ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாயன் என்னும் ஆதித் தமிழர்!

வான் சிறு கோளம் மோதியதால் கடலுள் மூழ்கிய குமரிக்கண்டத்திலிருந்து பல தமிழ்க் குழுவினர் மரக்கலம் ஏறி, உலகின் பல பகுதிகளுக்கும் சென்றார்கள்.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:15 pm


வான் சிறு கோளம் மோதியதால் கடலுள் மூழ்கிய குமரிக்கண்டத்திலிருந்து பல தமிழ்க் குழுவினர் மரக்கலம் ஏறி, உலகின் பல பகுதிகளுக்கும் சென்றார்கள். கருணாமிர்த சாகரம்' என்னும் இசைக் கலைக்களஞ்சியம் இயற்றிய ஆபிரகாம் பண்டிதர் இக்கருத்தை உரைத்துள்ளார். ஐயா வைகுண்டரும் இதே உண்மையைச் சொன்னார். பின்னாளில் தேவநேயப் பாவாணரும் இந்த வரலாற்றைப் பரப்பினார். தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் வழியாகவும் தரை வழியாகவும் பயணம் செய்து உலகின் பல வேறு பகுதிகளுக்கும் சென்று குடியேறினார்கள் என்று கிரேக்க வரலாற்றாசிரியர் ஹிரோடட்டஸ் தனது வரலாறுகள்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் தோன்றி வாழ்ந்த அந்த நிலப்பகுதி கடலுள் மூழ்கியது. குமரிக்கண்டம்' என்ற அந்த நிலப்பரப்பை, லெமூரியா' என்று ஸ்காட் எலியட் கூறினார். மற்றொரு ஆய்வாளர் காண்ட்வானா' என்று பெயர் சூட்டினார். தமிழ் மண் கடலுள் மறைந்த செய்தியை சிலப்பதிகாரம்' சொன்னது; கலித்தொகை' குறிப்பிட்டது. அடியார்க்கு நல்லாரின் விளக்க உரையும் தெரிவித்தது. பெருங்கலம் ஏறிச் சென்ற தமிழ்க் குழுவினர் கடல் கடந்து நெடுந்தூரம் புதிய நிலப்பரப்பில் குடியேறினர். புதுவாழ்வு தொடங்கினர்.
வட அமெரிக்காவின் அடிப்பாகத்தில் மெக்ஸிகோ' என்று இன்று சொல்லப்படும் நாடு உள்ளது. அங்கு மாயன் இனத்தவர் என்று கூறப்படும் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். ஐரோப்பாவில் முன்பு இருந்தவர்கள் காட்டுமிராண்டிகளாகத் திரிந்த காலத்தில், இந்த மாயன் இனத்தவர் நாகரிகம் மிக்கவராக விளங்கினார்கள் என்று மேலைநாட்டு வரலாற்றாசிரியர்களே கூறுகிறார்கள். மாயன் மக்கள் 2000 ஆண்டுகளாகச் சீரும் சிறப்புடனும் வாழ்ந்ததாக அவர்கள் புகழ்கிறார்கள். மாயன்களில் வரலாற்றுத் தொடக்கம் 4500 ஆண்டு அளவு (கி.மு. 2500) என்று குறிப்பிடுகிறார்கள். அவர்களின் செழிப்பு மிக்க காலம் கி.மு. 300 முதல் கி.பி. 800 வரை இருந்தது. அதன் பிறகும் கி.பி. 16-ஆம் நூற்றாண்டுவரை அவர்கள் நலமாக வாழ்ந்து வந்தார்கள். பதினாறாம் நூற்றாண்டில் ஸ்பானியர்களின் படையெடுப்பு, மாயன் நாட்டின் மேல் நடந்தது. 
ஸ்பானியர் ஆயிரக்கணக்கான மாயன் இனத்தவரைக் கொன்று குவித்தார்கள். ஆயிரக்கணக்கானவரை மதம் மாற்றினார்கள். அவர்களின் வாழ்விடத்தை அபகரித்துக் கொண்டார்கள். புகழ்மிக்க வரலாற்றையும் அழித்தார்கள். பழம்பெருமை மிக்க நாகரிகத்தையும் நாசம் செய்தார்கள். இந்தப் பேரழிவுக்குத் தப்பி இரண்டு லட்சம் மாயன் மக்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். இவர்கள் மெக்ஸிகோ நாட்டின் யுகாட்டன் பீடபூமியில் சியாப்பஸ் மாநிலத்திலுள்ள குவாடிமாலா நிலப்பரப்பில் இருக்கிறார்கள். 
