வேளாண்மை காக்க சட்டம் தேவை!

இந்தியாவில் 32 வினாடிக்கு ஒரு உழவன் தற்கொலை செய்து கொள்கிறான். அதே வேலையில் உழவுத்தொழில் அல்லாதவர்களின் வருமானம் பலமடங்கு கிடு கிடு என்று உயர்ந்து கொண்டுள்ளது என்கிறது புள்ளிவிபரம்.

இந்தியாவில் 32 வினாடிக்கு ஒரு உழவன் தற்கொலை செய்து கொள்கிறான். அதே வேலையில் உழவுத்தொழில் அல்லாதவர்களின் வருமானம் பலமடங்கு கிடு கிடு என்று உயர்ந்து கொண்டுள்ளது என்கிறது புள்ளிவிபரம்.
உழவன் தற்கொலைக்கு காரணம் அமைப்பு மற்றும் செயல்பாட்டு ரீதியாக உழவர்கள் பல அழுத்தங்களை சந்தித்துவருகின்றார்கள் என்பதுதான். உழவன் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை உரியவிலையை ஈட்டித்தருவதில்லை. உள்ளூர் தரகர் முதல், சர்வதேச நிறுவனங்கள் வரையிலான இடைத்தரகர்களின் லாப வெறி கோரப்பசிக்கு உழவன் உயிர் இரையாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 
உழவனுக்கு உயிராய் இருந்த பொதுச்சொத்துகள் போனயிடம் தெரியவில்லை. வயல் வறண்டபோது வனமே வாழ்வளித்தது. வனச்சட்டம் அதைபறித்தது. மீன் முதல் தேன் வரை விலையில்லாமல் கி'டைத்தது இன்று முற்றிலும் வியாபார மயமாக்கப்பட்டுள்ளது. 
பரந்துவிரிந்த பச்சைபுல்வெளிகள் பால் உற்பத்திக்கு பயன்பட்டது. இன்று பலமடங்கு பணம் கொடுத்து உரம் வாங்கி பயிர் வளர்க்கும் உழவன் வாழ்க்கை பாழாய்ப்போனது. ரசாயன உரத்தைக் கொட்டி உற்பத்தியை பெருக்கும் திட்டம் பொய்த்துப்போனது. மண்வளம் மாறியதால் மாண்ட உழவர்கள் கணக்கை கணக்கிட முடியாது. 
உழவுத் தொழிலாளர்கள் நிலையோ மேலும் கவலைக்கிடமாக உள்ளது. மகாத்மா காந்தி வேலைவாய்ப்புத் திட்டமும் பொதுவினியோக திட்டமும் இல்லையென்றால் இந்நேரம் பிணப்பிரளயமே ஏற்பட்டிருக்கும்.
இவையெல்லாம் யாருக்கும் தெரியாதது அல்ல, கடந்த 100 ஆண்டுகளாக விவசாய அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஆணையங்கள் அறிக்கைகளை சமர்பித்துள்ளனர். 
லின்லித்கவ் ராயல் கமிஷன் (1928), கிரிகாரி உணவுதானிய கொள்கை குழு (1943), பஞ்ச விசாரணைக்குழு (1945), கிருஷ்ணமாச்சாரி விவசாய விலைகுழு (1946), தாகூர்தாஸ் உணவுதானிய கொள்கைகுழு (1947), திருமால் ராவ் உணவுதானிய கொள்முதல்குழு (1950), மைத்ரா உணவுதானிய விசாரணை குழு (1950), அசோக் மேத்தா உணவுதானிய விசாரணைகுழு (1957), ஃபோர்டு பவுண்டேஷன் விவசாய உற்பத்தி குழு (1959), ஜா குழு (1965), விவசாய விலை கமிஷன் (1965). வெங்கடப்பய்யா குழு (1966), தண்டேக்கர் குழு (1966), மகலனோபிஸ் குழு (1969), என்.ஆர். மிர்தா தேசிய விவசாய ஆணையம் (1976), விவசாய செலவு & விலை கமிஷன் (1985), குஸ்ரு விவசாய கடன் சீராய்வுகுழு (1989), பானுபிரதாப்சிங் உயரதிகாரகுழு (1990) பண்டாரி கிராம வங்கிக்குழு(1994), முதல் தேசிய விவசாய கொள்கை (2000), தேசிய விதைக்கொள்கை (2002), ஹுகும்தியோ நாராயண் தேவ் மாநில அமைச்சர்கள் நிலைக்குழு (2003), எம்.எஸ். சுவாமிநாதன் தேசிய விவசாய ஆணையம் (2007), அசோக் தால்வாய் விவசாய வருவாய் இரட்டிப்புகுழு (2016) ஆகிய ஆணையங்கள் அடுக்கடுக்காக ஆலோசனைகளை வழங்கியுள்ளன. 
