொண்டே இருக்காமல், பெட்ரோலியப் பொருள்களின் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக் கூறுகின்றன. அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்று அரசு உண்மையை மறைப்பதும் சரியானதல்ல.
உதாரணமாக, 2015-16இல் உள்நாட்டில் 36.950 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 202.85 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கு அதிகமான கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டுள்ளது. 2015-16-இல் ரூ.5,27,765 கோடி மதிப்பில் பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ரூ.1,76,773 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சுத்திகரிக்கும் அளவைப் பன்மடங்கு அதிகரிப்பதன் மூலம் மிக அதிக அளவில் பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்ய முடியும். அது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகவும் நல்லதாக அமையும். ஆனால், எண்ணெய் வளத்தை வைத்து லாபம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், லாபத்தின் பயன்களை மக்களுக்கு அளிக்க வேண்டும். இந்த தேசத்துக்கும், அதன் மக்களுக்கும் சொந்தமான வளத்தின் லாபத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசின் மொத்த மானியத்தையே சுமக்கும் அளவுக்கு உள்ள எண்ணெய்த் துறையால் மானியச் சுமை என்று கூறுவதை விடுவதுடன், எண்ணெய் விலை நிர்ணயக் கொள்கை என்பது வெளிப்படையானதாக இருக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் தயங்குகிறது என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

