தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சூரசம்ஹாரம்

மருத்துவத்தில் உடம்பில் காளான்களாக உருவெடுத்த செதில்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டு அத்தியாவசிய உறுப்புகளை பாதுகாப்பதுபோல, நாட்டின் பாதுகாப்பிற்கு எங்கிருந்து தாக்குதல் வந்தாலும்

News image
Updated On :17 ஜனவரி 2018, 7:54 pm

ஆர். நட​ராஜ்

மருத்துவத்தில் உடம்பில் காளான்களாக உருவெடுத்த செதில்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிட்டு அத்தியாவசிய உறுப்புகளை பாதுகாப்பதுபோல, நாட்டின் பாதுகாப்பிற்கு எங்கிருந்து தாக்குதல் வந்தாலும் அதற்கு தக்க பதிலடி 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' மூலம் கொடுப்பதுதான் வெற்றிகரமான அணுகுமுறை என்பதை காலம் தாழ்ந்தாலும் இப்போது புரிந்து கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் பாகிஸ்தான் பகுதிக்குள் சென்று நமது ராணுவம் தாக்குதல் நடத்தி நம் மீது ஜம்மு காஷ்மீர் மேந்தர் ஊரி எல்லைப் பகுதியில் நடந்த பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது வரவேற்கப்பட வேண்டும்.
2008-ஆம் வருடம் நவம்பர் 26 மும்பை நகரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கியபோது இப்போது நடத்தியது போல் எல்லை தாண்டிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல தேர்ந்த பாதுகாப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பொதுமக்கள் 167 பேர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை பலி கொண்ட அந்த பயங்கரத்திற்கான பதில் தாக்குதல், பாகிஸ்தானின் பயங்கரவாத அணுகுமுறையை முறியடித்திருக்கும். ஆனால் கண்டன அறிக்கை, சர்வதேச அரங்கில் முறையீடு என்ற சாத்வீக பதிலோடு இந்தியா நிறுத்திக்கொண்டது.
நமது நாடு சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமர் நேரு, 'அறிவு சார்ந்த தன்னுரிமை' என்ற சித்தாந்தத்தை வெளியுறவு விவகாரங்களில் மத்திய கொள்கையாக வகுத்தார். அந்தக் காலகட்டத்தில் அது உகந்ததாக இருந்தது.
அப்போது கம்யூனிஸ்ட் நாடுகள்-ஜனநாயக நாடுகள், கிழக்கு-மேற்கு என்று உலகம் இரண்டாக பிளவுபட்டு இருந்தது. நடுநிலை நாடுகளாக இந்தியாவின் தலைமையில் அணிசேரா நாடுகள் என்ற அமைப்பு இயங்கியது.
ஆனால் 1980-களில் சோவியத் அதிபர் கோர்பசேவ் உருவாக்கிய 'க்ளாஸ்நாஸ்ட்' என்ற தளர்வுக் கொள்கை, கிழக்கு-மேற்கு என்ற பிளவு உடைவதற்கும் இரும்புத்திரை விலகுவதற்கும் வழி செய்தது. அதுவே கம்யூனிசம் மங்குவதற்கு காரணியாக அமைந்தது. 
பொருளாதார விவகாரங்களுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அறிவுசார்ந்த தன்னுரிமைக் கொள்கை சரியாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் முடிவில்லாத் தொடர் பேச்சுவார்த்தை நாட்டின் வலுவிழந்த தோற்றத்தை அளிக்கக் கூடியது என்ற அபாயம் உள்ளது. அதை எதிரிகள் சாதகமாக எடுத்து தாக்குதல் நடத்தினால் அதற்கு எவ்வாறு எதிர்கொள்வது?
சில நேர்வுகளில் எதிர் தாக்குதல் சரியான பதிலாகவும், வரும் காலத்தில் அமைதி நிலவவும் வழி செய்யும். அப்பாவி மக்களின் உயிரிழப்பைத் தவிர்க்கும்.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் யுத்தம் தொடர்கதையாக உள்ளது. ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், இராக், ஈரான், சிரியா, எகிப்து, துருக்கி நாடுகளில் அமைதியின்மை தொடர்கிறது.
உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா இடையேயான பனிப்போர் 1989-இல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ட் அரசிற்கு நிதியளித்தும் ரஷிய படை மூலம் உள்நாட்டு எதிர்ப்புகளை சமாளிக்க உதவி வந்ததையும் ரஷியா நிறுத்திக்கொண்டது. ரஷியாவுக்கு எதிராக 'ஆப்கன் போராளிகள்' என்ற போர்வையில் இயங்கிய முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு பாகிஸ்தான் உதவியோடு பொருள் மற்றும், ஆயுதங்கள் தந்து அமெரிக்கா ஆதரவு அளித்து வந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து 1989-இல் ரஷியா விலகிய பிறகு, அங்கு முஜாஹிதீன் போராளிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்த துவங்கினர். பல கொடூரமான செயல்களில் ஈடுபட்டனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு சர்வ சாதாரணமாக நடைபெற்றன. முஜாஹிதீனிலிருந்து பிரிந்த இயக்கம் தலிபான். மேலெழுந்தவாரியாக ஜனநாயக அரசு என்ற போர்வையில் முஜாஹிதீன் ஆதரவாளிகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினர். அதற்கு அமெரிக்கா துணைபோனது. முஜாஹிதீன், தலிபான் அட்டூழியம் ஆப்கானிஸ்தானில் தழைத்தோங்க, புலி வாலைப் பிடித்த கதையாக, விடவும் முடியாமல் விடுபடவும் மனமில்லாமல் அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கிறது. 
1979 - 89-இல் நடந்த ஆப்கன் யுத்தத்தில் 15 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். 2004-இல் காபூல் அரசு 13,700 பாதுகாப்பு வீரர்கள் ஆப்கான் யுத்தத்தில் உயிரிழந்தனர் என்ற விவரம் தெரிவித்தது. இதில் ஐரோப்பிய அமரிக்க பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை 3420. மேலும் 2007லிருந்து பல்வேறு தீவிரவாத அமைப்புகள் இடையேயான சண்டையில் 15,000 பேரை ஆப்கன் தலிபான் கொன்று குவித்தது .
மத்திய கிழக்கு ஆசிய பகுதியில், 1946- 48இல் முதல் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் 15 லட்சம் பேர் உயிரிழந்தனர், லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் அகதிகளாயினர். 
அதை தொடர்ந்து 1979 - 89 ஆப்கன் யுத்தம், இரண்டாவது ஆப்கன் யுத்தம் 2001-13, 1991-இல் வளைகுடா யுத்தம், 2003-இல் இராக் நாட்டில் போர், 2011 லிபியாவிலும் சிரியாவிலும் உள்நாட்டுப் போர்; ஆக 6 யுத்தங்களில் பல லட்சக்கணக்கில் பொதுமக்களும் பாதுகாப்பு வீரர்களும் உயிரிழந்தனர்.
இராக் அதிபர் சதாம் ஹுசேன் குவைத் மீது 1991-இல் நடத்திய தாக்குதலை தவிர்த்து மற்ற எல்லா போர்களும், உள்நாட்டு பிரச்னைகளில் வல்லரசுகளின் தலையீட்டால் விளைந்தவை என்பது வருத்தம் தரக்கூடிய உண்மை.
நாடுகளிடையே யுத்தம் என்பது வெளிவிவகார அரசியலின் மறுபக்கம் என்றால், பயங்கரவாதம் என்பது யுத்தத்தின் மறுபக்கம்.
சிரியா, இராக் நாடுகளிலிருந்து முளைத்த ஐஎஸ் என்னும் பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. முஜாஹிதீன், தலிபான், ஒசாமா பின்லேடனின் அல்-காய்தா அமைப்புகள் அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசு நாடுகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுவது உலக நாடுகள் மத்தியில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 
இந்த இயக்கங்கள் இணையதளத்தையும் தொழில்நுட்ப நுணுக்கங்களையும் முழுமையாக பயன்படுத்தி, இளைஞர்களை கவரக்கூடிய வகையில் பிரசாரம் செய்து தனது வலையில் சிக்க வைத்து, தனது பலத்தை வலுப்படுத்தி வருகிறது.
ஐஎஸ் அமைப்பின் முக்கிய குறி, ஏற்கெனவே பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான, அத்தகைய உணர்வுகள் ஊடுருவ சூழல் மிகையாக உள்ள நாடுகள்.