எண்ணற்ற வேலைக்குழு, நிலைக்குழு, நிபுணர்குழு, சீராய்வுக்குழு, திட்டக்குழு, மாநில அரசுகள், அறிஞர்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சர்வதேச அமைப்புக்கள், தனியார் பன்னாட்டு நிறுவனங்கள், விவசாய சங்கங்கள் ஆய்விற்கு பின் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். 
உலக வங்கியின் விவசாயம் முன்னேற்றத்திற்கான அறிக்கை (2008) மற்றும் விவசாய வியாபாரத்தை ஊக்கபடுத்துதல் அறிக்கை (2017)-ம் இதில் அடங்கும். உழவன் தற்கொலை மட்டும் தொடர்கிறது.
இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 7-ஆவது அட்டவணை பட்டியல்-II பதிவு 14-இன் படி விவசாய நிர்வாகம், 18-இன் படி நிலநிர்வாகம், பதிவு 30-இன் படி விவசாயிகளின் கடன் நிவாரணமும் மாநில அரசுப் பணியாகும், இருப்பினும் நிலசீர்திருத்தச் சட்டங்களைத் தவிர குறிப்பிட்ட திட்டங்கள் இயற்றப்படவில்லை. 
93-ஆவது அரசியல் அமைப்புச் சட்டதிருத்தம் 1993-க்கு பின் விவசாய நிர்வாகம் 11-ஆவது அட்டவணைக்கு மாற்றப்பட்டு கிராம உள்ளாட்சி அமைப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவையும் குறிப்பிடத்தக்க எந்த திட்டமும் இயற்றவில்லை. மத்திய அரசு 7-ஆவது அட்டவணை பட்டியல்- III பதிவு 33-இன் படியும், பட்டியல்-I இல் உள்ள சில பதிவின்படியும் பல சட்டங்களை இயற்றியுள்ளது. 
குறிப்பாக நிலமேம்பாட்டுச் சட்டம் 1871, கால்நடை எல்லைமீறல் சட்டம் 1871, விவசாயகடன் சட்டம் 1884, கால்நடை இறக்குமதிச் சட்டம் 1898, நாசகர பூச்சிகள் சட்டம் 1914, இந்திய வனச்சட்டம் 1927, விவசாய விளைபொருள் (தரம் & சந்தை) சட்டம் 1937, குறைந்தபட்ச கூலிச்சட்டம் 1948, உணவு கலப்பு தடுப்புச் சட்டம் 1954, அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955, விலங்குகள் வதைச்சட்டம் 1960, பூச்சிமருந்து சட்டம் 1965, விதைச் சட்டம் 1966, கிராம வங்கி சட்டம் 1976, வனப்பாதுகாப்புச் சட்டம் 1980, நபார்டு வங்கி சட்டம் 1982, விவசாய பதப்படுத்தப்பட்ட பொருள் ஏற்றுமதி முன்னேற்ற நிறுவன சட்டம் 1985, சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் 1986, பொருட்களின் பூகோள அடையாளச் சட்டம் 1999, தாவர வகைகள் & உழவர் உரிமை பாதுகாப்புச்சட்டம் 2001, தேசிய பல்லுயிர் சட்டம் 2002, விவசாய விளைபொருள் சந்தைக்குழு மாதிரி சட்டம் 2003, இயற்கைஇடர் மேலான்மைச் சட்டம் 2005, உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 2006, வன உரிமைச் சட்டம் 2006.
பல விதிகள், ஆணைகள், வழிகாட்டுதல்கள், சோதனைக்கூடங்கள், ஆய்வாளர்கள், ஆணையங்கள், கண்காணிப்பாளர்கள் உருவாக்கப்பட்டாலும் முளைக்காத விதை, மண்ணை மலடாக்கும் உரம், பூச்சியை கொல்லாமல் உழவன் உயிரைக்கொல்லும் பூச்சி மருந்து, மனிதனையே மலடாக்கும் மரபணு மாற்றங்கள், கட்டக் கட்ட தீராத கடன்கள் எல்லாம் தொடர் கதையாகவே உள்ளன. 
இரக்கமற்ற பொருளாதரக் கொள்கைகளும், தொழிற்சாலை வளர்ச்சி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியே வளர்ந்த நாடாவதற்கு வழி என்ற குருட்டுச் சிந்தனையும், உணவு உத்தரவாதத்திற்கு மட்டும் விவசாயத்துறை என்ற குறுகிய சிந்தையால் நான்கில் மூன்று மடங்குபேர் விவசாயத்தையே சார்ந்திருந்தும் இந்திய திட்டங்களில் தொடர்ந்து விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. 