மாயன் இனத்தவர் குள்ளமான தோற்றம், திண்மையான உடல், கருமை முடி, சற்று லேசான தடித்த உதடு கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். மலைச்சாரல்களில் வயல்கள் அமைத்துப் பயிரிடுகிறார்கள். அவர்களின் கலப்பை தமிழ்நாட்டின் கலப்பை போன்று உள்ளது. அவர்களின் முக்கிய உணவு சோளம். அவர்கள் மூலிகைச் செடிகளையும் வளர்க்கிறார்கள். சட்டி, பானை, அம்மி, குழவி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். (சிந்துவெளி அகழ்வாய்விலும் அம்மி, குழவி போன்றவை கிடைத்துள்ளன. 
மாயன்கள் மண் பாத்திரங்களின் மேல் ஓவியம், எழுத்து முதலியவற்றைத் எழுதினார்கள். உழவர் மட்டுமன்றி குயவர், சிற்பி, ஓவியர் முதலிய பல துறையினரும் மாயன் சமுதாயத்தில் இருந்தார்கள். அவர்கள் மரப்பட்டைகளில் எழுதினார்கள். அந்த எழுத்துகள் பட எழுத்துகளாக இருந்தன. அவர்கள் இலக்கியம் படைத்தார்கள். அந்த இலக்கியங்களையும் ஸ்பானியர் அழித்தார்கள். அந்த அழிவிலிருந்தும் சில இலக்கியங்கள் தப்பிப் பிழைத்தன. அவர்கள் சூரியனை முதன்மைக் கடவுளாகக் கொண்டார்கள். மழைக் கடவுள், மரணத்தின் கடவுள், தேவலோகத்தின் கடவுள் முதலியவர்களையும் தொழுதார்கள். லிங்கம் அமைத்து வழிபட்டார்கள். கடவுளுக்கு நரபலியும் கொடுத்தார்கள். 
மாயன் மக்கள் கூர்மையான அறிவு பெற்றிருந்தார்கள். கணக்கியலில் வல்லமை கொண்டிருந்தார்கள். வானியலிலும் புலமை மிக்கவராக விளங்கினார்கள். நிலா, வெள்ளி முதலியவற்றின் இயக்கம் பற்றி உணர்ந்திருந்தார்கள். சூரிய, சந்திர கிரகணம் பற்றி முன்னதாகவே அறிவித்தார்கள். ஓர் ஆண்டு 365 நாள்களைக் கொண்டது எனக் கணக்கிட்டார்கள். 
மாயன் மக்கள் கூர்முனைக் கட்டடமான (எகிப்திய பிரமிடு போன்ற) வழிபாட்டுத் தலங்களை அமைத்தார்கள். அப்படிப்பட்ட பிரமிடு கட்டடங்கள் டிகால், யாக்ஸ்சிலான், பேகல், சிக்கன் இட்சா முதலிய இடங்களில் இன்றும் தலைநிமிர்ந்து நிற்கின்றன.
மாயன் மக்களில் மேல், கீழ் என இருபெரும் பிரிவினர் இருந்தனர். மேல்நிலைப் பிரிவினர் நாட்டை ஆள்பவராகவும் சமயத் தலைவராகவும் திகழ்ந்தனர். கீழ்நிலைப் பிரிவினர் தொழில் செய்யும் மக்களாக உழைத்தனர்.
மாயன் நாகரிகம், வரலாறு பற்றி அமெரிக்காவின் கார்னிஜி நிறுவனத்தைச் சேர்ந்த மார்லே, கிட்டர் முதலியோர் ஆய்வு செய்தார்கள். ஹார்வார்டு, பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் மாயன் ஆய்வில் ஈடுபட்டார்கள். டேவிட் ஹோடெல், ஜோசப் பால், புகழ் பெற்ற எரிக் தாம்சன் முதலியோரும் ஆய்வு நடத்தினார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தினுடைய தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் ந. சஞ்சீவி, மாயன் இனத்தவர், ஆதித் தமிழரின் வழியினராக இருக்கலாம்' என்று குறிப்பிட்டார். 
குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலையினை வடிவமைத்த கணபதி ஸ்தபதி மாயன் ஆய்வில் ஈடுபட்டார். தமிழ்நாட்டு மயன் என்ற தலைவனின் மரபினரே மாயன் இனத்தவர்' என்று அறிவித்தார். அவருடைய அறிவுரையின்படி ஆய்வறிஞர் எஸ். பத்மநாபன் மெக்ஸிகோ சென்றார். கள ஆய்வு செய்தார். அரிய உண்மைகளை ஆதாரங்களுடன் அறிவித்தார். 
