பூமியில் ஒரு நரகம்...!

கண் முன் நடக்கும் மனிதத் துயரம் என்று வேதனைப்படுகிறார் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ்;
Updated on
2 min read

கண் முன் நடக்கும் மனிதத் துயரம் என்று வேதனைப்படுகிறார் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ்; சொல்வதற்கு வார்த்தைகளின்றி வெற்று அறிக்கையை வெளியிடுகிறது யுனிசெஃப் அமைப்பு. இரக்கம் காட்டுங்கள், சண்டையை நிறுத்துங்கள் என உலக நாடுகள் அனைத்தும் கெஞ்சுகின்றன ரஷியாவிடம். ஏதாவது நடக்குமா, உயிர் பிழைக்க சிறு துரும்பாவது கிடைக்குமா என பதுங்கு குழியில் இருந்து எட்டிப் பார்க்கின்றன குழந்தைகளின் ரத்தம் தோய்ந்த முகங்கள்.
சிரியாவின் கிழக்கு கௌட்டா நகரில்தான் இத்தனை அவலம். சிரியாவில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டுப் போரில் பொதுமக்கள் சுமார் 3.40 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்து அகதிகளாக உலகமெங்கும் சிதறியிருக்கின்றனர். இருப்பினும், முன்னர் இல்லாத பதற்றம் இப்போது ஏற்பட்டிருப்பதற்கு இந்த கிழக்கு கௌட்டா நகரத்தில் கொத்து கொத்தாக மனித உயிர்கள் கொன்று குவிக்கப்படுவதே காரணம்.
ஒரு காலத்தில், "பூமியில் ஒரு சொர்க்கம்' என சிரியா மக்களால் புகழப்பட்ட கிழக்கு கௌட்டா இன்று நரகமாக மாறியிருக்கிறது. இந்நகரில் அதிபர் பஷார் அல்-அஸாதிற்கு ஆதரவாக, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ரஷிய படைகள் நடத்திவரும் விமானத் தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 500 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 2013-இல் இதே கௌட்டா நகரில் சிரியா படைகளால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட ரசாயன தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கையைவிட இது அதிகம் எனக் கூறப்படுகிறது.
விமானத் தாக்குதல், ராக்கெட் வீச்சு, மார்ட்டர் ரக குண்டுகள், பேரல் ரக குண்டுகள் என விதவிதமான குண்டுகள் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் என பாகுபாடு பார்க்காமல் வீசப்படுகின்றன. குண்டுமழை பொழியும் விமானங்களுக்கு அஞ்சி, உணவும், குடிநீரும் இன்றி, ஒரு வாரமாக சூரிய வெளிச்சத்தையே பார்க்காமல் பதுங்கு குழிக்குள் உயிரைப் பிடித்துக் கொண்டு தவிக்கின்றனர் மக்கள். என்னதான் நடக்கிறது கிழக்கு கௌட்டாவில்?
சிரியாவின் தலைநகர் டமாஸ்கûஸ அடுத்த புறநகர்ப் பகுதியான கிழக்கு கௌட்டா, அதிபர் அஸாதிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவருவது தலைநகரின் பாதுகாப்புக்கு முக்கியம் எனக் கருதியே சிரியா அரசுப் படைகளும், ரஷிய படைகளும் இந்தத் தாக்குதலை நடத்தி வருகின்றன. அதிபர் அஸாதிற்கு ஆதரவாக ரஷியா பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது; என்றாலும் கடந்த ஓராண்டாக நேரடி ராணுவ உதவியையும் அளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் என்கிற பெயரில் சொந்த நாட்டு மக்கள் மீதே தாக்குதல் நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டின்பேரில், அதிபர் அஸாத் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.நா. இதற்குமுன் கொண்டு வந்த தீர்மானங்களில் 11 தீர்மானங்களை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது ரஷியா.
இப்போதும் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சர்வதேச அமைப்புகள் நிவாரணப் பொருள்களையும், மருந்துகளையும் கொண்டு செல்வதற்கு வசதியாக 30 நாள்கள் சண்டை நிறுத்தம் கோரி, ஐ.நா.வில் ஸ்வீடனும், குவைத்தும் கொண்டு வந்த வரைவுத் தீர்மானத்தையும் காலந்தாழ்த்தியே ரஷியா ஏற்றுக்கொண்டிருக்கிறது. தீர்மானத்தின் மீது நீண்ட விவாதம் நடத்தி, இரு தரப்பும் (அரசுப் படைகள்- கிளர்ச்சியாளர்கள்) ஒப்புக்கொண்டே பிறகே ஏற்றுக் கொள்வோம் என ரஷியா அடம்பிடித்ததே இத்தாமதத்துக்குக் காரணம். இந்தத் தீர்மானமும் உடனடியாக அமலுக்கு வரவேண்டும் என்று சொல்லாமல், "கால தாமதமின்றி அமல்படுத்தப்பட வேண்டும்' என்று வார்த்தைகளால்கூட ரஷியாவை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.
இதற்காக பல நாடுகள் ரஷிய அதிபர் புதினை விமர்சித்திருக்கின்றன.
சிரியாவில் இதற்கு முன்னர் ஏற்பட்ட சண்டை நிறுத்தங்களின் ஆயுள் சொற்பமானது. இருதரப்பும் ஒப்பந்தத்தை மீறியே செயல்பட்டிருக்கின்றன. இப்போதைய சண்டை நிறுத்தத் தீர்மானத்தையும் நம்பிக்கையின்றியே பார்க்கிறார்கள் கௌட்டா நகர மக்கள். "நாங்கள் உயிர் பிழைப்போம் என்று ஒருபோதும் நம்பியதில்லை. இறப்பதற்கு எங்கள் முறை எப்போது வரும் என்றுதான் காத்திருக்கிறோம்' என்பதுதான் உயிரைத் தவிர இழப்பதற்கு எதுவுமே இல்லாத அவர்களது கருத்து.
கௌட்டா நகரின் இன்றைய நிலைக்கு ரஷியா மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. சிரியா விவகாரத்தில் ரஷியாவும், ஈரானும் அதிபர் அல்-அஸாதிற்கு ஆதரவாகவும், அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் அல்-அஸாதிற்கு எதிராகவும் செயல்படுகின்றன. கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில் ரஷியா தாக்குதல் நடத்தினால், அஸாதிற்கு எதிரான நடவடிக்கையாக அக்கிளர்ச்சியாளர்களுக்கு மறைமுக ஆதரவு தருகிறது அமெரிக்கா. இதுதான் சிரியாவின் பிரச்னை முடிவுக்கு வராமல் தொடர்வதற்கு முக்கியக் காரணம். பழைய எதிரிகள், பலப்பரீட்சை நடத்த இப்போதைக்குத் தேர்ந்தெடுத்த இடம்தான் சிரியா.
"உங்கள் பனிப்போரை நிறுத்துங்கள்!' என சிரியாவின் பதுங்கு குழிகளிலிருந்து குழந்தைகள், பெண்கள் சொல்வது போர் விமான இரைச்சல்களுக்கு இடையில் வல்லரசுகளுக்கு கேட்க வாய்ப்பில்லை.
வல்லரசுகளே, பனிப்போரை நிறுத்தாவிடிலும், சிறிது நாள்களாவது முழுமையாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துங்கள்; காயமடைந்த அப்பாவிக் குழந்தைகள், பெண்கள் கொஞ்சம் மருந்திட்டுக் கொள்ளட்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com