வளர்ந்த நாடுகளில் விவசாயத்துறை தேசிய மொத்த உற்பத்தியில் 2% மட்டுமே பங்களித்தாலும், 2% மக்களுக்கு மட்டுமே வேலை வழங்கினாலும், உரிய முக்கியத்துவம் கொடுத்து 20% முதல் 80% மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில், விவசாயத்துறை 1950-51ம் ஆண்டு 55% தேசிய மொத்த உற்பத்தியிலும் 50% ஏற்றுமதியிலும் பங்களித்து 80% மக்களுக்கு வேலையளித்து வந்தது. 
இன்று 2011-12ல் வெறும் 13% தேசிய மொத்த உற்பத்தியிலும் 21% ஏற்றுமதியிலும் பங்களித்து 54% மக்களுக்கு வேலையளித்து வருகிறது. உலக மொத்த பொருளாதார உற்பத்தியில் இன்றும் விவசாயம் 29% பங்களித்துக்கொண்டுள்ளது. 1991 பொருளாதார சீர்திருத்ததிற்குப் பின் நாட்டில் பொருளாதார வளர்ச்சி சாராசரியாக 6%க்கு மேல் இருந்தாலும் விவாசாயத்துறை 3%க்கு குறைவாகவே உள்ளது. 
1970-71, 1980-81ம் ஆண்டுகளில் 3.6%மாக இருந்த விவசாய வளர்ச்சி 1980-81, 1990-91ம் ஆண்டுகளில் 2.7%ஆக குறைந்தது. 1990-91, 1997-98ம் ஆண்டுகளில் 1.9 விழுக்காடு மட்டுமே. 
விவசாயத்துறையில் முதலீடு, மூலப்பொருள், முறைப்படுத்தல் மூன்றும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதால் விவசாயத்துறை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை முதலீடு வெகுவாக குறைந்து விட்டது, புதிய பெரிய நீர்திட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. உத்தரவாதமில்லாத ஏற்ற இறக்கம் நிறைந்த துறை என்பதால் தனியார் மூலதன முதலீடு செய்யவாப்பில்லை. 
எனவே அவர்களாக முதலீட்டை கூட்டுவது என்பது நடவாத காரியம். வளர்ச்சிதான் தீர்வு என்றவாதம் வலுவாக வைக்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சி உழவனுக்கு உதவவில்லையென்றாலும் உயிரை எடுக்ககூடாது அல்லவா? வளர்ச்சி குறைந்த மாநிலமான பிகார், ஒடிஸô, உத்தரப் பிரதேசங்களின் உழவன் தற்கொலை குறைவு. காரணம், வளர்ந்த மாநிலங்களில் அந்த மாநில மொத்த உற்பத்தியில் விவாசாயத்தின் பங்கு வெறும் 10%மாக உள்ளது. 
வளர்ச்சி குறைந்த மாநிலங்களில் அந்த மாநில மொத்த உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு 20%க்கு மேல் உள்ளது. ஆனால் விவசாயத்தை சார்ந்திருப்பவர்கள் விகிதாச்சாரத்தில் பெரிய மாற்றமில்லை. 
மேலும், வளர்ந்த மாநிலங்களில் மேலே சொன்ன இயற்கை உயிர்வலை முற்றிலும் அறுக்கபட்டுள்ளது. எனவே ஒரு ஆண்டு பயிர் பொய்த்தாலும் உயிரைமாய்க்கும் அவலம் அரங்கேறிக் கொண்டுள்ளது. 
ஆகையால் விவசாயத்துறையில் மாபெரும் மாற்றம் கொண்டுவந்தாக வேண்டும். அது அரசியல் அமைப்புச்சட்டம் காட்டும் நெறிமுறைப்படி இருக்கவேண்டும். விவசாய சந்தை சீர்திருத்தம் முதலில் செய்யப்பட வேண்டும். 
இடைத்தரகர்கள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். உழவர்-நுகர்வோர் இணைப்பு பால அமைப்பைச் சட்டப்படி உருவாக்க வேண்டும். 
வேலை உத்தரவாதம், கூலி, காப்பீடு, இயற்கை இடர்ப்பாடு மேலான்மை, சந்தை சட்டங்களை மறுபரிசீலனை செய்து வலுவான சட்டங்களை உருவாக்க வேண்டும்.

கட்டுரையாளர்:
இணை இயக்குநர், 
பாதுகாப்பு அமைச்சகம், புதுதில்லி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com