கானல் நீராகும் கல்விக் கனவுகள்!

அண்மையில் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு விசித்திரமான கல்லூரியைக் காண வாய்ப்பு கிடைத்தது.

அண்மையில் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தபோது ஒரு விசித்திரமான கல்லூரியைக் காண வாய்ப்பு கிடைத்தது. மற்ற இடங்களைப்போல அங்கு சமகாலப் பாடங்களோ, சாக்ரடீஸின் தத்துவங்களோ, அறிவார்ந்த சிந்தனைகளோ, ஆகச் சிறந்த போதனைகளோ கற்பிக்கப்படவில்லை. மாறாக, மாணவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட சில பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்பட்டன. கண்டிப்பாக வேறு எந்தப் பாடமும் கிடையாது. வெறும் பயிற்சி வகுப்புகள் மட்டுமே! 
இதனால் மாணவர்கள் களைத்து சோர்வடையக் கூடும் என்றுகூட நான் எண்ணினேன். ஆனால், அதைப் பொய்யாக்கும் விதமாக பயிற்சியாளரின் உதட்டசைவுக்கு ஏற்ப உற்சாகத்துடன் மாணவர்கள் செயல்படுவதைக் காண முடிந்தது. மூன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் பயிற்சியில் தேர்ந்து அவர்கள் அங்கிருந்து வெற்றிகரமாக வெளியேறுகின்றனர்.
கேட்கவே புதுமையாக இருக்கிறது இல்லையா? தற்போது அந்த மாணவர்கள் நிச்சயமாக கூகுள், மைக்ரோசாஃப்ட், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களில் உயரிய வேலையில் இருப்பார்கள் என நீங்கள் நினைத்தால், அது தவறு. அவர்கள் அதைவிட உயரிய இடத்தில் பணியாற்றுகிறார்கள். ஆம், தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறிப்பதுதான் அவர்களது வேலை! நாளொன்றுக்கு 1,000 தேங்காய்கள் வரை பறிக்கக் கூடிய வலிமையையும், தன்னம்பிக்கையையும் அப்பயிற்சி அவர்களுக்கு அளித்துள்ளது.
வியப்பின் விளிம்புக்குள் செல்வதற்குள் உங்களுக்கு சில விஷயங்களைத் தெளிவுபடுத்துகிறேன். மேலே குறிப்பிட்ட அந்த மாணவர்கள் ஆண்களோ, பெண்களோ அல்ல; ஏன், மனிதர்களே அல்ல! அனைத்தும் குரங்குகள்! அக்கல்லூரியும் வானர சேனைகளுக்குத் தேங்காய் பறிக்கப் பயிற்சியளிக்கும் ஒரு நிறுவனம். தாய்லாந்தில் இப்பயிற்சி நிறுவனம் மிகவும் பிரபலமான ஒன்று.
மனிதர்களைக் காட்டிலும், விரைவாகச் செயல்படும் என்பதால் குரங்குகளுக்குப் பயிற்சியளித்து தேங்காய் பறிக்கும் பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள்.
இதில் சில நன்மைகள் இருக்கின்றன. எந்தக் குரங்கும் தொழிற்சங்கங்கள் அமைத்து கொடி பிடிக்கப் போவதில்லை; பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கேட்கப் போவதில்லை; பணியின்போது உயிரிழந்தால்கூட பணப் பலன்களோ, வாரிசுகளுக்கு வேலையோ தரத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து அடிமை வேலை செய்ய மட்டுமே தெரியும் அந்த உணர்ச்சிகள் அற்ற குரங்குகளுக்கு.
இதைப் பார்த்த பிறகு இந்தியாவின் கல்வித் திட்டமும், தற்போதைய மாணவர்களின் நிலையும் ஒரு மின்னல் கீற்று போல மனதுக்குள் வந்துபோனது. என்னதான் இருந்தாலும், மந்திகளின் வாழ்க்கையையும், நம் மாணவர்களின் கல்விச் சூழலையும் ஒப்பிட முடியுமா எனக் கேட்கலாம். கனத்த இதயத்துடன் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்- அத்தகைய நிலைதான் நமது சமூகத்தில் இப்போது இருக்கிறது.
