'வாழும் உரிமை' என்பதை மனிதர்களின் அடிப்படை கொள்கையாக ஏற்றுக் கொண்டால், மனித குலம் நீடித்து வாழ, சமூகப் பாதுகாப்பு என்பது அரசுகளின் பிரதான முன்னுரிமையாக இருக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு என்பது, உடல் நல பாதிப்பு, விபத்து, வேலைவாய்ப்பின்மை, இயங்க முடியாதது, மகப்பேறு, வயது முதிர்வு ஆகியவற்றால் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள இயலாதவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகும். அதுபோன்ற உதவி செய்யப்படாவிட்டால், மனித வாழ்வு சோகமயமாகிவிடுவதுடன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவும், மனித உரிமை தொடர்பான சர்வதேசத் தீர்மானமும், சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தமும் உத்தரவாதம் அளித்துள்ள 'வாழும் உரிமை' வெற்று கோஷமாகிவிடும்.
துரதிருஷ்டவசமாக, சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேவையான சமூகப் பாதுகாப்பு இன்றி உள்ளனர் என்பது அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிப் பொருளாக்குவது போன்றதாகும். முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்குப் பாதுகாப்பை கூட்டுக் குடும்ப முறை அளித்து வந்தது. கூட்டுக் குடும்ப முறை சிதைந்தது, அதிகரித்து வரும் வறுமை, வருவாயில் சமச்சீரற்ற தன்மை போன்றவை உடனடி நடவடிக்கை தேவை என்பதை உணர்த்துகின்றன. ஆனால், நோயாளிகள், வேலைவாய்ப்பற்றவர்கள், முதியோர் உள்ளிட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் விவகாரத்தில் கண்ணுக்குப் புலப்படும் வகையில் எந்த சாதனையும் நிகழ்த்தப்படவில்லை.
முதலில் முதியோர் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 10.4 கோடி பேர் உள்ளனர். இது இந்திய மக்கள்தொகையில் 8.6 சதவீதம். இது 1961-இல் 5.6 சதவீதமாக இருந்தது.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் புள்ளிவிவரப்படி, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் முதியோரில் 61.5% பேரின் மாதாந்திர நுகர்வுச் செலவு ரூ.525-க்கும் குறைவாகவே உள்ளது. இந்தப் பிரிவில், அடித்தட்டில் உள்ள 7.5% பேரின் மாதாந்திர நுகர்வுச் செலவு பூஜ்யத்தில் இருந்து ரூ.255-க்குள் உள்ளது. நகர்ப்புற பகுதிகளில் 64% பேரின் மாதாந்திர நுகர்வுச் செலவு ரூ.1,120-க்கும் குறைவாகவே உள்ளது. அடித்தட்டில் உள்ள 5.5% பேரின் செலவு பூஜ்யத்தில் இருந்து ரூ.350-க்குள் உள்ளது.
ஊரகப் பகுதிகளில் 66% ஆடவரும், 28% பெண்களும் பணிபுரிகின்றனர். நகர்ப்புறப் பகுதி முதியோரில் 46% ஆண்களும், 11% பெண்களும் பணிபுரிகின்றனர்.
சராசரியாக, 60 வயதைக் கடந்த ஆடவர் மேலும் 16.9 ஆண்டுகளும், பெண்கள் 19 ஆண்டுகளும் வாழ்கின்றனர்.
60-64 வயதுடையவர்களில் 22% பேர் கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள். இரண்டு சதவீதம் பேர் திருமணம் செய்துகொள்ளாதவர்கள். பொருளாதார ரீதியாக மற்றவர்களைச் சார்ந்திருப்பவர்களில், ஊரகப் பகுதிகளில் 13 சதவீதம் பேரும், நகர்ப்புற பகுதிகளில் 15 சதவீதம் பேரும் தங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுகிறார்கள். ஊரகப் பகுதிகளில் 78 சதவீதம் பேரும், நகர்ப்புறப் பகுதிகளில் 76% பேரும் தங்கள் வாரிசுகளால் கவனிக்கப்படுகிறார்கள். மூன்று சதவீதம் பேர் தங்கள் பேரக் குழந்தைகளாலும், 6 சதவீதம் பேர் மற்றவர்களாலும் பராமரிக்கப்படுகிறார்கள்.
உடல் நலம் குறித்துப் பார்த்தோமானால், எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு சுகாதார நல ஏற்பாடுகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். 2015-16இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வு பல விஷயங்களை அம்பலப்படுத்துகிறது.
15 முதல் 19 வரை உள்ள பெண்களில் 7.9% பேர் தாய்மைப் பேறு அடைந்துள்ளனர். அல்லது கர்ப்பிணியாக உள்ளனர். இது நகர்ப்புறங்களில் 5%ஆகவும், ஊரகப் பகுதிகளில் 9.2%ஆகவும் உள்ளது. 20 முதல் 24 வயது வரை உள்ளவர்களில் 26.8% பேருக்கு 18 வயதுக்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது. சிசு மரணம் பிறப்பில் ஆயிரத்துக்கு 41ஆகவும், 5 வயதுக்குள் 50 ஆகவும் உள்ளது.
