அடுத்தவர்களுடைய எழுத்து/கருத்து /அறிவுச் சொத்து எனும் சிந்தனைச் செல்வத்தைத் தமது சொந்தக் கருத்துகளாக்கிப் படைப்புகளை, நூல்களை உருவாக்கி வருவது ஆய்வுலகில் பெருகி வருகிறது. பிறருடைய ஆய்வு நூல்கள், கட்டுரைகளிலிருந்து கருத்துக்களை வரிகளாகவோ, பத்திகளாகவோ, கணிசமான பக்கங்களாகவோ, சில சமயம் கட்டுரையை முழுவதுமாகவோ பெயர்த்தெடுத்துச் சிலர் தங்களுடைய சொந்தக் கருத்துகளாக அச்சிட்டு வெளியிடுகின்றனர். இன்னும் சிலர் இணையதளத்திலிருந்து கருத்துகளைப் பிடுங்கி, வெட்டியும் ஒட்டியும் தனதாக்கிக் கொள்கின்றனர்.
சுருங்கக் கூறின், பிறருடைய மொழிநடை மற்றும் சிந்தனைக் கருத்துகளோடு ஒத்த பயன்பாடுடன் அதனைத் தன் சொந்தக் கருத்தாக / படைப்பாகக் குறிப்பிடுவதைக் கருத்துத் திருட்டு' என வரையறுக்கலாம். ஆய்வு நூல்களில் மட்டுமல்லாது, முனைவர் பட்ட ஆய்வுகளிலும் இந்தத் தனதாக்குதல், வெட்டி ஒட்டுதல் எனும் கருத்துத் திருடல்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. மேற்கோள் காட்டுதல், அடிக்குறிப்பிடுதல் எனும் நாகரிகம் குறித்து யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. நேர்மை, கடப்பாடு குறித்து நினைத்துப் பார்ப்பதே இல்லை.
தமக்கு வேண்டிய ஆய்வுத் தகவல்களை இணையதளத்திலிருந்து எந்தவித மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் அப்படியே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வித்தைகளை ஆய்வு மாணவர்கள் கற்றுவைத்துள்ளனர்.
கல்வித்துறையில் ஆராய்ச்சி மாணவர்களிடையே பெருகிவரும் இக்கருத்துக் களவு கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் பல்கலைக்கழகங்கள் திணறி வருகின்றன. கல்விதளத்தில் ஆய்வு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்களால் செய்யப்படும் இக் கருத்துத் திருட்டு "நேர்மையற்ற கல்வியியல்' எனக் கருதலாம்.
ஆனால் இது புது சமாசாரமல்ல. இன்று அதிகமாகிவிட்டது, அவ்வளவே!
தமிழறிஞர் மறைமலையடிகள் தமது "பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை' (1957) என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் முகவுரையில், இந்தக் நேர்மையற்ற கருத்துத் திருட்டு பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
"ஆங்கிலத்தில் நூல் எழுதும் ஆங்கில அறிஞர் தாம் பிறர் முறைகளைப் பின்பற்றி எழுதினாலும், பிறர் நூல்களில் உள்ள சொற்களையும், சொற்றொடர்களையும் தாமெடுத்து ஆண்டாலும் தாம் ஏனையாசிரியர்க்குக் கடமைப்பட்டிருக்கும் இடங்களை ஆங்காங்குக் குறித்துப் போவர். அத்தகைய நேர்மை நம் தமிழ்ப் புலவரிடத்துப் பெரும்பாலும் இல்லை' என்றும் எழுதுகிறார்.
தம்முடைய படைப்புகளிலிருந்து 1950-களில் கருத்துத் திருடல் செய்தவர்கள் குறித்து மறைமலையடிகள் ஒரு பட்டியலே தருகிறார். கடைசிவரை இவர்கள் யாரும் தம் கடமைப்பாட்டினைப் பதிவு செய்யவில்லை என்ற ஆதங்கத்தைக் கூறியுள்ளார்.
சென்னை ஆசியவியல் நிறுவனம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பழைய ஆய்வு நூல்களின் அப்பட்ட நகலாக்கங்கள் முனைவர் ஆராய்ச்சியாக சமர்ப்பிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அண்மைக்காலத்தில் போலி ஆராய்ச்சிகளைக் களையெடுப்பதற்காக, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் கருத்துத் திருட்டினைக் கண்டறியும் மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது எல்லா நூலகங்களிலும் இணையதளங்களிலும் பயன்பாட்டில் இருக்கிறது. இதன்வழி, புதிதாகச் செய்யப்பட்ட ஆய்வில், எத்தனை விழுக்காடு கருத்துகள் பிற நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். பிற நூல்களின் கருத்துகள் புதிய ஆய்வில் 20-30% வரை இடம்பெறுவது ஏற்புடையதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விழுக்காட்டிற்கு மேல், பிற நூல்களின் கருத்துகள் ஆளப்பட்டிருந்தால், அது ஆய்வுத் திருட்டாகக் கருதப்படும்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி 1990-களில் தமிழாராய்ச்சியின் குறைபாடுகளாக எளிமையாக்கம், மலினப்படுத்தல், நகலெடுத்தல் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தீவிர ஆய்வுகள் குறைந்து, ஆய்வில் நடுத்தர நிலையிலான- சாதாரண ஆய்வுகள் நிகழ்ந்து வந்தன. ஆனால், தற்போது ஆய்வுத் திருட்டுகள் அதிகமாகி வருகின்றன. சுயமாக எழுதுவது போய், சுயமாகத் திருடுவதும் போய் பிறரை வைத்துத் திருடி எழுதுகின்ற வழக்கம் அதிகமாகியுள்ளது.
ஆய்வு நடைமுறைகளில் தவறு நடப்பதை விசாரிக்கவும், தவறு நடந்திருப்பது ஊர்ஜிதமானால் தண்டிக்கவும் அமெரிக்காவில் ஒழுங்காற்றுதல் ஆணையம் உள்ளது. ஆய்வு நெறிமுறைகளைப் பின்பற்றி உண்மையான ஆய்வு செய்பவர்களைப் பாதுகாக்கவும், ஆய்வில் தார்மிக நெறிமுறைகளை வலுப்படுத்தவும் இந்தியாவிலும் "ஆய்வுகளுக்கான தேசியத் தர நிர்ணய ஆணையம்' ஒன்றை அமைக்கலாம். ஆய்வு நூல்கள், கட்டுரைகள் என்ற போர்வையில் உலாவரும் போலிகளையும், மோசடிகளையும், குப்பைகளையும் ஒழித்துக்கட்ட இது உதவும்.
உயர்கல்வி நிறுவனங்களில் கருத்துத் திருட்டுச் செயல்களை ஒழிப்பதற்கான வரைவு வழிகாட்டி நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியிருக்கிறது. முனைவர் பட்டங்களுக்காக இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேடுகளில் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங் ர்ச் டப்ஹஞ்ண்ஹழ்ண்ள்ம் இட்ங்ஸ்ரீந் என்னும் உறுதிமொழிச் சான்றிதழ் இணைக்கும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனினும், கருத்துத் திருட்டுகளைக் களைவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தற்போதைய வரைவு வழிகாட்டி நெறிமுறைகள், கருத்துத் திருட்டுகளுக்கு எதிராகக் கடுமையான விதிமுறைகளைக் கொண்டதாக, கடும் தண்டனைகளைப் பரிந்துரைப்பதாக வடிவமைக்கப்படவில்லை என்பது கவலையளிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.