கல்வி என்பது ஒருவனது அகத்தின் கதவைத் திறந்து அகல் ஏற்ற வேண்டும். இந்த ஞாலத்தின் இயக்கத்தைக் கேள்வி ஞானத்தால் துளைத்தெடுக்க வேண்டும். அறிவின் தேடலை அனுதினமும் மனதுக்குள் பிரசவிக்க வேண்டும். அப்படியா இருக்கிறது தற்போதைய நிலைமை?
வேலைவாய்ப்புச் சந்தையில் நல்ல விலைக்குப் போகக் கூடிய உயிரற்ற பொருள்களைப் போல அல்லவா உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் நம் மாணவர்களை... இவற்றுக்கெல்லாம் காரணம் உயர்கல்வி முறை சரியில்லாததுதான் என்று ஒருதரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளிப் படிப்பில் இருந்தே இங்கு பிரச்னைதான்.
மேல்நிலைப் படிப்புகளில் விரும்பிய பாடத்தைத் தெரிவு செய்து படிப்பதற்கு எத்தனை மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது? நல்ல மதிப்பெண் பெற்றால் அறிவியல், தொழில்நுட்பப் பாடங்களைத்தான் எடுக்க வேண்டும் என அந்த மாணவனின் குடும்பம் நிர்பந்திக்கிறது. அதன் விளைவாக சுய விருப்பங்களுக்கு சுவர் எழுப்பிவிட்டு, கனவுகளுக்குக் கல்லறை அமைத்துவிட்டு, லட்சியங்களுக்கு பிரியா விடை கொடுத்துவிட்டு வேலைவாய்ப்புக்காக ஏதோ ஒரு படிப்பைத் தேர்வு செய்து படிக்கிறார்கள் நமது எதிர்காலத் தலைமுறையினர்.
பொதுவாகவே, கல்வியை முன்னிறுத்தி ஒரு வர்ணாசிரமத் தத்துவம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் சமூகத்தில் உயர்வானவர்களாகப் பார்க்கப்படுகின்றனர்.
அதற்கு அடுத்தபடியாக, வணிகவியல் மற்றும் சட்டக் கல்வியைக் கற்பவர்களுக்கு சராசரி மரியாதை வழங்கப்படுகிறது. தப்பித் தவறி கலைக் கல்லூரி மாணவர்களாக மட்டும் இருந்துவிடக் கூடாது. ஏதோ தீண்டத்தகாதவர்கள் போல அவர்கள் நடத்தப்படுவார்கள். அப்படிப்புகளைப் படித்தால் எங்கும் வேலை கிடைக்காது என்ற தீர்க்கமான எண்ணம் சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. கலைப் படிப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்கூட இந்தச் சூழலை எதிர்கொள்கிறார்கள்.
இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு மாணவருக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது அவரது குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றக் கூடியது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதற்காக, வேலை என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் முன்னிறுத்தி மந்தைகளைப் போல மாணவர்களை நடத்துவதைத்தான் மனம் ஏற்க மறுக்கிறது.
ஊர் போற்றும் கவிஞனாகவும், சீர்மிகு ஓவியனாகவும், பேராவல் நிறைந்த கலைஞனாகவும், பெருந்தேடல் கொண்ட வரலாற்று ஆய்வாளனாவும் ஆக வேண்டும் என எத்தனையோ பிள்ளைகளின் எதிர்காலங்கள் கனவுகளால் சூழப்பட்டிருக்கின்றன. ஆனால், பெற்றோர்களின் அழுத்தத்தால் அது கானல் நீராக மாறிவிடுவதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.
இங்கே ஓர் உண்மையை உரக்கக் கூற வேண்டியுள்ளது. பணி வாய்ப்பு மிகுந்த படிப்பு என்று அனைவரும் தேர்வு செய்ததன் காரணமாக இந்தியாவில் இன்றைக்கு அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் எம்பிஏ பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் உள்ளனர். 100 பணியிடங்களுக்கு 150 பொறியாளர்கள் வீதம் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவருக்கும் எப்படி வேலை கிடைக்கும் என்பது புரியாத புதிர்.