மாயன் நாட்டில் பிரமிடு வடிவக் கட்டடங்கள் பல உள்ளன. பிரமிடு வடிவக் கட்டடம் தமிழருக்குரியது. இன்றும் பிரமிடு வடிவக் கட்டடங்கள் குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன. கண்ணனூர், கோழிக்கோடு ஆகிய ஊர்களிலும் காணப்படுகின்றன. கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயில் கோபுரம் பிரமிடு வடிவமைப்புப் கொண்டது. தமிழகத்துப் பெரிய கோயில்களின் கோபுரங்கள் ஏறத்தாழ பிரமிடு வடிவம் கொண்டவையே. மெக்ஸிகோ நாட்டின் டாஜின் என்ற ஊரிலுள்ள கோபுரம் மதுரை மீனாட்சிக் கோயில் கோபுரம் போன்றுள்ளது. 
நடுகல் வழிபாடு தமிழருக்கே உரியது. மாயன் வாழிடங்களிலும் நடுகற்கள் நிற்கின்றன. அவற்றில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. சிவலிங்க வழிபாடு தமிழ்நாட்டில் தோன்றியது. இது மாயன் நாட்டிலும் அன்று இருந்தது; இன்றும் இருக்கிறது. அங்குள்ள அருங்காட்சியகத்திலும் பல சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. பாம்பை வணங்கும் பழக்கம் தமிழகத்தில் இன்றும் இருக்கிறது. மாயன் இனத்தவரிடமும் பாம்பைத் தொழும் பழக்கம் இன்றும் இருக்கின்றது. 
மாயன் மக்களின் முகத்தோற்றம் தமிழரின் முகத்தை ஒத்துள்ளது. தமிழ்ப் பெண்களைப் போல் அவர்களும் தலைவாரிப் பின்னலிட்டுப் பூச்சூடிக் கொள்கிறார்கள். தமிழரின் பானைகளின் மேற்புறத்தில் ஓவியம் தீட்டும் பழக்கம் இருக்கிறது. இதே பழக்கம் மாயன் மக்களிடமும் உள்ளது. இங்கிருக்கும் அம்மி - குழவிப் பயன்பாடு அங்கும் இருந்தது.
ஓகம் என்னும் யோகக்கலை தமிழ் மண்ணில் பிறந்தது. மாயன் நாட்டிலும் இது நிலவியது. பத்மாசனம்', கந்தபேராசனம்' ஆகியவற்றை அறிவிக்கும் சிற்பங்கள் அங்குள்ளன. தொல்பழந்தமிழர், கணிதத்துறை, வானியல் துறை ஆகியவற்றில் வல்லுநராக இருந்தார்கள். மாயன் மக்களும் இந்த இரு துறைகளிலும் வல்லவராக விளங்கினார்கள். நகரமைப்பு முறையிலும் தமிழர் திறமை பெற்றிருந்தார்கள். மாயன்களும் இத்திறமையைக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட அடிப்படைக் காரணங்களால் மாயன் இனத்தவர் தமிழ் மரபினரே என்று ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறுகின்றனர்.
ஓர் ஆய்வாளர் அறிவித்த கருத்துகள் வருமாறு: மாயன் இனத்தவரிடையில் இருபெரும் மொழிப் பிரிவுகள் இருந்தன. ஒன்று யுகாட்டன் பிரிவு, மற்றொன்று சோலன் பிரிவு, சோழன் என்பதன் திரிபே சோலன். பழைமைச் சேரநாடு கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதி. மெக்ஸிகோ நாட்டின் கடற்கரை ஓரப் பகுதியில் வாழ்வோர் தம் பெயருக்கு முன்போ பின்போ, சேரோ' என்ற சொல்லைக் குடும்பப் பெயராகக் கொண்டுள்ளனர். சேரன்' என்ற சொல்லை ஒட்டிச் சேரோ' என்ற சொல் அமைந்துள்ளது. எல்' என்ற தமிழ்ச் சொல்லுக்கு ஒளி' என்றும், சூரியன்' என்றும் பொருள் உள்ளது (எல்' என்பதை அடிப்படையாகக் கொண்டே இலங்கை' என்ற சொல் பிறந்தது). இந்த எல் என்பதை முன் ஒட்டாகப் பெற்று மெக்சிகோவில் நகரமும் கோயில்களும் உள்ளன. எல் சால்வடார், எல் காஸ்டிலோ, எல்பிலர், எல் காரகோல் இவை தமிழ் - மாயன் உறவை உறுதிப்படுத்தும்' என்று அவர் உரைத்தார். இவை சிந்தனைக்கு உரியவை.
மேற்சொன்ன ஆதாரங்கள், மாயன் இனத்தவர், தமிழ் மரபினரே என்ற உண்மையை உரைக்கின்றன. இந்த உண்மையை இன்று வாழும் மாயன் இனத்தவருக்கும் உலக வரலாற்றாசிரியர்களுக்கும் உணர்த்த வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.