ஐஎஸ் போன்ற இயக்கங்களைக் கண்காணிக்க பயங்கரவாத குற்றங்களை புலன் விசாரணை மேற்கொள்ள என்ஐஏ என்ற தேசிய புலன் விசாராணை பிரிவினை 2011-இல் இந்திய அரசு உருவாக்கியது. 2008-இல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் போன்ற நிகழ்வுகளை பிரத்யேக பயிற்சி பெற்ற விசேஷ புலனாய்வு பிரிவினால்தான் விசாரிக்க முடியும். மத்திய அரசின் ஆளுகையில் உள்ள பிரிவுகள் மாநில அரசின் சுயாட்சிக்கு எதிராக செயல்படக்கூடும் என்ற அச்சம் முதலில் இருந்தது. ஆனால் கடந்த 5 வருடங்களில் பல ஸ்லீப்பர் செல் என்று மறைமுகமாக செயல்படும் பயங்கரவாதிகளோடு தொடர்பு உள்ளவர்களை என்ஐஏ கண்டுபிடித்துள்ளது. 
இந்தியாவில் எந்த அளவு ஐஎஸ் ஊடுருவல் இருக்கிறது என்பது அதிகமாக வெளி வரவில்லை. ஆனால் தொடர் கண்காணிப்பு தேவை என்பது மறுப்பதற்கில்லை. தனிமனித தீவிரவாத சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டு, ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதைக் கண்டுபிடிப்பது கடினம். இணையதளம் மூலம் பல ரகசிய சமிக்ஞைகள் வழியாக கருத்து பரிமாறப்படுகிறது. மேலும் ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் கால் ஊன்ற ஹிந்தி, தெலுங்கு, தமிழில் தனது கொள்கைகளை பரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம். அதில் கணிசமான முஸ்லிம்களும் உள்ளனர். அவர்களை குறி வைத்தும் ஐஎஸ் செயல்படக்கூடும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கைதாகிய ஜமீல் முகமது கொடுத்த தகவலின் அடிப்படையில், 2017 பிப்ரவரி மாதம் மயிலை பஜார் தெருவைச் சேர்ந்த இளைஞருக்கு ஐஎஸ் அமைப்போடு தொடர்பிருந்ததாகக் கூறி, என்ஐஏ கைது செய்தது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 2014-இல் சில இளைஞர்கள் ஐஎஸ் ஆதரவாக பனியன் அணிந்திருந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வந்தது. அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் பனியன் தயாரித்த திருப்பூர் நூற்பாலை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஹைதராபாதில் தமிழகத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவர் ஐஎஸ்ஸில் சேர முயற்சித்தார் என்று காவல்துறை விசாரித்த செய்தி வந்தது. கடையநல்லூரில், 2016 அக்டோபரில், ஐஎஸ் ஆதரவாளரை என்ஐஏ கைது செய்து விசாரணை மேற்கொண்டது. 
எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பதிலடியாக கொள்கை வகுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு விடையளிக்கும் வகையில் மத்திய அரசு எல்லை தாண்டிய தாக்குதலுக்கு உடனடியாக எதிர் நடவடிக்கை எடுத்தது வரவேற்கத்தக்க மாற்றம். 
வட கிழக்குப் பகுதியில் மியான்மர் எல்லையில் நடத்திய பதிலடி தாக்குதல், சிக்கிம்-பூடான் எல்லைப் பகுதியில் உள்ள டோக்லாமில் சாலை அமைப்பது குறித்து எதிர்ப்பு தெரிவித்து, சாலை அமைப்பதை தடுத்தது போன்ற இந்திய இறையாண்மையை உயர்த்தும் மத்திய அரசின் பல தீர்க்கமான நடவடிக்கைகள், நம் எல்லோருக்கும் பெருமை அளிப்பவை.
இணையதளத்தை சமுதாய சீர்கேட்டிற்காக பயங்கரவாத அமைப்புகள் உபயோகிப்பதை தடுப்பது சர்வதேச புலனாய்வு அமைப்புகளுக்கு மிகப்பெரிய சவால். தனிமநித சுதந்திரத்திற்கு சைபர் குற்றப்பிரிவு கண்காணிப்பு ஊறு விளைவிக்கிறது என்ற சில மனித உரிமை அமைப்புகள் கூறும் வாதங்கள் ஏற்புடையது அல்ல. சமுதாயப் பாதுகாப்பு எல்லோருடைய தலையாய கடமை. 
பயங்கரவாத சூரனை அழிக்க நல்லுள்ளம் படைத்த எல்லோரும் அணிசேர்ந்து சேவற்கொடியோனுக்கு உறுதுணையாக நின்றால் சூரசம்ஹாரம் வெற்றி பெறும். 
முடிவில்லா விழிப்புணர்வே நிரந்தர பாதுகாப்பு அளிக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.