தற்போதைய சூழலில் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களின் தேவைகளும், பங்களிப்பும் அவசியம்தான். அதற்காக அவை மட்டும்தான் கல்வியா?
சரி, அந்தப் பணிகளையெல்லாம் விட்டுவிடலாம். தகவல் - தொழில்நுட்பத் துறையை பெரும்பாலானோர் தேர்வு செய்வதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேட்கலாம். அந்தத் துறையில் நல்ல ஊதியம் கிடைக்கிறது; நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்று வாதிடலாம். தகவல் - தொழில்நுட்பம் மட்டும் அல்ல, எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து பணியாற்றினாலும் தவறில்லை. ஆனால், அதில் நமது தனித்துவத்தை தொலைத்து விடாமல் செயல்படுகிறோமா என்பதுதான் முக்கியம்.
ஓர் வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மட்டும் போதாது. நல்ல தலைவர்களும், அறிவியலாளர்களும், சிந்தனையாளர்களும், கவிஞர்களும், தத்துவ ஞானிகளும் அதற்கு அவசியம். அவர்கள் அனைவரது கரங்களும் இணைந்தால்தான் இணையற்ற தேசத்தை கட்டமைக்க இயலும். அதை உணர்ந்து மாணவர்களை உருவாக்குவதுதான் சரியானதாக இருக்கும்.
சரி, இந்தியாவில்தான் இப்படி இருக்கிறது; வெளிநாடுகளில் உள்ள நமது வம்சாவளி மாணவர்களாவது தனித்துவமாக உள்ளனரா என்று பார்த்தால், அதுவும் ஏமாற்றம்தான். அமெரிக்காவில் குடியமர்ந்துள்ள நமது மாணவர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
குறிப்பாக, "ஸ்பெல்லிங்பீ' எனப்படும் ஆங்கில வார்த்தை விளையாட்டுப் போட்டிகளில் பல ஆண்டுகளாக நம்மவர்கள் வாகை சூடியும் வருகின்றனர். ஒரு வகையில் அது சந்தோஷம்தான். ஆனால், அதைத் தாண்டி புதிய கண்டுபிடிப்புகளிலோ, படைப்பாற்றல் திறனிலோ இந்திய மாணவர்கள் கோலோச்சியதாகப் பெருமளவில் செய்திகள் வந்ததில்லை. இதிலிருந்து வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் விருப்பம் உணர்ந்து கல்வியை வழங்குவதில்லை என்பதை உணர முடிகிறது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு அரிஸ்டாட்டிலும், நூறாண்டுகளுக்கு முன்பு பெர்ட்ரண்ட் ரஸலும் வாழ்க்கையின் இலக்கைக் கண்டறிந்து அதன் சாராம்சங்களை சமூகத்துக்கு போதித்தனர். எத்தனையோ தத்துவங்களையும், வாழ்வியல் நெறிகளையும் முன்னிறுத்தினர். ஆனால், இன்றைய கல்வி முறை அதற்கு நேர்மாறாக உள்ளது.
எதிர்கால இந்தியர்களை வெறும் பணம் ஈட்டும் இயந்திரங்களாக உருவாக்கும் வர்த்தக சந்தையாக கல்விக் கூடங்கள் மாறிவிட்டன. தற்போது குறிப்பிட்ட வேலைகளை மட்டும் செய்வதற்காக ரோபோட்டுக்கள் வந்துவிட்டன. குரங்குகளுக்குக் கூட பயிற்சியளிக்கப்படுகின்றன. வருங்காலத்தில் அந்த இயந்திரங்களும், மந்திகளும் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கக் கூடிய சூழல் கூட உருவாகலாம். அப்போது நமக்கு இந்த சமூகம் கற்றுக் கொடுத்த கல்வியை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? படைப்பாற்றலும், அறிவுத் திறனும் உயிர்ப்போடு இருக்கும் வரை மட்டுமே நாம் மனிதர்கள். அதை உணர்ந்து செயல்பட வேண்டிய உச்சகட்டத் தருணமிது.

கட்டுரையாளர்:
கூடுதல் டிஜிபி, ஒடிஸா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com