கர்ப்ப காலத்தில் 41.1% பெண்கள் முதல் 3 மாதங்களில் பரிசோதனைகளை மேற்கொள்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 21.1% குழந்தைகள் சுகாதார நிலையங்களில் அல்லது மருத்துவமனைகளில் பிறக்கவில்லை. 12 முதல் 23 மாத குழந்தைகளில், காசநோய், தட்டம்மை தடுப்பூசிகள், போலியோ சொட்டு மருந்து உள்ளிட்டவை 62% குழந்தைகளுக்கே கிடைத்துள்ளன. 5 வயதுக்குள்பட்டவர்களில் 38.4% பேர் வயதுக்குத் தகுந்த உயரம் இருப்பதில்லை. 21% பேர் உயரத்துக்குத் தகுந்த எடையுடன் இருப்பதில்லை. இந்தப் பிரிவில் மேலும் 7.5% பேர் மிக மோசமான நிலையில் உள்ளனர். 35.7% பேருக்கு வயதுக்குத் தகுந்த எடை இருப்பதில்லை.
6 முதல் 59 மாதக் குழந்தைகளில் 58.56% பேர் ரத்த சோகையுடன் உள்ளனர்.15 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 53% பேரும், ஆண்களில் 22.7% பேரும் ரத்த சோகைக்கு ஆளாகி உள்ளனர்.
ஊரகப் பகுதிகளில் 72% பேரும், நகர்ப்புற பகுதிகளில் 79% பேரும் தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது 2014 ஜனவரி முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்பட்ட தேசிய மாதிரி ஆய்வில் தெரியவந்துள்ளது.
மொத்தத்தில், 90% வேலைவாய்ப்பு அமைப்பு சாரா தொழில்கள் மூலமே கிடைக்கிறது. இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு என்பது கிடையவே கிடையாது. அவர்கள் பணிபுரியும் சூழ்நிலை மிகவும் மோசமானதாக இருப்பதுடன், ஊதியமும் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்தப் பிரிவில், சுயமாகத் தொழில் செய்பவர்களுக்குக் கூட சமூகப் பாதுகாப்பு என்பது இல்லை.
ஒட்டுமொத்தமாக அமைப்பு சார்ந்த தொழில்களில் 2006-இல் 269.9 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். இது 2012-இல் 295.8 லட்சமாக அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், அதிக ஊதியம் அளிக்கப்படுவதுடன் சமூகப் பாதுகாப்பும், நல்ல பணிச் சூழலும் உள்ள பொதுத் துறை நிறுவனங்களில் 2006-இல் 181.9 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது 2012-இல் 176.1 லட்சமாகக் குறைந்துவிட்டது.
ஊதியத்தில் அதிக இடைவெளி உள்ளதை மனித மேம்பாட்டு நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. உதாரணத்துக்கு, ஊரகப் பகுதிகளில் தாற்காலிகத் தொழிலாளர்கள் தினமும் ரூ.138-ம், நகர்ப்புறங்களில் ரூ.173-ம் ஊதியமாகப் பெறுகின்றனர். ஊரகப் பகுதிகளில் நிரந்தரத் தொழிலாளர்கள் ரூ.298-ம், நகர்ப்புறங்களில் ரூ.445-ம் பெறுகின்றனர். அதே சமயம், பணிப் பாதுகாப்பும், மற்ற சலுகைகளும் உள்ள மத்திய பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் தினமும் ரூ.2005 ஊதியம் பெறுகின்றனர்.
அமைப்பு சார்ந்த தொழில்களில் மகளிருக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை என்பது வருந்தத்தக்கது.
கட்டாயம், விருப்புரிமை, அரசுப் பங்களிப்பு, நிறுவன உரிமையாளர் பங்களிப்பு என பல்வேறு விதங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் வகுக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆம் ஆத்மி பீமா யோஜனா, இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம், தேசிய குடும்ப நலத் திட்டம், ராஷ்ட்ரீய ஸ்வாஸ்த்ய (உடல்நலம்) பீமா யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்காக அரசு செயல்படுத்திவருகிறது. முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட பல திட்டங்களை மாநில அரசுகளும் செயல்படுத்திவருகின்றன.
அதேபோல, பணிக்கொடை, மகப்பேறு சலுகைகள் போன்றவையும் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களுக்காக செயல்படுத்தப்படுகின்றன. உரிமையாளர், தொழிலாளர் ஆகியோரின் பங்களிப்புடன் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்), ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு (இஎஸ்ஐ) போன்றவையும் செயல்படுத்தப்படுகின்றன.
பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு சொற்பமான தொகையே ஒதுக்கப்படுகிறது என இந்தியாவின் 60 பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தேவையான நிதியை 2018-19ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒதுக்குமாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தையும் மறுஆய்வு செய்து சரியான முறையில் அவற்றை அமல்படுத்த திட்டங்கள் வகுப்பதற்கு இதுவே சரியான தருணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக அமித்ஷா முகமாக மாறிவிட்டது: கனிமொழி

ஜூனியர் என்டிஆர் - தோற்றத்தில் மாற்றம்!

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

