வாயில்லா ஜீவன்களுக்கு யார் துணை?
நம் நாட்டில் தினம் தினம் நிகழும் குற்றங்கள் எல்லாமே நீதிமன்றத்திற்கு வருவதில்லை.


நம் நாட்டில் தினம் தினம் நிகழும் குற்றங்கள் எல்லாமே நீதிமன்றத்திற்கு வருவதில்லை. வசதி படைத்தவர்கள், படித்தவர்கள், சமூக ஆர்வலர்கள், சட்டம் தெரிந்தவர்கள், அரசியல் கட்சியினர் - இப்படி யாராவது நீதிமன்றத்துக்கு வழக்கைக் கொண்டு வந்தால் மட்டுமே விசாரிக்கப்பட்டு நீதி என்று ஒன்று மிகமிக மெதுவாகக் கிடைக்கிறது. மனிதருக்கே இந்தக் கதி என்றால் வாயில்லா ஜீவன்களின் நிலை?
சமீபத்தில் கிர் காடுகளில் அதிக அளவில் சிங்கங்கள் இறந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் "அவ்னி' என்ற புலி விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவசர கதியில் கொல்லப்பட்டது. மேற்கு வங்கத்திலும், ஒடிஸாவிலும், தமிழக - கேரள எல்லையான வாளையாறு பகுதியிலும் ரயிலில் அடிபட்டு பல யானைகள் உயிரிழந்தன.
தேனியில் மேகமலைக்கு அருகே இரு யானைகள் தாழ்வான உயர்அழுத்த மின் கம்பிகளில் உரசி உயிரிழந்தன. ஆந்திரத்தில் பாப்பிக் கொண்டா தேசியப் பூங்காவில் கட்டுப்பாடற்ற சுற்றுலாவினால் வனவிலங்குகள் பெருத்த ஆபத்தில் இருக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் மிக அதிக சப்தத்துடன் ஆட்டம் போட்டு மிருகங்களை அச்சுறுத்துகின்றனர். வனத்துறையோ "ஆள் பற்றாக்குறை' என்று கூறுகிறது. வடமாநிலங்களில் ரன்தம்பூர், பந்தவ்கர், மனஸ், காசிரங்கா என்று எந்தச் சரணாலயத்தை எடுத்துக் கொண்டாலும், "சுற்றுலா' என்ற பெயரில் மனிதர்கள் செய்யும் அட்டகாசத்தினால் அந்த வாயில்லா ஜீவன்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
தமிழகத்திலும் பரளிக்காடு, டாப் ஸ்லிப், முதுமலை, சத்தியமங்கலம் போன்ற வனப்பகுதிகளில் மனிதர்களின் கேளிக்கைக்காக, விலங்குகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம், பந்திப்பூர் - முதுமலை நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் உயிரிழந்தன. பின்னர், இரவு ஒன்பது மணியிலிருந்துஅதிகாலை ஆறு மணிவரை போக்குவரத்து தடை செய்யப்பட்டபின், இவ்வுயிரிழப்புகள் பெருமளவு குறைந்தன.
ஆனால், "சில நிபந்தனைகளோடு 24 மணி நேரப் போக்குவரத்துக்குஅனுமதிஅளிக்கலாம்' என்று உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. கேரளத்திலிருந்து இடம் பெயரும் யானைகள், சிறுவாணிக் காடுகளின் வழியாக தமிழகத்தில் நுழைகின்றன. ஆழியாறு அருகே உள்ள "கோவைக் குற்றாலம்' வனப்பகுதியில் வாரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம், கூச்சல். திங்கள்கிழமை மட்டும் பராமரிப்புக்காக விடுமுறை. யானைகளுக்கு, திங்கள்கிழமை மட்டும் நாம் காட்டைக் கடக்கலாம் என்று தெரியுமா?
சிறுவாணிக்கு அருகே இக்கரைப் போளுவாம்பட்டியில் ஆன்மிக யோகாசன மையம் ஒன்று செயல்படுகிறது. விதிமுறைகளை மீறி, ஏக்கர் கணக்கில் காடுகளையும், விளைநிலங்களையும் ஆக்கிரமித்து ஆன்மிகத்தை வளர்க்கிறார்கள். சிவராத்திரியன்று இரவு முழுவதும் பாட்டு, நடனம், பஜனை என்று சப்தம் காதைப் பிளக்கும். அது யானைகளின் வழித்தடம். யானைகளுக்குத் தெரியுமா சிவராத்திரியன்று நாம் வரக்கூடாது என்று? இவ்விலங்குகள் எல்லாம் தங்கள் உரிமைக்காகப் போராடமுடியுமா? இந்த வாயில்லா ஜீவன்களுக்காக வாதாட யார் இருக்கிறார்கள்?
"அவ்னி' விஷயத்தில் பொதுமக்களின் போராட்டத்திற்குப் பின், "தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்' தலையிட்டு விசாரணைக் குழு அமைத்தது. அக்குழு ஏகப்பட்ட குளறுபடிகளை வெளிக்கொணர்ந்துள்ளது. காலாவதியான மயக்க மருந்துகள், மாற்று மருந்துகள் இல்லாமை, கால்நடை மருத்துவர், உயிரியல் வல்லுநர், கானுயிர் மேலாண்மை நிபுணர் ஆகியோர் உடன் இல்லாமை, ஸ்ட்ரெச்சர், கூண்டு, வலை, ஆள்பலம் எதுவுமே இல்லாமை என்று பட்டியலிட்டுள்ளது. புலிகள் பாதுகாப்பு ஆணையம்' தலையிட்டாலும் "அவ்னி'க்கு மீண்டும் உயிர் கொடுக்க இயலுமா?
மேகமலையில் நடந்த யானை உயிரிழப்புகளை மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. பந்திப்பூரில் மீண்டும் இரவுநேரப் போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது என்று இயற்கை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வழக்கும் தொடுத்துள்ளனர். வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்குரைஞர் யானை இராஜேந்திரன் தொடுத்த பொதுநல வழக்கினாலும், நீதிமன்ற உத்தரவை உறுதியுடன் செயல்படுத்தி நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாமேற்கொண்ட நடவடிக்கைகளாலும் யானை வழித்தடங்களில் இருந்த பல ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டன.
ஆனால் இக்கரைப் போளுவாம்பட்டியின் ஆன்மிக யோகா மையத்தை எதிர்த்துப் போடப்பட்ட பொதுநல வழக்குகள், வனத்துறை அனுப்பிய நோட்டீஸ் எதுவும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. மத்திய-மாநில அரசின் பெரும்புள்ளிகள் வந்திருந்து வாழ்த்தி அந்தப் பகுதியை "சுற்றுலாமையம்'என்று அறிவித்துவிட்டுப் போகிறார்கள்.
உச்சநீதிமன்றம் பணித்தபடி, கேரளத்தில், வீட்டில் வளர்க்கப்படும் யானைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தபோது, அங்கு 521 யானைகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன என்று தெரிந்தது. யானைகளின் உரிமையாளர்களிடம் தக்க ஆவணங்கள் இல்லை என்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை கூறியுள்ளது.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் நடைபெறும் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் குறித்த பொது நலவழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம்,"காடுகளில் சுதந்திரமாகத் திரியவேண்டிய யானைகளை கோயில்களில் கட்டி வைக்கும்படி எந்த ஆகம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பி, இந்து சமய அறநிலையத் துறையை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது. அத்துடன், "பாரம்பரிய விலங்கான யானையைக் கோயிலில் கட்டிவைக்கும் வழக்கத்தைத் தடைசெய்வது குறித்து பரிசீலிக்கப்படும்' என்றும் கூறியுள்ளது.
இந்தப் பொதுநல வழக்குகூட யானைகளின் உரிமைக்காகப் போடப்படவில்லை. "முகாமில் இருக்கும் பெண் யானைகளைத் தேடி, காட்டு யானைகள் வருவதால் தங்கள் உயிர்களுக்கு ஆபத்து' என்றுதான் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார். நீதிமன்றம், "யானைகள் உங்களைத் தேடி வரவில்லை, நீங்கள்தான் அவற்றின் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளீர்கள்' என்று கடுமையாகச் சாடியுள்ளது.
விலங்குகளாவது, தங்களால் பேச முடியாவிட்டாலும் தங்களுக்கு மனிதர்களால் துன்பம் நேரிடும்போது வாய் விட்டு அலறவாவது செய்யும். அதுகூட முடியாமல், உண்மையிலேயே வாயில்லா ஜீவன்களாக இருக்கும் மரங்களுக்காகக் குரல் கொடுப்பவர் யார்?
நாடெங்கும் ஆயிரக்கணக்கான மரங்கள் அனுமதியோடோ, அனுமதியின்றியோ, அரசாங்கத்தாலும், தனியாராலும், பொதுமக்களாலும் பல காரணங்களுக்காக வெட்டப்படுகின்றன. அறிவியல் வல்லுனர்கள், சுற்றுச்சூழலியலாளர்கள் ஆகியோரின் எச்சரிக்கைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, காடுகள் அழிக்கப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களில், கேரள மாநிலம் மலப்புரத்தில் ஏராளமான மரங்கள் பொக்லைன் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தனியார் எஸ்டேட் ஒன்றில் உள்ள 963 மரங்களை வெட்ட அரசே அனுமதி அளித்துள்ளது. எஸ்டேட் நிர்வாகம் கொடுத்த ஆவணங்கள் போலியானவை என்று கூறி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் மரங்களை வெட்ட தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட வன அலுவலரும் அந்த எஸ்டேட் ஏகப்பட்ட விதிமீறல்களுடன் இயங்கி வருவதையும், அதன் ஆவணங்கள் பொய்யானவை என்பதையும் உறுதி செய்துள்ளார். வனத்துறையும் காவல் துறையில் புகார் அளித்துள்ளது.
92 மரங்கள் வெட்டப்பட்டுவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சியரின் தடையுத்தரவை நிறுத்தி வைத்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தேனிமாவட்டத்தில் "வால்கரடு' காப்புக் காடுகளின் ஊடேசெல்லும் நெடுஞ்சாலையில் 20 மரங்களை வனத்துறையின் அனுமதியின்றி நெடுஞ்சாலைத் துறை வெட்டியுள்ளது. ஆனால், வனத்துறையோ, நெடுஞ்சாலைத்துறையை விட்டு விட்டு மரங்களை வெட்ட பயன்படுத்திய "பொக்லைன்' ஓட்டுநருக்கு ரூ.5,000 அபராதம் விதித்துள்ளது.
தெங்குமரஹாடாவில் 10 கி.மீ தூரத்துக்கு தார்ச்சாலை போட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற, ஆயிரக்கணக்கான மரங்களையும், செடிகளையும் அகற்ற வேண்டியிருக்கும். அது வனச்சூழலை கடுமையாக பாதிக்கும். ஏற்கெனவே சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில், சூழல் சுற்றுலாவுக்கென வாகன நிறுத்துமிடம், பயணியர் தங்குமிடங்கள், விளையாட்டுப் பூங்கா, தகவல் மையம் போன்றவற்றுக்காக ஏராளமான மரங்களை வனத்துறையே வெட்டிச் சாய்த்துள்ளது.
இப்போது இதே புலிகள் சரணாலயத்தில், சுற்றுலா மேம்பாட்டுக்கென பல கட்டுமானங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இதில் எத்தனை மரங்கள் உயிரிழக்க நேரிடுமோ? பந்திப்பூரில் புலிகள் சரணாலயத்தில் ஐந்து சாலைகளை வடிவமைக்க நெடுஞ்சாலைத்துறை வேலையை ஆரம்பித்துள்ளது.
காப்புக்காடுகளிலேயே இந்நிலை என்றால், நகரங்களில் கேட்கவேவேண்டாம். சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை, நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் அதிகாரம் காப்புக்காடுகளில் மட்டும்தான்.
நகரங்களில் மரங்கள் வெட்டப்பட்டால் மாநகராட்சியிடம்தான் புகார் தரவேண்டும். மாநகராட்சிகளில், அதிகாரிகளும், கவுன்சிலர்களும், சில நேரம் பொதுமக்களும்கூட மரங்களை வெட்ட உடந்தையாயிருக்கிறார்கள்.
வாயில்லா ஜீவன்களான விலங்குகளுக்கும் மரங்களுக்கும் நீதிமன்றமே துணை. நீதிமன்றம் இவற்றின் வழக்கைத் தானாக எடுத்துக் கொண்டு, இவற்றின் வாழும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...